காட்டு வழிதனிலே/நிப்பான் நாட்டுக் கவிதை

விக்கிமூலம் இலிருந்து

நிப்பான் நாட்டுக் கவிதை


திரவனின் இளம் பொற்கிரணங்கள் முதல் முதலிலே நிப்பான் நாட்டினையே தழுவுகின்றன. அதனாலேயே அந்தாட்டிற்கு 'உதயச் சுடர் நாடு' எனப் பெயர் வந்தது. ஜப்பான் என மற்றவர்கள் அதை அழைத்தாலும் அந்நாட்டு மக்கள் அதற்கிட்ட பெயர் நிப்பான் என்பதே ஆகும்.

காலைக் கதிரவனின் ஒளி முதன் முதலில் அந்நாட்டிற் படிவது போலவே முன்னேற்ற ஒளியும் ஆசிய நாடுகளுக்குள் அங்கேயே முதலில் படிந்தது. மற்ற ஆசிய நாடுகள் எல்லாம் பெருமையும் நம்பிக்கையும் கொள்ளும்படியாக நிப்பான் முன் சென்றது. ஆனால் மேல் நாட்டு அதிகார வெறியிலே மயங்கி, ஆசிய தர்மத்தை மறந்து அது வீழ்ச்சியுற்றது. அதி வேகமாகச் சென்றவன் கால் இடறி விழுவது இயல்பு தான். ஆனால் அவன் அப்படியே விழுந்து கிடக்க மாட்டான். எழுந்து நின்று தன் குறைகளைக் களைந்து மறுபடியும் முன்செல்வான். நிப்பானும் அவ்வாறு செல்லும்; சென்றுகொண்டிருக்கிறது.

வீழ்ச்சியுற்ற தருணத்தில் அந்நாட்டின் பெருமைகளை யெல்லாம் நாம் மறந்து விடலாகாது. அதன் கலை, அதன் கவிதை, அதன் உள்ளம் இவற்றையெல்லாம் நாம் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

நிப்பான் வடிவிற் சிறியது; ஆனால் அழகில் பெரியது; நீலக் கடலின் மேனியிலே திகழும் வெண்முத்துப் போன்றது. அவ்வாறே அந் நாட்டு இலக்கியத்தின் பரப்பிலே வடிவில் சிறுத்து அழகில் பெருத்த கவிதை மகள் மலிந்திருக்கின்றன. கவிதை எழுதுவது அங்கே பலருக்கு ஒரு முக்கியமான இன்பப் பொழுது போக்காகும். ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் அவ்வாறுதான். கவி புனைவதில் பந்தயங்களும் போட்டி விளையாட்டுக்களும் அங்கே சாதாரண நிகழ்ச்சிகள், கலிதைக்கென்றே நூற்றுக் கணக்கான சிறந்த பத்திரிகைகள் அங்கு நடத்தப்படுகின்றன.

நிப்பான் நாட்டுக் கவிதைகளிலே 'தங்கா' என்ற யாப்புப் பலராலும் போற்றப்படுவதாகும். அதில் இலட்சக்கணக்கான கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. இச்சிறு யாப்பு பன்னிரண்டு முதல் இருபது வரையுள்ள சொற்களாலேயே ஆனது; ஐந்தே வரிகளையுடையது. அவ்வரிகளில் முறையே ஐந்து, ஏழு, ஐந்து, ஏழு, ஏழு அசைகள் தாம் உண்டு. பொதுவாக உதயச் சுடர் நாட்டு யாப்புக்களில் சீர், எதுகை, மோனை முதலான உறுப்புக்களில்லை. 'தங்கா'விலும் அவ்வாறு தான். நிப்பான் மொழியே இசையினிமை கூடியதாதலின் அனவே கவிதையின் உனர்ச்சியை வெளிப்படுத்தப் போதுமானதாக இருக்கிறது.

தங்கா' ஒவ்வொன்றும் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சியில் செதுக்கி எடுக்கப்பட்ட சிறுமணியாகும். அது உருவத்தில் சிறியதெனினும் பொருள் பொதிந்து நிற்பது. கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்திக் குறுகத் தறித்த குறள் அன்னது. வடித்து வடித்துத் திரட்டித் திரட்டிச் சிறிதாக்குவதிலேயே அதன் உயிராகிய ஒளி மேலோங்குகின்றது.

இவ்வாறு குறுகிய வடிவில் இக்கவி அமைவதால் கவிஞன் தான் சொல்ல வந்த பொருளைப் பற்றி ஒரு சில முக்கிய குறிப்புக்களையே எழுதி அவற்றின் மூலமாகவே படிப்போர் உள்ளத்தில் தான் விரும்பிய உணர்ச்சித் துடிப்புக்களைத் தூண்ட முயல்கிறான். அங்ஙனம் எழுதிய சொற்கள் கவிஞனின் மன எழுச்சியில் வெடித்த மின்னல்களாகும். அவற்றின் ஒளியாலும், ஒலியாலுமே உணர்ச்சியின் முழு உருவத்தையும் படிப்போர் அறிந்து கொள்ள வேண்டும்.

