கால்டுவெல் ஒப்பிலக்கணம்/016-033

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

சு. திராவிடமும் வட இந்திய மொழிகளும்

திராவிட மொழிகள் வடமொழியி லிருந்து பெறப்பட்டவையே, அவற்றுள் வடமொழிச் சார்பற்றனவாகக் காணக் கிடக்கும் சொற்கள் யாதோ ஒரு பண்டைப் பாகத மொழியிலிருந்து பெறப்பட்டவை என்று கொண்டிருந்த கொள்கைகள் இரண்டும் பிழைபட்டன வென்று காட்டப்பட்டது. எனவே, அறிஞர் சிலர் இவற்றிற்கு நேர்மாறான கொள்கை யொன்றைக் கூற முன்வந்தனர். வடமொழியி லிருந்து கிளைத்த வட இந்திய மொழிகளுள் காணப்பெறும் பிற மொழிக் கலப்புத் திராவிட மொழிகளின் கூட்டுறவால் ஏற்பட்டதுதான் என்பது இப் புதுக் கொள்கை. இக் கொள்கையைப் பரப்பியவர்களில் தலையானோர் பம்பாயைச் சார்ந்த ரெவரெண்ட் டாக்டர் ஸ்டீவென்சன்[1] என்பவரும், நேபாளத்தைச் சார்ந்த ஹாட்ஜ்ஸன்[2] என்பவருமே. இவர்கள் கருத்து: (1) வட இந்திய மொழிகள் இயற்கைத் தாக்கு தல்களாலும், கால மாறுபாட்டாலும் வடமொழியி லிருந்து கிளைத்தவையல்ல; ஆனால் வடமொழி யல்லாத பிற மொழிகளின் ஆற்றல் மிக்க கலப்பினால் சிதைவுற்றனவேயாம். (2) இப் பிறமொழிகள் திராவிடப் பேச்சுடன் ஒப்புமை யுடையன; இத் திராவிடப் பேச்சே, பண்டை நிஷாதர்கள் பேச்சும், பிற பழங்காலக் குடிகளின் பேச்சுமாகும் என்பதே.

இவ்விரு பகுதிகளுள் முன்னையது பின்னேயதைவிட உறுதிப்பாடுடையதாகும்; ஆனால் அதுவும் ஒருவாறு மிகைபடக் கூறப்பட்டதென்றும், அதனைத் திருத்தியமைக்க வேண்டும் என்றும் தோன்றுகின்றது. ஏனெனிற் கூறுதும்: முதன்மையான சிலவற்றை நோக்க வடமொழி ஹிந்தியாகவும், வங்காளமாகவுந் திரிபுற்றது இயற்கை மாறுதலே என்று நிறுவப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் இலத்தீனி லிருந்து எப்படி இத்தாலியமும், ஸ்பானிஷூ-ம் கிளைத் தனவோ, அப்படியேதான் இவையும். ஆனால், வடமொழி இலக்கண அமைப்போடும் பண்புச் சிறப்புக்களோடும், வட இந்திய மொழிகளின் இலக்கண அமைப்பையும் பண்புச் சிறப்புக்களையும் ஒப்பிட்டு நோக்கினால், அவற்றிடையே காணப்படும் வேற்றுமைகள் ஆரியச் சார்பற்ற தாக்குதல்களின் பயனே என்று ஒருவாறு தெளியலாம்.

அதிலும், பல்வேறுபட்ட வட இந்திய மொழிகளு ளெல்லாம் ஒரேபடித்தான இலக்கண வேற்றுமைகள் காணப் படுகின்றமை கொண்டு, இதற்குக் காரணம் பொதுப்பட்ட ஒரு தாக்குதலாகவே இருக்கவேண்டும் என்பது எளிதில் ஊகிக்கப்படும். ”நாகரிக காலத்திற்கு முற்பட்ட பழங் காலச் சுவடுகளாகிய பண்டைய, செம்மைப்படாத முரட்டு மொழிச்சொற்களே” இதற்குக் காரணம் என்று பேராசிரியர் உவில்ஸன் கூறுகிறார். பொதுவாகவே, வட இந்திய மொழிகளுள் இத்தகைய தாக்குதல் பத்தில் ஒருபங்கும், மராத்தி மொழியில் மட்டும் ஐந்தில் ஒருபங்குந்தான் என்று கணக்கிடப்பட் டுள்ளமையால், ஆரியச் சார்பற்ற கலப்பே காரணம் என்பது நன்கு தெளியப்படும்.

