கால்டுவெல் ஒப்பிலக்கணம்/001-033

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to searchராபர்ட் கால்டுவெல்

அயர்லாந்து தேசத்தில் கிளாடி என்னும் ஆற்றின் கரையிலமைந்த சிற்றூரில், 1814-ஆம் ஆண்டில் கால்டுவெல் பிறந்தார். பிறந்து பத்தாண்டுகள் வரை, இவர் அவ்வூரிலேயே வளர்ந்துவந்தார். பத்தாமாண்டில், தம் தாய் நாடாகிய ஸ்காட்லாந்து தேயத்திற்குத் தம் பெற்றோர் சென்று குடியேறினமையால், இவரும் அவர்களுடன் சென்றார். இளமையிலேயே மதிநலம் வாய்ந்து விளங்கிய இவர், எளிதில் கல்விநலமும் வாய்க்கப்பெற்றார். பதினாறாம் ஆண்டு வரை இவர் ஆங்கில இலக்கிய இலக்கணங்களைப் பழுதறக் கற்றுத் தேர்ந்தார். அதன்பின், தம் தந்தையாரின் விருப்பப்படி ஓவியத் துறையிற் பயின்று தேர்ந்து உயர்ந்த பரிசும் பெற்றார். எனினும், அத்துறையில் தொடர்ந்துழைத்து வாழ்க்கையை நடத்த இவர் கருத்துச் செல்லவில்லை. இறைவனதாற்றலையும், பெருமையையும் தெரிக்கும் மெய்யுணர்வு நூல்களிலேயே இவர் கருத்துச் செல்வதாயிற்று. எங்கும் நிறைந்த பரம்பொருளின் பெருமையைத் தம் சமய உண்மைகட்கேற்ப யாண்டும் பரப்பித் தொண்டாற்றுவதே தலைசிறந்த வாழ்க்கைப் பணியாம் என்று இவர் தேர்ந்து கொண்டார்.

அதற்கேற்ப, இருபதாம் அகவையில், இலண்டன் நகரத்திலிருந்த சமயத்தொண்டர் சங்கத்தில் இவர் உறுப்பினராகச் சேர்ந்தார்; அதன் சார்பில், கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்து ஐரோப்பியத் தொன்மொழிகளிலமைந்த சமய நூல்களையும், நீதி நூல்களையும் தெளிவுபெறக் கற்றார். அப் பல்கலைக் கழகத்தில் கிரீக்குமொழி பயிற்றியவர் பேராசிரியர் சர் டேனியல் சேண்ட்ஃபோர்டு என்பார். அவர் மொழிநூல்முறை வழுவாது, கிரீக்கு மொழியின் அருமை பெருமைகளைப் பிற உயர்தனிச் செம்மொழிகளுடன் ஒப்புமைப்படுத்திக் காட்டிய திறமையைக் கண்டு கால்டுவெல் அளவிலா வியப்பெய்தினார். வியப்பு விருப்பாயிற்று; விருப்பு இவர் தம் உள்ளத்தை அத்துறையில் வெள்ளம் போல் ஈர்த்துச் செல்வதாயிற்று. இதுவே, இவர் பிற்காலத்தில் தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதிப் பெருமை யெய்துவதற்கு அடிப்படையாயிற்று.

இந்நிலையில் தென்தமிழ்நாட்டில் கிறித்து சமயப் பணி செய்யத்தக்க அறிஞரொருவரை இலண்டன் சமயத்தொண்டர் சங்கத்தினர் நாடினர்; நாட்டம் இயல்பில் கால்டுவெல் மீது சென்றது. கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிய இவரையே அச்சங்கத்தினர் தேர்ந்தனுப்பினர். ஆர்வத்துடன் ஒப்புக்கொண்ட இளைஞர் உடனே கப்பலேறினர். அக்காலம் கப்பல் இங்தியா சேர நான்கு திங்கள்களாகும். இந் நெடுங்காலத்தை வீணாக்கக் கருதாத நம் இளைஞர் அக்கப்பலிலேயே இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த பிரெளன் என்னும் ஒருவருடைய நட்பைத் தேடிக்கொண்டார். பிரெளன் சென்னை அரசாங்கத்தைச் சேர்ந்தவர்; ஆந்திரமும், ஆரியமுங் கைவந்தவர். அவருடன் நாடோறும் நன்கு பழகி, கால்டுவெல் முறையாக ஆரியம் பயின்றார்.

