கால்டுவெல் ஒப்பிலக்கணம்/006-033

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

III. தெலுங்கு

தொன்மைச் சிறப்பிலும், சொல்வளத்திலும் தெலுங்கு மொழியைத் தமிழுக்கு அடுத்தபடியாகக் கூறலாம். மொழி யினிமையை நோக்கின் அது தமிழினுஞ் சிறந்த தொன்றாகவே மதிக்கப்படுகிறது. ஐரோப்பியர்கள் முதலில் தெலுங்கு மொழியை "ஜெண்ட்டூ” என்று அழைத்து வந்தனர். வர வர அது வழக்கொழிந்தது.

தெலுங்கு மொழி பழவேற்காடு தொடங்கிச் சிக்கை குளம்[1] வரையிலுள்ள நிலமூக்கின்[2] கீழ்க்கரையிலும், மேற்கே மராட்டிய நாட்டின் கீழெல்லை தொடங்கி மைசூர் வரையிலும் பேசப்பட்டு வருகிறது; வட சர்க்கார்க் கோட்டங்களும்[3], கர்நூல் கோட்டமும், நிஜாம் நாட்டிற் பெரும் பகுதியும், நாகபுரி நாடும், கோண்டு வனமும்[4] இதனுள் அடங்கியனவாம். இந் நிலப் பகுதியை முகம்மதியர்கள் தேலிங்காணம் என் றழைத்துவந்தனர். தொலைநாடுகளுக் குத் தொழில் கருதிச் செல்வதையும், பிற நாடுகளிற் சென்று குடியேறுவதையும் தெலுங்குமக்கள் வரவரக் குறைத்துக் கொண்டு வங்திருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும். திராவிடக் குழுவினருள் எண்ணிக்கை மிகுந்த இனத்தினர் தெலுங்கர் என்று ஐயமின்றிக் கூறலாம். தமிழ்நாட்டில் நாயக்கர்கள் (வடமொழி நாயகர்கள்) என்றழைக்கப்படு வோரும், ரெட்டிகளும் தெலுங்கர்களே. இவர்கள் ஏறக் குறையப் பத்து நூறாயிரவர் உள்ளனர். இவர்களையும் மைசூரிற் குடியேறியுள்ள தெலுங்கரையும் சேர்த்துக்கொண்டால், தெலுங்கு பேசும் மக்களின் மொத்தத் தொகை 2,30,00,000 ஆகும். நிஜாம் நாட்டில்மட்டும் இருக்கும் தெலுங்கர் தொகை, 1911 கணக்குப்படி, 60,00,000 ஆகும்.

இன்று தெலுங்கர் தமிழரைப் போன்று திரை கடல் கடந்து பொருளீட்டும் முயற்சியுடைய ரல்லராகக் காணப்படினும், பண்டைக் காலத்தில் இத் துறையில் தமிழருக்கு வழிகாட்டியா யிருந்தவர்கள் அவர்களே யாவர். இன்றும் மலாய் நாட்டினர் தமிழரைக் குறிக்க வழங்கும் கிளிங்[5] என்ற சொல் கலிங்கம் என்பதன் மரூஉ. கலிங்கம் என்பது தெலுங்குநாட்டு நெய்த னிலத்திற்குப் பெயர். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகட்டுமுன் சுமத்ரா, ஜாவா என்னும் திட்டுகளுக்குச் சென்று குடியேறி ஆங்குக் கோயில்கள் கட்டி வாழ்ந்துவந்த சென்னை மண்டில மக்கள் தெலுங் கர்களே என்று கருதப்படுகின்றனர்.

