கார் நாற்பது

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

கார் நாற்பது[தொகு]

ஆசிரியர்: மதுரைக் கண்ணங்கூத்தனார்


பாடல்: 01 (பொருகடல்...)[தொகு]

தோழிகூற்று;

பொருகடல் வண்ணன் புனைமார்பில் தார்போல்

திருவில் விலங்(கு)ஊன்றித் தீம்பெயல் தாழ

வருதும் எனமொழிந்தார் வாரார்கொல் வானங்

கருவருந்(து) ஆலிக்கும் போழ்து. (01)

(தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தியது)


பாடல்: 02 (கடுங்கதிர்...)[தொகு]

தோழிகூற்று:

கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வம் எய்த

நெடுங்காடு நேர்சினை யீனக் - கொடுங்குழாய்

இன்னே வருவர் நமர்என்(று) எழில்வானம்

மின்னும் அவர்தூ(து) உரைத்து. (02)

( இதுவுமது)'


பாடல்: 03 (வரிநிறப்...)[தொகு]

தோழிகூற்று:

வரிநிறப் பாதிரி வாட வளிபோழ்ந்(து)

அயிர்மணல் தண்புறவின் ஆலி - புரள

உரும்இடி வானம் இழிய எழுமே

நெருநல் ஒருத்தி திறத்து. (03)

(பருவம் கண்டழிந்த தலைமகள் ஆற்றல்வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற உரைத்தது)


பாடல்: 04 (ஆடுமகளிரின்...)[தொகு]

தோழி கூற்று:

ஆடு மகளிரின் மஞ்ஞை அணிகொளக்

காடும் கடுக்கை கவின்பெறப் பூத்தன

பாடுவண்டு ஊதும் பருவம் பணைத்தோகி

வாடும் பசலை மருந்து. (04)

(தோழி பருவம் காட்டித் தலைமகளை வற்புறுத்தது)

பாடல்: 05 (இகழுநர்)[தொகு]

தோழி கூற்று:

இகழுநர் சொல்லஞ்சிச் சென்றார் வருதல்

பகழிபோல் உண்கண்ணாய் பொய்யன்மை ஈண்டைப்

பவழஞ் சிதறி யவைபோலக் கோபந்

தவழுந் தகைய புறவு. (05)

(இதுவுமது)


பாடல்: 06 (தொடியிட)[தொகு]

தோழி கூற்று:

தொடியிடல் ஆற்றா தொலைந்ததோள் நோக்கி

வடுவிடைப் போழ்ந்தகன்ற கண்ணாய் வருந்தல்

கடிதிடி வானம் உரறும் நெடுவிடைச்

சென்றாரை நீடன்மின் என்று.

(இதுவுமது)

பாடல்: 07 (நச்சியார்க்)[தொகு]

தோழி கூற்று:


நச்சியார்க்(கு) ஈதலும் நணணார்த் தெறுதலும்

தற்செய்வான் சென்றார்த் தரூஉம் தளிரியலாய்

பொச்சாப் பிலாத புகழ்வேள்வித் தீப்போல

எச்சாரு மின்னு மழை.

(இதுவுமது)

பாடல்: 08 (மண்ணியன்)[தொகு]

தோழி கூற்று


மண்ணியன் ஞாலத்து மன்னும் புகழ் வேண்டிப்

பெண்ணியல் நல்லாய் பிரிந்தார் வரல்கூறும்

கண்ணியல் அஞ்சனம் தோய்ந்தபோல் காயாவும்

நுண்ணரும்(பு) ஊழ்த்த புறவு.

(இதுவுமது)

பாடல்: 09 (கருவிளை)[தொகு]

தோழி கூற்று


கருவிளை கண்மலர்போற் பூத்தன கார்க்(கு)ஏற்(று)

எரிவனப்பு உற்றன தோன்றி - வரிவளை

முன்கை இறப்பத் துறந்தார் வரல்கூறும்

இன்சொற் பலவும் உரைத்து.

(இதுவுமது)

பாடல்: 10 (வானேறு)[தொகு]

தோழி கூற்று


வானேறு வானத்(து) உரற வயமுரண்

ஆன்ஏற்(று) ஒருத்தல் அதனோ(டு) எதிர்செறுப்பக்

கான்யாற்(று) ஒலியிற் கடுமான்தேர் என்தோழி

மேனி தளிர்ப்ப வரும்.