1838-ஆம் ஆண்டில் கால்டுவெல் முதன்முதல் சென்னை வங்கிறங்கினார். அந்நகரில் தமிழ்ப்புலமை வாய்ந்து பெருஞ்சிறப்புடன் விளங்கிய துரூ என்னும் ஆங்கிலேய அறிஞருடன் இவர் மூன்றாண்டுகள்வரை உறைந்து வருவாராயினர். அம்மூன்றாண்டுகளிலும் அப்பெரியாரிடம் இவர் முறையாகத் தமிழ் பயின்று வந்தார். சென்னை நகரில் அக்காலம் சிறந்து விளங்கிய தமிழறிஞர்களாகிய உவின்சுலோ, போப், பவர், ஆண்டர்ஸன், முதலியோர் நட்பும் இவருக்குக் கிடைத்து, இவரது தமிழார்வத்தை மேலும் மேலும் ஊக்குவதாயிற்று. 1841-ஆம் ஆண்டில் இவர் சமயத்துறையிற்றேர்ந்து குருப் பட்டம் பெற்று, ஆங்கிலச் சர்ச்சிலும் உறுப்பினரானார்.

இவ்வாறு மூன்றாண்டுகள் சென்னையிற் கழிந்ததும், கலைவல்லுநாரய நம் ஐயர் பழங்தமிழ்ப் பதியாய பாண்டிநாட்டிற் பணி செய்யப் புறப்பட்டார்; புறப்பட்டவர் நானூறு கல் தொலைவையும் நடந்தே கழிப்பதெனத் துணிந்தார். அதனால், இடைப்பட்ட நாட்டுமக்களின் பழக்கவழக்கங்களையும், ஆங்காங்கு வழங்கும் மொழியையும் நேரே அறிந்து பயனுறலாகும் என்று இவர் கருதினார். [1] “செல்லும் நெறியில் அமைக்க இயற்கை வளங்களைக் கண்டு இன்புற்றார்; மரங்கள் செறிந்த பூம்பொழில்களில் தங்கி இளைப்பாறினர். காலையும், மாலையும் வழி நடந்து, பொன்னிநாடென்று ஆன்றோராற் புகழ்பெற்ற சோழநாட்டின் அணியாய காவிரிச் செழும்புனலைக் கண்டு களித்தார். அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலத்தின் பழமையையும் பெருமையையும் கண் கூடாகக் கண்டார். மாயூரம் என்னும் மயிலாடுதுறையின் வழியாகச் சென்று கடற்கரையில் அமைந்த தரங்கம்பாடியில் தங்கினார். ‘கத்தும் தரங்கம் எடுத்தெறியும்’ கடலருகே கவினுற விளங்கிய துறையைத் தரங்கம்பாடி என்னும் அழகிய பெயரால் அமைத்த தமிழ்மக்களது அறிவின் பெருமையை வியந்து புகழ்ந்தார்...அப் பாடியிலமைந்து பெருந்தொண்டு புரிந்த [2]தேனிய சங்கத்தின் வரலாற்றையும், அச்சங்கத்தார் இயற்றிய தமிழ்நூல்களின் பெருமையையும் அறிந்து அகமகிழ்ந்தார். அப்பால் கும்பகோணத்தின் வழியாகத் தஞ்சைமாநகரம் போந்து விண்ணளாவிய கண்ணுதற்பெருமான் கோவிலையும், சோழ மன்னர்கள் எடுத்த கோட்டையையும் கண்டு வியந்தார்......நெல்லைமாநகரிற் பிறந்து கிறிஸ்துமதத்திற் சேர்ந்து தஞ்சையிற் குடியேறி வாழ்ந்த வேதநாயக சாஸ்திரியாரைக் கண்டு அளவளாவினார். அவரியற்றிய இனிய தமிழ்க் கீதங்களைக் கேட்டு இன்புற்றார். பின்பு காவிரிக்கரையிலமைந்த சிராப்பள்ளிக் குன்றின் அழகையும், ஆற்றிடைக்குறையி லமர்ந்த திருவரங்கத்தின் சிறப்பையும் அறிந்து நீலகிரியை நோக்கிச் சென்றார் காருலாவும் நீலகிரியில் வசித்துவந்த ஸ்பென்சர் என்னும் அத்தியட்ச குருவின் விருங்தினராக ஒரு மாத காலந் தங்கி இளைப்பாறினார். நீலகிரியினின்றும் புறப்பட்டுக் கொங்குநாட்டுக் கோவையின் வழியாகப் புலவர் நாவிற் பொருங்கிய மதுரைமாநகரை நோக்கி நடந்தார்.......பாண்டி நாட்டின் தலைநகராய மதுரையை வந்தடைந்தபொழுது தாயைக் கண்ட சேய் போல் ஐயர் அகமலர்ந்து இன்புற்றார் ஊற்றுப்பெருக்கால் உலகூட்டும் பெருமை வாய்ந்த வையையாற்றில் வெள்ளம் பெருகிவரக் கண்டு உள்ளங் குளிர்ந்தார். அப்பால் அங்கயற் கண்ணியோடு இறைவன் வீற்றிருந்தருளும் திருக்கோவிலின் அழகினைக் கண்டு ஆனந்தமுற்றார்......பைந்தமிழ் வழங்கும் நாடு பாண்டிநாடே யென்றும், கசடறக் கற்ற புலவரடங்கிய கழகத்தைத் தன்னகத்தே கொண்டு திகழ்ந்த நகரம் மதுரைமாநகரம் என்றும் எண்ணிய நிலையில் எல்லையற்ற இன்பமுற்றார்......தமிழ் மணக்கும் மதுரைமா நகரைவிட்டு நீங்கித் திருமங்கலத்திற் சமயத்தொண்டு புரிந்த [3]திரேசி என்னுந் தமிழறிஞருடன் அளவளாவி, சில நாட்களில் தென்றல் வந்துலாவும் திருநெல்வேலியை அடைந்தார்...... "பொருனையாற்றைக் கடந்து பாளையங்கோட்டைக்கச் சென்றார் ...... நலமலிந்த மக்கள் வாழும் நாசரத்தென்னும் நகரை நண்ணினார். அந்நகர மக்கள் விருப்பத்திற்கிணங்கி ஆலயத்தில் ஒரு விரிவுரை நிகழ்த்தினார்...... ...அருகிருந்த முதலூரில் அடுத்த ஞாயிற்றுக்கிழமை அரியதோர் விரிவுரை செய்தார். அப்பால், இடையன்குடியை நோக்கிப் புறப்பட்டார்; காதவழி தூரத்தில் அமைந்திருந்த அவ்வூரை இராப்பொழுதில் வந்தடைந்தார்.”

