காட்டு வழிதனிலே/அடிகளின் தோற்றம்

விக்கிமூலம் இலிருந்து



அடிகளின் தோற்றம்


லகத்திலே பெரிய மகான்கள் தோன்றுகிறார்கள். சிறந்த உபதேசங்களைச் செய்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த நாட்டிற்கும் காலத்திற்கும் மட்டுமல்ல அவ்வுபதேசங்கள், என்றும் நிலைபெற்ற வாழ்க்கை நெறியாக நிற்க வேண்டிய உயரிய எண்ணங்களை அவர்கள் உலகிற்கே வழங்கிவிட்டுச் செல்கிறார்கள். ஆனால், அவர்களுடைய பெருமையையோ, அவர்கள் எடுத்துரைத்த கருத்துக்களின் அருமையையோ மக்கள் விரைவில் உணர்ந்து கொள்வதில்லை. யாரோ ஒரு சிலர் மட்டும் ஓரளவிற்கு அறிகிறார்கள். அறிந்து அவர்களைப் போற்றுகிறார்கள். அவர்கள் காட்டிய நெறியிலே நிற்க முயல்கிறார்கள். ஆண்டுகள் செல்லச் செல்லத்தான் மகான்களின் பெருமையை உலகம் உணர்ந்து கொள்ள முடிகிறது. விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. அதன் காரணமாக மக்களின் அறிவுத்திறன் மிக ஓங்கிவிட்டதென்று நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் நான் மேலே கூறிய விஷயத்தைக் கவனிக்கிறபோது நம் அறிவு அவ்வளவு சிறப்பாகக் கூர்மையடைந்து விட்டதாகச் சொல்வதற்கில்லை.

காந்தி அடிகள் இவ்வுலகத்திற்கு வந்தார். அவர் இந்த நாட்டிலே பிறந்ததற்காக நாம் பெருமை கொள்கிறோம். அவர் நமக்குச் சுதந்திரம் வாங்கித் தந்ததற்காக நாம் அவரைப் பாரதத்தின் தந்தை என்று கொண்டாடுகிறோம். உலகத்தின் மற்றப் பாகங்களிலும் அலரைப் போற்றுவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், அவருடைய பெருமையை முற்றிலும் மக்கள் உணர்ந்து கொண்டதாகக் கூற முடியாது. அதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் செல்ல வேண்டுமோ? ஆண்டுகள் மட்டும் சென்றால் போதாது போலிருக்கிறது. இன்னும் உலகம் எத்தனை துன்பங்களில் உழவ வேண்டுமோ? துன்பத்தில் உழன்று போராடுகின்ற போதுதான் நமக்குப் பெரியவர்களின் நல்லுரைகள் உறைகின்றன. அதுவரை அவை புலப்படுவதில்லை. நமது அறிவு அத்தனை மந்தம்; இல்லை, அறிவு மந்தமல்ல; நமக்கு அத்தனை உதாசீனம்.

மகாத்மா காந்தி உலகிற்கு வந்தது இந்தியாவின் சுதந்திரத்திற்கு மட்டுமல்ல என்பது எனது கருத்து. இந்திய விடுதலையும், அவர் பணிகளில் முக்கியமானது தான். ஆனால் அதைவிட ஒரு முக்கியமான பணிக்காக அவர் தோன்றினார் என்று நான் எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

