கால்டுவெல் ஒப்பிலக்கணம்/005-033

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

II. மலையாளம்

திராவிட மொழியினத்தில் தமிழுக்கு அடுத்தபடியாக இடம் பெறக்கூடியது மலையாளம் என்னும் மொழியாம். தமிழுக்கு மற்றெல்லா மொழிகளைக் காட்டிலும் நெருங்கிய தொடர்புடையது அம் மொழியே. மேற்குக் தொடர்ச்சி மலைகளுக்கு அப்பாலுள்ள மலபார் என்னும் மலைவாரக் கடற்கரையை யடுத்துள்ள ஊர்களில் இம்மொழி பேசப்பட்டு வருகிறது. மங்களுர் என்ற ஊர் தொடங்கித் தெற்கே திருவனந்தபுரம் வரை இம் மொழி வழங்கி வருகிறது. மங்களுருக்கு வடக்கே கன்னடமுந் துளுவமும் வழங்குகின்றன. திருவனந்தபுரத்திற்குத் தெற்கிலும் தென்கிழக்கிலும் தமிழ் மொழி பெரிதும் கலப்புறுகிறது. திருவாங்கூர், கொச்சி, மலையாளம், கன்னடக் கோட்டங்கள் ஆகிய இடங்கள் மலையாள மொழி வழங்கும் இடங்களாம். இம் மொழி பேசும் மக்கள் ஏறக்குறைய எழுபது நூாறாயிாவராவர். மலபார் கடற்கரை வெளிநாட்டு மக்கள் பலர்க்கு இறங்குதுறையா துள்ளது. ஃபினீஷியர், கிரேக்கர், யூதர், சிரியக் கிறித்தவர், பாரசீகக் கிறித்தவர், அராபியர்கள் ஆகியோர் வழிவழியாகப் பண்டு தொட்டு அந்தக் கரையோரங்களில் வாணிகம் நடாத்திவந்துள்ளனர். அவர்களுள் யூதரும் சிரியக் கிறித்தவரும் அராபியர்களும் பல இடங்களில் நிலையாகவே வந்து குடியேறி யுள்ளனர்.

மலையாளம் என்பது மலையாழ்மா என்றும், மலையாய்மா என்றும் கூறப்படும். இவை மூன்றும் ஒன்றேயாம். இவை மூன்றிலும் முதற்கண் நிற்கும் மலை என்ற பகுதி மலைத் தொடர் என்று பொருள்படும் வடசொல்லாகிய மலய என்பதன் திரிபன்று; தமிழ்ச் சொல்லாகிய மலை என்பதேயாம். தமிழ்ச் சொல்லாகிய மலை என்பதிலிருந்தே வடசொல்லாகிய மலய என்ற சொல் பெறப்பட்டுள்ளது என்று ஐயமின்றிக் கூறலாம். மலை என்ற பகுதி நீங்கிய “ஆளம்” என்ற சொல் 'பழகு, உடைத்தாயிரு, ஆணை செலுத்து' என்று பொருள்படும் ஆள் என்ற சொல்லடியாகப் பிறந்ததாகும். 'ஆழம்' என்று கொண்டு “ஆழ்” என்ற சொல்லடியாகப் பெறப்பட்டது என்று கொள்ளுதல் பொருந்தாது. தமிழ் “ஆண்மை” என்பது “ஆள்மை” என்பதன் திரிபாம். அந்த “ஆள்மை” என்பது மலையாளத்தில் “ஆள்மா” எனப்படும். அதுவே “ஆழ்மா” என்று திரிந்ததாகும். மலையாளத்தில் இந்த ஆள்மா என்பது ஆய்மா என்றுந் திரிபுறும். ஆகவே மலையாளம் அல்லது மலையாழ்மா என்பது மலைப்பகுதி என்றே பொருள்படும். வில்லாண்மை படைத்தோரை வில்லாளிகள் என்று அழைப்பார்கள். அதுபோன்றே மலைப்பகுதியில் வாழ்ந்து மலையாண்மை புரிந்து வந்தவர்கள் மலையாளிகள் என்றழைக்கப்பட்டனர்.