சமயத்தொண்டும், தமிழ்த்தொண்டும் புரியப் போந்த நல்லறிஞர் தம் தொண்டிற்கு இடமாக அமைந்த இடையன்குடியை இவ்வாறு சென்றடைந்தார். இவ்வழிநடையினால் சோழநாட்டின் நிலவளமும், தரங்கம்பாடியின் கடல்வளமும், நீலகிரியின் மலைவளமும், பாண்டிநாட்டின் தமிழ்வளமும் ஐயர்தம் உள்ளத்தில் நன்கு பதிந்தன. தமிழ்நாட்டில் திகழும் ஊர்கள் பலவற்றையும் நேராகச் சென்று கண்டமையால், தமிழ்மக்களின் பழக்க வழக்கங்களும், தமிழ்மொழியின் பல்வளங்களும், அதனோடு தொடர்புடைய பிற திருந்தாமொழிகளின் நுட்பங்களும் இவர்க்கு நன்கு விளங்கின. இவை பின்னர் இவர் எழுதிய ஒப்பற்ற ஆராய்ச்சி நூலாகிய ஒப்பிலக்கண நூலைக் திறம்பட எழுதுதற்குப் பேருதவியாயின.

திருநெல்வேலித் தேரியிலமைந்துள்ள வெப்பமிகுந்த இடையன்குடியை அடைந்த பெரியார் அவ்வூர் ஒரு பெரிய குப்பைக் காடாக இருக்கக் கண்டார்; தாறுமாறாகக் கிடந்த அவ்வூர்த் தெருக்களையும், தெருக்களிலுள்ள வீடுகளையும் முறைப்படுக்கிக் திருத்தியமைக்கத் தூண்டுதலளித்தார். தமக்குக் குடியிருக்க அமைந்த வீட்டை நன்கு செப்பனிட்டு, பிறரும் அவ்வாறே தத்தம் வீட்டினைச் செப்பனிட்டு அமைக்கத் தூண்டினர்.