வடமொழி பேசிய பார்ப்பனர்கள், ஷத்திரியர்கள், வைசியர்கள் என்ற வகுப்பினர்க ளடங்கிய ஆரியர்களது வருகைக்கு முன்னே, வட இந்தியாவின் பெரும் பகுதியில் "தஸ்யூக்கள், நிஷாதர், மிலேச்சர்” என்று அவர்களால் அழைக்கப்பட்டு வந்த பழங்குடி மக்களே வாழ்ந்துவந்திருந் தனர் என்பதும், அம்மக்கள் சித்திய இனத்தையோ, அன்றி ஆரியச் சார்பற்ற வேறோர் இனத்தையோ சேர்ந்தவர்கள் என்பதும் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மைகளாகும். இப் பழங்குடிமக்கள் பேசிய திருந்தாத சித்திய மொழிச் சொற்கள், படையெடுத்துவந்து வெற்றிபெற்ற ஆரியர்கள் தம் சொல்வளமும், பொருண்மையும் நிறைந்த வடமொழி வெள்ளத்தில் ஆழ்ந்துபோய்விடுதல் இயல்பே. எனினும், அப் பழங்குடி மக்களின் மொழி ஒரேயடியாய் அழிந்தொழியாமல், தன்னை விழுங்கவந்த வடமொழி யையே உரங்கொண்டு தாக்கிக் கலக்கித் தன்னுடைய சொற்களிற் சிலவற்றைப் புகுத்திப் புதியதொரு மதுகையையும் நடைப் போக்கையும் அது மேற்கொள்ளச் செய்திருக்கவேண்டு மென்பது பின்வருங் காரணங்களால் ஊகிக்கப்படும்: (1) சித்திய மொழியின் இலக்கண அமைப்பு நிலையானதும், எதிர்ப்புக்கு ஈடுகொடுக்கும் ஆற்றலும் வாய்ந்தது. (2) ஆரியர்களை நோக்க அப் பழங்குடிகள் தொகையில் மிகுந்தவர்களா யிருந்தனர். (3) அதனால், அவர்களை ஆரியரால் அறவே அழித்தொழிக்க முடியவில்லை. (4) முதற்கண் அடிமைக ளாக்கப்பட்டு நாளாவட்டத்தில் ஆரியக் கூட்டத்தினருடனே சேர்க்கப்பட்டனர்.

இக் கொள்கை மற்றெக் கொள்கைகளையும் விட இன்றைய நிலைமையைத் தெளிவுபட விளக்குகிறது. வட இந்திய மொழிகளுள் சொல்தொகுதியில்மட்டுமே வட மொழிச் சார்பு மிகுதியாயிருப்பதும், இலக்கண அமைப்பு சித்திய மொழிச் சார்புடையதா யிருப்பதும் நோக்க, அம் மொழிகள் சித்தியப் பகுதியுடன் கலந்த ஆரிய அடிப்படை யுடையவை என்பதைவிட, ஆரியத்துடன் கலந்த சித்திய அடிப்படையை உடைய மொழிகள் என்று கூறுவதே மிகவும் பொருத்தமுடையதாகும். இம் மொழிகளுள் “தாத்தாரிய அல்லது சால்டிய” [3] (அதாவது சித்திய)க் கலப்பு உள்ளது என முதன்முதல் கூறியவர் சர். உவில்லியம் ஜோன்ஸ்[4] ஆவர். இதனை மறுப்பவருள் தலையானவர் ஹிந்தி மொழியைப் பற்றி, 1872 - ஏப்ரில் இண்டியன் ஆண்டிக்குவரி[5] என்ற வெளியீட்டில் கட்டுரை ஒன்றெழுதிய கிரெளஸ் பி. ஸி. எஸ்.[6] ஆவர். அவர் ஹிந்திமொழி ஒன்றை மட்டும் ஆராய்ந்துள்ளார்; அதிலும் இலக்கண அமைப்பை விட்டுச் சொல் தொகுதி ஒன்றை மட்டுமே ஆராய்ந்துள்ளார். ஆகையால் இன்னும் இத்துறையில் நுணுகி ஆராய்ந்து முடிபு காணும் வரையில், சித்திய அடிப்படை முடிபே நிலவி வரும்.

இனி, டாக்டர் ஸ்டீவென்ஸன் கொள்கையின் பின்னைய பகுதியை நோக்குவோம். வட இந்திய மொழிகளில் வட மொழி யல்லாத பிற மொழிக் கலப்பு இருக்கிறதென்பது ஒப்புக்கொள்ளப்படின், அப் பிறமொழி திராவிட மொழி யினத்தைச் சேர்ந்ததே என்பது அப் பகுதியாகும். இக் கொள்கை அவ்வளவு திட்டமாக ஆராய்ந்து நிறுவப்படுவ தொன்றன்று. இக் கொள்கைப்படி (1) இந்தியாவிலுள்ள மொழிகள் (வட இந்திய மொழிகளாயினுஞ் சரி, தென்னிந்திய மொழிகளாயினுஞ் சரி) எல்லாவற்றுள்ளும், சித்திய மொழிக் கலப்போ, திராவிட மொழிக் கலப்போ பெரும் பாலும் ஒரே படித்தானது. (2) ஆரியரால் முதலில் கைப்பற்றப் பெற்ற வட இந்தியக் கோட்டங்களுள் அக் கலப்பின் அளவு மிகவுங் குறுகியது. (3) சற்றுச் சேய்மையிலுள்ள தக்காணம், தெலிங்காணம், மைசூர் ஆகிய இடங்களில் அக் கலப்பின் அளவு சற்றுப் பெருகியது. (4) நில முக்கின் தென்கோடியில் இருப்பதும், மனுவின் காலத்திலும், இராமாயண காலத்திலும் பார்ப்பன ஆதிக்கம் கார்த் திகைப் பிறைபோல் இருந்துவரப்பெற்றதுமாகிய தமிழ் நாட்டிலோ அது மிகப் பரந்து பெருகியிருந்தது.