அரிமரோ என்ற கவிதன் ஒருவன் செதுக்கிய 'தங்கா'வைப் பாருங்கள்:

காதலால் வாடி இன்னுயிர்
தேய்த்தேன் என்றால்
அவள் துடிப்பாளே! ஐயகோ!
ஈரமில்லா உயிரே

வெறுத்தேன் நான் உனை.

காதலியை அடைய முடியாமல் கலிஞன் தன் உள்ளம் வெதும்புகிறான்; வாழ்வையும் வெறுக்கிறான். ஆனால் உயிரைப் போக்கிக் கொள்ள மட்டும் கருதவில்லை. ஏன்? உயிர்மேலுள்ள ஆசையாலா? இல்லையில்லை; தான் இறந்தால் காதலி வருந்துவாளாம். அவள் வருந்தச் சகியாததால் அவன் தன் உயிர் சுமந்து திரிகிறான். இக்கவிதையின் ஆழத்தையும், அழகையும், உன்னி உன்னிப் பார்க்க அவை பெருகுவது புலனாகும்.

'தங்கா' சிறிய கவிதை தானே, அதை எழுதுவது எளிதாகத் தானிருக்கும் என்ற எண்ணம் நமக்குண்டகலாம். பொருட்செறிவில்லாமல், உயிர்த் துடிப்பில்லாமல் எழுதுவதனால் எளிதுதான். ஆனால், உயர்ந்த கவிதையாக மதிக்கப்படும் 'தங்கா' புனைவது உயர்ந்த வைரத்தைச் சாணை தீட்டி எடுப்பது போலக் கடினமானது. நிப்பான் கவி ஒருவன் கூறுகிறான்: "ஒரு கவி எழுதுவது புத்த மகானின் சிலை வார்த்தெடுப்பது போல அவ்வளவு அருமை வாய்ந்தது."

வேறெரு 'தங்கா'வின் சொற் செட்டையும், பொருட் செறிவையும், கவிதைப் பெருக்கையும் நோக்குவோம்.

எரிதனில் பொங்கும்
எழில் நனி பெருகும் பங்கயமே!
உனைப் போன்ற உயிரழகுக்
கன்னிகளைக் காணுங்கால்-நானோ

நெஞ்சம் புழுங்குகின்றேன்.

இதைப் பாடியவன் ஒரு பெண்மணி. ஐந்தாம் நூற்றாண்டிலே வாழ்ந்த யூர்யகு எனும் இளஞ் சக்கரவர்த்தி ஒரு சமயம் நாட்டு வளம் காணச் சென்றிருந்தான். அவன் மிவா நதியை அணுகிய போது அதில் துணி துவைத்துக் கொண்டிருந்த ஒரு பேரழகு கன்னியைக் கண்டான்; காதலித்தான். அதனால் அவளை பார் என்று வினவினான். கன்னியும், "ஐயனே, தான் அருகிலுள்ள ஊரில் வசிப்பவள்; என் பெயர் அகய்கோ" என விடையிறுத்தாள். "இள நங்காய், நீ வேறு யாரையும் மணந்து கொள்ள வேண்டாம்; நானே உன்னை மணப்பேன்; பொறுத்திரு" என்று மொழிந்து அரசன் மீண்டான்.

அம்மங்கையோ தோல் சுருங்கி, நரை தோன்றி, உடல் தள்ளாடும் வரையில் காதலுடனே அரசனை எதிர்பார்த்திருந்தாள். ஆனால் அவனிடமிருந்து யாதொரு சேதியும் கிட்டவில்லை. அதனால் ஆறாத்துயர் கொண்ட பெண்மணி யூர்யகுவை ஒரு தடவையாவது சாகுமுன் கண்ணீரை காண விரும்பித் தலைநகருக்குச் சென்று அரசவையில் நுழைந்தாள். முதுமை யடைந்திருந்த மன்னனுக்குத் தன் வரலாற்றை விவரித்தாள். அதைக் கேட்டதும், "ஐயகோ, பூபாரம் தாங்கும் சிரமத்தால் உன்னை முற்றும் மறந்தேனே" என்று அவவத்தில் மூழ்கினான் அரசன். அத்துன்பப் பெருக்கால் இரு கவிகளும் பாடினான். அப்பெண்மணியும் தன் வாழ்க்கை முடிந்துவிட்டதை எண்ணித் துயரமும், காவலனைக் கண்டதால் ஆனந்தமும் கொண்டு இரு கவிகள் பாடினாள். அவற்றில் ஒன்றுதான் மேலே காட்டிய பாட்டு.

தனது இளமை வியர்த்தமானதால் இளங்கன்னியரைக் காணும் போதெல்லாம் அந்நினைவு வந்து நெஞ்சம் புழுங்குகின்றாளாம் அவள்.