வடமொழி வாணர் தெலுங்கை ஆந்திரம் என்றழைப்பர்; ஆந்திரர்கள் பேசும் மொழி ஆந்திரம். தெலுங்கர் பண்டைக் காலத்திலிருந்தே ஆந்திரர் என்றும், கலிங்கர் என்றும் இரு பிரிவினராக வாழ்ந்து வந்துள்ளனர். கலிங்கர்களை விட ஆந்திரப் பிரிவினரே பண்டைய ஆரியர்களுக்கு மிக்க அறிமுகமானவர்கள். இருக்கு வேதத்தின் கிளையாகிய ஐதரேய பிராமணத்தில்[6] ஆந்திரர்கள் என்ற மக்கள் முதன் முதலாகக் குறிக்கப்பட் டுள்ளனர். அவர்கள் நாகரிகமற்ற ஓரினத்தார் என்று அந் நூல் கூறுகின்றது. புராண காலத்தில் ஆந்திர அரச பரம்பரையொன்று வட இந்தியப் பகுதியில் ஆட்சி செலுத்திவந்துள்ளதாகவும் தெரியவருகிறது. மெகாஸ்தனீசுக்குப் பின்வந்த பிளைனி என்பார் “அந்தாரி” என்போர் ஆற்றல் மிகுந்த ஒரினத்தார் என்று குறிப்பிடுகின்றார். பியூட்டிஞ்சர் டேபில்ஸ் என்ற உரோம நிலப் படங்களில் ஆந்திர இந்தி என்ற ஒன்று (கங்கைக்கு வட பகுதியில்) இருப்பதாகக் குறிக்கப்பட்டுள்ளது என்று முன்னர்க் காட்டப்பட்டது. ஆந்திரர்களின் மொழியைப் பற்றி முதற்கண் குறித் தெழுதியவர் ஹியூன் சியாங் என்ற சீன யாத்திரிகரே. கி. பி. ஏழாம் நூற்றாண்டின் மத்தியில் வந்த அவர், ஆந்திரர்களின் மொழி மத்திய இந்தியமொழியினும் வேறுபட்ட தொன்று என்றும், ஆனால் அதன் வரி வடிவமோ மத்திய இந்தியமொழியின் வரி வடிவத்தைப் பெரும்பாலும் ஒத்ததே என்றும் குறித்துள்ளார். எனவே, ஆந்திர மொழி கலைத்துறையில் ஒருவாறு அக் காலத்தி லேயே வளர்ச்சியுற் றிருந்தது என்பதும், அதனாலேயே ஆந்திரர் என்ற பிரிவினர், கலிங்கர் என்ற பிரிவினரை நோக்க, நாகரிகத்தில் மிக்கவராக வடமொழி வாணராற் கருதப்பட்டு வந்தனர் என்பதும் எளிதிற் பெறப்படும். ஹியூன் சியாங் காலத்திற்குப் பின் வந்தவரான குமாரில பட்டர் என்பார் “ஆந்திர திராவிட பாஷா” என்று திராவிட மக்கள் பேசும் மொழியைக் குறித்ததும், கலிங்க திராவிட பாஷா என்றே, திரிலிங்க திராவிட பாஷா என்றே குறிக்காததும் கருதற்பாலன. 

தெலுங்கு மக்கள் தம் மொழியினைத் தெலுகு என்றே கூறுகின்றனர். தெலுங்கு, தெலிங்க, தெய்லிங்க, தெனுகு, தெனுங்கு என்றும் அம் மொழிக்குப் பிற பெயர்கள் உண்டு. தெனுகு அல்லது தெனுங்கு என்பதே மொழிக்குரிய சரியான பெயர் என்று தெலுங்கு மொழிப் புலவர்கள் கூறுவர்; தேன் என்பதிலிருந்து பெறப்பட்டதாகக் காரணமுங் காட்டுவர். இது ஒப்பக்கூடியதன் றாயினும், சொற்போக்கும் மொழி யினிமையும் அப் பெயருக்கு ஏற்றனவாகவே காணப்படுகின்றன.

