கால்டுவெல் ஒப்பிலக்கணம்/014-033

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

(ஒவ்வொரு மொழியிலும் நெருங்கிய உறவினர்களையும், உடலுறுப்புக்களையும், என்றும் மாறாதனவும் பொதுப்படையானவையுமான இரவு, பகல், ஞாயிறு, மரம், கல், வீடு, யானை, குதிரை போன்ற பொருள்களையுங் குறிக்குஞ் சொற்கள் அவ்வம் மொழியின் முதன்மையான சொற்களாகக் கருதப்படும். இடப் பெயர்களும் எண்ணுப் பெயர்களும் மாறுபடுதல் இயல்பாகலான் அவற்றை முதன்மைச் சொற்களோடு ஈண்டுச் சேர்ப்பதற்கில்லை. பின்வரும் பட்டியில், ஒப்புநோக்கி உயத்தறிதற் கெளிதாக வட மொழியிலிருந்தும், தமிழிலிருந்தும் 60 முதன்மைச் சொற்கள் தரப்படுகின்றன.)

(இடப்பெயர்கள் எண்ணுப்பெயர்கள் நீங்கலாக) வடமொழி, தமிழ்மொழிகளிலிருந்து எடுக்கப்பட்ட 60 முதன்மைச் சொற்கள் அடங்கிய பட்டி.
தமிழ் வடமொழி வடமொழியின் தமிழ் ஒலிப்புஅப்ப(ன்) पितृ பித்ரு
ஆயி मात् மாத்ரு
மக(ன்) सूनु ஸூனு
மக(ள்) दुहितृ துஹித்ரு
தலை शिरसू சி°ரஸ்
கண் अक्षि- அக்ஷி
செவி कान கர்ண
வாய் मुख- முக
பல் दांत- ந்த
மயிர் केश கே°ச
கை
हस्त
कर
ஹஸ்த
கர
கால் पाद् பாத்
ஞாயிறு सूर्य ஸுர்ய
திங்கள் चन्द्र சந்த்
வான் दिवू திவ்
நாள் दिवस- திவஸ
இரவு नक् நக்

மூலப்பக்கம் : https://ta.wikisource.org/s/9z7k
தமிழ் வடமொழி வடமொழியின் தமிழ் ஒலிப்புதீ अग्‍नि அக்னி
நீர்
अप्
नीर ✽
அப்நீர ✽
மீன் मटस्य மத்ஸ்யமீன ✽
मीन ✽
மலை पर्वत பர்வத
மரம் ???? த்ரும
கல் वेश्मन् அச்°மன்
இல் वेश्मन् வேச்°மன்
ஊர் ग्राम க்ராம
ஆனை ह्रस्तिन ஹஸ்தின்
குதிரை अ9च- அச்°வ
गो கோ
எருமை महिष- மஹிஷ
நாய் श्वन ச்°வன்
பூனை विडाल- விடா
கடு-வாய் व्याघ्र- வ்யாக்
மான் मृटग ம்ருக
குரங்கு कपि கபி
கரடி সgধন- ச்°ருக்‌ஷ
பன்றி सुकर ஸூகர
பாம்பு सर्प ஸர்ப

