காட்டு வழிதனிலே/தலையெழுத்து

விக்கிமூலம் இலிருந்து

தலையெழுத்து


டைக்கும் பொழுதே நான்முகன் ஒவ்வொருவனுடைய தலையிலும் அவனுடைய வாழ்க்கையமைப்பைத் திட்டமாக எழுதிவிடுகிறான் என்பது பலருக்குச் சம்மதமான கொள்கை. அந்தப் பிரம்மலிபியை மாற்றவே முடியாது என்ற எண்னமும் ஆணிவேரூன்றி அசையாது நிற்கின்றது. அன்றெழுதியவன் அழித்தெழுதப் போவதில்லை என்றும், விதி யாரை விட்டது என்றும் மக்கள் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் சிலர் விதியை மதியால் வெல்லலாம் என்று மேற்கோள் காட்டிப் பேசுகிறார்கள். மார்க் கண்டன் கதை தெரியாதா என்று மிடுக்கோடு கேட்கிறார்கள்.

ஒவ்வொருவனும் தன்னுடைய விதியைத் தானே எழுதிக்கொள்ளுகிறான் என்று நான் நம்புகிறேன். அதாவது ஒவ்வொருவனும் தன்னுடைய வாழ்க்கையின் போக்கைத் தன் செய்கையாலேயே உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ அமைத்துக் கொள்கிறான் என்பது எனது கட்சி. அப்படியானால் முற்பிறப்புக்களில் செய்த வினையின் பயன் ஒருவனைத் தொடராதா என்ற கேள்வி பிறக்கலாம். முற்பிறப்பில் செய்த வினையென்றாலும் அதுவும் அவனுடைய செயல்தானே? ஆதலால் அது என் கொள்கைக்கு மாறுபட்டதல்ல, பல பிறுப்புக்கள் உண்டா இல்லையா என்ற விஷயத்தை நான் இங்கே ஆராயப் போவதில்லை. அவ்வாராய்ச்சியின் முடிவு எவ்வாறாயினும் இது என் கட்சியைப்பாதிப்பதில்லை என்பதை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

ஒருவனுக்கு ஏதாவது ஒரு துன்பம் நேருமானால் "அது என் தலைவிதி" என்று அவன் சொல்லிக் கொள்கிறான். விதியென்று சொல்லிவிட்டு அதன் காரணத்தை ஆராயாது வாளா இருக்கிறான். அத் துன்பத்தைப் போக்க வழி தேடவும் அவனுக்கு உற்சாகயேற்படுவதில்லை. விதியை மாற்ற முடியாது என்றால் அதைப்பற்றி வீண் சிரமப்படுவானேன் என்று நினைக்கிறன். ஆனால், உண்மையில் விதியென்றால் என்ன என்பதை அவன் ஆராய்வதில்லை.

விதியென்ற சொல்லுக்கே தலையெழுத்து என்ற பொருளில்லை. விதி என்பது ஒரு நியதி; ஒரு சட்டம், தீயைத் தொட்டால் சுடும். இது ஒரு நியதி. இந்த விதியை மாற்ற முடியாதுதான். ஆனால் தீயை அணுகாது இருந்துவிட்டால் அது யாரையும் சுடமுடியாது. ஒருவன் தன் வாழ்க்கையில் தவறு செய்தால் அதன் பயனைத் திண்ணமாய் அனுபவித்துத்தான் தீர வேண்டும். அதற்குத் தப்ப முடியாது. அதுதான் விதி. ஆகவே, ஒருவன் தன் விதியைத் தானே எழுதிக் கொள்ளுகிறான் என்பதில் தவறு ஒன்றுமில்லை.

