காட்டு வழிதனிலே/மதம் தேவையா?

விக்கிமூலம் இலிருந்து

மதம் தேவையா?


ன்று ஒரு புதிய துடிப்பு நம் உள்ளத்திலே ஏற்பட்டிருக்கிறது. அறிவினால் எதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்ற புதிய கிளர்ச்சி அது. கண் மூடித்தனமாகப் பலவற்றை இதுவரை ஒப்புக் கொண்டதுபோல இனிமேலும் ஒப்புக்கொள்ள நாம் விரும்புவதில்லை. இது வளர்ச்சிக்கு அறிகுறி. நமது சமூகத்திலே படிந்துள்ள மாசை நீக்கிப் புதிய உயிர் பெற்று வேகமாக முன்னேறிச் செல்வதற்கு அடையாளம்.

மதம் அவசியமா என்ற கேள்வியும் இப்புதிய துடிப்பின் காரணமாகவே தோன்றியிருக்கிறது. மதத்தின் பெயராலே பல பெரிய அநீதிகள் நடந்திருக்கின்றன; நடக்கின்றன. இன்றும் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக மதம் பயன்படுத்தப்படுகின்றது. பிறப்பினால் உயர்வு தாழ்வு மதத்தின் பெயரால் கற்பிக்கப்படுகின்றது. எல்லா உயிர்களுக்கும் தந்தையென மதமே முழங்குகின்ற இறைவன் திரு முன்பும் அம் மதத்தின் பெயராலேயே வேறுபாடுகள் தென்படுகின்றன. சமூகத்திலே வெளிப்படையாகத் தெரிகின்ற ஒரு தீய பழக்கத்தை ஒழிக்க முயன்றால் அதற்கும் மதம் தடையாகப் பல சமயங்களில் குறுக்கிடுகின்றது. சமூக வளர்ச்சிக்காகப் புதிய வழியிலே எண்ணிப் பார்க்கலாமென்றால், "அதுவும் கூடாது; அது கடவுளின் கட்டளைக்கு மாறுபட்டது" என்று மதத்தின் பெயரால் கூறப்படுகிறது. தாழ்த்த நிலையிலே இருக்கும் ஒருவனை உயர்த்தலாமென விரும்பினால், "அது அவன் விதி, அவனை உயர்த்துவதற்கு நீ யார்?" என்ற பேச்சு மதத்தின் பெயரால் எழுகிறது. இவற்றையெல்லாம் காணும்போது வளர்ச்சியிலே ஆர்வமுள்ளவர்களின் உள்ளம் பொங்குகின்றது. இந்த மதத்தையே அழித்து விட்டால் என்ன என்று அவர்களுக்குக் கோபம் பிறக்கின்றது.

ருஷியா நாட்டிலே மதத்தின் பெயரால் நடந்த அநீதிகளைக் கண்டு புரட்சித் தலைவர்கள் சீறினார்கள். பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த யாரும் எம் மதத்தையும் பின்பற்றக் கூடாது என்று தடை விதித்தார்கள். அவர்களை நாஸ்திகர்கள் என உலகமெலாம் தூற்றியதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தம் கொள்கைகளைப் பின்பற்றினார்கள். ஒரு புதிய சமூகத்தை உண்டாக்கினார்கள். அச் சமூகத்தைப் பழித்தும், அதில் மக்களுக்குச் சுகமே இல்லையென்றும் வேறு நாடுகளிலே தீவிரமாகப் பிரசாரம் நடந்தது: மதக் குருக்கள்மார் இதில் உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொண்டார்கள். பொதுவுடைமைக் காரர்களை அரக்கர்களெனவும், அவர்கள் செய்யும் கொடுமைகளைத் தாங்காது மக்கள் அலறிக்கொண்டிருக்கிறார்களெனவும் புத்தகங்களும், பத்திரிகைகளும் எடுத்தோதி மக்களைப் பயமுறுத்தின. ஆனால், இரண்டாவது உலக மகாயுத்தம் உண்மையை வெளியாக்கிவிட்டது. ருஷிய மக்கள் அனைவரும் உலகமே அதிசயிக்கும்படி தங்கள் நாட்டிற்காகப் போரிட்டார்கள். தோல்விக்கு மேல் தோல்வி ஏற்பட்ட ககாலத்திலும் அவர்கள் தங்கள் உறுதியிலிருந்து மாறவில்லை. அந்நாட்டிலே அரக்கர்களுடைய அரசு நடந்திருந்தால் மக்கள் அதற்காக ஆயிரக்கணக்கில் தங்கள் உயிரைத் தியாகம் செய்ய முன் வந்திருக்கமாட்டார்கள். புதிய சமுதாயத்திலே மகிழ்ச்சியும் பலமும் பெற்றுப் புதிய உயிரொளியோடு விளங்கியிராவிட்டால் அந்நாடு இந்த யுத்தத்திலே வெற்றி கண்டிருக்க முடியாது. இதைக் கண்ட நம் மக்களும் எண்ணமிடலானார்கள். நாம் மட்டும் இந்த மதத்தை விடாமல் பிடித்துக்கொண்டு வளர்ச்சி குன்றியிருப்பானேன்? மதத்தைப் புறக்கணித்துவிட்டு வேறு ஒரு நாடு சிறந்த முறையில் முன்னேறி யிருக்கிறதென்றால் நாமும் ஏன் அவ்வாறு செய்யக்கூடாது என்று வேகமாகக் கேட்கலானார்கள்.

