காட்டு வழிதனிலே/மாலைப் பொழுதினிலே

விக்கிமூலம் இலிருந்து

மாலைப் பொழுதினிலே


ரேலென்று வந்த சிறு தூறல் அடங்கிவிட்டது. மரங்கள் மட்டும் இலை நுனியில் கோத்துவைத்திருந்த முத்துப்போன்ற துளிகளை இன்னும் சொட்டிக் கொண்டிருக்கின்றன. பச்சைக் கிளியொன்று கீச்சிட்டு இலைகளிடையே பாய்கின்றது. அதனால் ஏற்பட்ட அசைவினாலே திபுதிபுவென்று வேகமாக முத்துச் சொட்டுக்கள் விழுந்து எனக்குப் பன்னீர் தெளிக்கின்றன. காக்கைகளும் மைனாக்களும் நனைந்த சிறகுகளை உலர்த்திக் கோதி அழகு செய்து கொண்டே ஏதேதோ உற்சாகமாக உரையாடுகின்றன.

எங்கும் ஒரே புதுமை உணர்ச்சி பொங்குகிறது. பகவெல்லாம் கதிரவனின் வெம்மையில் வாடியதால் உண்டான சோர்வுக்கு மாலையிலே திடீரென்று வீசிய காற்றும், பிறகு அது அடங்கி வீழ்ந்த துளிகளும் மாற்றாக வந்தன. சோர்வு நீங்கிப் புதிய உற்சாகம் எங்கும் கொப்புளித்துக்கொண்டிருக்கிறது. எங்கும் ஒரு புது இளமை, எங்கும் ஒரு புது வனப்பு. தண்ணெனப் பெய்த மாரியில் ஆடி இயற்கையானது களைப்பு நீங்கிக் கொம்மாளம் அடித்துக் கொண்டிருக்கிறது.

வானத்தை மூடியிருந்த மேகப்படாமும் எப்படியோ சட்டென்று மறைந்துவிட்டது. ஆங்காங்குப் பஞ்சுப் பொதிகள் போலச் சில வெண் மேகங்களே மிதந்துகொண்டிருக்கின்றன. வானத்தின் நீலத்திலும் ஒரு தெளிவு காண்கிறது. கழுவி எடுத்த நீலம் என்று சொல்லும்படி நீல நிறம் அவ்வளவு ஆழ்ந்து அடுக்கின்மேல் அடுக்காக நீலத் திரையை வைத்தது போன்று காட்சியளிக்கிறது. அந்தி ஞாயிற்றின் பொற்கிரணங்களும் மழை நீராடிப் புத்தொளி பெற்றுவிட்டனபோலும். நிலப் பரப்பெல்லாம் அற்புதமான தெள்ளிய மஞ்சள் வெயில் படர்ந்திருக்கிறது.

எதிரே நீண்டு நிமிர்த்துள்ள நீலமணிக் குன்று, இந்தப் புதுக் கிரணங்களில் மூழ்கி அதன் மந்தமான வெதுவெதுப்பைத் துய்த்துக்கொண்டு படுத்திருக்கிறது. அதன் முகத்திற்கு மட்டும் வெயில் படாதவாறு ஒரு மேகப் புதர் எதிரே நின்று குடை பிடித்துக்கொண்டிருக்கிறது.

அந்த உள்ளத்திற்கினிய காட்சியைப் பார்க்கக் கொடுத்து வைத்தேன் நான். அதன் அழகிலே சிந்தையைச் செலுத்தி அப்படியே நடக்கலானேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் ஓர் ஊர் கிடையாது. சுற்றிலும் மேட்டு நிலம், சோளப் பயிர், துவரைச் செடி, இளம் வரகுக் கதிர் இவைதாம் புனல் குடைந்து புது வனப்புப் பெற்று மேலெழுந்த இளங் குமரிகள் போலப் புனங்களில் விளங்கின. நான் புனத்தினூடே புகுந்து மேற்கு நோக்கிக் கால் எடுத்து வைத்தேன்.

பெரும்புறா ஒன்று ஆழ்ந்த குரலில் தனது துணையைக் கூவியழைக்கத் தொடங்கி விட்டது. அதனுடைய குரல் எத்தனை துாரந்தான் கேட்குமோ! வெகு தொலைவிலிருந்து அன்பு கனிந்த பதில் குரல் வந்தார். பக்கத்திலே எனக்கும் ஒரு துணை இருந்தால் இன்னும் நன்று இருக்குமே என்ற எண்ணம் எப்படியோ உதயமாயிற்று.