பாரம்பரியத்தால் சில தன்மைகளும், உடல் நிலைமையும் ஏற்படுகின்றன. குழந்தைப் பருவத்திலே ஏற்பட்ட அனுபவங்களினாலும், சூழ்நிலையாலும் சில தன்மைகளும், உடல் நிலையும் உருவாகின்றன. இவையெல்லாம் மனத்தித்துவர்கள் தங்கள் ஆராய்ச்சியின் பயனாகக் கண்டறிந்த உண்மைகள். இவற்றின் மேல் ஒருவனுக்கு ஆதிக்கம் இல்லையாகையால் ஒவ்வொருவனும் தன் வாழ்க்கையமைப்பைத் தானே திட்டமிடுவதாக. எப்படிக் கூற முடியும் என்று கேட்கலாம். பாரம்பரியத்தைத் தானாகவே ஒருவன் உண்டாக்கிக்கொள்ள முடியாதென்பது மெய்தான். குழந்தைப் பருவத்தில் ஒருவனுக்குத் தன் விருப்பப்படி சூழ்நிலையை அமைத்துக்கொள்ளவும் முடியாது.

இங்ஙனம் ஏதாவது ஒரு பிறப்பில் ஒருவனது கட்டுக்கடங்காது நிற்பவைகளை வேண்டுமானால் தலையெழுத்து என்று சொல்லலாம். இங்கு நான் தலையெழுத்தையும் விதியையும் வெவ்வேறு பொருள்களில் வழங்க விரும்புகிறேன். விதியென்பது முன்பே கூறியதுபோல ஒரு நியதி; செய்த வினையின் பயனாக உண்டாவது. தலையெழுத்தென்பது தன்னை மீறி ஏற்பட்ட பாரம்பரியம், இளமைச் சூழ்நிலை போன்றது. தனது வினைக்கு ஒருவன் பொறுப்பாளியாயிருப்பது போல இவற்றிற்கு அவன் அந்தப் பிறவியில் பொறுப்பாளியாக இருக்க முடியாது. ஆனால், ஒருவகையான பாரம்பரியத்தையும், சூழ்நிலையையும் அடையும்படியாக ஒருவன் பிறப்பதற்கே காரணம் அவன் முற்பிறப்பில் செய்த வினையென்று வாதிப்பவர்களும் உண்டு. அது மெய் யென்றால் எனது கட்சி முற்றிலும் வலுவடைகின்றது.

பாரம்பரியத்தினால் ஒரு சில தன்மைகளையும் திறமைகளையும் பெறுவதற்கு வேண்டிய மனப் மனப்பான்மை அழைத்திருக்கிற தென்றும், அவைகள் மலர்வதற்கு வசதியான சூழ்நிலை கிடைத்தால் வளருமென்றும், கிடைக்காவிட்டால் நைந்து போகுமென்றும் மசாத்தத்துவர்கள் கருதுகிறார்கள். மேலும் ஒருவனுடைய வாழ்க்கையமைப்பு அவனுடைய ஐந்தாவது வயதிற்குள்ளேயே பாரம்பரியத்தாலும், சூழ்நிலை அநுபவங்களாலும் பெரும்பாலும் திட்டமடைந்து விடுகின்றதென்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆதலால் ஒருவனுடைய தலையெழுத்தை உருவாக்குவதில் பெற்றோருக்குப் பெரியதோர் பங்கு இருப்பதாகத் தெரிகின்றது. இந்த வகையிலே பார்க்கும்போது பெற்றோர்களின் பொறுப்பு மிகப் பெரியதென ஏற்படுகிறது. பாரம்பரியத் தன்மைகளை அவர்கள் தங்கள் விருப்பப்படி முற்றிலும் செய்ய முடியாவிட்டாலும், தகுந்த சூழ்நிலையை உண்டாக்கி அதன் மூலம் சிறந்த பண்புகளையும், திறமைகளையும் வளர்க்கலாம். பெற்றோர்கள் தங்கள் நடத்தையாலும், செயலாலும் குழந்தைகளுக்கு நல்ல எடுத்துக் காட்டாக இருக்கலாம். ஒருவன் தனக்கு நல்ல அறிவிருந்தும் வாழ்க்கையிலே வெற்றி பெற முடியாதிருப்பதற்கு என்ன காரணம் என்று ஆராயும்போது தன் தந்தை காமவசப்பட்டு இழிந்த செயல் புரிந்து வந்தாரென்றும், அதன் பயனாகப் பாரம்பரியமாகத் தன் மூளையில் ஏற்பட்டிருக்கும் கோளாரென்றால் தன்னுடைய அறிவு சிறப்பாகப் பயன்படாதிருக்கின்றதென்றும் உணர்ந்ததாக ஐரோப்பிய நாடகமொன்று எழுதப்பட்டிருக்கிறது. இது பெற்றோர்களின் நடத்தை குழந்தைகளைப் பாதிக்கின்றது என்ற மனத்தத்துவ உண்மையை அடிப்படையாகக் கொண்டது.