சென்ற ஐம்பது ஆண்டுகளுக்குள்ளேவிஞ்ஞானம் மிக விரிவாக வளர்ச்சியடைந்திருக்கிறது. மனிதன் பல அற்புதங்களைச் சாதித்திருக்கிறான். அவனுக்குத் தன் அறிவைப் பற்றி உயர்வாக எண்ணிக் கொள்வதற்குத் தகுதியுண்டு. ஆனால், அறிவு வளர்ந்ததற்கு சமமாக அவனுடைய அன்பு வளரவில்லை. மூளை பெருகிவிட்டது; ஆனால் நெஞ்சு விரியவில்லை. அணுக்குண்டு அவனுடைய அறிவின் வெற்றி. ஆனால் அழிக்கும் படையாகவே அதைப் பயன்படுத்த அவன் முதலில் எண்ணுகிறான். அணுவையும் பிளக்க முடியும் என்ற எண்ணம் பிறக்கும்போதே அதை வலிமை மிக்க அழிவு வேலைப் படையாக்கலாம் என்ற விலங்கு உணர்ச்சியும் கூடவே பிறக்கின்றது. ஆண்மை பெண்மை என்ற இரு சக்திகளின் கூறாக உலகம் அமைந்திருக்கிறது. இதையே நாம் மங்கையோர் பாகங் கொண்ட இறைவன் வடிவத்தில் உருவகமாகக் குறிக்கின்றோம். அவ்விரு சக்திகளும் அண்டங்களை இயக்குகின்றன. மனிதனுக்குள்ளும் அவைகளே பலதிறப்பட்ட தன்மைகளாக விரிந்து நின்று தொழில் செய்கின்றன. அவைகளில் ஒன்று ஓங்கி, மற்றொன்று தாழ்கின்றபோது உலகில் தொல்லைகளே மிஞ்சும். ஆண்மை என்பதிலே வேறு பல பண்புகளை நாம் குறிக்கிறோம். பெண்மை என்பதிலே வேறு பல பண்புகளை நாம் குறிக்கிறோம். அவை முறையே ஆணிடத்தும்பெண்ணிடத்தும் உள்ளவைஎன்பதல்ல.. அவை எல்லோரிடத்திலும் பால் வேற்றுமையின்றி அமைந்துள்ள தன்மைகள். இயல்பாலும், பழக்கத்தாலும் ஆணிடத்துச் சில அதிகமாகத் தோன்றலாம். பெண்ணிடத்து வேறு சில அதிகமாகத் தோன்றலாம். ஆனால், அவை இரண்டும் ஏதாவது ஒரு விகிதத்தில் சேர்ந்து அமைந்ததே மக்கள் கூட்டம்.

நாம் ஆண்மையை வளர்ப்பதில் அதிகக் கவனம் செலுத்திக் கொண்டிருந்துவிட்டோம். இல்லை, இல்லை. அப்படிச் சொல்வது தவறு; ஆண்மையிலுள்ள கீழ்த் தர விலங்குத் தன்மையைக் களைந்தெறிவதில் கவனம் செலுத்தாமலிருந்து விட்டோம் என்று சொல்லுவது தான் பொருந்தும். பெண்மையை நன்கு வளர்க்க நாம் கருதவில்லை. அதனலே உலகம் பெரியதோர் தீமையில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது. காட்டு மிராண்டியாக வாழ்ந்த ஆதி மனிதனுக்கும் இன்றைய 'நாகரிக' மனிதனுக்கும் உள்ள பெரிய வேறுபாடு என்னவென்ற கேள்விக்குப் பெட்னாட்ஷா ஒரு பொருள் பொதிந்த பதில் சொடுத்திருக்கிறார். அவர் சொல்லுகிறார்: 'ஆதிமனிதன் பிறரைக் கொல்ல நஞ்சு தோய்த்து அம்பைப் பான்படுத்தினான்; இக்காலத்து மனிதன் நச்சுப் புகையைப் பயன்படுத்துகிறான். அவ்வளவுதான் வேறுபாடு.' அவர் பேச்சு வேடிக்கை போலத் தோன்றினாலும் உண்மை நிறைந்தது. மனத்தன்மையிலே ஆதிமனிதனும் இன்றைய மனிதனும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். விலங்கு உணர்ச்சி மாறி நெஞ்சிலே இன்னும் தண்மை அதிகம் வளரவில்லே என்பது அவர் கருத்து.

உலகத்திலே ஒரு பெரிய கொடிய யுத்தம் முடிந்து இருபது ஆண்டுகள் கூட ஆகவில்லை. மற்றொரு பயங்கர யுத்தம் வெடித்துவிட்டது. அதுவுந்தான் முடிந்து விட்டதே என்று கூறலாம். உலக சமாதானத்திற்கும், உலக ஒற்றுமைக்கும் ஐக்கிய நாடுகளின் சங்கமும் திறந்துவிட்டதே என்றுகூடக் கேட்கலாம். ஆனால், சண்டை முற்றிலும் ஓய்ந்து விட்டதென்று யாரும் கூற முடியாது. பல பாகங்களிலே அது புகைந்து கொண்டிருக்கிறது. எப்பொழுது இது பெரு நெருப்பாக மறுபடியும் ஓங்கி விடுமோ என்ற கவலை உள்ளத்தைப் பீடித்துக் கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகளின் சங்கத் தலைவர் அன்மையிலே பேசியிருப்பதைப் பார்த்தால் அந்தச் சங்கத்தினால் உலகத்தில் யுத்தம் வராமால் தடுக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை. அதற்கு எதிராக மூன்றாவது உலக யுத்தத்தைப் பற்றிய பேச்சும் இன்று கேட்கின்றது. அணுக்குண்டு செய்வதிலும், அதை ஊழிக் கனவாகவே உருவெடுக்கச் செய்வதிலும், நாடுகள் ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன.

