உள்ளடக்கத்துக்குச் செல்

கால்டுவெல் ஒப்பிலக்கணம்/003-033

விக்கிமூலம் இலிருந்து

௨. “திராவிட மொழிகள்” என்று வகுத்துக்கொண்டதேன்?

தென்னிந்தியாவில் வழங்கும் மொழிகள் பலவுந் தமக்கெனத் தனித்தனி ஒரு பெயருடையனவேனும் அவையனைத்தையும் ஓரினப்படுத்தி, அவ்வினத்திற்குக் குறியீடொன்று கொடுத்து, அக்குறியீட்டை யெடுத்தாளுதல் ஒப்பிலக்கண முறைக்கு இன்றியமையாத தொன்றாகும். தென்னிந்திய மொழிகளை இலக்கண வகையால் நோக்குமிடத்து அவையனைத்திற்கும் தனிப்பட்ட பொது அமைப்பொன்று அடிப்படையாக இருப்பது காணப்படும். இப்பொதுச் சிறப்பினாலும், மொழிக்கு இன்றியமையாத வேர்ச்சொற்கள் பலவற்றைப் பொதுப்படையாகவும் பெருவாரியாகவும் தம்முள்ளே இம்மொழிகள் கொண்டுள்ளமையாலும் இம்மொழிகளெல்லாம் ஓரின மொழிகளே யென்பது எளிதிற் பெறப்படும்.

மேனாட்டு மொழியாராய்ச்சியாளர்கள் தொடக்கத்தில் இத்தென்னிந்திய மொழிகளைத் தமிழ்” என்றே இனமொழிக் குறியீடுகொடுத்து வழங்கிவந்தார்கள். ஒரு வகையில் இது சரியே. தென்னிந்திய மொழிகளுள் தொன்மை மிகுந்ததும், திருத்தம் பெற்றதுமாகிய மொழி தமிழ்மொழியே; தென்னிங்கிய மொழியினத்திற்குரிய தனிச்சிறப்புக் களையும் அடிப்படையமைப்பையும் உரிமையோடு கொண்டிலங்குவது தமிழ்மொழியே. ஆகவே, இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு மொழியை அதன் இனத்தைச் சுட்டும் வகைக் குறிமொழியாகக் கொள்வதில் தவறேது மில்லையாயினும், தெளிவு கருதித், தமிழ் மொழியையும் அம்மொழி பேசும் தமிழ்மக்களையுங் குறிப்பதற்கு மட்டும் தமிழ் என்னும் குறியீட்டை வழங்குவதே சால்புடைத்தாம். அற்றாயின், இத்தமிழ்மொழியை யுள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பலவற்றையுங் குறிப்பதற்குக் குறியீடொன்று இன்றியமையாது வேண்டப்படுமாதலின் “திராவிடம்” என்று அதனை வகுத்துக்கோடல் எடுத்துக்கொண்ட ஒப்பிலக்கண முறைக்குப் பொருத்தமாம்.

“திராவிடம்” என்று கொண்டதேன் என்பது பின்வருமவற்றால் இனிது விளங்கும். வடமொழியில் தென்னிந்திய மொழியினத்தைக் குறிப்பதற்குப் பண்டை நாளில் வழங்கப்பட்டதாகத் தெரியக்கிடப்பது “ஆந்திர-திராவிட பாஷா” என்ற சொற்றொடரேயாம். “தெலுங்கு-தமிழ் மொழி” என்பது அச்சொற்றொடராற் போந்த பொருள். கி. பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் சிறந்த வடமொழிவாணரான குமாரில பட்டர் என்பார் இச்சொற்றொடரை முதன்முதலாக எடுத்தாண்டுள்ளார். தென்னிந்தியாவில் வழங்கும் மொழிகள் இரண்டிற்கு மேற்பட்டிருக்க, தெலுங்கு தமிழ் என்ற இரண்டைமட்டுங் குறித்தெடுத்துக்கொண்டது “மேம்போக்கான” தொன்றாகத் தோற்றலாம். ஆனால், தென்னிந்திய மக்கட்டொகுதியினரிற் பெரும்பாலோராற் பேசப்படுவது தமிழுந் தெலுங்குமே யாதலின், பெருவழக்கு நோக்கி அவ்விரண்டை மட்டுமே தேர்ந்துகொண்டது ஒருவகையில் ஏற்புடைத்தேயாகும். மலையாள மொழியைத் தமிழிலும், கன்னடத்தைத் தெலுங்கிலும் அக்காலத்தினர் அடக்கிக் கொண்டனர்போலும்!"