என் மனமறிந்து உற்ற துணையாகத் தனி வழியிலே வரக்கூடியவள் ஒருத்திதான் உண்டு. இயற்கை தரும் இன்பத்தையும் அறிவையும் பன்மடங்கு பெருகும்படி செய்ய வல்லவள் அவள். அவள் தான் கவிதைக் கன்னி. அவளுடைய காதலைப் பெற்று விட்டவர்கள் பாக்கியசாலிகள் என்பது என்னுடைய கருத்து. உலாவப் போகும்போது தனியாகச் செல்லவேண்டும். கவிதைப் பெண்ணின் காதலும் வாய்த்திருந்தால் இந்தத் தனிமையைவிட இன்பம் பயப்பது வேறொன்றும் இல்லை. அவளும் தனிமையிலேயே நம்முடன் உறவாடப் பெரிதும் விரும்புகிறாள். அந்த நிலையிலே தான் நானும் அவள் காதலைப் பெற்றேன்.

பேச்சுக் கிடமேதடி-நீ

பெண்குலத்தின் வெற்றியடி

என்று நான் வாய்விட்டுப் பாடிக்கொண்டே நடந்தேன்.

ஓரிடத்தில் ஆடுகள் கும்பலாக மேய்ந்தன. ஒரு கல்லின்மேல் வயது முதிர்ந்த இடையன் ஒருவன் உட்கார்ந்து புல்லாங்குழலில் இசை பொழிந்து கொண்டிருந்தான். சாதாரணமான தெம்மாங்கு தான் அது. இருந்தாலும் அந்தச் சந்தி வேளையிலே அதற்கு ஏதோ ஓர் அலாதியான இனிமை இருந்தது. வானவெளி எல்லாம் அந்த நாதத்தின் நிறைவு தான். புல் மேயும் ஆடுகளும் அதைத் துய்த்து மகிழ்ந்தன.

ஆட்டுக் குட்டிகளுக்கு ஒரே களியாட்டம், துள்ளித் துள்ளிக் கால்களைக் காற்றில் வீசி எழுந்து தாவியும் பாய்ந்தும் விளையாடின. "அடடா, இந்த உயிரினங்களெல்லாம் இப்படி மகிழ்ச்சியோடு வாழ, மனிதன் மட்டும் வாழத் தெரியாமல் சங்கடப்படுகிறானே?" என்று நினைத்தேன். அப்படி எண்ணியவாறே சிந்தனையில் ஆழ்ந்து நின்றுகொண்டிருந்தேன். ஆட்டிடையன் மெதுவாக அருகே வந்து, "சாமி, ஆட்டுக்குட்டிகளைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்களே?" என்று பேச்சுக் கொடுத்தான்.

நான் சட்டென்று அவன் பக்கம் திரும்பி, "ஆமாம், இந்த ஆட்டுக்குட்டிகளுக்காவது வாழத் தெரிகிறது. மனிதனுக்கு அதுகூட முடியவில்லையே என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்" என்றேன்.

"ஆட்டுக் குட்டிக்கு என்ன சாமி தெரியும்? பாவம்! நானும் - ஐம்பது வருசமாக ஆடு மேய்க்கிறேன். இருபது தலைமுறைக்குமேலே ஆடுகளைப் பார்த்தாச்சு. ஒரு நரிக்குட்டியை எதிர்த்து நிக்க இதுகளுக்கு முடியலையே?" என்று வேடிக்கையாக அவன் சொன்னான்.

