கால்டுவெல் ஒப்பிலக்கணம்/015-033
௫. இலக்கண அமைப்பில் வடமொழிக்கும் திராவிட மொழிகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள்
(i) திராவிட மொழிகளில் உயிரற்ற பொருள்கள் மட்டு மன்றி, பகுத்தறிவற்ற உயிர்களும் பொதுப்பால் (அஃறிணை) ஆகவே மதிக்கப்படுகின்றன. ஆண்பால், பெண்பால் வகுப்பு, இடப் பெயர்களுள், அதிலும் படர்க்கையில்மட்டுமே, காணப்படுகிறது. பெயருரிச்சொற்களிலும், படர்க்கை வினைகளிலும் இப் படர்க்கைப் பெயரின் திரிபே விகுதியாய் நின்று பால் உணர்த்துகின்றது. உயிர்வகைகளின் பெயர்கள் பால்வகை காட்டவேண்டின் ஆண் பெண் என்ற பெயர்களைச் சேர்த்தே யாகவேண்டும்; அப்போதும் அவை ஆண் அல்லது பெண் பாலாவதில்லை; பொதுப்பாலேயாகும். ஏனெனில், அவற்றைக் குறிக்கும் இடப்பெயர்களும், அவற்றின் பயனிலையான வினைகளும் பொதுப்பால் (அஃறிணை) முடிவையே கொள்ளல்வேண்டும். இத்தகைய பால்வகுப்பு வடமொழி முதலிய இந்து - ஐரோப்பிய மொழிகளின் பகட்டான புனைவியல் பால்பாகுபாட்டினின்றும் முற்றிலும் மாறுபட்டது. ஆனால் சித்தியக் குழுவின் வழக்குக்கு இஃது ஒத்தது.
(ii) திராவிட மொழிகளில் பெயர்ச் சொற்கள் வேற்றுமை ஏற்கும்போது விகுதியேற்று உருமாறுவ தில்லை; அச் சொற்களினின்று எளிதில் பிரிக்கக்கூடிய பின் அடைகள் அல்லது உருபுகளையே ஏற்று மாறுகின்றன. மேலும் பன்மைப் பெயரின் வேற்றுமை யுருவானது உருபுகளை ஏற்கு முன் பன்மை விகுதி பெறுவதொன்றைத் தவிர மற்றெவ் வகையிலும் ஒருமை வேற்றுமை யுருவிலிருந்து மாறுபடுவதில்லை; சித்திய மொழிகளும் இவ்வாறே.[1]
(iii) திராவிட மொழிகளின் அஃறிணைப் பெயர்களுக்குப் பன்மை பெரும்பாலும் வழங்குவதில்லை; வினைச் சொல்லில் இஃது இன்னும் அருமை.
(iv) திராவிட மொழியின் நான்காம் வேற்றுமை யுருபாகிய கு-கி-அல்லது கெ வடமொழி அல்லது இந்து - ஐரோப்பிய (ஆரிய) மொழிகளிலுள்ள எந்த வேற்றுமை விகுதியுடனும் ஒத்ததாக இல்லை. ஆனால் அதே சமயத்தில் அது கீழைத் துருக்கியுடனும்[2], பெஹிஸ்தன்[3] பட்டயங்களுடனும் பின்னிஷ் மொழியினங்களுடனும் தொடர் புடையதாயிருக்கின்றது.
(v) இந்து-ஐரோப்பிய மொழிகளில் முன் னுருபுகள்[4] அல்லது ஒட்டுக்கள் (பிரத்தியயம்) பயன்படுத்தப்படும் இடங்களில் எல்லாம் திராவிட மொழிகளும், சித்தியக் குழு மொழிகளும் பின்னுருபுகளை அல்லது ஒட்டுக்களைப் பயன்படுத்துகின்றன. இவ் உருபுகளும், ஒட்டுக்களும் இலக்கண முறைப்படி தனிச்சொல்வகைகள் அல்ல, பெயர்ச்சொல் திரிபுகளேயாம். இவ்வாறே அவற்றின் வினை உரிச்சொற்களும் பெயர் அல்லது தொழிற் பெயர் அல்லது வினை யெச்சங்களே யாகும். அவை எப்போதும் தாம் தழுவும் வினைகளுக்கு முந்தியே வருகின்றன.
(vi) வடமொழியிலும், இந்து-ஐரோப்பிய மொழிகளிலும் பெயருரிச் சொற்கள் பெயர்ச் சொற்களைப் போலவே பால், எண், இடம் ஏற்கின்றன. திராவிட மொழிகளிலும், சித்திய மொழிகளிலும் அவை பால் முதலியவை ஏற்ப தில்லை. இப் பெயருரிச் சொற்கள் உண்மையில் பண்புப் பெயர்களி லிருந்து வந்தவையே யாகும். பண்புப் பெயர் என்று தனிப்பட நிற்கும்போது, அவை பிற பெயர்கள் போலவே திணை பால் முதலியவை ஏற்பினும், பிற பெயர்க ளுடன் ஒட்டப்பெற்று உரிச்சொல்லாகப் பயன்படும்போது அங்ஙனம் எற்பதில்லை.