மூலப்பக்கம் : https://ta.wikisource.org/s/9z7l
தமிழ் வடமொழி வடமொழியின் தமிழ் ஒலிப்புபறவை वयस्म् வயஸ்
கரு काल- கால
வெள் ই্যই சு°க்ல
செ(வ்) रक ரக்த
பெரு महत् மஹத்
சிறு आटप அல்ப
இன் (சுவை) मधुरं மதுர
புளி 3ममन्- அம்ல
உப்பு दळन्T லவண
தின் भक्ष्य् பஷ்
குடி पा பா
வா
போ गम ம்
நில் হা ஸ்த்'
இரு आस्यू ஆஸ்
எகு चर् சர்
ஒடு த்ரு
உறங்கு स्वप् ஸ்வப்
கேள் ச்°ரு
சொல் वद् வத்
நகை हस ஹஸ்
அழு ருத்
கொல் इन ஹன்
(4) மேலும், வடமொழியி லிருந்து தோன்றியனவே திராவிட மொழிகள் என்று நம்பிய மேனாட்டாராய்ச் சியாளர்களுக்கு, வட சொற்களையே எடுத்தாளாமலோ, அங்கொன்றும் இங்கொன்றுமாக மிகவும் அருகிய நிலையில்மட்டும் எடுத்தாண்டோ வரும் திருந்தா மொழிகளும் திராவிட மொழி யினத்தில் இருக்கின்றன என்பதே தெரியாது. அன்றியும், வடசொற்களை ஓரளவிற்கு எடுத்தாளும் திருந்திய திராவிட மொழிகளும் கட்டாயமாக அவற்றை எடுத்தாளத்தான் வேண்டுமென்பதில்லாமல், விருப்பமுளதேற் பயன்படுத்தியும், இன்றேல் அறவே யொதுக்கியும் வருகின்றன என்பதும் அவர்களுக்குத் தெரியாது. ஆனால், இன்றைய நிலையை நோக்கின், வடமொழியை அறவே நீக்குவ தென்பது தெலுங்கு மொழிக்கு அரிதாகும்; கன்னட மொழிக்கோ மிகவும் அரிது; மலையாள மொழிக்கோ அரிதினுமரிது. இம் மொழிகள் கணக்கு வழக்கில்லாமல் வட சொற்களை எடுத்தாண்டுவந்துள்ளமையாலும், அச் சொற்களின் உதவியை நாடுவதே வழக்கமாகக் கொண்டுள்ளமையாலும், தத்தம் சிறப்புப் பண்புகளை யிழந்து, தனித்து நின்றியங்கும் ஆற்றலையும் இழந்து நிற்கின்றன. ஆனால், திராவிட மொழிகள் அனைத்தினும் மிகவும் திருந்திய பண்பட்ட நிலையிலுள்ள தமிழ்மொழியோ, வேண்டுமென்றால், வடசொற்களை அறவே அகற்றித் தனித்தியங்கும் ஆற்றல் வாய்ந்திருப்பதோடன்றி, அவற்றின் உதவி யில்லாமல் மிகவும் மேம்பட்டு, வளமுற்று மிளிரும் ஆற்றலும் வாய்ந்ததாகும்.

பண்டைத் தூய தமிழ்மொழிக்குச் செந்தமிழ் என்று பெயர். இச் செந்தமிழிலேயே தமிழ்மொழியிற் காணப்படும் பண்டை இலக்கியங்களிற் பெரும்பாலன இயன்றுள்ளன. ஆனால், அவற்றுள் காணப்படும் வடசொற்களோ மிகமிகக் குறைவு. இன்றைய பேச்சுத் தமிழுட னும், உரைநடைத் தமிழுடனும் இந்நிலை மாறுபட்டதொன்றாகக் காணப்படும். எதனால் அவ்வாறெனிலோ, கண்ணுங் கருத்துமாய் இருந்து வடசொற்களையும், வடமொழி யெழுத்துக்களையும் விலக்கி, தூய தமிழ்ச்சொற்கள், மரபுமொழிகள், அமைப்புகள் ஆகியவற்றையே கையாண்டு வந்துள்ளமையினாலே தான். தமிழ்மக்களிடையே இச் செந்தமிழ் மொழிப் பாதுகாப்பு எவ்வளவுக்குப் பரவியிருந்த தென்பது, எழுதப்பட்ட ஒரு தமிழ் நூலில் எவ்வளவுக் கெவ்வளவு வட சொற்கள் அருகிக் காணப்படுகின்றனவோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது சிறந்ததொரு நூலென்றும், எவ்வளவுக் கெவ்வளவு வடசொற்கள் மிகுதியாகக் காணப்படுகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு அது தாழ்ந்ததொரு நூலென்றும் கருதி மதிப்பிடும் பழக்கம் பண்டுதொட்டுப் பயின்று வருகின்றமையினாலேயே இனிது தெளியப்படும். பிற மொழி நூல்கள் சிலவற்றில் எவ்வளவுக் கெவ்வளவு வட மொழிச் சொற்கள் பயின்று வருகின்றனவோ அவ்வளவுக் கவ்வளவு அந் நூல்கள் அவ்வம்மொழியினராற் சிறப்புடன் போற்றப்படும்; தமிழிலோ எவ்வளவுக்கெவ்வளவு தமிழ் நூல்கள் வடமொழியின் உதவியை நாடாமல் தனித்தியங்கு கின்றனவோ அவ்வளவுக் கவ்வளவு சிறப்புடன் போற்றப்படும். உண்ணாட்டுச் சிற்றூர்களிலும், நாட்டுப்புறங்களிலும் வாழ்ந்துவரும் தாழ்ந்த மக்களிடையே வடமொழிச் சொற்களைப் பேச்சுவழக்கிலும் கையாளாமல் ஒதுக்கும் தூய பழக்கம் காணப்படுகின்றது. ஒரு மொழியின் தொன்மைச் சிறப்புநிலை அம் மொழியிலியலும் செய்யுள்களிலும், தாழ்ந்த குடிமக்களின் பேச்சுகளிலுமிருந்தே ஆராய்ந்து காணப்படும் என்பது ஒரு பொது உண்மையாகும். பிற் காலத்தில் மிகவும் வலிந்து முயன்று எழுதப்பட்ட தமிழ் உரைநடை நூல்களிலும், பார்ப்பனர்கள் பேசும் தமிழிலும், மிகவும் கற்றவர்களாகக் கருதப்படும் தமிழர்களின் பேச்சிலுமே வடமொழி மிகைபடப் பாவி வழங்குகின்றது. அதுவும், சமய உண்மை, அறிவியல், தத்துவம், எனக் கலைகளிலுள்ள மரபுச் சொற்கள் ஆகியவற்றை விளக்குமிடங் களில்மட்டுமே இவ்வாறு வடசொற்கள் பெரும்பான்மையும் கையாளப்படுகின்றன. ஆனால், இவ்வாறு காணப்படும் வட சொற்களின் தொகை, ஆங்கில நூல்களிற் கையாளப்பட்டுக் காணப்படும் இலத்தின் மொழிச் சொற்களின் தொகையை விட மிகுதியானதொன்றன்று.