இந்நிலையில், 1843-ஆம் ஆண்டில், இவருக்குத் திருமணம் நடைபெற்றது. நாஞ்சில் நாட்டு நாகர்கோயிலில் கிறித்தவத் தொண்டராய்த் கிகழ்ந்த மால்த் என்பாரின் மகளானரான எலிசா இவர்தம் அரிய மனைவியாராக வாய்த்தார். தமிழும் ஆங்கிலமும் பயின்று, சொல்வன்மையும் நல்லறிவும் வாய்ந்திருந்த எலிசா அம்மையார் கால்டுவெல் ஐயர் மேற்கொண்ட அருந்தொண்டுகளுக்கு உடனிருந்து உதவி புரிவாராயினர். அறிவிலும் ஒழுக்கக்கிலும் சிறந்த இவ்விருவர்களும் உயர்தரக் கல்வியும், பெண் கல்வியும் பரவுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள். இவர்கள் முயற்சியால் தூத்துக்குடியில் ஓர் ஆங்கிலக் கலாசாலை நிறுவப் பெற்றது. ஆங்கில “ஆலய நிர்மாண சங்க”த்தாரின் உதவியினாலும், வள்ளன்மை வாய்ந்த பொருளாளர் சிலர்தம் பேரீகையினாலும் அழகும் வேலைப்பாடும் அமைந்த கிறித்தவக்கோயில் ஒன்றை இடையன்குடியில் ஐயர் கட்டி முடித்தார். 1847-ஆம் ஆண்டில் அடிப்படைக் கல் நாட்டப் பெற்றுத் தொடங்கப் பெற்ற அக் கோவிற் றிருப்பணி 1880-ஆம் ஆண்டில் முடிவு பெற்றதென்றால், அத் திருப்பணியின் அருமை பெருமைகளையும் ஐயர்தம் முயற்சிச் சிறப்பினையும் விரித்துரைக்கவும் வேண்டுமோ? இடையன்குடிக்கே ஓர் அணிகலனாகவும், ஐயர்தம் ஆற்றலுக்கும் பெருமைக்கும் அழியாத சான்றாகவும் அக்கோவில் திகழ்கின்றது.

அறிவறிந்த மக்கள் மூவர், (இரு பெண்களும் ஒரு பிள்ளையும்) ஐயருக்குப் பிறந்தார்கள். இளைய மகளான லூயிசா என்பாள் மணவினை பூண்ட சில ஆண்டுகளுக்குள் இறந்தாள். பெரிய மகள், வியாத் என்னும் அறிஞரை மணந்து மனையறம் பூண்டாள். வியாத்தின் உதவி கொண்டே கால்டுவெல் ஐயர் பின்னர்க் கோடைக்கானலில் ஒரு பெரிய கோவிலைக் கட்டி முடித்தார். தம் அருமை மாமனரின் வரலாற்றைத் திறம்பெற எழுதியளிக்கும் பேறு வியாத் என்பவருக்கே வாய்த்தது.

இனி, ஐயர் பல ஆராய்ச்சிகளி லீடுபட்டுத் தமிழ் நாட்டிற்கும் தமிழுக்கும் நற்பெயர் எய்துவித்தார். இடையன்குடியில் அமைந்திருந்த செக்கர் நிலமாகிய தேரியின் குறுமணல் இவருக்கு அளவிறந்த வியப்பை யூட்டியது. அதனைச் சிறிதளவெடுத்து வியன்னா நகர ஆராய்ச்சி நிலயத்திற்கனுப்பி வைத்தார் ; உலகில் வேறெங்குமே அத்தகைய நிறம் வாய்ந்த மணல் இல்லை என்ற ஆராய்ச்சி முடிபைப் பெற்றுப் பொருனை நாட்டிற்குப் பெருமையளித்தார். பண்டைக் தமிழகத்தின் வாணிபப் பெருமையையும், பழந்துறை யமைப்புகளையும் ஆராய்ந்து தமிழ் நாட்டின் தொன்மையும், சிறப்புங் கால்கொளச் செய்தார். தமிழிலமைந்த[4] “பிரார்த்தனை நூலை”த் திருத்தி யமைக்கும் பணியிலீடுபட்டு அதனைச் செய்து முடிக்கும் பெரும் பேற்றிற் பங்கு கொண்டார்; இடையன்குடி சேருமுன் 6000 ஆக இருந்த திருநெல்வேலிக் கோட்டக் கிறித்தவ மக்களின் தொகையை, 1,00,000 ஆகப் பெருக்கிச் சமயத் துறையிற் பெரும்பணி யாற்றினர்.