வடமொழிவாணர்கள் மலையாள மொழியைக் குறிப்பதற்குத் தனிப்பெயர் கொடுப்பதில்லை. மலையாளம் தமிழ் என்ற இரண்டையும் குறிப்பதற்கு அவர்கள் திராவிடம் என்ற சொல்லையே வழங்குவர். ஆனால் மலையாள நாட்டைக் குறிக்குங்கால் அவர்கள் வேறு தனிப் பெயர் கொடுத்தே குறிப்பர். கோகர்ணம் முதல் குமரிமுனை வரையிலுள்ள ஊர்களுக் கெல்லாம் அவர்கள் வடமொழிப் பெயர்கள் வகுத்துள்ளனர். மலையாள நாட்டுப் பகுதியை அவர்கள் கேரளம் என்று கூறுவர். கி. மு. மூன்றாம் நாற்றாண்டிற் குரியதான அசோகர் கல்வெட்டில் “கேரளம் புத்திரா” என்று மலையாள நாட்டு மன்னனொருவன் குறிக்கப்படுகிறான். திராவிட மொழிகள் எல்லாவற்றிலும் கேரளம் என்ற சொல் பல திரிபுகளுடன் பயின்று வருகின்றது. தமிழில் கேரலம், சேரலம், சேரம் என்ற மூன்று சொற்கள் வழங்குகின்றன. தெலுங்கிலும் கன்னடத்திலும் கேரளம் என்ற சொல் வழங்குகின்றது. மலையாள மொழியில் கேரளம், சேரலம், சேரம் என்ற சொற்களுடன் சேரம் என்ற சொல்லும் வழங்குகின்றது. கேரளவாசி யொருவன் கேலன் என்றும், கேளு என்றும் அழைக்கப்படுவான். இந் நாட்டு மன்னனைப் பிளைனி என்பவர் 1செலபொத்ராஸ் என்று குறிக்கின்றார். இது சேரல புத்திரர் என்பது போலும். டாலிமியோ 2கெரபொத்ராஸ் (கேர புத்திரர்கள்) என்று குறித்தார்.

பண்டைக்காலத்திற் கேரள நாடு இருபெரும்பிரிவினதாக இருந்தது போலும் ! மேலேக் கடற்கரை யோரத்தை யடுத்திருந்த பகுதிகளெல்லாம் கேரளம் என்ற வடமொழிப் பெயராலேயே வழங்கி வந்திருத்தல் வேண்டும்; இடையிடையே தமிழ்ப் பெயராகிய சேரம் என்பதையும் அது வழங்கியிருத்தல் கூடும். இஃது ஒரு பிரிவு. மற்றொரு பிரிவு உள்நாட்டுப் பிரிவு. இப்போதைய கோயமுத்தூர், சேலம் ஆகிய இருகோட்டங்களும், மைசூர் நாட்டின் ஒரு பகுதியும் இப் பிரி

■ 1. Celobotras. 2. Kerobothras. வின்பாற்பட்டன. இப் பிரிவு கேரளம் என்ற வடமொழிப் பெயரையே கையாண்டதாகத் தெரியவில்லை. சேரம் என்றும், கொங்கு என்றுமே அது தன்னேக் குறித்துவந்துள்ளது. எனினும், கேரளம் என்பதற்கும் சேரம் என்பதற்குமிடையே வேறுபாடொன்று மில்லை. இரண்டும் ஒன்றே. சேரநாட்டெல்லை குறித்த தமிழ்ப் புலவ ரெல்லாரும் கள்ளிக்கோட்டை என்ற கோழிக்கோட்டின் தென்பாலுள்ள மலையாளக் கரையை யடுத்திருக்கும் பகுதி யெல்லாம் சேரநாடென்றே குறித்துள்ளனர். கேரம் என்ற சொல்லிலிருந்தே கேரளம் என்ற வடசொற் பிறந்திருத்தல் வேண்டும். கொங்கு என்பது, குடகு என்பதைப் போன்று, வளைந்தது கோணலானது என்றே பொருள்படும். மலையாள நாட்டு இயற்கை யமைப்பை யொட்டி இப் பெயர் உண்டாயிருத்தல் எளிதில் உய்த்துணரப்படும். கேரம் என்ற சொல்லுக்கு. மலையாள மொழியில் “தென்னைமரம்” என்ற பொருளுளது. மலையாள நாட்டில் தென்னைகள் சிறப்பாக வளர்ந்து பெருகி யிருக்கின்றமை பற்றி ஒருவாறு இம் மரத்தினாலேயே அந்நாட்டிற்கு அப் பெயர் வந்த தென்று கூற முன்வரலாம் ; எனினும் மரத்தின் பெயரை யொட்டி நாட்டிற்குப் பெயர் வந்ததாஅன்றி நாட்டின் பெயரை யொட்டி மரத்திற்குப் பெயரிடப்பட்டதா என்பது சிக்கலான ஒரு கேள்வியேயாகும்.