(இதுவுமது)

பாடல்: 11 (புணர்தரு)[தொகு]

தோழி கூற்று

புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார்

வணர்ஒலி ஐம்பாலாய் வல்வருதல் கூறும்

அணர்த்தெழு பாம்பின் தலைபோல் புணர்கோடல்

பூங்குலை ஈன்ற புறவு.

(இதுவுமது)

ஐம்பால் - ஐந்து பகுப்பினையுடையது. கூந்தலின் ஐந்து பகுப்புக்கள்பின்வருமாறு: குழல், கொண்டை, சுருள், பனிச்சை, முடி என்பனவாம்.


பாடல்: 12 (மையெழில்)[தொகு]

தோழிகூற்று

மையெழில் உண்கண் மயில்அன்ன சாயலாய்

ஐயந்தீர் காட்சி அவர்வருதல் திண்ணிதாம்

நெய்யணி குஞ்சரம் போல இரும்கொண்மூ

வைகலும் ஏரும் வலம்.

(இதுவுமது)


பாடல்: 13 (ஏந்தெழில்)[தொகு]

ஏந்தெழில் அல்குலாய் ஏமார்ந்த காதலர்

கூந்தல் வனப்பின் பெயல்தாழ - வேந்தர்

களி(று)எறி வாளரவம் போலக்கண் வௌவி

ஒளிறுபு மின்னும் மழை.


(இதுவுமது)

பாடல்: 14 (செல்வந்)[தொகு]

தோழி கூற்று

செல்வந் தரல்வேண்டிச் சென்றநங் காதலர்

வல்லே வருதல் தெளிந்தாம் வயங்கிழாய்

முல்லை இலங்(கு)எயி(று) ஈன நறும்தண்கார்

மெல்ல இனிய நகும்.

(இதுவுமது)


பாடல்: 15 (திருந்திழாய்)[தொகு]

தோழி கூற்று

திருந்திழாய் காதலர் தீர்குவர் அல்லர்

குருந்தின் குவியிணர் உள்ளுறை யாகத்

திருந்(து)இன் இளிவண்டு பாட இருந்தும்பி

இன்குழல் ஊதும் பொழுது.

(இதுவுமது)


பாடல்: 16 (கருங்குயில்)[தொகு]

தோழி கூற்று

கருங்குயில் கையற மாமயி லாலப்

பெருங்கலி வானம் உரறும் - பெருந்தோள்

செயலை இருந்தளிர் அன்னநின் மேனீப்

பசலை பழங்கண் கொள.

(இதுவுமது)


பாடல்: 17 (அறைக்கல்)[தொகு]

தோழி கூற்று


அறைக்கல் இறுவரைமேல் பாம்பு சவட்டிப்

பறைக்குரல் ஏறொடு பௌவம் பருகி

உறைத்திருள் கூர்ந்தன்று வானம் பிறைத்தகை

கொண்டன்று பேதை நுதல்.

(இதுவுமது)


பாடல்: 18 (கல்பயில்)[தொகு]

தோழி கூற்று


கல்பயில் கானங் கடந்தார் வரவாங்கே

நல்லிசை ஏறொடு வான நடுநிற்பச்

செல்வர் மனம்போல் கவினீன்ற நல்கூர்ந்தார்

மேனிபோல் புல்லென்ற காடு.

(இதுவுமது)


பாடல்: 19 (நாஞ்சில்)[தொகு]

தலைவன் கூற்று


நாஞ்சில் வலவன் நிறம்போல் பூஞ்சினைச்

செங்கால் மராஅம் தகைந்தன - பைங்கோல்

தொடிபொலி முன்கையாள் தோள்துணையா வேண்டி

நெடுவிடைச் சென்றதென் நெஞ்சு.

(வினைமுற்றிய தலைமகன் பாகற்குச்சொல்லியது)


பாடல்: 20 (வீறுசால்)[தொகு]

தலைவன் கூற்று

வீறுசால் வேந்தன் வினையும் முடிந்தன

ஆறும் பதம்இனிய வாயின - ஏறோ(டு)

அருமணி நாகம் அனுங்கச் செருமன்னர்

சேனைபோற் செல்லும் மழை.


பாடல்: 21 (பொறிமாண்)[தொகு]

தலைவன் கூற்று

பொறிமாண் புனைதிண்தேர் போந்த வழியே

சிறுமுல்லைப் போதெல்லாம் செவ்வி - நறுநுதல்

செல்வ மழைத்தடங்கண் சின்மொழிப் பேதைவாய்

முள்ளெயி(று) ஏய்ப்ப வடிந்து.

