கவிபாடிய காவலர்/சோழன் நல்லுருத்திரன்

விக்கிமூலம் இலிருந்து

4. சோழன் நல்லுருத்திரன்

உருத்திரன் என்பது சிவபெருமானுக்குரிய திருப்பெயர்களில் ஒன்று. அப்பெயர் இவ்வரசர்க்குச் சூட்டி வழங்கப்பட்டது. குண விசேடம் இம்மன்னர் பால் அமைந்திருந்த காரணத்தால் நல் உருத்திரன் என்று தம் பெயர்க்கு முன் சார்த்திக் கூறப்பட்டு வந்துள்ளார். இவர் சோழ மன்னர் மரபினர் என்பதை, இவர் திருப்பெயர் முன்னர் சோழன் என்ற குடிப்பெயர் அமைந்து குறித்துக் கொண்டிருப்பதல்லை நன்கு உணரலாம்.

இவ்வரச மகனார் சோழன் நல்லுத்தரன் எனவும், குடிப்பெயர் குறிக்கப்படாமல் நல்லுத்திரன் எனவும் வழங்கப்பட்டுள்ளார். இவர்பால் உலக மக்கள் சோம்பி இருத்தல் குறித்து அவர்களை வெறுக்கும் இயல்பு அமைந் திருந்தது. ஊக்கமுடைய மக்களை உவந்து வந்தனர். சோம்பலுடைய மக்களை வெறுத்து ஒதுக்கி வந்தனர். இந்தவாறன பண்பு இவர் பால் இருந்திருக்குமானல், இவர் ஊக்கம்உடையவராய் இருந்திருப்பார் என்பதைக் கூறவும் வேண்டுமோ ? இவர் ஊக்கமுடையவர் பால் விருப்பும், அஃது இல்லவர்பால் வெறுப்பும் கொண்டவர் என்பதை இவர் பாடியுள்ள புறநானூற்றுச் செய்யுள் நமக்கு நன்கு புலப் படுத்துகின்றது. அப்பாடலால் இவர் எத்

தகைய நண்பரோடும் நட்புக் கொண்டிருக்க விரும்பாதவர் என்பதையும், முயற்சியுடைய நண்பரோடு உறவாடவே உறுதி கொண்டிருந்தார் என்பதையும் அறியலாம். இக் கருத்துக்களை " உளம் முயற்சி இலாளரோடு இயைந்த கேண்மை (நட்பு) இல்லாகியரோ என்ற அடியினாலும், " உள்ளத்து உரன் (வன்மை) உடையாளர் கேண்மையொடு இயைந்தவைகல் (நாட்கள்) உளவாகியரோ என்ற அடியினாம் நன்கு உணரலாம். மேலும் இவரது பாடலால் எலி நெற்கதிர்களைக் கொண்டு தன் வளையில் சேமித்து வைத்து உண்ணும் செயல் அழகுபடக் கூறியிருப்பதையும் அறியலாம். மற்றும் ஒரு செய்தியும் இவரது புறநானூற்றுச் செய்யுள் புகலுகிறது. அது புலியின் மேம்பாட்டுச் செய்தியாகும். புலியானது தன்னுல் கொல்லப்பட்ட பன்றி, தனது இடப் பக்கத்தே வீழுமானால், அது தனது வீரத்திற்கு இழுக்கினை உணர்த்தும் செயல் என்று தான் எத்துனைப் பசித்து இருந்தாலும், தான் கொன்றதேனும் அவ்வராகத்தை உண்ணுதாம். அன்று தனக்கு யாதோர் உணவும் கிடைக்காதிருப்பினும், பசித்தே இருந்து

அடுத்த நாள் ஆண் யானை ஒன்றைக் கருதி வெளியே சென்று, தன் எதிரே பட்ட அக் களிற்றினைக்கொன்றுத் தனக்கு வலத்தே விழுமாறு செய்து அதன்பின் அவ் வேழத்தின் தசையினைத் தின்னுமாம். சோழன் நல்லுருத்திரனார் இப் புறநானூற்றுச் செய்யுள் ஒன்றே அன்றிக் கற்றார் ஏத்தும் கலித் தொகையில் முல்லைக் கலியாகப் பதினேழு செய்யுட்களையும் பாடியுள்ளார்.