இனி, மனுஸ்மிருதியில் பத்தாவது பிரிவில், “கீழ்வரும் க்ஷத்திரியக் குடிகள் படிப்படியாக (ஆரிய) சமஸ்காரங்களிலிருந்து வழுவி, பார்ப்பனர்களுடன் சகவாசமிழந்து விருஷலர்கள் (ஜாதிப் பிரஷ்டர்கள்) ஆனார்கள்:-பெளண்ட்ரகர், ஒட்ரர், திராவிடர், காம்போஜர், யவனர், சாகர், பாரதர், பஹ்லவர், சீனர், கிராதர், தாதர், கசர்’ என்று கூறப்பட் டுள்ளது. மேற்குறித்த குடிகளில் தென்னிந்தியாவிற்குரியராவார் திராவிடர் என்று குறிக்கப்பட்டவர்களே. இதனால் தென்னிந்தியப் பகுதியிலுள்ள பலதிறப்பட்ட மக்களையும் பொதுப்படையாகக் குறிப்பதற்கு “திராவிடம்” என்ற குறியீடு எடுத்தாளப்பட்டுள்ளமை தெளியலாகும். ஒருகால் திராவிடப் பெருங்குழுவைச் சேர்ந்த பெருங்குடிகளில் யாதாமொரு பெருங்குடி மேற்குறித்த பட்டியில் சேர்க்கப்படாமல் விலக்கப்பட்டிருத்தல் வேண்டுமானல் அஃது “ஆந்திரர்” என்ற பெருங்குடியே யாதல் வேண்டும். ஏனெனிற் கூறுதும். ஐத்ரேய பிராமணத்தில் விசுவாமித்திரரின் வழித்தோன்றல்களாய் வந்து விருஷலர்களானவர்களைக் குறிக்குமிடத்து, புண்டரர், சபரர், புளிந்தர் என்பவரோடு “ஆந்திரர்” என்றும் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அவர்களை ஒருவாறு விலக்கியதாகக் கொண்டாலும், மனுஸ்மிருதியில் “திராவிடம்” என்ற சொல் ஏனைய தென்னிந்திய மக்களனைவரையுங் குறித்து நிற்பது பெறப்படும்.

இனி, இந்தியப்பெரு மூதாதைகளில் ஒருவரான சத்திய விரதர் என்பவரைக் குறிக்குமிடத்து, பாகவத புராணம் “திராவிட மன்னர்” என்றே குறிக்கின்றது.

இனி, ஸ்மிருதிகாலத்திற்குப் பின்னர் வந்த மொழியாராய்ச்சியாளர்களும் “திராவிடம்” என்ற சொல்லைத் தென்னாட்டு மொழியினத்தைக் குறிப்பதற்கே எடுத்தாண்டுள்ளனர். இந்தியப் பாகதமொழிகளைத் தொகைப்படுத்தி இனம் பிரித்த பண்டையாராய்ச்சியாளர் மூலபாகதங்கள் மூன்றென்றும், அவை, மகாராஷ்ட்ரி, செளரசேனி, மாகதி என்றும் பிரித்தனர். இம் மூலபாகதங்களுக்கு அடுத்தபடியாக வைத்துக் கருதப்பட்ட பாகதமொழித் தொகுதியில் “திராவிடி” என்னும் பெயரால் திராவிட மொழியினஞ் சேர்க்கப்பட்டுள்ளது. வடமொழி மூலநூல்களைத் தொகுத்து
ஆங்கிலத்தில் வெளியிட்ட ஜே. மூர் என்னும் பேராசிரியர், [1]சமஸ்கிருத மூலங்கள்” என்ற நூலில் எடுத்துக்காட்டியுள்ள மேற்கோளொன்றில், திராவிடம்” என்பது விபாஷை (சிறுபாகதம்) என்று வடமொழிவாணரொருவராற் குறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வடமொழிவாணர் திராவிடர்களுடைய மொழி திராவிடி என்று கூறியுள்ளார். எனவே, பண்டைநாட்களில் வடநாட்டாரால் 'திராவிட மொழிகள்' என்று குறிக்கப்பட்டது தமிழையோ, தெலுங்கையோ, அன்றி அவைபோன்ற தனி மொழியையோ அன்று என்பதும், தமிழையுங் தெலுங்கையும் மற்றுந் தென்னிந்திய மொழிகளனைத்தையும் உட்கொண்ட ஒரு மொழியினத்தையே என்பதும், அவையாவற்றையும் ஓரின மொழியாகவே வடவர் கருதியிருந்தார்கள் என்பதும் எளிதில் விளங்கும்.