(இதுவுமது)


பாடல்: 22 (இளையரும்)[தொகு]

தலைவன் கூற்று

இளையரும் ஈர்ங்கட்(டு) அயர உளையணிந்து

புல்லுண் கலிமாவும் பூட்டிய - நல்லார்

இளநலம் போலக் கவினி வளமுடையார்

ஆக்கம்போற் பூத்தன காடு.

(இதுவுமது)


பாடல்: 23 (கண்டிரள்)[தொகு]

தோழி கூற்று

கண்டிரள் முத்தங் கடுப்பப் புறவெல்லாந்

தண்டுளி ஆலி புரளப் புயல்கான்று

கொண்டெழில் வானமும் கொண்டன்று எவன்கொலோ

ஒண்டொடி ஊடு நிலை.


(தோழி தலைமகட்குப் பருவம் காட்டி வற்புறுத்தது)


பாடல்: 24 (எல்லா)[தொகு]

தலைமகன் கூற்று

எல்லா வினையும் கிடப்ப எழுநெஞ்சே

கல்லோங்கு கானம் களிற்றின் மதநாறும்

பல்லிருங் கூந்தல் பணிநோனாள் கார்வானம்

மெல்லவும் தோன்றும் புயல்.

வினைமுற்றிய தலைமகன் நெஞ்சொடு சொல்லியது.


பாடல்: 25 (கருங்கால்)[தொகு]

தோழி கூற்று

கருங்கால் வரகின் பொரிப்போல் அரும்பவிழ்ந்(து)

ஈர்ந்தண் புறவின் தெறுழ்வீ மலர்ந்தன

சேர்ந்தன செய்குறி வாரார் அவரென்று

கூர்ந்த பசலை அவட்கு

பருவங் கண்டழிந்த தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற உரைத்தது.


பாடல்: 26 (நலமிகு)[தொகு]

தோழி கூற்று

நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட

தலைநாள் விளக்கின் தகையுடைய வாகிப்

புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி

தூதொடு வந்த மழை.

தோழிதலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது


பாடல்: 27 (முருகியம்)[தொகு]

தோழி கூற்று

முருகியம்போல் வான முழங்கி இரங்கக்

குருகிலை பூத்தன கானம் - பிரிவெண்ணி

உள்ளா(து) அகன்றார்என்(று) ஊடியாம் பாராட்டப்

பள்ளியுட் பாயும் பசப்பு

ஊடுதலாற் பசலை மிகும் என்த் தோழி தலைமகட்குக் கூறி வற்புறுத்தது.


பாடல்: 28 (இமிழிசை)[தொகு]

தலைமகன் கூற்று

இமிழிசை வானம் முழங்கக் குமிழின்பூப்

பொன்செய் குழையின் துணர்தூங்கத் தண்பதஞ்

செவ்வி யுடைய சுரநெஞ்சே காதலியூர்

கவ்வை அழுங்கச் செலற்கு.

வினைமுற்றிய தலைமகன் நெஞ்சொடு சொல்லியது.


பாடல்: 29 (பொங்கரு)[தொகு]

தலைமகன் கூற்று

பொங்கரும் ஞாங்கர் மலர்ந்தன தங்காத்

தகைவண்டு பாண்முரலுங் கானம் - பகைகொண்டல்

எவ்வெத் திசைகளும் வந்தன்று சேறுநாஞ்

செவ்வி யுடைய சுரம்.

இதுவுமது.


பாடல்: 30 (வரைமல்க)[தொகு]

தலைமகன் கூற்று

வரைமல்க வானஞ் சிறப்ப உறைபோழ்ந்து

இருநிலம் தீம்பெயல் தாழ -விரைநாற

ஊதை உளரும் நறுந்தண்கா பேதை

பெருமட நம்மாட் டுரைத்து.

இதுவுமது.


பாடல்: 31 (கார்ச்சேண்)[தொகு]

தலைமகன் கூற்று


கார்ச்சேண் இகந்த கரைமருங்கின் நீர்ச்சேர்ந்(து)

எருமை எழில்ஏ(று) எறிபவர் சூடிச்

செருமிகு மள்ளரிற் செம்மாக்கும் செவ்வி

திருநுதற்(கு) யாம்செய் குறி.

வினைமுற்றிய தலைமகன் பாகற்குச்சொல்லியது.


பாடல்: 32 (கடாஅவுக)[தொகு]

தலைமகன் கூற்று

கடாஅவுக பாகதேர் காரோடக் கண்டே

கெடாஅப் புகழ்வேட்கைச் செல்வர் மனம்போல்

படாஅ மகிழ்வண்டு பாண்முரலும் கானம்

பிடாஅப் பெருந்தகை நற்கு.