மலையாளம் :

இனி, மலையாளம் என்ற சொல்லை யொட்டிய எச்சொல்லும் பண்டைக் கிரேக்க ஆசிரியர்களால் குறிக்கப்படவில்லை. கி. பி. 545-ஆம் ஆண்டிற் குரியது என்று கருதப்படுவதான 1“கிறித்தவ ஊர் வரலாறு” என்ற கிரேக்க நூலில் ஈழநாட்டைக் குறித்து எழுதிவருமிடத்து அதனை

1. Christian Topography of Cosmas Indicopleustes. யடுத்துள்ள நாடுகளில் “மிளகுவரும் மலே” என்ற ஒரு நாடுங் குறிக்கப்பட்டுள்ளது. இச் சொல் மலையென்ற தமிழ்ச் சொல்லுடன் பொருத்தமாக இருப்பது எளிதிற் புலனாகும். மலை, மலைநாடு போன்ற சொற்கள் அக்காலை ஈழநாட்டிற் குடியேறியிருந்த தமிழர்களால் பெருவாரியாக வழங்கப்பட்டிருத்தல் கூடும். இன்றும் அங்கு அவை வழங்குவனவே. மலை என்ற அச்சொல் மலையாளத்தில் மலெ என்றே வழங்குவதாம்.

மலையாள மொழி தமிழிலிருந்து பன்னூறாண்டுகட்கு முன்னரே “உதித்தெழுந்த” கிளைமொழியே. ஆயினும், தமிழில் காணப்படும்[1] ஐம்பால் விகுதிகளை அம்மொழி ஒதுக்கியுள்ளது ; மேலும், அளவுகடந்த வடமொழிச் சொற்களைக் தன்பாலேற்று அம்மொழி பயன்படுத்தி வருகின்றது. இவையே அம் மொழிக்கும் தமிழுக்குமுள்ள தலையாய வேறுபாடுகளாம். இவ் வேறுபாடுகள் நோக்கியே, மலையாளம் தமிழின் இனமொழியா அன்றிக் கிளைமொழியா என்ற ஐயப்பாடு எழுந்ததாகும். இனமொழி என்று கொள்வதினும் கிளைமொழி என்று கொள்வதே ஏற்புடைத்தாம்.