எடுத்துக்காட்டாக, ஆங்கில விவிலிய நூலிலும், தமிழ் விவிலிய நூலிலும் ”பத்துக் கட்டளைகள்” என்ற பகுதியை ஒப்புமைக்காக எடுத்துக்கொண்டு அவற்றின் சொல் தொகுதிகளை ஆராய்வோம். ஆங்கிலச் சொற்களை ஆராயு மிடத்து நேரிடையான இலத்தீன் சொற்களையும், நார் மன் பிரெஞ்சு மூலமாக வந்த இலத்தீன் சிதைவுகளையும் ஒன்றாகச் சேர்த்து இலத்தீனாகக் கணக்கிடுவோம். அதன் பலன் கீழ்வரும் பட்டிகைப்படி யாகும்.

சொல் வகை ஆங்கிலம் தமிழ்

மொத்தம் இலத்தீன் தூய ஆங்கிலம் மொத்தம் வடமொழி தமிழ்
பெயரும் பெயருரியும் 43 14 29 53 21 32
வினை 20 7 13 34 7 27
எண்ணுப் பெயர் 5 0 5 6 1 5

”ஆயிரம்” என்பது வடமொழிப் பெயர். அதனாலேயே எண்ணுப் பெயரி னெதிரில் வடமொழியின் கீழ் ’1’ என்று காணப்படுகிறது. மொத்தமாகக் கணக்கிட்டால் ஆங்கிலத்தில் வரும் இலத்தீனும், தமிழில் வரும் வடமொழியும் ஒரே படித்தாக நூற்றுக்கு 45 விழுக்காடு ஆகிறது. இரண்டிலும் இடப் பெயர்கள், உரிச்சொற்கள், உருபுகள், இடைச்சொற்கள், இலக்கண உறுப்புக்கள் இவை முற்றிலும் தாய்மொழியைச் சேர்ந்தவையேயாகும்.