திராவிடர்களுடைய மொழியை வடநாட்டார் பைசாச பாகதம் என்ற வகுப்பினுள் அடக்கிவிட்டமை ஈண்டுக் குறிக்கப்பாற்று. இந்தியாவில் அக்காலை வழங்கின. பல உண்ணாட்டு மொழிகளையும் பைசாச பாகதத்தொகுதியிலேயே சேர்த்து விடுவது வடவர் வழக்கம்போலும் ! இன்றேல், பாண்டியன் மடியிற் றவழ்ந்த பண்பார் செந்தமிழும், [2]போத்தர்கள் என்ற திபேத்தியர் மொழியும் பைசாச பாகதத்துள் சேர்க்கப்பட்டிருப்பானேன் பல்லாற்றாலும் வேறுபட்ட பல பண்டைப் பாகத மொழிகளையும் பைசாச பாகதம்’ என்ற ஒரு தொகுப்பிற் சேர்த்ததற்குப் பொதுப்படையான காரணம் ஏதேனும் இருந்திருக்கக் கூடுமென்றால், அது பார்ப்பன மொழி நூலறிஞர் அம்மொழிகளின்பாற் காட்டிய ஒருபடித்தான வெறுப்பேயாகும். ஆதலினாலே யன்றோ அப்பண்டை மொழிகள் பைசாசம் அல்லது பேய்கள் என்பவராற் பேசப்படும் மொழியாகிய "பைசாச்சி” என்றே அழைக்கப்படுவவாயின. இது கிடக்க.

இனி, அண்மையிலிருந்த வடநாட்டு அறிஞர் பலரும் தென்னிந்திய மொழிகளைத் திராவிடமொழிகள் என்றே குறிப்பிட்டு வந்துள்ளனர். இந்திமொழி நூலறிஞரான பாபு இராஜேந்திரலால் மித்ரா என்பார், 1854-ஆம் ஆண்டில், “திராவிடி” என்பது மூலபாகதங்களில் ஒன்றே யென்றும், செளரசேனியுடன் அஃது ஒருங்கு சேர்த்தெண்ணற் குரியதென்றும், அது செளரசேனியைப்போன்றே பிற பல உண்ணாட்டு மொழிகளுக்குத் தாய்மொழியென்றும், நன் கெடுத்து கவின்றுள்ளார்.

இதுகாறுங் கூறியவாற்றால், "தமிழ்" என்பதைத் தமிழ்மொழி யொன்றிற்கே சிறப்பாக அமைந்த பெயராகக் கொண்டு, தென்னாட்டில் வழங்கும் தமிழுந் தெலுங்கும் உள்ளிட்ட பல மொழிகளையுங் குறிக்கும் ஒர் இனமொழியாக "திராவிடம்” என்பது பரந்துபட்டபொருளில் கொள்ளக் கிடப்பது காலங்கண்ட தொன்றாகும் என்பது ஒருவாறு விளக்கப்பட்டது.

  1. 1. Muir's Sanskrit Texts
  2. 2. Bhotas