தமிழிலிருந்து பன்னூறாண்டுகட்கு முன்னரே மலையாள மொழி பிரிந்ததாயினும், தமிழ்மொழியின்மாட்டுக் காணப்படும் மொழி வளர்ச்சியும், திருத்தமும், அதன்கண்ணும் காணப்படுகின்றன. பண்டைக் காலத்திலிருந்தே தமிழிர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளைக் கடந்து சென்று மேலைக் கடற்கரையில் வசித்துவந்துள்ளமையால் இத்தொடர்பு காணப்படுகின்றது என்று எளிதில் ஊகித்துக் கொள்ளலாம்.[2] “பெரிப்ளூஸ்” ஆசிரியர் மேலைக் கடற் கரையிலிருந்த[3] "நெல்குன்றம்” என்ற சிறந்த துறைமுகப் பட்டினம் தமிழ் மூவேந்தர்களுள் தலைசிறந்த மதுரைப் பாண்டிய மன்னர்தம் ஆட்சிக் குட்பட்டது என்று குறித்துப் போந்தமை இக் கொள்கையை அரண் செய்வதாகும். மலையாள மொழியின் பண்டை இலக்கியங்க ளெல்லாம் வட மொழியை விடத் தமிழ் மொழியையே பின்பற்றி வந்துள்ளனவாகக் காணப்படுகின்றன என்று டாக்டர் குண்டெர்ட் கூறுவதும் அதனையே தெளிவுறுத்தும். தமிழ் முதலெழுத்துக்களாகக் கணக்கிடப்படும் உயிருமுடம்புமா[4] முப்பதெழுத்துக்களுக்கும் புறம்பான பிற எழுத்துக்களைப் பண்டை மலையாள இலக்கியங்கள் கையாளாமல் ஒதுக்கி வந்துள்ளன என்றும், அவ் விலக்கியங்களிலுள்ள வரிவடிவமோ தமிழ்நாட்டில், அதிலும் தென்பாண்டி நாட்டில், கல் வெட்டுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த வட்டெழுத்துக்களைப் போன்றிருந்த தென்றும், குண்டெர்ட் பெரியார் கூறியுள்ளார். மலையாள மொழியின் முதற் செய்யுளிலக்கியமாகக் கருதப்படுவது ”இராம சரிதம்” என்பதேயாம். இது சில நூற்றாண்டுகட்கு முன்பே எழுதப்பட்ட தாகும். எனினும் இதன்கண் வடமொழி எழுத்துக் கலப்புக் காணப்படவில்லை. யூத பட்டயங்களிலும், சிரிய பட்டயங்களிலுங் காணப்படும் இலக்கண அமைப்பையே உடையதாகவும் இஃது இருக்கின்றது. இதை நோக்கும்போது மலையாள மொழியும் அதன் பிற்கால இலக்கியங்களும் எத்துணை விரைவில் வடமொழி மயமாக மாறிவிட்டன என்பது வியப்பையே அளிப்பதாகும். இத்துணே மாறுதலும் சென்ற இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளுக் குள்ளாகவே ஏற்பட்டதாகும். இரண்டு அல்லது மூன்றே நூற்றாண்டு எனினும் எத்துணை வடமொழிக் கலப்பு!! தமிழில் எவ்வளவுக்கெவ்வளவு வடமொழிக் கலப்புக் குறைவாகக்காணப்படுகின்றதோ, அவ்வளவுக் கவ்வளவு மலையாளத்தில் மிகுதியாகக் காணப்படுகின்றது!!! மேலும், அதன் வரிவடிவமும், தமிழ் நாட்டில் வடமொழி எழுத்துக்களை எழுதக் கையாளப்படும் கிரந்த எழுத்துக்களின் வரிவடிவை யொட்டியே வகுக்கப்பட்டுள்ளதாகாகவும் கருதக்கிடக்கின்றது. ஆகவே, தமிழிலிருந்து ஒருசிறிது வேறுபட்டிருந்த மலையாளம் படிப்படியாக வேறுபாடுகள் மிக்கதாகி, தமிழின் கிளைமொழி யென்பது போய், உடன்றோன்றிய இனமொழியோ என்று கருதக்கூடியதொரு நிலையை எய்திவிட்டது. மலையாள மொழிக்குத் தமிழே தாய்மொழி என்பதில் யாதொரு ஐயமு மின்று; எனினும் மலையாள மொழி இப்பொழுதுள்ள நிலையை நோக்கில், தாயின் தொடர்பை நீத்துத் தனிப்பட்ட வேற்றுருவைக் கொண்ட மகளொருத்தியைப்போன் றாய்விட்டது. மலையாள மொழி என்றுதான் கூறுதல் வேண்டும். மலையாள மொழி தமிழின் கிளை மொழிதானா? ஆம்; கிளைமொழிதான். திசைகளைக் குறிக்க எழுந்த ’கிழக்கு’ ’மேற்கு’ என்ற இரு சொற்களைக் கொண்டே மேற்கண்ட வாறு விடை யிறுக்கலாம். கீழ் அல்லது அடி என்ற பொருளைக் குறிப்பது தமிழ்க் ”கிழக்கு” என்னுஞ் சொல்; அவ்வாறே மேல் அல்லது உயரம் என்ற பொருள் குறிப்பது தமிழ் ”மேற்கு” என்ற சொல். இச் சொற்களைக் கொண்டே இவை மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கீழ்ப்புறம் இருந்த தமிழ்நாட்டு மக்களிடையேதான் முதற்கண் தோற்றம் பெற்றுளவாதல் வேண்டும் என்று எளிதில் ஊகிக்கலாம்.