அணுக்குண்டு ஆராய்ச்சியின் வேகம் நஞ்சுபோல ஏறிக்கொண்டிருக்கிறது. பல சிறந்த அறிஞர்கள் அதன் அச்சமூட்டும் விளைவைப்பற்றிப் பேசியுள்ளார்கள். எச். ஜி. வெல்ஸ், "இனிமேல் மனித இனம் உலகில் வாழ முடியாது" என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். அவர் கூறியது போலப் பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. இதுவும் அவ்வாறு நடக்காமல் இருக்கவேண்டுமே என்று சிந்தனையாளர் சிலர் கவலைப்படுகிறார்கள். ஐன்ஸ்டைன் சொல்லுகிறார்: "அணுக்குண்டு யுத்தத்தால் மனிதக் கூட்டம் முழுவதும் அழிந்து போகாது; முக்கால்வாசி கழியலாம்; காடுகளிலும் மலைகளிலும் வசிக்கும் சாதியார்கள் மிஞ்சுவார்கள்." "இனிமேல் யுத்தம் என்றால் துப்பாக்கி எடுத்துச் சுடவேண்டியதில்லை; ஒரு பொத்தானை அழுத்தினால் போதும். உலகம் தவிடு பொடியாகிவிடும்", என்ற பேச்சு இன்று சாதாரணமாகிவிட்டது.

இந்தச் சூழ்நிலையில் வைத்துத்தான் காந்தியடிகளின் தோற்றத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். மனித சமூகத்தை இந்த வையகத்திலே நிலைபெற்று வாழச் செய்வதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது அதுதான் அடிகள் எடுத்துக் காட்டியுள்ள அன்பு வழி. அதை ஏற்றுக்கொள்ளாவிடில் மனிதனுக்கு உய்வில்லை; அவனுடைய இனம் அறிஞர் வெல்ஸ் கூறியபடி மறைந்தொழிந்து போக வேண்டியதுதான். இந்த எச்சரிக்கையைச் செய்ததே மகாத்மா காந்தி உலகத்திற்குப் புரிந்த மிகப் பெரிய பணியாகும். “அன்பும் அகிம்சையும் அவரையே காக்கவில்லை; அவை உலகத்தை எப்படிக் காக்கும்?” என்று சிலர் ஐயுறுகிறார்கள். அது சரியல்ல. அன்பும் அகிம்சையும் அவரைக் காக்கவில்லையென்று நினைப்பது தவறு. அவருடைய மறைவில் அடங்கியுள்ள தத்துவத்தை அறிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. இயேசுநாதர் சிலுவையிலே உயிர் கொடுத்தார். எதற்காக? அவருடைய அன்புக் கொள்கை உயிர் பெறுவதற்காக, அவர் சிந்திய செங்குருதியிலே அது உரம் பெற்று வளர்ந்தோங்கியது. அதிலே புலனாகும் உட்கருத்தை அடிகளின் மறைவோடு ஒட்டிப் பார்க்கவேண்டும். அழிவுப் பாதையிலே உலகம் போகிற வேகத்தைப் பார்க்கும்போது அதற்குச் செய்ய வேண்டிய எச்சரிக்கை மிகப் பெரிதாகிவிட்டது; கவனத்தை ஒரே அடியாக இழுத்துச் சிந்தனையைத் தூண்டக் கூடியதாக இருக்கவேண்டியதாகிவிட்டது. அதற்குக் காந்தியடிகள் தமது இறுதித்தியாகத்தைச் செய்தார். நூற்று இருபத்தைந்தாண்டு வாழ்வேன் என்று கூறியவர், “உலகம் போகிற போக்கைப் பார்க்கிற போது அதில் வாழ எனக்கு விருப்பமில்லை" என்று சொல்லும்படியாகிவிட்டது. ஆனால் அவருடைய மறைவு உலகின் மேல் வெறுப்பாலோ அல்லது சலிப்பாலோ ஏற்பட்டதல்ல: அது பேரன்பால் ஏற்பட்டது.