இன்று காணப்படும் அழிம்புகளைக் கண்டு உள்ளம் கொதித்த இவர்கள் தங்களுக்கேற்பட்டுள்ள நியாயமான சீற்றத்தின் வேகத்திலே ஒரு உண்மையை மறந்துவிட்டார்கள். இவர்கள் எதை மதமெனக் கண்டிருக்கிறார்களோ அது உண்மையான மதம் அல்ல. "கிறிஸ்து மகான் உபதேசித்தது கிறிஸ்து மதம்; சர்ச்சு உபதேசிப்பது சர்ச்சு மதம்" என்று ஒரு அறிஞர் கூறியது போல் உண்மை மதம் வேறு. கோயில்களில் நடைமுறையில் இருக்கும் மதம் வேறு. மதம் என்பது வாழ்க்கை நெறி. வாழ்க்கையை நல்ல முறையிலே எவ்வாறு வாழலாம் என்பதைச் சொல்லுவதே மதம். ஒரு ஆங்கிலப் பெரியார் கிறார்: “மதம் என்பதன் பொருள் என்ன ? அது உள்ளத்திலே நன்னெறியைப் பதிய வைப்பது; சுய நலம், பேராசை முதலியவற்றை எதிர்த்து நிற்கும் ஆற்றலைத் தருவது நடத்தையையும் நோக்கத்தையும் தூய்மைப் படுத்துவது; காமத்தை வெல்ல உதவுவது; உண்மை பேசுதல், நாணயமாக நடத்தல், கருணையோடு வாழுதல், பிறர் குற்றம் பொறுத்தல், சிறிய செய்கையிலும் மனச்சான்றின்படி நிற்றல் ஆகியவற்றைக் கடைப்பிடித்துத் துணிவுடனிருக்கச் செய்வது சொந்த வாழ்க்கையிலும், பிறர் கண் முன்பும், பிறர் காணாதவிடத்திலும், எப்பொழுதும் நன்னெறியையே சார்ந்து நிற்கச் செய்வது ; சீரிய கொள்கையைக் கைக்கொண்டு நடப்பதோடல்லாமல் என்றும் புத்துயிர் பெற்று வாழச் செய்வது இவற்றை யெல்லாம் கொண்டதே மதம்” என அவர் விரித்துரைக்கின்றார். ஆகவே, மதம் என்பது வாழ்க்கையைச் சீரிய முறையிலே நடத்துவதைப் போதிப்பதும், வாழ்க்கையின் உண்மைக் குறிக்கோளை அடையச் செய்வதுமாகும். அதை வேண்டாமென மறுப்பது நல்வாழ்க்கையையே மறுப்பதாகும்.