மேற்றிசையில் எங்கனும் ஓங்கி யுயர்ந்த மலைத்தொடர்! ஆகவே மேற்குத் திசை நோக்கிச் செல்ல வேண்டின் வரவர மேலேறித்தான் செல்லல் வேண்டும். கீழ்த்திசையில் எங்க ணும். பரந்து விரிந்த பனிக்கடல்! ஆகவே, கீழ்த் திசை நோக்கிக் செல்லவேண்டின் வரவரக் கீழ்நோக்கி இறங்கித் தான் செல்லல் வேண்டும். அதாவது, தமிழ்நாடு மேற்புறம் உயர்ந்தும், கீழ்ப்புறம் தாழ்ந்தும் அமைந்துள்ளது என்பதே. ஆனால் மலையாள நாடோ இதற்கு நேர்மாறான அமைப்பை உடையதகாக இருக்கிறது. ஓங்கி யுயர்ந்த மலைத்தொடர் கிழக்கிலும், பரங்து விரிந்த பனிக்கடல் மேற்கிலுமாக ஆங்கு அமைந்துள்ளன. இவ்வாறிருந்தும், உயர்ந்த மலையமைந்துள்ள கீழ்த்திசையைக் குறிக்கும் சொல் மலையாளத்திலும் ”கிழக்கு” என்பதேதான்! மலையாளம் தமிழ்தான் என்று கூறுவதற்கு வேறு சான்றும் வேண்டுமோ? மலையாளம் பேசும் மக்கள் எல்லோரும் பண்டைத் தமிழர்களே யல்லரோ?[5] பாலைக்காடு, கோயமுத்தார் வழியாகப் பண்டைத் தமிழ்மக்கள் மேலைக் கடற்கரையை யடைந்து வடக்கே[6] சந்திரகிரி வரையிலும், தெற்கே திருவனந்தபுரத் தருகே யோடும் நெய்யாற்றுக் கரைவரையிலும் பரவி யிருத்தல் வேண்டும். அவ்விரண்டு எல்லைகட் கப்பாலும் அவர்கள் செல்லாமைக்குக் காரணம் இரு மருங்கிலும் தங்களினத்தைச் சேர்ந்த பிற வகுப்பினர் முன்னரே ஆங்குப் போந்து உறைதந் திருக்கக் கண்டமையேயாம். ”மலையாள அகராதி”'யின் முன்னுரையில் அதன் ஆசிரியரான டாக்டர் குண்டெர்ட் தமிழுக்கும் மலையாளத்திற்கும் பெருங் தொடர்புள்ள தென்பது உண்மையேயாயினும், முன்னதைப் பின்னதன் தாய்மொழியாகக் கொள்ளுதல் சரி யன்றென்று எழுதியுள்ளனர். ”கிழக்கு”, ”மேற்கு” என்ற சொற்களைக் கொண்டே மலையாள மக்கள் தமிழ்நாட்டிலிருந்து மேலைக் கடற்கரை போந்து குடியேறியவர்கள் என்று கொண்டுவிட லாகாது என்றும், ஆரியர்களைப் போலவே திராவிடர்களும் வடபா லிருந்து தென்பாற் போந்தவர்களானால், அவர்கள் முதலில் மேலைக் கடற்கரை (மலையாளம்) போந்து தங்கிய பின்னரே கிழக்கே (தமிழ் நாட்டில்) புகுந்திருத்தல் வேண்டும் என்றும் அவர் தம் கருத்தை