உள்ளடக்கத்துக்குச் செல்

கால்டுவெல் ஒப்பிலக்கணம்/007-033

விக்கிமூலம் இலிருந்து

IV. கன்னடம்

தெலுங்கு மொழிக்கு அடுத்தபடியாக இடம் பெறத் தக்கது கன்னடம். கர்நாடகம் என்றும், கானரீஸ் என்றும் அது வழங்கப் பெறும். மைசூர், தென் மராட்டிய நாடு, நிஜாம் நாட்டு மேலைக் கோட்டங்கள் சில, ஆகிய பகுதிகளில் இம் மொழி வழங்கிவருகிறது. மலபார்க் கரையிலுள்ள கானரா என்னும் கன்னடியக் கோட்டத்தில், மலையாளம், துளு, கொங்கணி ஆகிய மொழிகளுடன் கன்னடமும் பேசப்படுகிறது. நீலகிரியிலுள்ள வடகர்[1] என்னும் பெருந் தொகை மக்கள் பேசுவது பழைய கன்னடமே. இம் மொழி பேசுவோரின் மொத்தத் தொகை 1,05,00,000.

கர்நாடம் அல்லது கர்நாடகம் என்ற சொல் முதற்கண் தெலுங்கு, கன்னடம் என்ற இரண்டு மொழிகளையுங் குறிப்பதற்கே பொதுப்பட வழங்கப் பெற்றது; பின்னர், தெலுங்கை நீக்கிக் கன்னடத்தை மட்டுமே அது குறிப்பதாயிற்று. கர்நாடகம் என்பது வடமொழிச்சொல்லிலிருந்து பிறந்தது என்பர் வடமொழிப் புலவர். ஆயினும், டாக்டர் குண்டெர்ட் கூறுவதுபோல் கரு+நாடு+அகம் என்ற தமிழ்ச் சொற்களின் அடியாகப் பிறந்தது அச் சொல் என்று கொள்வதே சிறப்பாகும்.

தமிழிற் செந்தமிழ், கொடுந் தமிழ் என்ற இரு பிரிவுகள் இருப்பன போன்று கன்னடத்திலும், பழைய கன்னடம் என்றும், புதுக் கன்னடம் என்றும் இரு பிரிவுகள் உள்ளன. இப் பிரிவுகளுக்கிடையேயுள்ள வேறுபாடு தமிழையும் மலையாளத்தையும் போன்று வடமொழிச் சொற்கலப்பினால் ஏற்பட்ட தொன்றன்று; சொல்லாக்க முடிபுகளினாலேயே ஏற்பட்ட தொன்றாகும். பழைய கன்னடம் என்ற மொழியும், பழைய கன்னடம் என்ற வரிவடிவமும் ஒன்றன்று. அது வேறு, இது வேறேயாம். இரண்டையும் ஒன்றுடனொன்று கலத்தல் கூடாது. மைசூரிலும், மராட்டிய நாட்டிலும் காணப்படும் கல்வெட்டுகளிற் பல பழைய கன்னடம் என்னும் வரிவடிவத்தா லியன்றனவேயாம். ஹௗ கன்னடம் என்ற பழைய கன்னடத்திலுள்ள கல்வெட்டுக்களின் சொற்களெல்லாம் வடமொழியே யன்றிக் கன்னடமல்ல.

கர்நாடகம் என்ற சொல் பன்னூறாண்டுகளாகவே வழக்கில் இருந்துவருகிறது. கி. பி. ஐந்தாம் நூற்றாண்டினரான வராஹமிஹிரர் அதனை எடுத்தாளுகிறார். தாரநாதரும் கர்நாடம் என்பதைக் குறிக்கிறார். முகம்மதியர்கள் இதனைக் கர்நாட்டிக் என்றனர். ஆங்கிலேயர்கள் “கானரீஸ்” என்று திரித்து வழங்கலாயினர்.

  1. Badagas