ஆங்கிலமொழி தன் வளர்ச்சிமுறையில் தூய ஆங்கிலோ சாக்ஸன் மொழியி லிருந்தும், இலத்தீன் மொழியிலிருந்தும் எவ்வகையில் உதவிபெற்றிருக்கிறது என்பதை ஆங்கில சமயத் தலைவர் ட்ரெஞ்ச்[1] பின்வருமாறு விளக்கிக் கூறியுள்ளார்:-

“இம் மொழியி (ஆங்கிலம்)னுடைய இணைப்புகள், ஒலி முறை, நாடி நரம்புகள், தசை நார்கள், இடச்சொற்கள், உருபுகள், இடைச்சொற்கள், எண்ணுப் பெயர்கள், துணை வினைகள், யாப்பு முறைக்குப் பயன்படும் சிறுசிறு அசைச் சொற்கள், இலக்கண முறையமைப்பு ஆகியவை எல்லாம் தனிப்பட்ட ஆங்கிலோ சாக்ஸனே. இத் தெய்விகக் கட்டிடத்திற்கு இலத்தீன் மொழி உதவியவை செங்கற்களும், நன்கு செதுக்கிக் கடைச லிடப்பட்ட சலவைக் கற்களுமே யாம்; ஆனால் இவை யெல்லாவற்றையும் பதித்துப் பிணைத்துக் கட்டிடமாக எழுப்புவிக்க உதவிய நீறு, சுண்ணாம்பு, சாந்து எல்லாம் தூய ஆங்கிலோ சாக்ஸனே’’

இக்கூற்று அப்படியே திராவிடத்திற்கும் வடமொழிக்கும் பொருந்துவதாகும்; மேற் பகுதியில் “ஆங்கிலோ சாக்ஸன்” என்று வருமிடங்களி லெல்லாம், “திராவிடம்” என்பதையும், ”இலத்தீன்” என்று வருமிடங்களிலெல்லாம் ”வடமொழி” என்பதையும் அமைத்துக்கொண்டு படித்தால் திராவிட மொழிக்கும் வடமொழிக்கும் இடையே எத் துணை யுறவு இருக்கிற தென்பது தெள்ளத் தெளிய விளங்கும்.