விளக்கியுள்ளார். ”மேற்கு” என்று மலையாளிகள் பெரும்பாலும் மொழிவதில்லை என்றும், “படிந்நாயிறு” என்றும் அவர் எடுத்துக் காட்டியுள்ளார். ஆனால் ”படிந்நாயிறு” என்ற அச்சொல்லும் ”படு ஞாயிறு” என்ற தமிழ்ச் சொல்லின் மலையாளக் திரிபேயாம். படு ஞாயிறு என்பது மேற்கே தாழ்ந்து படும் அல்லது மறையும் சூரியனைக் குறிப்பதாகும். ”மேற்கு,” “கிழக்கு” என்ற சொற்கள் தமிழ்ச் சொற்களே என்பதையும், அவை தமிழ்நாட்டிலேதான் முதற்கண் தோற்றம் பெற்றன என்பதையும் டாக்டர் குண்டெர்ட் ஒப்புக் கொள்ளுகிறார். ஆனால் அவர் கருகிய வண்ணம் தமிழ் மக்கள் மேற்கிலிருந்துதான் கிழக்கே போந்தார்கள் என்று கொள்வது-அஃதாவது, மலையாளந்தான் தமிழ்மொழியின் தாய்மொழி என்று சொல்வது-இயற்கை யமைப்புக்கும் மொழிவரலாற்றிற்கும் எவ்வாற்றானும் முரண்படுவதாகும். ஈண்டுத் தமிழ்நாட்டின் கீழ்க் கரைக்கும், மேற்கரைக்கும் முறையே கோரமண்டல் என்றும், மலபார் என்றும். ஆங்கிலத்திற் பெயர் வந்ததேன் என்பதை ஆராய்வோம். 1. கோரமண்டல்: தமிழ்ச் சோழமண்டிலம் என்பதே கோரமண்டலம் என்று திரிபுற்றிருத்தல் வேண்டும். சோழம் என்பதைச் சோளம் எனப் பிறழ உணர்ந்து, அதற்குத் தினை என்று பொருள்கொண்டு, சோழ மண்டிலம் என்றால் “தினை நாடு” என்று ஒருவர்[7] பொருள் கூறியது தவறேயாகும். பாண்டிய மண்டிலம் என்பது பாண்டிய நாடு என்று பொருள்படுவதே போன்று சோழ மண்டிலம் என்பது சோழநாடு என்றே பொருள்படும். முதன்முதல், இந்தியாவிற்கு வந்த போர்த்துகேசியர்கள் மேற்கரையி லிருக்கும் கொல்லத்திலிருந்து கீழ்க்கரையில் ஒரிஸ்ஸா வரையிலுள்ள கடற்கரைக்குச் சோழ மண்டிலம் என்றே பெயர் கூறிவந்தனர் என டாக்டர் குண்டெர்ட் கூறுகிரார். போர்த்துகேசியர்கள் வருவதற்கு முன்னிருந்த முகம்மதியர்கள் சோழமண்டிலக் கரையின் பெரும் பகுகியை மா’பார் என்றே அழைத்துவந்தனர் என்பதும், அதனையே நெடு நாள்வரை ஐரோப்பியர்களும் வழங்கிவந்தனர் என்பதும் மார்க்கோ போலோவின் குறிப்புக்களால் தெரியவருகி்ன்றன.