கற்றார் ஏத்தும் கலி என்ற குறிப்பில்லை கலித் தொகைக் கவிகள் சுவைத்தற்கு உரியன என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. அத்தகைய கலிக் கவிகளில் சோழன் நல்லுருத்திரனர் அமைத்த சுவைகள் சிலவற்றை நாமும் சுவைப்போமாக.

ஆயன் ஒருவன் தன் கைக்கோலைத் தன் தாடையில் வைத்து நிலத்தில் ஊன்றிப் பிடித் துக் கொண்டு நின்ற கோலத்தைச் சுவல் மிசைக் கோல் அசைத்த கையன் ' என்ற அடியில் கூறியிருப்பதைப் படிக்கும் போது ஆயன் தோற்றம் நம் கண்முன் காணப் பெறு வதைக் காண்க. முல்லை நிலமாதலின் ஆன் இனங்கட்கு அளவு கூறமுடியாது அல்லவா? அத்தகைய பெருவாரியான ஆன் நிரைகளுள் சில கருமை நிறத்துடன் விளங்கிக் கால்கள் மட்டும் வெண்ணிறமுடையனவாய் இருந்தன என்பதையும், சில தம் உடலகத்துப் பல புள்ளிகளைப் பெற்றுப் பொலிந்து இருந்தன என்பதையும் கூறுதற்கு எண்ணிய இப்புலவர் உடற் கருமையும் வெண்ணிறக்காலுமுடைய ஏற்றிற்கு மலையில் இருந்து ஓடிவரும் வெள் ளருவியின் ஒழுக்கினையும், புள்ளியுடைய ஏற் றிற்கு விண்ணில் படர்ந்த நட்சத்திரங்களையும் முறையாக உவமை காட்டினர்.

"மணிவரை மருங்கில் அருவி போல
அணிவரம்பு அறுத்த வெண்கால் காரி'

"மீன் பூத்து அவிர் வரும் அநீதிவான் விசும்பு போல
வான்பொறி பரந்த புள்ளி வெள்ளை"

என்பன இவரது வாக்குகள்.

ஆயர்கள் இடையே கொல்லேறு தழுவும் வீர மகனுக்கே தன் மகளைக் கடிமணம் முடிக் கும் வழக்கம் இருந்து வந்தது. இவ்வழக்கத் திற்கு இளங் கன்னியரும் இடம் கொடுத்தனர். தாமும் கோல்லேறு தழுவாத வீரமுடைய ஆயர்களை இப் பிறப்பிலேயே மட்டும் அன்றி, மறு பிறப்பிலும்கூட மணக்க விருப்பம் கொள்ளாராம். என்னே அம் மடமாதர் மன உரம் !

"கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானே மறுமையும்
புல்லாளே ஆய மகள்"
என்ற பெருமித வாக்கைக் காண்க.

ஆயர்குடி தொன்றுதொட்ட பாண்டியர் குடியுடன் தோன்றிய பெருமையுடையது என்று சோழர் மரபினரான நல்லுருத்திரனார் கூறிய கூற்று கூர்ந்து கவனித்தற்கு உரியது. "வாடாச் சீர் தென்னவன் தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய நல் இனத்து ஆயர்" என்பர் இப்புலவர் ஏறு. "எஞ்ஞான்றும் நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று" என்றும் இவர் பாலின் பயனைப் பண்படக் கூறியுள்ளார்.

இவரது கவிகளில் பல குறிப்புக்கள் நாம் அறிதற்கு இருந்தாலும், அவற்றை எல்லாம் முழுநூலில் காணுமாறு விடுத்து, இறுதியாக ஒன்றை மட்டும் கூறி இப்புலவரது வரலாற்றை முடிப்போமாக.

ஆயர்கள் கொண்ட நன்னெறிகள் பல. அவற்றுள் ஒன்று தாம் எவ்வளவு பொருளைப் பெற்றாலும் இருமணம் கூடுதல் இல்லை என்ப தாகும். ஏன், உலகமே பெறினும் இருமணம் கூடார் என்க. இதனை எத்துணை அழுத்தம் திருத்தமாக இவ்வரசக்கவிஞர் அறிவிக்கின்றார் பாருங்கள் !

“விரிநீர் உடுக்கை உலகம் பெறினும்
அருநெறி ஆயர் மகளிர்க்கு

இருமணம் கூடுதல் இல் இயல்பு அன்றே”
என்ற வீறுடை அடிகளைக் காண்க