மேற் “பத்துக் கட்டளைகள்” என்ற தமிழ் விவிலிய நூற்பகுதியில் காணப்படும் வடசொற்றொகையும் ஆங்கில நூற்பகுதியில் காணப்படும் இலத்தீன் சொற்றொகையும் வியக்கத்தக்க வண்ணம் ஒன்றாகக் காணப்படுகின்றதென் பதை அறிந்தோம். அதனால் ஆங்கிலம் இலத்தீனுக்கு எவ்வளவிற்குக் கடன்பட்டுள்ளதோ, அவ்வளவிற்குத் தமிழ் வடமொழிக்குக் கடன்பட்டிருக்கவேண்டும் என்று சொல்வது தவறாகும். ஆங்கிலப் பகுதி தன்மாட்டுள்ள இலத்தீன் சொற்களை நீக்கிவிட முயன்றால், அதன் பொருள் நுட்பங் கெட்டுவிடும். ஆனால், தமிழ்ப் பகுதி தன்மாட்டுள்ள வட சொற்களில் பெரும்பகுதியையோ, அன்றி முழுவதையுமோ நீக்கிவிட்டுத் தக்க தமிழ்ச் சொற்களைப் பெய்துகொண்டால் எவ்வகையிலுங் குறைவுறாது; அவ்வாறு நீக்குவதால் அதன் தூய்மை மாற்றும், செம்மைப் பண்பும் உயர்ந்தொளிருமே யன்றிக் குறைந்து மங்கா. இலத்தீனிலிருந்து பெற்ற சொற்களிற் பலவற்றிற்கு ஆங்கிலோ சாக்ஸனில் நேர்ச் சொற்கள் கிடையா; எனவே, அச் சொற்களை நீக்கிவிடுவ தென்றால் அவற்றின் கருத்துக்களை நீண்ட, அழகற்ற சொற்றொடர் களால்தான் விளக்கவேண்டும். ஆனால் தமிழோ, தனிப்பட்ட வகையில் சொல்வளம் நிறைந்தது. அப்படியிருக்க அஃதேன் வடசொற்களை எடுத்தாண்ட தென்றால், சொல்வள மின்மையானன்று; புதுமை கருதியேயாம் என்று விடுக்க. ”பத்துக் கட்டளைகள்” என்ற விவிலிய நூற்பகுதியை நாட்டுப்புறத் தாழ்ந்த மக்களின் பேச்சு முறையில் அமைத்தால், அதிலுள்ள வடசொற்களின் தொகை மிகவுங் குறைந்து விடும். அதனையே செம்மைப்படுத்தித் திருத்தி இலக்கிய நடையில் அமைப்போமானால், அதில் எஞ்சியுள்ள ஒன் றிரண்டு வடசொற்களும் மாயமாய்ப் போய்விடும். அப்பகுதியிற் காணப்படும் வட சொற்களுள் ஒன்றே ஒன்றிற்குத்தான் குற்றஞ் சொல்லாத வகையில் நேர்த் தமிழ்ச்சொல் அமைக்க முடியாது. அச் சொல் ”விக்கிரகம்”[2] என்பது அச் சொல்லும் அதன் கருத்தும் தமிழ்மக்களின் பழக்க வழக்கங்களுக்கும், கொள்கைகளுக்கும் புறம்பானவை. பார்ப்பனர்களால் புராணக் கருத்துகளோடும், ”விக்கிரக ஆராதனை முறை” என்னும் உருவ வழிபாட்டோடும், இச் சொல்லும் கருத்தும் தமிழ்நாட்டினுட் புகுத்தப் பட்டனவாகும். பார்ப்பனர்களின் சமயத்திற்கு இந் நாட்டில் முதலில் இருந்த செல்வாக்கினாலேயே, சமயக் கருத்துக்களைத் தெரிவிப்பனவாய்த் தமிழ் நூற்களிற் காணப்படும் சொற்களிற் பெரும்பாலன வடசொற்களாகவோ, அச் சொற் சிதைவுகளாகவோ காணப்படுகின்றன. ஏற்ற திராவிடச் சொற்கள் இல்லை என்பதில்லை; முற்றிலும் ஏற்றவையும், ஒரோவழி வடசொற்களினும் சிறந்தனவாகவுங் கொள்ளக் கூடிய சொற்கள் உள. அவை யெல்லாம், இன்று வழக் கிழந்து, மறைந்து, செய்யுள் வழக்கில்மட்டும் அருகி வழங்குகின்றன. தமிழ்க் கல்வி மங்கியுள்ள இந்நாளில், உரை நடையில் அச் சொற்கள் வழங்குமேல் அந் நடை மிகவும் கரடுமுரடான தென்றும், கடபடாம் போன்ற தென்றும் கருதி இகழப்படும். தமிழ்ச் சமய நூல்களில் வடசொற்கள் பொதுவாக எடுத்தாளப்பட் டுள்ளமைக்கு இதுவே, உண்மையான காரணமும், ஒரே காரணமுமாகும்.

ஏனைய திராவிட மொழிகளில் எப்பொருளைக் குறித்தெழுந்த கட்டுரையாயினுஞ் சரி, செய்யுளாயினுஞ் சரி, அதன்கண் மிகுதியான வடசொற்கள் பயின்றிருக்கக் காணலாம். அவை புதுமை கருதி எடுத்தாளப்பட்டனவல்ல; கிட்டத்தட்ட இன்றியமையாதனவாகவே கருதிக் கையாளப் பட்டுள்ளன. இந்த நிலைமை வந்ததற்குக் காரணம் அம் மொழிகளின் இலக்கிய வளர்ச்சி முதன்மையாகப் பார்ப்பனர்கள் கையிலேயே ஒப்படைக்கப்பட்டு வந்துள்ளமையேயாம். தெலுங்கு மொழியை யெடுத்துக்கொண்டால், அம் மொழியில் இலக்கண நூல்கள் எழுதியவர்களுள்ளும், இலக்கியங்கள் எழுதியவர்களுள்ளும் முதன்மையானவர்களும், பெயர் போனவர்களும் பார்ப்பனர்களே. அம் மொழியிற் காணப்படும் நூல்களுள் ஒன்றே ஒன்றுதான் பார்ப்பன ரல்லாதாரான ஆசிரியரொருவரால் இயற்றப்பட்டதாகும். உண்மையாகப் பார்த்தால், தெலுங்குமக்கள் என்று அழைப்பதற்கு எவ்வகையிலும் உரியாரான தெலுங்குப் பார்ப்பன ரல்லாத தொகுதியினர் தங்கள் மொழிவளர்ச்சி, கலைவளர்ச்சி ஆகிய வற்றைப் பார்ப்பனர்களிடமே ஒப்படைத்துவிட்டவர்களாகக் காணப்படுகின்றார்கள்.