மாபார் என்பது நீண்ட கரை என்றே பொருள்படும்; முன்காலக்கில் மதுரையை யடுத்த கடற்கரைக்கு அதுவே பெயராக வழங்கிவந்தது. மதுரைக் கரையிலிருந்து ஈழத்திற்குச் செல்வதற்கு 'இராமர் பாலம் ' (சேது) என்ற நீண்ட அணை யொன்று இருந்ததே இவ் வழக்கிற்குக் காரணம் போலும்! பின்னர், கீழ்க்கரை முழுதிற்குமே இப்பெயர் வழங்கப்பட்ட தாகல் வேண்டும். பிற்காலத்தில் வந்த - டச்சுக்காரர்கள் கீழ்க்கரையின் நடுப் பகுதியை மட்டும் :சோரோ மாண்டல் ’ என்று குறித்து வந்தனர்.

'இந்தியாவிற்குப் போர்த்துகேசியர்கள் வந்தபோதே கோரமாண்டல் என்ற பெயர் வழங்கிவந்தது உண்மையே. 1499-ஆம் ஆண்டில் வெளிவந்த ஹீரானிமோ டீ'ஸ்டோ ஸ்டெஃபானோ[8] என்ற சிறு வரலாற்று நூலில் இப் பெயர் எடுத்தாளப்பட்டுள்ளது. ஈழத்தை விட்டபின் பன்னிரண்டு நாட்கள் கழித்துக் கோரமாண்டல் என்ற மற்றோரிடத்தை அடைந்தோம் என்று அதிற் கூறப்பட்டுள்ளது. 1510-ல் வெளிவந்த வெய்தெமாவின் கடற்செலவு" என்ற நாலிலும், யார்போசா[9] என்ற போர்த்துகேசிய வரலாற்று நூலிலும் சாரமாண்டல் என்றும், கோரோமாண்டல் என்றும், சொலொமண்டில் என்றும், சோல்மெண்டர் என்றும் பல வாறாக வழங்கப்பட்டுள்ளது. முகம்மதியர்களும் சோழமண்டிலம் என்ற பெயரையே வழங்கிவந்தார்க ளென்பதற்கு ரோலண்ட்ஸன் மொழிபெயர்ப்பாகிய ’தோஃபாத் அல் மஜாஹிதீன் அல்லது மலபார் முகம்மதியர்களின் வரலாறு'[10] என்ற நூலும் சான்று பகர்கின்றது. சோல மொண்டல[11]த்தி லுள்ள மைலாப்பூரிலும், நாகபட்டினக்த்திலும் ஏனைய கடற் றுறைகளிலும் பறங்கிகள்[12] கோட்டைகள் வகுத்துக்கொண்டனர் என்று அந் நூலிற் காணப்படுகிறது.’’ என்று கர்னல் யூல்[13] வரைந்துள்ளார்.

இவற்றாலும், சகரமும் ககரமும் ஐரோப்பிய மொழிகளில் மாறுவதுண்டாதலாலும், சிறப்பு ழ கரத்திற்கு ரகரம் வழங்குவது பிறநாட்டு வழக்காதலாலும் சோழ மண்டிலம் என்ற தமிழ்ச் சொற்றொடரே ஆங்கிலத்தில் கோரமாண்டல் என்று திரிந்தது என்பது இனிது விளங்கும்.

2. மலபார்: மலபார் என்பதன் முதற்பகுதியும் மலையாளம் என்பதன் முதற்பகுதியும் ஒன்றேயாகும். (தமிழ்: மலை, மலையாளம்: மல) பிற்காலக் கிரேக்கர் இதனை மலெ என வழங்கினர். அராபியக் கப்பலோட்டிகள் நெடுநரள் வரை பார் என்னும் அடை இல்லாமல் மல என்னும் முதற் பகுதியை மட்டுமே அந்நாட்டின் பெயராக வழங்கிவந்தனர். 851-ல் குலம்-மலை என்ற வழக்கும், 1150-ல் மலீ, மலிய என்ற வழக்குகளும் காணப்படுகின்றன. இவற்றுள் குலம் மலை என்பதில் குலம் என்பது கொல்லத்தைக் குறிப்பதாகும். (கொல்லம் என்ற நகரின் பெயர் 660-ம் ஆண்டிலேயே வழங்கியதாகத் தெரிவதால் அது 825-ல் அமைக்கப்பட்ட தென்னும் கூற்றுத் தவறென்று ஏற்படுவது ஈண்டுக் குறிப்பிடத் தக்கது.)