இதுவுமது.


பாடல்: 33 (கடல்நீர்)[தொகு]

தலைமகன் கூற்று

கடல்நீர் முகந்த கமஞ்சூல் எழிலி

குடமலை ஆகத்துக் கொள்ளப் பிறைக்கும்

இடமென ஆங்கே குறிசெய்தேம் பேதை

மடமொழி எவ்வம் கெட.

இதுவுமது.


பாடல்: 34 (விரிதிரை)[தொகு]

தோழி கூற்று


விரிதிரை வெள்ளம் வெறுப்பப் பருகிப்

பெருவிறல் வானம் பெருவரை சேரும்

கருவணி காலம் குறித்தார் திருவணிந்த

ஒண்ணுதல் மாதர் திறத்து.

பருவம் கண்டழிந்த தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற உரைத்தது.


பாடல்: 35 (சென்றநம்)[தொகு]

தோழி கூற்று


சென்றநம் காதலர் சேண்இகந்தார் என்றெண்ணி

ஒன்றிய நோயோடு இடும்பை பலகூர

வென்றி முரசின் இரங்கி எழில்வானம்

நின்றும் இரங்கும் இவட்கு.

இதுவுமது


பாடல்: 36 (சிரல்வாய்)[தொகு]

தலைமகன் கூற்று


சிரல்வாய் வனப்பின வாகி நிரலொப்ப

ஈர்ந்தண் தளவம் தகைந்தன - சீர்த்தக்க

செல்வ மழைமதர்க்கண் சின்மொழிப் பேதையூர்

நல்விருந் தாக நமக்கு.

வினை முற்றி மீளும் தலைமகன் பாகற்குச்சொல்லியது.

பாடல்: 37 (கருங்கடல்)[தொகு]

தோழி கூற்று


கருங்கடல் மேய்ந்த கமஞ்சூல் எழிலி

இருங்கல் இறுவரை ஏறி உயிர்க்கும்

பெரும்பதக் காலையும் வாரார்கொல் வேந்தன்

அருந்தொழில் வாய்த்த நமர்.

தோழி பருவம்காட்டித் தலைமகளை வற்புறுத்தது.


பாடல்: 38 (புகர்முகம்)[தொகு]

தோழி கூற்று


புகர்முகம் பூழிப் புரள உயர்நிலைய

வெஞ்சின வேழம் பிடியோடு இயைந்தாடும்

தண்பதக் காலையும் வாரார் எவன்கொலோ

ஒண்டொடி ஊடும் நிலை.

தலைவர் பொய்த்தாரெனக் கூறித் தோழி தலைவியை ஆற்றுவித்தது.

பாடல்: 39 (அலவன்)[தொகு]

தோழி கூற்று


அலவன்கண் ஏய்ப்ப அரும்பீன்று அவிழ்ந்த

கருங்குரல் நொச்சிப் பசுந்தழை சூடி

இரும்புனம் ஏர்க்கடி கொண்டார் பெருங்கௌவை

ஆகின்று நம்மூர் அவர்க்கு.

இதுவுமது.

பாடல்: 40 (வந்தன)[தொகு]

தோழி கூற்று

வந்தன செய்குறி வாரார் அவரென்று

நொந்த ஒருத்திக்கு நோய்தீர் மருந்தாகி

இந்தின் கருவண்ணம் கொண்டன்(று) எழில்வானம்

நந்துமென் பேதை நுதல்.

பருவம் வந்தமையால் தலைவர் வருதல் ஒருதலையெனக் கூறித் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.


மதுரைக் கண்ணங்கூத்தனார் பாடிய கார்நாற்பது முற்றும்.1


குறிப்பு:

1. 'கார்நாற்பது' எனும் இந்நூலுக்குப் பண்டித நாவலர் திரு. ந. மு. வேங்கடசாமிநாட்டார் அவர்கள் உரை எழுதியுள்ளார்.

(அதனைப் பூம்புகார்ப்பதிப்பகம், சென்னை- 600108 (2004) வெளியிட்டுள்ளது)

  • இதற்குப் 'பழைய பொழிப்புரை' ஒன்றும் உண்டு.
  • திரு.பி.எஸ். இரத்தினவேலு முதலியார் அவர்கள் 'கார்நாற்பது' நூலுக்கு 'விருத்தியுரை' எழுதியுள்ளார்கள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=கார்_நாற்பது&oldid=1526454" இலிருந்து மீள்விக்கப்பட்டது