நிப்பான் நாட்டிலே அனைவரும் இன்பம், துன்பம், கோபம் முதலிய உணர்ச்சிகளின் வயப்பட்ட போது கவி பாடுவார்கள். கவி பாடுதலே  Invalid template invocation→ பண்பாட்டிற்கும், தாகத்திற்கும் அறிகுறியாக அங்குக் கருதப்படுகின்றது. புகழ' பெற்ற வீரர்களும், தலைவர்களும், மந்திரிகளும்; மன்னர்களும் கவி எழுதும் பழக்கத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள். மேய்ஜி எனும் பேரரசன் ஆயிரக் கணக்கான 'தங்கா'க்கள் இயற்றியுள்ளான். அவற்றில் பல சிறந்த கவிதைகளாக மதிக்கப்படுகின்றன.

கட்சோதி என்பான் திக்குத் தெரியாது பரந்து கிடக்கும், கடலிடத்தே மிதக்கும் தோணியைப் பார்த்துப் பாடுகின்றான்:

வழியில்லா வாரிதியில்
செல்லும் சிறு தோணிக்கும்
இளங் காற்றில் ஒரு நல்ல

வழிகாட்டி காண்கிறதே!

எல்லை யில்லா நீரில் மிதக்கும் தோணிக்கும் இளங்காற்று வழிகாட்டியாய் நின்று ஒரு குறிப்பிட்ட திசையில் அதைச் செலுத்துகின்றது, ஆனால், எல்லையில்லாக் காதலில் வாடும் அவன் தன் காதலியை அடைவதற்கு யாரும் இன்துணை புரியவில்லையே என்று உள்ளம் பொருமுகின்றான்.

ஒருவன் தான் முதுமை எய்துவதை நினைத்து வருந்திப் பாடுகிறான்:

இளவேனில் வந்தவுடன்
புள்ளினங்கள் ஆயிரமாய்ப் பாடி நிற்கும்;
எல்லாம் உருமாறி,
இளமை எய்தி எழில் காட்டும்;
என்னை மட்டும் முதுமை கவ்வும்.

நாட்டிலிருந்து அரச ஆணையால் விலக்கப்பட்ட யகாமொரி பாடுகிறான்:

அவனியிலே
விசுப்பினிலே
கடவுளரே இல்லையெனில்
காதலியைக் காணாது

என்னுயிர் தான் நீங்கிடுமே.

பண்டைக் காலத்திலே நிப்பான நாட்டில் திகழ்ந்த தெள்ளிய அறிவு வாய்ந்தவர்கள் தங்கள் மரணத்தறுவாயில் மனித வாழ்க்கையைப்பற்றிப் பொதுவாகவோ அல்லது தங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றியோ தம் உள்ளக் கிடக்கையைக் கவியாக வெளியிடுவதுண்டு. இக்காலத்திலும் அப்பழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். அப்படிப்பாடும் கவிக்கு ஜிசி என்று பெயர்.

ஆடவரும் மகளிரும் குழுமியிருந்து ஏதாவது ஒரு பொருளைப் பற்றியோ, அழகிய காட்சியைப் பற்றியோ கவி எழுதுவதுண்டு. முழுமதி தன் தண்ணிய வெண் கதிர்களைப் பொழிந்து கொண்டிருந்த ஓரிரவில் அதைப் பற்றிப் பலர் கூடிக் கவிதை எழுதினார்கள். மிட்சூனியும் அவர்களில் ஒருவன். அவனுடைய கவிதை இது:

ஆஹா! பேரெழில் இரவு
தேய்ந்து கழிகின்றதே!
என் துன்பம் எழுதும் தரமாமோ?
இவ்விரவைத் தூங்கித் தொலைப்போரை
எண்ணிக்

கன வருத்தம் கொள்ளுகின்றேன்.

அகாஜமிளோ கீமன் என்ற நங்கையின் காதல் இபன் மேல் கோபங் கொண்டு, "நாளை முதல் உன்னைக் கண்ணெடுத்தும் பாரேன்" என்று கூறிச் சென்றபோது அவள் பாடியது:

காதலா, நாளை நீ என்னை மறந்திடுவாய்;
இன்று நீ என்னை நினைந்துள்ள போதே

என்னுயிர் தான் ஏகாதோ!

வேபேர் ஆண்மகன் தன் மனைவியாலுள்ள காதலை ஒரு கவியால் வெளியிடுவதைப் பாருங்கள்:

மனைவிபால் அன்பு
மிதந்துள்ள தம்மா
ஆஹா... நான் குடிக்கும் தண்ணீரில்
அவளுடைய நளின முகம் காண்கிறதே
ஒரு கணமும் அவளை

மறக்க முடியாதே.
நிப்பான் நாட்டைப் பார்த்து மகிழ்ந்த சுவாமி விவேகானந்தர் அதன் அழகையும், மக்களின் கலை உணர்ச்சியையம் வெகுவாகப் பாராட்டியிருக்கின்றார்; இங்கே காண்பித்துள்ள கவிகளைப் போன்ற பல கவிகளைப் படித்து மகிழும்போது அவர்களுடைய கவிதை உள்ளத்தையும் நம்மால் பாராட்டாமலிருக்க முடியாது. காற்றுப் போலே கவிதை நிறைந்த நாடல்லவா நிப்பான் ?