பார் என்னும் அடை முதன்முதலாக 1150-லேயே வருகின்றது. இது வாரம் என்னும் வடசொல்லி லிருந்து வந்ததென்றும், பார் என்னும் அராபியச் சொல்லி லிருந்து வந்ததென்றும், பார் என்னும் பாரசீகச் சொல்லி லிருந்து வந்ததென்றும் பலவாறான கொள்கைகள் உள்ளன. அடிப் பகுதி என்று பொருள்படும் வாரம் என்ற தமிழ்மலையாளச் சொல்லே இஃது எனக் கொள்ளலாமாயினும், அத்தகைய வழக்கு அம்மொழிகளில் இல்லாதிருப்பது அங்ஙனம் கொள்ள இடையூறாகின்றது. வட இந்திய நாட்டுப் பெயர்களாகிய மார்வார், தார்வார், கத்தியவார் என்பவற்றுள்ளும் இதே அடை காணப்படுவது வடமொழி ”வாரம்” என்பதை உறுதிப்படுத்துவதாகத் தோன்றக்கூடும். ஆனாலும், வார் என்பது வாஃட் என்று எழுதப்படுவதி லிருந்து இவை சூழல், நாடு என்னும் பொருள் உடைய வாட என்ற வட சொல்லிலிருந்து வந்தவையே என்றேற்படுகின்றது.

முதன்முதல் இந்த அடைமொழியை வழங்கியவர்கள் அராபியரேயாவர். ஆதலால் “பார்” என்ற அராபியச் சொல்லையே இதன் முதலாகக் கொள்ளல் வேண்டும். ஆனால் பார் என்ற பாரசீகச் சொல்லை நாடு, கண்டம் என்னும் பொருளில் அராபியர் பல்வேறிடங்களில் பயன்படுத்தி யிருப்பதாகக் கர்னல் யூல் கூறுகிறார். ஆகவே “பார்” என்னும் பாரசீகச் சொல்லடியாகவே, மலபார் என்பதிலுள்ள பார்[14] பிறந்திருத்தல் வேண்டும் எனக் கோடலே சிறந்தது.

மலபார்க் கரைக்கு அருகில் உள்ள தீவக் கூட்டங்களுக்கு மால் தீவங்கள் என்று பெயர். பிரார் தேலா வால்[15] மோர்ஸ்பீ[16] முதலியோர் இதனை மலெ என அழைத்தனர். சிங்களரும் இதனை மல்திவ மென்றே வழங்கினர். “பார்” என்பது நாடு, கண்டம் என்று பொருள்படுவதை நோக்க மலெ என்ற பொதுப் பெயருடைய தீவுகளையும் தலைநிலத்தையும் பிரித்தறியவே மல தீவுகள், மலபார் என வேறுபடுத்தி உரைத்தனரோ என்று நினைக்க இடமுண்டு. ஆனால் தமிழில் மல் என்பது மால என வழங்குவது புதுமையானது. இபின் பதூதா[17] என்பவர் மால தீவங்களை திபத் அல் மஹால்[18] என அழைப்பதிலிருந்து தமிழ் ”மால்” என்பது ”மஹால்” என்பதன் மரூஉ என்று கூறலாகும். மஹால் மால் ஆதல் தமிழ் ஒலியியற்படி இயற்கையே என்க.

 1. 1. போகிறேன். போகிறாய், போகிறான், போகிறது. போகின்றன என்ற ஐவேறு தமிழ் வினைச்சொற்களும் மலையாளத்தில், “போகுன்னு” என்ற ஒரே வினைச்சொல்லாற் குறிக்கப்படும்.
 2. 2. Periplus.
 3. Nelkynda
 4. முப்பத்திரண்டென்றார் கால்டுவெல்
 5. Palghat
 6. Chandragiri
 7. ஃப்ரா பாலினோ லெயின்ட் பார்தோலோமியோ
 8. 1. Hieronimo de, Sto Stefano. 2, Vaithema's Travels.
 9. Barbosa
 10. Tohfat al Majahidin or History of Mahammadans In Malabar
 11. Solmondul
 12. Franks
 13. Col. Yule.
 14. (தமிழ்ப்) பார் . பரப்பு. வன்னிலம்.
 15. Pyrard dela Val
 16. Morseby
 17. Ibn Batuta
 18. Dhibat al-Mahal