கால்டுவெல் ஒப்பிலக்கணம்/008-033

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

V. துளு

துளு அல்லது துளுவம் திருந்தியதொரு மொழியேயாகும். எனினும், அதற்குத் தனிப்பட்ட வரிவடிவமோ, இலக்கியமோ இல்லாமையால் அதனைத் திருந்திய மொழியினத்தில் சேர்த்தல் ஒல்லுமோ என்று ஐயுறுதல் கூடும். துளு மொழியில் முதன்முதலாக நூல்கள் சில அச்சிட்டவர்கள் பேசில் மிஷனைச்[1] சேர்ந்த குருமார்களே யாவர். ஆனால் அவர்கள் அந் நூல்களைக் கன்னட மொழியின் வரிவடிவிலேயே அச்சிட்டுவிட்டனர். ஆதலால், துளு மொழிக்குரிய எழுத்து கன்னடமே என்று நம்பப்படுவதாயிற்று. இலக்கியமில்லையேனும் துளு மிகவும் திருந்திய திராவிட மொழிகளுளொன்று என்று தான் கூறவேண்டும்.

இம் மொழி சிறு தொகையினரான மக்களால் குறுகிய அளவுள்ள ஒரு பகுதியில்மட்டும் பேசப்பட்டு வருகிறது. கன்னடக் கோட்டத்தில் ஒடும் சந்திரகிரி, கல்யாணபுரி என்ற இரண்டு ஆறுகளும் இம் மொழி வழங்கும் பகுதியின் இரண்டு எல்லைகளாகக் கருதப்படுகின்றன. அவ் வெல்லைகளைக் கடந்து அது வழங்கியதாகக் கூறுதற்கு மில்லை.

துளு மொழி பேசுவோரின் தொகை 5,00,000-க்கு மேற்பட்டதாகும். இருந்தாலும் அவரிடையே பல மொழிகள் வழங்குகின்றன. ஆதலால் துளு எங்கே ஒருவழியாய் மறைந்தொழிந்துவிடுமோ என்றுகூட ஐயுறலாம். இருந்தாலும் அது மறைந்தொழிதற்கான குறிகள் ஒன்றும் இதுவரைக் காணப்பட்டிலது. திராவிட மக்களுக்குள் மாறுதல் என்பதே வேண்டாத ஓர் இனத்தார் இருக்கக்கூடு மென்றால் அவர்கள் துளுவர்களே. ஆதலின் அவர்கள் தம் மொழியை மறைந்தொழியவும் விடுவரோ!

துளு என்பது பணிவு, அடக்கம் என்று பொருள்படும் என பிரிகெல்[2] என்ற கன்னட இலக்கண நூலாசிரியர் கூறு கிறார். இதிலிருந்து அச்சொல் அம் மொழி பேசும் மக்களையே யன்றி அம் மொழியைக் குறித்ததாகக் கொள்ள இடமில்லை.

மலையாள மொழியின் கிளை மொழியே துளு என்று எல்லிஸ்[3] நம்பினார். அவர் அவ்வாறு நம்பியதற்கு மலையாள மொழி அருகிற் பெரு வழக்கி லிருப்பதும், துளுவப் பார்ப்பனர்கள் வடமொழியில் எழுத மலையாள எழுத்துக்களையே பெரும்பாலும் பயன்படுத்தி வருவதும் காரணங்களாகலாம். இக் காரணங்கள் சாலா. துளுவம் மலையாளத்தின் கிளையன் றென்று உறுதியாகக் கூறலாம். "துளு இலக்கணம்" வகுத்த பிரிகெல் இதைக் குறித்துப் பல உண்மைகளையெடுத்துக் கூறி விளக்கியுள்ளார். மலையாளத்திற்கும் தமிழுக்கும் இருக்கும் வேறுபாட்டைவிட மிகுந்த வேறுபாடு துளுவத்திற்கும் மலையாளத்திற்கு மிடையே உள்ளது. ஆனால் அதற்கும் கன்னட மொழிக்கு மிடையே அத் துணை வேறுபாடில்லை. குடகு மொழிக்கும் துளுவத்திற்கு மிடையிலுள்ள வேறுபாடோ மிகமிகக் குறைவு. தமிழ் மொழியிலிருந்தோ குடகு பெரிதும் வேறுபடுகிறது.

சென்னைக் கருகில் வசித்துவந்த குறும்பர்கள் என்ற நாடோடி இடையர்கள் துரத்தப்பட்டு அவர்களுடைய நில புலங்கள் துளுவ நாட்டு வேளாளர்களுக்கு வழங்கப் பெற்றன என்ற ஒரு பழங் கதையை எல்லிஸ் கூறியுள்ளார். சென்னையையும், சென்னையையடுத்து முள்ள சில குடும்பத்தினர் தங்களைத் துளுவ வேளாளர் என்று அழைத்துக்கொள்வது மேற்குறித்த பழங் கதைக் கொள்கையை வலியுறுத்துவதாகும். இருந்தாலும், துளுவ நாட்டிலிருந்து பலர் சென்னைக்கு வந்து குடியேறி யிருக்கக்கூடும் என்று கொள்வதற்கில்லை ; எனெனில், அவ்வாறிருந்தால் சென்னை நகரத் தமிழ் சிற்சில துறைகளிலேனும் துளுவ மொழிப் பண்புகளை ஏற்றுக்கொண்டிருத்தல் இயல்பாகுமாதலின். அவ்வாறு துளுவ மொழிக் கலப்பு இருப்பதாகத் தெரியவில்லை. சென்னை நகரத் தமிழ், சென்னை மண்டிலத் தமிழிலிருந்து வேறுபட்டுக் காண்பது தெலுங்கு மொழிக் கலப்பினாலேயே யன்றித் துளுமொழிக் கலப்பினாலன்று.

  1. Basle Missionaries
  2. Mr. Brigel
  3. Mr. Ellis