கவிபாடிய காவலர்/சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை

விக்கிமூலம் இலிருந்து

3. சேரமான் கோட்டம்பலத்துத்
துஞ்சிய மாக்கோதை

பிரிவு என்பது பெருந் துன்பம் தர வல்லது. இதனைப் "பேயோடாயினும் பிரி வரிதே" என்னும் பழமொழியினாலும் நன்கு அறியலாம். இவ்வாறான பிரிவு இரண்டு முறையில் அமையும். ஒன்று சின்னுளோ, சில திங்களோ, சில்லாண்டோ பிரிந்து இருந்து மீண்டும் வந்து கூடுவதாகும். மற் ருென்று, வாழ் நாள் உலந்து வாளுடுறுகின்ற பெரும் பிரிவாகும். இது மீண்டும் வந்து கூடும் பிரிவாகாது. இந்தப் பிரிவுக்கு எவரும் அஞ்சுவர். இல்லையானல் யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதற்கு என் கடவேன் ' என்று வாதவூரர் கூற முன் வருவாரா ? ஆகவே, இறப்புப் பிரிவு மிக மிக இன்னதது. ஆதலின், மனம் ஒத்த காதலன் காதலி ஆகிய இருவருள் ஒருவர் பிரிந்து போனால் அவர்கள் உள்ளம் என்ன பாடுபடும்?

திருவள்ளுவர் எவ்வளவோ உள்ளத்தூன் படைத்தவர் ; எல்லோருக்கும் நீதி புகட்டியவர் ; இறப்பின் இயற்கை நிகழ்ச்சியைக் கூட எடுத்து இயம்பியவர் ; நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு " என்றும் "உறுங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும்

பிறப்பு" என்றும் கூறியவர். இத்தகைய வரும் தம் வாழ்க்கைத் துணைவியார் வாசுகி அம்மையார் இறந்தபோது, அவ்வம்மையாரது பிரிவாற்றாமைக்காக,

"அடிசிற்கு இனியாளே ! அன்புடையாளே ! படிசொல் தவறாத பாவாய்!-அடிவருடிப் பின்துங்கி முன் எழுந்த பேதையே! போதியோ! என்தூங்கும் என்கண் இரா."

என்று பாடித் தம் துன்ப நிலையைத் தோற்று வித்தாராயின், இறப்பின் பிரிவைப் பற்றி என்ன கூற இயலும் ! ஒரு சிலர் மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சி வள்ளுவர் வாழ்க்கையில் கண்ட உண்மைக் குறிப்பன்று ; இது தனிப் பாடல் நூலின் பாடற்கியையக் கட்டிவிட்ட கர்ணபரம்பரைச் செய்தி என்று கூற முன் வரலாம். கர்ணபரம்பரைச் செய்தியே என்றாலும், இதில் ஒர் உண்மை வெளியாகிறது அல்லவா? அதாவது பேர் அறிஞர் ஆயினும், தம் உடனுறை மக்கள் மண்ணுல கிடைப் பிரிந்து விண்ணுலகு புகுந்தால் வருந்தாது இரார் என்பதன்ருே ? அதிலும், தம் வாழ்க்கைக்கே துணையாக உள்ள இல்லக்கிழத்தியார் இறந்தால் மிகுதியும் ஏக்கம் கொள்வர் என்பது அறிய வருகின்றதன்றோ ? எனவே, ஈண்டுச் சேரர் குலமன்னராம் சேரமான் கோட்டம் பலத்துத் துஞ்சிய மாக்கோதை என்பார் தம் மனையாளாம் கோப்பெண்டு இறந்தபோது பாடிய பாடல் ஒன்ற்ன் பொருளையும் காண்போமாக :

மாக்கோதை என்பவர் சேர மன்னர் குடியினர். இஃது இவரது பெயர் தொடக்கத்தில் சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை என்பதில் அமைந்துள்ள முதற் சொல் லால் நமக்குப் புலனுகிறது. சேரர் பலராதலின் அவர்களுள் ஒவ்வொருவரையும் வேறுபடுத் திக் காட்டுதற்குச் சில குறிப்புக்களையும் அவர்கள் பெயருடன் சார்த்திப் பேசப்படுவது தொன்று தொட்ட மரபு. அம்முறையில் மாக்கோதை என்னும் சேரர் குடியினர் கோட்டம் பலம் என்றும் இடத்தில் தம் பூத உடல் விடுத்துப் புகழ் உடல் பெற்ற காரணத்தால், அதாவது இறந்ததல்ை சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என்பாரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பினை அறிதற்கு இல்லை. இவர் இல்லறத்தை இனிது நடத்தத் தம் மனத்துக்குகந்த மனையாளோடு தம் வாழ்வு நடத்தியவர் ஆவர். இவரும் இவரது இல்லாளும் மனம் ஒத்துத் தம் இல்லறத்தை நடத்தி இருக்கின்றனர். கனவிலும் நனவிலும் பிரியாது மனம் கலந்து வாழ்ந்திருக்கின்றனர். இங்ங்னம் வாழ்வு நடத்தியதால்தான், தம் பெருங்கோப்பெண்டு இறந்தபோது, அவ்வம்மையைப் பிரிந்திருக்க

ஆற்றாத காரணத்தால்தான் இவ்வரசப் புலவர் கையறு நிலையாகிய அருங்கவியைப் பாடி இருக்கிருர். இவ்வொரு பாடலாலே இவ ரும் கவி பாடவல்ல காவலர் இனத்தில் சேரக் கூடியவராயினர். இவரது பாடல் புறநானூற்றில் காணப்படுகிறது.

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக் கோதை தம் மனையாளைப் பிரிந்திருக்க இயலாது, அவ்வம்மையோடு தாமும் உயிர் விடுதற்கு இல்லையே என்னும் கருத்தினை ' "இன்னும் வாழ்வல்? என் இதன் பண்பே ?” என்று குறிப்பிடுவராயின், இவர் தம் மனைவி யார் மாட்டு வைத்திருந்த அன்பு வெளியாகிற தல்லவா ? பூம்பள்ளியில் படுத்துத் துயில வேண்டியவள் ; இதுபோது இறந்து அழல் பள்ளியில் படுத்து விண்ணடுசெல்கின்றனளே என்று வருந்திக் கூறிய அடிகளாகிய

"ஒள் அழல் பள்ளிப் பாயல் சேர்த்தி
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை"

என்பன எவருடைய நெஞ்சத்தைத்தான் உருகாதிருக்கச் செய்யும்? இவரும் பிரிவு காரணமாக மனையாளோடு உடன்கட்டை ஏறி இருப்பர். அவ்வாறு உடன்கட்டை ஏறுதல் மாதர்கட்குரிய செயலாக இருந்தமையின், இவர் உடன்கட்டை ஏறி உயிர்விடாது இருந்தனர் போலும் !