தெலுங்கு, திரிலிங்கம் என்பதன் மரூஉ எனபதாஉம் ஒன்று. இத் தொடரின் பொருள் இலிங்கங்களை யுடைய மூன்று கோயில்களை எல்லையாகக் கொண்ட நாடு என்பதே. இவ் விளக்கம் தெலுங்குப் புலவரின் நுணுக்கத் திறனைக் காட்டுகிற தென்பதில் ஐயமில்லை. குறிப்பிட்ட மூன்று கோயில்களின் பெயருடன் இப் பெயரை ஒட்ட வைப்பது நம்பத்தக்க தன்றாயினும், இலிங்கம் என்ற சொல்லுடன் இது தொடர்புடையது என்பதில் மிகுந்த உண்மை இருக்கத்தான் வேண்டும்; ஏனெனில் இன்றைப் புலவரது கொள்கைக்கு நெடுந்தொலை அப்பாற்பட்ட காலத்தவரான திபெத் நாட்டு அறிஞர் தாரநாதர் திரிலிங்கம் என்ற தொடரை வழங்குவதோடல்லாமல் கலிங்கம் என்ற நாடு திரிலிங்கத்தின் ஒரு பகுதி என்றும், அதன் தலைநகர் கலிங்கபுரம் என்றும் குறித்துள்ளார். மேலும், இன்னும் பழமையான நாளிலேயே டாலிமி[7] இப் பெயரைக் கையாண்டுள்ளார். டாலிமியின் காலம் புராணங்களுக்கு முந்தியதாகல் வேண்டும்.

இனித் தெலுங்கு என்பது திரிலிங்கமன்று, திரிகலிங்கமென்பாரும் உளர். இதற்குப் பொருத்தமாகப் புராண மொன்றில் இவ் வழக்கிருப்பதாக டாக்டர் கெர்னும்[8] கல் வெட் டொன்றில் அரசர் குடி யொன்றைச் சேர்ந்தோர் தம்மைத் திரிகலிங்க அரசர் என்று கூறிக்கொண்டதாகக் கன்னிங்ஹாமும்[9] உரைக்கின்றனர். மாபாரதத்தில் மூவேறிடங்களில் மூவேறு குழுவினரைக் கலிங்கர் என அழைத்திருப்பதும், பிளைனி என்பார் கலிங்கருடன் மக்கோக் கலிங்கர், கங்கரிதேஸ் கலிங்கர் என்பவர்களைக் குறிப்பிட்டிருப்பதும் இதனை வலியுறுத்துவதாக அவர் கொள்கிறார்.

தெலுங்க நாட்டைப் பிளைனி மோடொகலிங்கம் எனவும் குறித்துள்ளார். இதில் மோடொக என்பது மூன்று என்ற பொருள்கொண்ட பழந் தெலுங்குச் சொல் என ஏ. டி. காம்பெல்[10] கொள்கிறார். ஆனால், இன்றைத் தெலுங்கில் மூன்று என்பதற்குச் சரியான மொழி மூடு என்பதே யாகும். மூடுகு என்பதுகூட உயர் இலக்கிய வழக்கேயாம். காம்பெலுக்கு மாறாக ஸி. பி. பிரௌன் என்பார் மோடொ கலிங்கத்தை மோடொ+கலிங்கம் எனப் பிரித்து மூன்று கலிங்கம் எனப் பொருள்படுத்துகிறார்.

தெலுங்கிற்குத் தமிழர் தந்த பெயர் வடுகு என்பதாகும். தெலுங்கர், அதிலும் சிறப்பாக, நாயக்க வழியைச் சேர்ந்தவர் வடுகர் எனப்படுவார். இதன் முதன்மொழி வட என்ற தமிழ்ச் சொல்லேயாகும். போர்த்துகேசியராலும் ஸெயின்ட் ஸேவியராலும்[11] குறிப்பிடப்பட்ட, படகேஸ், இவர்களேயாவர்.

 1. Chicacole
 2. Peninsula
 3. Ceded Districts
 4. Gondwana
 5. Kling
 6. Aitareya Brahmana of the Rig Veda
 7. Ptolemy
 8. Dr. Kern
 9. General Cunningham.
 10. Mr. A. D Campbell
 11. St. Xavier.