(vii) இன்னெரு வகையில் திராவிட மொழிகள் மங்கோலியம், மஞ்சு முதலான சித்திய மொழிகளுடன் ஒத்தும் இந்து - ஐரோப்பிய மொழியினத்துடன் மாறுபட்டும் உள்ளன. அஃதாவது, இயலும்போ தெல்லாம் இம் மொழிகள் பெயருரிச் சொல்லை வழங்காமல், வினைச்சொல்லின் பெயரெச்ச உருபையே வழங்குகின்றன. (உயர் மரம் - என்பதற்கு உயர்ந்த மரம் என்பதுபோல என்க.) இவ்வழக்கத்தின் பயனாய்ப் பண்புப் பெயர்களைப் பெயருளியாக வழங்கும்போது கூட, அதனுடன் பெயருரிச்சொல் விகுதியாக ’ஆன’ என்ற பெயரெச்சம் சேர்த்துக்கொள்ளப்படு கிறது. [சிவப்பான.]
(viii) தன்மைப் பன்மையில் முன்னிலையை உட்படுத்தியும் உட்படுத்தாமலும் இரண்டு வகைகள் திராவிட மொழிக்கும்,சித்திய மொழிகளுக்குமே சிறப்பாக இருக்கின்றன. வட மொழியிலும், இந்து - ஐரோப்பிய மொழியிலும் இங்ஙனம் இல்லை. இதனை யொப்பதாய் ஒருவாறு குறிக்கக்கூடியது பிற்குறித்த மொழிகளிலுள்ள இருமை[5] என்ற எண்ணேயாகும்.
(ix) திராவிட மொழிகளில் செயப்பாட்டு வினைக்குத் தனி வடிவம் கிடையாது. படு என்னும் துணைவினை சேர்க்கப்பட்டே அப் பொருளில் வழங்கப்பெறுகிறது. (x) திராவிட மொழிகளும், சித்திய மொழிகளும் இந்து-ஐரோப்பிய மொழிகளைப் போல இணைப்பு இடைச்சொற்களைப்[6] பயன்படுத்தாமல் "செய்து" என்ற வினையெச்சத்தையே வழங்குகின்றன.
(xi) உடன்பாடு, எதிர்மறை என்ற இவ் விாண்டு வினைவடிவங்க ளிருப்பது திராவிட மொழிகட்கும், வடமொழிக்கும் இடையே காணப்படும் தலையாய வேற்றுமைகளுள் ஒன்று. சித்திய மொழிகளுடன் திராவிட மொழிகளுக்கு உள்ள ஒப்புமைகளில் இது தலைமையானதாகக் காண்கிறது.
(xii) திராவிட மொழிகள், மங்கோலியம் மஞ்சு, முதலியவை, ஓரளவுக்குப் பிற சித்திய மொழிகள் ஆகிய இவற்றின் தனிப்பட்ட சிறப்புப் பண்புகளுள் ஒன்று இணைப்பு இடப்பெயர்களினிடமாகப் பெயரெச்சங்கள்[7] வழங்குவதாம். இப் பெயரெச்சம் முக்காலங்களிலும் உள்ள வினையெச்சத் துடன் ஆறாம் வேற்றுமை உருபோடொத்த அ-என்னும் சாரியை பெற்று வந்தது ஆகும். திராவிட மொழிகள் எதனிலும் இணைப்பு இடப்பெயர் என்பதன் நிழல்கூடக் காணப்படவில்லை. கோண்டு மொழியில் மட்டும் வினையெச் சங்கள் இல்லாமல், ஒழிந்துபோனதை ஒட்டி, ஹிங்கி மொழியின் இணைப்பு இடப்பெயர் கையாளப்பட்டு வருகிறது.
(xiii) திராவிட மொழிகளிலும், சித்திய மொழிகளிலும் தழுவு மொழிகளும், தழுவு தொடர்களும் தழுவப்படும் மொழிக்குப் பின்னதாகவே வருகின்றன. இந்து - ஐரோப்பிய மொழி இனத்தில் அவை பொதுவாக முன்வருகின்றன. எனவே, இம் மொழிகள் அனைத்திலும் வாக்கியத்தின் முதலில் எழுவாயும், முடிவில் பயனிலையும், எழுவாய் அடை[8] எழுவாய்க்கு முன்னும், இடையில் செயப்படுபொருளும் வினை அடைகளும் ஆகவருகின்றன; பெயரடைகளும் பெய ரெச்சங்களும் பெயரின் ஆறாம் வேற்றுமையும் பெயருக்கு முன்னும், இட உருபுகளும் கால உருபுகளும் பெயருக்கு முன் அன்றிக் தாம் தழுவும் பெயர்களுக்கும் அவற்றின் வேற்றுமை உருபுகளுக்கும் பின்னாகவும் வருகின்றன. வினை யெச்சங்களும் வினை அடைகள் போல வினைக்கு முன்னாகின்றன. எல்லாவற்றையும் தழுவும் வினைமுற்று இறுதியிலேயே நிற்கிறது. இவ்வாறு சொல்லமைப்பு, சொற்றொடரமைப்பு முறையிலும் சித்திய மொழிகள் திராவிட மொழிகளை ஒத்தே இருக்கின்றன.