இவருக்கு முன்னே பல பெரியார்கள் இதே அன்பு நெறியை உலகிற்குப் போதித்தார்கள். "ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்" என்று விரும்பினார் தம்மிடையே தோன்றிய இராமலிங்க வள்ளலார். "அனைவரும் இறைவனுடைய வடிவங்கள்: அனைவரும் ஒன்றே; அனைவருக்கும் அன்பு செய்யுங்கள்" என்று கூறிக் கொண்டு இராமகிருஷ்ண பரம ஹம்சர் வந்தார். அரசியலிலும், வாழ்க்கையில் எல்லாத் துறைகளிலுமே அன்பு நெறி சக்தி வாய்ந்தது என்று காந்தி அடிகள் காண்பித்தார். அவருடையர் கொள்கை ஏதோ கனவு காண்பவனுடைய ஆசையாக நின்றுவிடவில்லை. நாட்டின் விடுதலைக்கே அது வெற்றி வழியாயிற்று. இந்தியாவிற்கு அதனால் விடுதலை கிடைப்பது சாத்தியமாயிற்றென்றால் உலகில் எந்தக் காரியத்திற்கும் அது நிச்சயமாகப் பயன்படும் என்பது திண்ணம் அல்லவா?

சமய சஞ்சீவியாகக் காந்தி அடிகள் காட்டியுள்ள இவ்வன்பு வழியை மேற்கொள்ளாவிடில் மானிட சாதிக்கு இன்பமில்லை, உய்வில்லை என்பதைத் தெளிந்த சிந்தனையாளர்கள் பலர் உணர்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்த நெறியைக் காட்டியதுதான் அடிகள் செய்த அரும்பணி. அதிலே ஒரு சிறிய பகுதி தான் இந்திய விடுதலை, உலகத்திலே அமைதி நிலவ வேண்டுமானால் எல்லா நாடுகளும் சமமாக இருக்க வேண்டும். அடிமைக்கும் ஆண்டானுக்கும் இடையிலே சகோதரத்துவம் வளர முடியாது. உலகம் ஒரு குடும்பமாக இன்புற்று வாழவேண்டுமானால் இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் முதலில் மறைய வேண்டும். அதனாலேயே காந்தியடிகள் இந்திய விடுதலையில் தமது சேவையை ஆரம்பித்தார்.

காந்தியடிகளின் உபதேசம் புதியதல்ல. அவர் அதை வாழ்க்கையில் எல்லாத் துறைகளிலும், அரசியலிலும் புகுத்தி வெற்றி கண்டதுதான் புதுமை. பாரதத்தின் பண்பாட்டிலே ஊறித் தெளிந்தது அவருடைய சத்திய நெறி. அதை உலகிற்கு எடுத்துக்கூற நமக்கு அதிக உரிமையுண்டு. ஆனால், அந்த உரிமைக்கு முதலில் நாம் பாத்திரமாக வேண்டும். காந்தியத்தை முதலில் நாம் கைக்கொள்ள வேண்டும். தமக்குள்ளே பூசலையும் பிரிவினையையும் வளர்த்துக்கொண்டு உலகத்திற்கு அன்பு நெறி உபதேசம் செய்ய இயலாது. காந்தியடிகள் காட்டிய நெறியிலே தாம் நிலைத்து நிற்கவேண்டும். நமக்குள்ளே இருக்கும் குறுகிய எண்ணங்களையும், வெறுப்புக்களையும் ஒதுக்கவேண்டும். அவ்வாறு செய்வதே பிறருக்கு நல்ல எடுத்துக்காட்டாக அமையும். அதனால் உலகத்தை ஒரு குடும்பமாகப் பிணைத்துவிடலாகும். விமானத்திலேறி உலகத்தை ஓரிரு நாட்களில் சுற்றி வருவதால் மட்டும் உலகம்

ஒரு குடும்பமாகிவிடாது. உள்ளம் உலகத்தைதே அன்பால் பிணிக்கவேண்டும். அதற்கு முதலில் அண்டை வீட்டானை நேசித்துப் பழகவேண்டும். அவ்வாறு செய்வதால் காந்தியடிகள் நமக்கு அளித்த சுதந்திர இந்தியாவை உன்னத நாடாக மாற்றுவதோடு உலகத்திலே மானிட சாதி இன்புற்று வாழ வழி கண்டவர்களாவோம். அடிகள் உலகத்திற்குச் செய்த எச்சரிக்கை வீண் போகாமல் இருப்பதற்கு நம்மால் இயன்ற பணியைச் செய்வோம் என்று நாம் உறுதி கொள்வோமாக. வாழ்க காந்தியம்!