அவன் சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதிலே எவ்வளவு பெரிய உண்மை பொதிந்து கிடக்கிறது! அது மேலும் என்னைச் சிந்தனையால் புகுத்திற்று. "ஆட்டுக்குட்டியின் வாழ்க்கை அமைதியாகத்தான் உள்ளது. ஆனால், அதிலே ஏதாவது மாறுதல் உண்டா? நுாறு தலைமுறைக்குப் பிறகு பார்த்தாலும் அதே வாழ்வுதானே? இடையன் சொன்னது போல, ஓர் அற்ப விலங்கான நரியை எதிர்த்துப் போராடவாவது ஆடு கற்றுக்கொண்டிருக்கிறதா? மனிதன் எத்தனை அற்புதங்களைச் சாதித்திருக்கிறான்! அவனுக்கு இறகு இல்லை; இருந்தாலும் பறக்கிறான். இப்படி எத்தனை அருஞ்செயல்கள்! அவன் வாழ்க்கையிலே அமைதி இல்லை என்பது மெய்தான். ஒருவேளை இந்த அமைதியின்மையே அவனுடைய பெருமைக்கும் முயற்சிக்கும் காரணம் போலும். அமைதி கிடைத்து விட்டால் பிறகு முயற்சி ஏது? அவனுக்குத் தனது இன்றைய நிலையிலே திருப்தி இல்லை. அதைத் திருத்தி ஒப்பற்றதாக அமைக்க விரும்புகிறான். அதற்காக விஞ்ஞானத்தையும், மற்றக் கலைகளையும் துருவித் துருவித் தேடி அலைகிறான். பல சமயங்களிலே தவறுகளும் செய்கிறான். இன்பத்திற்காக வளர்த்த கலைகளையே துன்பப் படைகளாகவும் ஆக்கிக்கொள்கிறான். இருந்தாலும், அவனுடைய குறிக்கோள் மிக உயர்ந்தது. அதை அடையும் வரையில் அவன் மனஅமைதி பெறமாட்டான். உலகமெல்லாம் ஒரு வீடு என்றும், மக்கள் எல்லோரும் ஒரு குடும்பத்தார் என்றும், அனைவருக்கும் இன்பம் பொதுவாக ஏற்பட வேண்டுமென்றும் அவன் அறிவு சொல்லுகிறது. அதை அடைய அவன் செய்யும் முயற்சியில்தான் வழி தவறிச் சென்று முட்டி மோதிக்கொண்டு இடர்ப்படுகிறான். அவன் மட்டும் இந்த இயற்கையிலே கிடைக்கும் சாந்தியை அவ்வப்போது உலர்ந்தும் துய்க்கப் பழகிக் கொண்டால் அவனுடைய உன்னத நோக்கம் நல்ல முறையிலே, இன்ப வழியிலே வெகு விரைவில் கைகூடிவிடும்" என்று நான் இப்படி ஆழ்ந்து எண்ணிக்கொண்டே நடந்தேன். அதனால் இடையனைக்கூட மறந்துவிட்டேன். "போய் வருகிறேன்" என்று ஒரு சொல்லாவது கூறலாமொன்று திரும்பிப் பார்த்த போது தொலைவிலே அந்த இடையன் பழையபடி கல்லில் மேல் அமர்ந்திருப்பது தெரிந்தது. மறுபடியும் அவன் குழல் ஊதத் தொடங்கிவிட்டான். அதன் இனிய நாதம் காற்றில் மிதந்து வந்து என் காதில் தேன் பாய்ச்சியது. இடையனோடு ஆடுகளும் அமைதியில் மூழ்கிக் காட்சியளித்தன.

அந்த இடையனைச் சந்தித்தது நல்லதாயிற்று. அவனுடைய வாழ்க்கையும் அவ்வாடுகளின் வாழ்க்கையைப் போலவே மாறுதல் அறியாதது. இருப்பினும் அதிலே உள்ள சாந்தியை ஓரளவிற்காவது பெற முடியுமானால் பரபரப்பும் வேகமும் நிறைந்த நகர வாழ்க்கையில், நிலைத்துள்ள மக்களுக்குப் பெரிதும் நன்மை உண்டாகும். நாட்டுப்புறங்களிலே, காட்டு வெளியிலே படிந்துள்ள அமைதி நகரத்தில் ஏது? அதை இழந்துவிட்டால் வாழ்க்கையில் வேறு என்ன இருந்தும் இல்லாதது போலத்தான். இன்பத்தையும் வசதிகளையும் முன்னேற்றத்தையும் தேடி எவ்வளவு முயன்றாலும் இயற்கை தரும் அமைதி இல்லாதவிடத்து முழு வெற்றி கிடைக்காது. மேலும் திறந்த காட்டு வெளியினிலே தனியாகக் கால்போன போக்கில் திரியும் போது வாழ்க்கையிலே கசப்பூட்டும் சிறிய செயல்கள் மறந்து போகின்றன; உள்ளம் விரிந்து உயரப் பறக்கின்றது.

அதன் பயனாகப் பிறக்கும் அமைதியும் தெளிவும் இயற்கையோடு தனித்து உறவாடியவர்களுக்குத் தான் தெரியும். இவ்வளவு பெரிய இன்பத்தைப் பெற மக்கள் அனைவரும் முற்படவேண்டும் என்ற ஆர்வத்தோடு நான் அந்த மாலைப் பொழுதிற்கு நன்றி செலுத்தித் திரும்பினேன்.