தமிழிலோ இப்படி யில்லை. நூல் என்ற பெயருக்குரிய னவாய்ப் போற்றிச் சேமித்துவைக்கவேண்டிய வகையில் பார்ப்பனர்களால் எழுதப்பட்டனவாய்க் காணக்கூடியவை மிகமிகச் சிலவே. தமிழ்மக்களால் அவர்களுடைய தாய் மொழியாகிய தமிழின் வளர்ச்சியும், கலையும், நாகரிகமும் பண்டுதொட்டுக் கண்ணுங் கருத்துமாய் ஆர்வத்துடனும் வெற்றியுடனும் போற்றப்பட்டுவருகின்றன. தமிழ் இலக்கிய ஆசிரிய வரிசையில் பார்ப்பனர்கள் எய்தியதெல்லாம் உரையாசிரியர் என்ற நிலைக்கு மேற்பட்டதில்லை. தாழ்ந்த வகுப்பினராய திருவள்ளுவாரால் எழுதப்பட்ட திருக்குறளுக்குப் பார்ப்பனாரான பரிமேலழகர் என்பார் வகுத்துள்ள உரையே மிகவுஞ் சிறந்ததொன்றாகப் பாராட்டப்படுகிறது.

தென்பகுதியில் பேசப்படும் மொழிகள் வடமொழியைப் பின்பற்றியே அமைக்கப்பட்டபோதிலும், தனிப் பட்ட இலக்கிய வளத்தை ஏற்படுத்திக்கொள்ள அவற்றுட் சில விரும்பி முயன்றன என்றும், தமிழ், தெலுங்கு, கன்ன டம், மலையாளம் ஆகிய மொழிகளிற் காணப்படும் முதன்மை யான இலக்கியங்களெல்லாம் வடமொழி நூல்களின் மொழி பெயர்ப்போ, அன்றி விரிவுரையோ ஆதல்வேண்டும் என்றும், அவ் விரிவுரை யெழுதுவதிலும் வடமொழித் தொடர்கள் எடுத்தாளப்பட்டுள்ளன என்றும் பேராசிரியர் உவில்ஸன்[3] என்பவர் கூறுகிறார். தமிழைப்பற்றிய வரையில் இக் கூற்று ஒப்பத்தக்கதன்று. தமிழில் இரண்டு ஒப்பற்ற சிறந்த நூல்களாக உலகத்தோரால் கருதப்படுவன குறளும், சிந்தாமணியுமாம். இவ் விரண்டும் முற்றிலும் வடமொழித் தொடர்பற்றவை. தமிழாசிரியர்கள் வடமொழி நூலமைப் பையும் நடையையும் பின்பற்றியிருக்கக்கூடும்; தொடருக்குத் தொடர் மொழிபெயர்த்துள்ளனர் என்பதை ஒப்புக் கொள்ள முடியாது. தமிழ் இராமாயணம், மாபாரதம் போன்ற காவியங்கள் இவ்வாறு எழுந்தனவேயாம். தமிழர் தங்கள் கம்பராமாயணம் முதனூலாகிய வால்மீகி இராமாயணத்தினும் மிகவுஞ் சிறந்தது என்று உரிமை பாராட்டுவதே இதற்குச் சான்றாகும்.

(5) மொழிகளுள் ஒன்றற்கொன்றனிடையே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளை விளக்கப் பெரிதும் பயன்படும் முறைகளுள் மிகவும் முடிவானது அம் மொழிகளின் இலக்கண அமைப்பை ஒப்பிட்டுச் சீர்தூக்கிப் பார்ப்பதே யாம். அம் முறைப்படி திராவிட மொழிகள் வடமொழி யினும் வேறானவை யென்றும், திராவிட மொழிகளை இந்து-ஐரோப்பிய மொழியினத்தோடு இணைப்பதைவிட, சித்திய மொழியினத்தோடு இணைப்பதே சால்புடைத்தாகும் என்றும் துணிந்து கூறலாம்.

  1. Archbishop Trench
  2. Image
  3. Professor Wilson