“நல்வாழ்க்கை வாழ்வதற்கு நீதி நெறிகள் மட்டுமிருந்தால் போதுமே, மதம் எதற்கு?” என்று சிலர் கேட்கலாம். உலகத்தில் இன்பம் நிலவ வேண்டுமானால் ஒவ்வொரு தனி மனிதனும் நன்னெறியில் ஒழுகவேண்டும் என்று எல்லோருக்கும் சிறு வயது முதற்கொண்டே அறிவூட்டிவிட்டால் நாம் விரும்புகின்ற பயன் கிடைத்துவிடும்; அதற்கு மதம் தேவையில்லையென அவர்கள் கருதலாம். தனிமனிதனுடைய சுகமும் நன்னெறியில் நிற்பதாலேயே ஏநிற்படுகின்றதென்றும் அறிவுறுத்தி அதன் மூலம் மேலே எடுத்துக் காட்டிய ஆங்கிலப் பெரியார் எதிர்பார்க்கும் பயன்களைப் பெறலாமே என்றும் அவர்கள் கேட்கலாம். இவ்வாறு செய்தால் குருட்டு நம்பிக்கைகளும் உயர்வு தாழ்வுகளும், மூடப் பழக்க வழக்கங்களும், சமயப் பூசல்களும் ஒழிந்து விடுமல்லவா என்றும் அவர்கள் வினவலாம்.

நன்னெறியைக் கடைப்பிடித்து நிற்கும்படி அறிவுறுத்துவதனால் இன்றுள்ள ஏற்றத் தாழ்வுகளைப் போக்கிவிடலாம்; அதனால் வாழ்க்கையில் பல வசதிகளும் சுகமும் கிடைக்கும்படி செய்யலாம் ; அதில் ஐயமில்லை. ஆனால், அதற்காக மதத்தைப்புறக்கணிக்க வேண்டிய தேவையில்லை. மதம் அதற்கு முட்டுக்கட்டையல்ல. மதமும் அதையே செய்ய முயல்கின்றது. அதுமட்டுமல்ல, இந்த நன்னெறிப்போதனை செய்யாத வேறொரு முக்கியமான காரியத்தையும் மதம் செய்ய முயல்கின்றது. நன்னெறிப் போதனையானது உலக வாழ்க்கையோடு நின்றுவிடுகின்றது. மதம் அதற்கு மேலும் செல்லுகின்றது. உலக இன்பத்தையே முடிவாகக்கொண்டு வாழ்க்கை நடத்தினால் மக்கள் என்றும் மனநிறைவு பெறவே முடியாது. அவர்கள் எதிர்பார்க்கும் இன்பத்திற்கு ஒரு எல்லை வகுக்கவும் இயலாது. உலக இன்பத்தின் இயல்பே ஆசையைப் பெருக்குவதுதான். ஆதலால், மக்கள் அனைவரும் தமது சுகத்திலேயே கண்ணாக இருக்கத் தொடங்கினால் அதில் மனநிறைவு பெறாமல் ஏங்கவும், அதன் பயனாகத் தன் நலத்தையே பெரிதாக எண்ணவும் தலைப்பட்டுவிடுவார்கள். அது முடிவில் தம் சுகத்தையே நாடும் விலங்கு நிலைக்கு இழுத்துச் சென்றுவிடும். அதனால்தான் ஒரு பெரியார் கூறுகிறார்: "மக்கட் சமுதாயத்திலிருந்து மதத்தை அகற்றிவிட்டால் அது விலங்குக் கூட்டமாக முடியும்." நீதி நெறிகளால் உலகத்தில் எல்லாவிதமான உயர்வு தாழ்வுகளும் நீங்கலாம்; எல்லோருக்கும் சுகங் கிடைக்கலாம். ஆனால், அவ்வாறேற்பட்ட வாழ்க்கையில் முழு மன நிறைவு ஏற்படுமென்று சொல்ல முடியாது.

