உள்ளடக்கத்துக்குச் செல்

கால்டுவெல் ஒப்பிலக்கணம்/002-033

விக்கிமூலம் இலிருந்து

கால்டுவெல் ஒப்பிலக்கணம்


க. தோற்றுவாய்

திராவிட மொழிகள் என்று ஒரு மொழியினமாக வகுக்கப்பெறும் மொழிகளுள் தமிழ்மொழியே பண்டைநாள் தொட்டு, திருத்தமுற் றமைந்ததும், செவ்விய முறையில் வளர்ச்சிபெற்றுவந்துள்ளதுமாகும். சுருங்கக் கூறின், திராவிடமொழி யினத்தின் வகைக்குறிமொழி தமிழே என்று கூறலாம்.

“திராவிடம்” என்பது ஒரு குறியீட்டுச் சொல்; அது தென்னிந்திய மக்களிற் பெரும்பகுதியினாாற் பேசப்பட்டு வரும் உண்ணாட்டு மொழிகளைக் குறிப்பதாகும். குஜராத்தி மொழியும், மாராத்தி மொழியும் வழங்கும் பகுதிகளொழிந்த மேற்கிந்தியப் பகுதியும், தக்கணப் பகுதியும், ஒரிஸா நாடும் நீங்காலாக, விந்தியமலைக்கும், நருமதை யாற்றிற்கும், குமரிமுனைக்கும் இடைப்பட்ட தென்னிந்தியப் பெரும்பகுதியிற், பண்டைக்காலத்திலிருந்தே, ஒரேமொழியின் கிளைகளாகிய பல திருந்தாமொழிகளைப் பேசும் குழுக்கள பலவற்றைக் கொண்ட மக்கட் பெருங்குழுவொன்று பரவி வாழ்ந்துவந்திருந்ததாகத் தோற்றுகிறது. விந்தியமலைக்கு வடக்கேயுங் கூட பலூச்சிஸ்தானம் வரையிலும், வங்காளத்தைச் சேர்ந்த இராஜ்மகால் மலைகள் வரையிலுங்கூட இம்மொழியினத்தைச் சேர்ந்ததாக எண்ணக்கிடக்கின்ற கிளைமொழிகள் சில வழங்கக் காணலாம்.

குஜராத்தியும், மராத்தியும், மராத்தியின் கிளைமொழியாகிய கொங்கணியும், ஒட்ரதேசம் அல்லது ஒரிஸா என்ற நாட்டார் பேசும் ஒரியாவும், வடமொழிச் சிதைவுகளுமாகிய இவை திராவிட மொழிகள் பேசுங் குழுவினரொழிந்த பிற இந்து மக்களால் ஆங்காங்குப் பேசப்பட்டுவரும் மொழிகளாம்.

இந்தியப் பெருநாட்டின் வட பகுதியிலேனும் தென் பகுதியிலேனும், எக்காலத்திலும் சமஸ்கிருதம் என்ற வட மொழி உண்ணாட்டு மொழியாக வழங்கியிருத்தல்கூடும் என்று நம்புவதற்கில்லை. இருந்தாலும், தென்னிந்தியப் பகுதியைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு [1]கோட்டத்திலுமுள்ள பார்ப்பனக் குழுவினருள் ஒரு சிலராலாவது, அது படிக்கப்பட்டும், பொருளுணரப்பட்டும் வருகின்றது என்பதுமட்டும் உண்மை.