ஒருவன் தான் எண்ணுவது போலவே ஆகிவிடுகிறான் என்று சொல்லுகிறார்கள். உயர்ந்த எண்ணங்களையே எண்ணிக் கொண்டிருப்பவன் வாழ்க்கையில், உயர்வடைவான். எண்ணத்தின் வலிமையை இன்று அறிஞர்கள் உணர்ந்து வருகிறார்கள். எண்ணியார் எண்ணியாங் கெய்தலாம் என்ற உறுதியைச் சாதாரணமாகத் தலைவிதி என்ற எண்ணம் குலைத்து விடுகிறது. எவ்வளவு வேகமாக எண்ணினாலும், முயன்றாலும் தலைவிதிப்படித்தானே முடியும் என்று உள்ளம் சோர்வடைகிறது. ஆனால், விதியென்பதை உள்ளபடி நாம் அறிந்துகொண்டோமானால் சோர்வும் அவநம்பிக்கையும் பிறக்க முடியாது.

உலகத்தில் போர், பூசல் முதலிய துன்பங்கள் நேர்கின்றன. அவற்றால் தனி மனிதர்கள் பலர் துன்பப்படுகிறார்கள். பலர் இறக்கிறார்கள். இவற்றிற் கெல்லாம் அவர்கள் காரணமாக இருக்கவில்லையே என்ற ஐயமுண்டாகலாம். மனிதன் தன் செய்கையாலேயே இன்பதுன்பங்களையும், உயர்வு தாழ்வுகளையும் அடைகிறானென்றால் பெரும் போரால் நேரும் பலனுக்கு அவன் செய்கை எவ்வாறு காரணமாகுமென்று வினவலாம். போரால் துன்புறுவதும் மடிவதும் தலையெழுத்தல்லவா என்றும் கேட்கலாம். இவ்விஷயத்தை நாம் சற்று ஆழ்ந்து ஆய்ந்து பார்க்க வேண்டும். மனிதன் மற்ற மனிதர்களோடு கூடி வாழ விரும்புகிறான். அப்படி வாழும்போது நாடு முதலிய பிரிவினைகளும், வேறு வேறான ஆட்சி முறைகள் முதலியனவும் உண்டாகின்றன. மனிதன் தனியாகச் செயலாற்றுவதோடு மற்றவர்களுடன் சேர்ந்தும் பல செயல்கள் செய்கிறான். அவ்வாறு தன் நாட்டிற்காகவும் சமூகத்திற்காகவும் நேரடியாகவோ தன் பிரதிநிதிகளின் மூலமாகவோ செயல் புரிவதிலே வழியல்லா வழியில் செல்லுவதாலேயே போர் ஏற்படுகின்றது. போரென்பது மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியால் உண்டாவதில்லை. மனிதன் தனக்காக ஏற்படுத்திக் கொண்ட சமூக, அரசியல், பொருளாதார அமைப்புக்களின் விளைவாகவே போர் ஏற்படுகிறது. அவனுடைய குறுகிய நோக்கமும், சுயநலமும், பேராசையும் போருக்கு வழி செய்கின்றன. அப்போரையும் மனிதன் தன் முயற்சியால் தடுக்கக் கூடும். ஆதலால் தலையெழுத்தென்று சொல்லிக் கொண்டு 'வருவது தானே வரும்; போவது தானே போகும்' என முயற்சியின்றி இருத்தல் தவறாகும். தலையில் ஒருவித எழுத்தும் இல்லை; ஒவ்வொருவனும் தானே தன் தலையெழுத்தைத் தன் செயல்களால் எழுதிக் கொள்ளுகிறான்.