1877-ஆம் ஆண்டில் இவர் திருநெல்வேலி அத்தியட்ச குருவாக உயர்த்தப் பெற்றார். இவருடைய புகழ் மேலை நாடுகளிற் பரவினமைக்குக் காரணம் ஆங்கில மொழியில் இவர் இயற்றிய “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற அரும் பெரும் நூலேயாகும். இந்த நூல் 1856-ஆம் ஆண்டில் முதன்முதலாக வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு 1875-ல் வெளி வந்தது. இப்பொழுது இருப்பது மூன்ரும் பதிப்பாகும். இது கால்டுவெலின் மருமகனரான வியாத் பதிப்பித்தது. மொழிநூல் உலகிற்கு இவ்வாறு புது நெறி காட்டிய ஐயர்க்குக் கிளாஸ்கோப் பல்கலைக் கழகத்தார் “டாக்டர்” என்னும் பட்டம் அளித்தனர். இவரியற்றிய ஏனைய நூல்கள் “திருநெல்வேலிச் சரித்திரம்” “தாமரைத் தடாகம்”, “ஞானஸ்நாநனம்”, “நற்கருணை”முதலியனவாம்.

இவ்வாறு வாழ்வாங்கு வாழ்ந்து, அறம் பல புரிந்து, செயற்கருந் தொண்டுகளைச் செய்து முடிக்க அருந்திறற் பெரியார் 1891-ஆம் ஆண்டு தள்ளாமையை முன்னிட்டுப் பணியினின்று நீங்கி ஓய்வு பெற்றுக் கோடைக்கானல் மலையில் வாழ்ந்துவருவாராயினர். ஆனால், நெடுநாள் இவர் அவ்வாறு வாழ்வதற்கில்லை. அதே ஆண்டில் ஆகஸ்டு மாதம் 28-ஆம் நாளன்று ஐயர் இறைவன் திருவடி சேர்ந்தார். இவருடைய உடல் இடையன்குடிக்குக் கொண்டுபோகப்பட்டு, இவரால் அங்குக் கட்டப்பட்டிருந்த ஆலயத்தில், அடக்கஞ் செய்யப்பட்டது.

[5]“கால்டுவெல் ஐயர் தமிழகத்தையே தாயகமாகக் கொண்டார். தென் தமிழ் நாடாகிய பொருனை நாட்டில் ஐம்பதாண்டுக்கு மேலாக வதிந்து அருந்தொண்டாற்றினார். ஏழைமாந்தர்க்கு எழுத்தறிவித்தார். சமய ஒழுக்கத்தைப் பேணக் கருகித் திருச்சபைகள் நிறுவினார். தூர்ந்துகிடந்த துறைகளைத் துருவினார். திருநெல்வேலிச் சரித்திரத்தை வரன்முறையாக எழுதினார். தென்மொழியாய தமிழொடு தென்னிந்தியாவில் வழங்கும் பிறமொழிகளை ஒத்துநோக்கித் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் உயரிய நூலை ஆங்கிலத்தில் இயற்றி”த் திராவிட மொழிகளுக்குப் புத்துயிரளித்தார். ஐயர்தம் பெருமை அளவிடப்போமோ!


  1. கால்டுவெல் ஐயர் சரிதம் — திரு. ரா. பி. சேதுப்பிள்ளையவர்கள் பி. ஏ. பி. எல்.
  2. The Danish Mission.
  3. Dr. Tracy.
  4. The Prayer Book
  5. கால்டுவெல் ஐயர் சரிதம்—திரு. ரா. பி. சேதுப்பிள்ளையவர்கள் பி.ஏ., பி.எல்.