இப்பார்ப்பனக் குழுவினர் பன்னூறாண்டுகளுக்குமுன் இந்நாட்டிற் குடியேறிய பார்ப்பன வந்தேறிகளின் வழியினராகும். இவர்களுடைய கூட்டுறவினால் திராவிட மக்களின் நல்வாழ்க்கைக்குரிய கலைப்பகுதிகளும் இலக்கியத் துறையும் ஓரளவிற்குச் செப்பமுற்றுச் சீர்திருந்தியுள்ளனவென ஒப்புக் கொள்ளல்வேண்டும். பார்ப்பனர்களாகப் பிறந்து அவர்கட்குரிய தொழிலாகிய வேதமோதுதல், கருமஞ்செய்தல் முதலியவற்றை மேற்கொண்டுள்ள சிற்சிலர், பொதுவாக, வட மொழி நூல்களைக் கற்றறிந்து அவற்றைத் தாந்தாம் உறையும் நாட்டிடை வழங்குவதான உண்ணாட்டு மொழியில் எடுத்து விளக்கும் ஆற்றல் வாய்ந்திருந்தனர். இத்தகையினர் அவரவர் வாழும் நாட்டுப் பகுதிக்கேற்பத் திராவிடப் பார்ப்பனர், ஆந்திரப் பார்ப்பனர், கன்னடப் பார்ப்பனர் என்று அழைக்கப் பெற்றனர். நாளாவட்டத்தில் அவரவர்கள் பேசிவரும் மொழி வேற்றுமை வாயிலாக இப்பார்ப்பனக் குழுவினர் தத்தமக்குள்ளேயே மாறுபாடு மிகுந்த இனவேற்றுமையை எய்த லாயினர். ஆயினும் இவர்களெல்லோரும் பண்டு ஒரே கிளையினாாக இருந்தவர்களே யென்றும், அவர்களுடைய மொழி ஒருகாலக்கில் வடமொழியா யிருந்திருக்கக் கூடும் என்றுங் கூறலாம். இது நிற்க.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆப்கானியர்களும் பட்டானியர்களும், ஏனைய வடஇந்திய முகம்மதியர்களும் தென்னிந்தியப் பகுதிகளில் வந்து குடியேறினர். அவர்கள் பேசிய தனிப்பட்ட மொழி இந்துஸ்தானியாகும். இன்றும் ஐதாராபாக்கப் பகுதியில் இந்துஸ்தானி உண்ணுட்டு மொழியாகவே வழங்கிவருகின்றது. ஆனால், தென்னிந்தியப் பகுதியிலோ, முகம்மதியர்களுள் உயர்க வாழ்க்கை யுள்ளவர்கள் தவிர்ந்த நடுத்தர வாழ்க்கையினரும், ஏழை எளியவர்களும் எவ்வளவுக்குத் தம் இனமொழியாகிய இந்துஸ்தானியை வழங்கிவருகிறார்களோ அவ்வளவுக்கு உண்ணாட்டு மொழிகளையும் பேசிவருகிறார்கள். அகிலும், லப்பைகள் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்படும் தென்னிந்திய முகம்மதியர்களுக்கு "இந்துஸ்தானி" எப்பொழுதுந் தாய்மொழியாக இருந்ததில்லை. இந்த "லப்பைகள்" கிழக்கிந்தியக் கரையோரங்களிலுள்ள இந்திய மக்களால் சோனகர்கள் (யவனர்கள்) என்றும் மேற்கிந்தியக்கரையோரங்களிலுள்ள மக்களால் மாப்பிள்ளைகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவர்களெல்லோரும் அராபிய வணிகர்களையும் அவர்களால் மதமாற்றிச் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களையுஞ் சேர்ந்தவர்கள்;தமிழோ மலையாளமோ பேசுபவர்கள்.

கொச்சியிலும் அதன் சுற்றுவட்டங்களிலுமுள்ள யூதர்களால் [2]எபிரேயம் என்ற மொழி பேசப்பட்டுவருகிறது ; பார்ப்பனர்களால் எந்த அளவுக்கு, எவ்வெக்காரியங்கட்கு வடமொழி கையாளப்பட்டு வருகிறதோ, அந்த அளவுக்கு அவ்வக்காரியங்கட்கு யூதர்களால் எபிரேயம் கையாளப்பட்டு வருகிறது. தென்னிந்தியப் பெருநகரங்களில் வசிக்கும் குஜராத்தி வட்டிக்கடைக்காரர்களாலும், பார்ஸி வணிகர்களாலும் குஜராத்தியும் மராத்தியும் பேசப்பட்டு வருகின்றன. கோவாவிலுள்ள போர்த்துக்கேசியர்கள் மட்டும் போர்த்துக்கேசிய மொழியைப் பேசிவருகிறார்கள்; ஏனைய இடங்களிலுள்ள போர்த்துகேசியர்கள் விரைவில் தம் மொழியை மறந்து ஆங்கிலத்தைப் பயின்றுவருகிறார்கள். புதுச்சேரி, காரைக்கால், மாஹி என்ற பிரெஞ்சுநகரங்களிலுள்ள பிரெஞ்சு அரசியற் சிப்பந்திகளாலும், அவர்கள் வழிவந்தவர்களாலும் பிரெஞ்சு மொழியே பேசப்பட்டுவருகிறது.

ஆங்கிலேயருக்குச் சொந்தமான இந்தியப் பகுதிகளெங்கணுமுள்ள ஆங்கிலேயர்களாலும், ஆங்கிலோ இந்தியர்களாலும், யூரேஷியர்களாலும் பேசப்பட்டுவருவது ஆங்கிலமே. வாணிகத்துறையிலும் நீதிமன்றங்களிலும், அரசியற் பணித்துறைகளிலும் ஆங்கிலம் வரவர இந்தியர்களாலும் மிகுதியாகக் கையாளப்பட்டு வருகிறது. சென்னை மாகாணத்தைப் பொறுத்தமட்டில், பண்டு வடமொழி எந்த உச்ச நிலையை எய்தியிருந்ததோ அந்த அளவிற்கு இப்பொழுது ஆங்கிலம் உயர்தரக் கல்வி பெறும் மொழிக் கருவியாக இருந்து வருகிறது. எனினும், இவ்வாங்கிலமோ, வேறெந்தப் புற மொழியோ எக்காலத்திலேனும் தென்னிங்திய உண்ணாட்டு மொழியாக மாறிவிடக்கூடும் என்று நம்புவதற்கு எட்டுணையும் வழியில்லை. ஆற்றலிலும் எண்ணிக்கையிலும் மிக்கவர்களாகக் கருதப்படும் ஓரினத்தாரின் மொழியாகிய வடமொழியைச் சென்ற 2,000 ஆண்டுகளாக எதிர்த்துநின்று போராடி வருவனவாய திராவிடமொழிகள், மற்றெந்த அயல் மொழியும் தம்மிடைத் தலைசிறவாதபடி எதிர்த்து நின்று தடுத்துக்கொள்ளும் என்று எளிதில் நம்பலாம்.

  1. 1. District.
  2. Hebrew