மேற்கூறிய இலக்கண அமைதிகளிலெல்லாம் திராவிட மொழிகள் பொதுவாக இந்து - ஐரோப்பிய மொழிகளினின்றும் வேறுபட்டே இருப்பதும், நெடுநாள் கலந்து வாழ்ந்துங்கூட வடமொழியினின்றும் இன்னும் வேறுபட்டேயிருப்பதும் காண்க. அதே சமயத்தில், எங்கெங்கோ நடு ஆசியாவிலும், வட ஆசியாவிலும் சிதறிக் கிடக்கும் சித்திய மொழிகளுடன் அவை பொருந்தி இருப்பது கவனிக்கத் தக்கது.
திராவிட மொழிகள் வேறு, வடமொழி வேறு என்பது மேற்கூறியவற்றால் நன்கு தெரியப்படும். திராவிட மொழிகள் வடமொழியி லிருந்து பெறப்பட்டன அல்ல; அன்றி அதனுடன் சேர்க்கப்படக்கூடிய பண்புடையனவு மல்ல.
சில குறிப்பிட்ட இடங்களில் வடமொழி பிற இந்து-ஐரோப்பிய மொழிகளைவிடச் சித்திய மொழிக் குழுவுடன் உறவுடையதாய்த் தோற்றுவது ஒரு வேளைப் பழங்குடிகளுடன் உள்ள நெடுநாட் பழக்கத்தைப் பொறுத்ததா யிருக்கலாம். இவற்றுள் ஒன்று, வடமொழியில் (ட ண ஷ) என்ற நாஅடி அண்ண மெய்கள் இருப்பனவாகும். இவ் வகை யில், ”மொழி யியலில் சீனத்தின் இடம்”[9] என்ற நூலில் எட்கின்ஸ் என்பார் கொண்ட புதிய கொள்கையைக் குறிப்பிடல் வேண்டும். உருபின்றி விகுதியிலேயே பெயர்களின் வேற்றுமை அமைதல், சொல் லொழுங்கு, தழுவு வாக்கியங்கள் தலைவாக்கியத்திற்கு முன்வரல், வினைமுற்று இறுதியில் நிற்றல் ஆகிய இலக்கண அமைப்புக்களுள் வடமொழி ஆரிய இனத்தைவிடத் துரானிய இனத்தையே பின்பற்றி யுள்ளது என அவர் கூறுகிறார். ஆனால் வடமொழியை விட இவ்வகையில் இன்றைய வட இந்திய உண்ணாட்டு மொழிகளே விலக்கின்றி முற்றிலும் இவ்வொழுங்கைப் பின் பற்றுகின்றன. வடமொழி உரைநடையில்கூட ஒன்றிரண்டிடங்களில் இவ் வொழுங்குக்கு மாறுபாடு ஏற்படுகிறதென்பதை எட்கின்ஸே எடுத்துக்காட்டுகிறார். ஆயினும் பொதுப்பட உரைநடையில் இவ் வொழுங்குப்படி வினைமுற்றே ஈற்றிலும், தழுவு வாக்கியங்கள் முன்னும் வருகின்றன. ஆனால் இக் கொள்கை நாம் ஏற்றுக்கொள்ளத்தக்க உறுதிப்பாடு உடையதன்று; ஏனெனில் சொல் ஒழுங்கு ஒன்றையேபற்றி வகைப்படுத்துவதாயின் கிரேக்க மொழியைவிட இலத்தீனும், ஆங்கிலத்தைவிட ஜெர்மனும் துரானியச் சார்புடையவை என்று கூறவேண்டி வரும்.
- ↑ வடமொழியிலும், இந்து-ஐரோப்பிய மொழிகளிலும் ஒருமைக்கும், பன்மைக்கும் ஒவ்வொரு வேற்றுமையிலும் வெவ்வேறு விகுதிகள் உள
- ↑ Oriental Turkish
- ↑ Behistun Tablets
- ↑ Preposition
- ↑ ஒருமை பன்மை என்பதின்றி ஒருமை, இருமை, பன்மை என்று எண் மூன்று வழங்கும்
- ↑ Conjunctions
- ↑ Relative Pronouns
- ↑ Adjuncts
- ↑ ”China's Place in Philology"—Mr. Edkins