உலக இன்பங்கள் எல்லாவற்றையும் பெற்று வாழக்கூடிய நிலையில் பலர் இன்று இருக்கின்றார்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்க்கையில் முழு மனநிறைவு கிடைத்து விடுகிறதில்லை. பெறுவதற்கரிய ஏதோ ஒன்றை விரும்பி மனித உள்ளம் ஏங்கிக் கொண்டிருக்கிறது. அதை உலகத்திலுள்ள எந்த இன்பப் பொருளிலாவது பெற முடியுமா என்று தேடித் தேடி அலைந்து ஏமாற்றமடைகின்றது. அந்த நிலைத்த இன்பத்தை அளிக்கத்தான் மதம் முன்னிற்கிறது. கடவுட் கொள்கையில்லாத தன்னெறி வாழ்க்கை உலக இன்பங்களை நல்கலாம்; ஆனால் மதமானது அவற்றோடு நிலைத்த இன்பத்தையும் மன நிறைவையும் தரக்கூடிய உயர் நெறியைக் காட்டுகிறது. ஆகையால்தான் மதம் தேவை என்று கூறுகிறோம்.

மதத்தின் பெயரால் பல சிறுமைகள் நடக்கலாம். ஆனால், அவற்றிற்காக மதத்தையே கணிப்பது அறிவுடைமையல்ல. விஞ்ஞானம் பல கொடுமையான அழிக்கும் படைகளுக்குக் காரணமாக இருக்கின்றது. அதனால் விஞ்ஞானத்தையே வேண்டாமெனத் தள்ளி விடலாமா? அவ்வாறு செய்ய நினைப்பது எப்படித் தவறாகுமோ அது போலவே மதத்தை விலக்க நினைப்பதும் தவறாகும். மதத்தின் பெயரால் நடைபெறும் அநீதிகளை நாம் களைந்தெறியலாம்; உறுதியுடன் களைந்தெறிய வேண்டும். பொற்சிலையிலே தூசு படிந்திருந்தால் தூசைத் துடைத்தெறிய வேண்டுமே ஒழியச் சிலையை உடைத்தெறியக் கூடாது.

உண்மை மதத்தினின்றும் வேறுபட்டிருக்கிற புறச் சடங்குகள், வழிபாட்டு முறைகள் முதலியவற்றில்தான் குறைபாடுகள் பெரிதும் இருக்கின்றன. அவைகளே வேற்றுமைக்கும் காரணம். ஒவ்வொரு மதத்திலும் பொதுவாக மூன்று படிகள் இருக்கக் காண்கிறோம். தத்துவம், புராணம், சடங்குகள் என்பன அவை. புராணமும் சடங்குகளும் சாதாரண மக்களுக்கு உண்மையை எளிய முறையில் விளக்கிக் காண்பிப்பதற்காக எழுந்தவை. அவைகளிலே பல அந்த அந்தக் காலத்திற்கேற்றவாறு உண்டாக்கப்பட்டவை. அவை எக்காலத்திற்கும் வேண்டப்பட்டவை யல்ல. ஆதலால் அவற்றிலே உள்ள குறைபாடுகளையும், பயனெழிந்தவைகளையும் களைந்து விட வேண்டும். மாறாத தத்துவங்களையும் மற்றவைகளையும் வேறு வேறாகப் பிரித்துணராமல் கண்மூடித்தனமாக அனைத்தையும் பின்பற்ற முயல்வது கடவுகளுக்குத் துரோகம் செய்வதாகும். இறைவன் நமக்நமக்களித்துள்ள அறிவை நல்வழியிலே பயன்படுத்தாதிருப்பது துரோகமல்லவா? சுவாமி விவேகானந்தர் ஓரிடத்திலே கூறுகிறார்: "தனது அறிவைப் பயன்படுத்தும் ஒருவன் இறைவனிடத்து நம்பிக்கையில்லாதிருப்பினும் அவனை இறைவன் மன்னித்து விடுவார்; ஆனால் அறிவைப் பயன்படுத்தாது குருட்டுத்தனமாக நம்புவனை அவர் மன்னிக்கமாட்டார் என்று நான் நம்புகிறேன்."

குறைபாடுகள் இருப்பதால் மதத்தையே ஒழித்துவிட வேண்டுமென்பதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. மேலே படிந்திருக்கிற மாசையெல்லாம் விலக்கி விட்டுப் பார்த்தால் பெரிய உண்மைகளை மதம் காண்பிப்பதை அறியலாம். மனிதனுக்கு நிலைத்த மன அமைதியையும், இன்பத்தையும் அளிக்கக்கூடிய உண்மைகளை, அதில் காணலாம். சிறந்த ஞானிகள் தங்கள் பெருமுயற்சியினால் கண்டறிந்த மறை பொருள்களை நமக்கு மதத்தின் மூலம் அளித்திருக்கிறார்கள். உலகத்திலே ஓரிடத்திலல்ல, பல நாடுகளிலே மகான்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மெய்ஞானத் தேட்டத்திலே அடைத்த அநுபவங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். நடு நிலைமையோடு ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு அவை அனைத்தும் ஒன்றிற்கொன்று மாறுபட்டவை யல்லவென்று தெளிவாகும். அவற்றிலே வீண் வாதங்களுக்கோ உயர்வு தாழ்வுகளுக்கோ, அநீதிகளுக்கோ இடம் இல்லை. ஆதலால் அவற்றை அறிந்து நாம் பயனடைய வேண்டும்.

மதம் மதம் என்று பேசிக்கொண்டிருப்பவர்களிடத்தே முயற்சி இல்லை யென்றும், அவர்கள் உலகத்தை வெறுத்துப் பேசிச் சமுதாய முன்னேற்றத்திற்குப் பாதகமாக இருக்கிறார்களென்றும், மத விஷயங்களிலே அதிகக் கவனம் செலுத்தியதனால் தான் இந்நாடு தாழ்வற்றதென்றும் சிலர் கூறுகிறார்கள். இக்குறைபாடுகளெல்லாம் மதத்தைச் சரியானபடி புரிந்து கொள்ளாததினால் ஏற்பட்டவையே ஒழிய மதத்தினால் உண்டானவையல்ல என்று நான் அழுத்தமாகக் கூற விரும்புகிறேன். மதத்தை உண்மையாகப் பின்பற்றுகிறவர்கள் தான் அருஞ்செயல்கள் ஆற்ற முடியும் என்பது எனது நம்பிக்கை. மதம் கடமையைப் புறக்கணிக்கச் சொல்லவில்லை; மதம் கடமையைப் பற்றற்ற நிலையிலிருந்து உயர்ந்த முறையில் செய்யும்படி போதிக்கின்றது.

மதத்தின் மூலம் உலகம் அனைத்தையும் ஒரே குடும்பமாகவும், எல்லா உயிர்களுக்கும் அன்பு செய்து வாழ்தலே உண்மையான இன்பத்திற்கு வழியெனவும் உணரலாகும். அவ்வுணர்ச்சியால் நாம் இன்று விரும்பும் எல்லா விதமான சமத்துவத்தையும் பெறலாம். ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனது அம்சமென்று மதம் போதிக்கின்றது. இந்த உண்மை நீதி நெறிகளை மட்டும் கடைப்பிடிப்பதால் வெளியாகாது. ஆகவே, மத உணர்ச்சியற்ற நாட்டிலே தனி மனிதனுக்கு அளிக்கவேண்டிய மரியாதை இராது. ஒவ்வொரு உயிரும் இறைவனின் அம்சம் என்பதை அறிந்து கொண்டால் பிறகு வேறுபாடுகளுக்கு இடமேது? ஆதலால் மதம் என்பது உயர்ந்த

உண்மையைக் காட்டும் நெறியென்றும், அதைப் பின்பற்றா விடில் மனக்கவலை மாற்றல் அரிது என்றும், சடங்குகள் முதலானவைகள் மதத்தில் நிலையான முக்கிய பகுதிகள் அல்லவென்றும், அவற்றில் காணப்படும் குறைபாடுகளை அவ்வப்போது களைந்துவிட்டு மதத்தைப் பின்பற்ற வேண்டியது சிறந்த முறை என்றும் நாம் அறியவேண்டும். மேல் நாடுகள் விஞ்ஞானம் முதலிய சாதனங்களைக் கொண்டு உலக இன்பத்தை நாடின; கீழ்நாடுகள் தத்துவ விசாரணையில் நின்று ஆன்மிக வளர்ச்சியை நாடின. இரண்டிலுமுள்ள சிறப்பியல்புகளின் சேர்க்கையிலேதான் உலகம் இன்பமடைய முடியும்.