முகற்கண், இம்முடிபு பண்டைய இந்திய வரலாற்றின் போக்கோடு ஒத்ததாகவே காணப்படும். எனினும், மொழி யாராய்ச்சிக் கண்ணாடிகொண்டு பார்க்கின் வட இந்தியப் பழங்குடி மக்களும், தென்னிந்தியப் பழங்குடி மக்களும் ஒரே இனத்தார் என்று சொல்லிவிடுவதற்கில்லை. வட இந்திய மொழிகளின் இலக்கண அமைப்பு சித்திய மொழிகளோடு ஒத்திருப்பதானாலும், திராவிட மொழிகளுடன் சிறப்பாக ஒத்திருப்பதாகக் காணப்படவில்லை. வட இந்திய மொழிகளுள் காணப் பெறும் வடமொழிச் சார்பற்ற பகுதி திராவிட மொழிகளோடு எவ்வளவு தொடர்புடையதாகக் காணப்படுகிறதோ, அவ்வளவிற்குக் கீழைத் துருக்கிய மொழிகளுடனோ, அன்றிச் சித்திய மொழிகளுடனோடு தொடர் புடையதாகவுங் காணப்படுகிறது. ஆதலால் மேற்கொள்கை எளிதில் ஒப்புக்கொள்ளக் கூடியதொன்றாக இல்லை.

வட இந்திய மொழிகளின் இலக்கண அமைப்பிற்கும், திராவிட மொழிகளின் இலக்கண அமைப்பிற்கும் உள்ள தலைமையான ஒப்புமைகள் கீழ்வருபவையாம்:–

(1) பெயர்ச்சொற்களின்பின் உருபுகள் சேர்ந்து வேற்றுமைகள் உண்டாதல். (2) பன்மைப் பெயர்களின் வேற்றுமை ஒருமையினின்றும் வேறுபடாமல் பன்மை விகுதியை முதலில் சேர்த்துப் பின் வேற்றுமை உருபுகளைச் சேர்ப்பதனால் உண்டாதல். (3) வட இந்திய மொழிகள் பலவற்றுள் திராவிட மொழிகளைப் போலவே தன்மைப் பன்மையில் முன்னிலையை உளப்படுத்தி ஒன்றும், விலக்கி ஒன்றுமாக இரண்டு வடிவங்கள் இருத்தல். (4) உருபுகளும், ஒட்டுக்களும் பெயருக்குமுன் வராமல் பின்வருதல். (5) வினைச் சொல்லின் காலத்தை இடைநிலை முதலிய உறுப்புகள் காட்டல். (6) தழுவு வாக்கியங்கள் தலைமை வாக்கியத்தின் முன் வருதல். (7) தழுவும் மொழி தழுவப்படும் மொழிக்குப் பின் வருதல்.

வட இந்திய மொழிகள் திராவிட மொழிகள் ஆகியவற்றின் இலக்கண அமைப்பில் இத்தகைய ஒப்புமைகள் காணப்படுகின்றன என்பது உண்மையே. ஆனால் இவற்றால் இவ்விரண்டு மொழியினங்களுக்கும் நேரான உறவு உள தெனக் கூறிவிடுதற்கில்லை. ஏனெனில், இவ் வொப்புமைகள் திராவிடமொழிகளோடுமட்டும் சிறப்பாகக் காணப்படும் ஒற்றுமைக ளாகாமல், சித்திய இனத்தைச் சேர்ந்த மொழியினங்கள் பலவற்றோடும், ஒரே வகையில், ஒரே அளவில் காணப்படும் பொதுப்படையான ஒப்புமைக ளாகின்றன. துருக்கிய மங்கோலிய மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையே காணப்படும் வேற்றுமைகளில் யாதொன்றும், வட இந்திய மொழிகளிற் காணப்படவில்லை. எடுத்துக் காட்டாக, சித்திய மொழியினங்களிலில்லாத பெயரெச்சத்தை எடுத்துக்கொள்வோம். இது கோண்டு ஒன்று நீங்கலாக ஏனைய திராவிட மொழிகள் எல்லாவற்றிலும் உள்ளது; ஆனால் வட இந்திய மொழிகள் ஒன்றிலும் இல்லை.

அதைப் போன்றே, திராவிட மொழிகளில் எல்லா வினைத்திரிபுகளுக்கும் ஒழுங்காக எதிர்மறைவினை இருக்கின்றது. அவற்றுள் எதுவும் வடஇந்திய மொழிகளில் இல்லை. திராவிட மொழிகளிற் காணப்படும் இடப்பெயர் எண்ணுப் பெயர்கள் முதலியவற்றுள் ஒன்றுதானும் அவற்றுள் இல்லை. ஆனால், இந்தியாவுக்கு அப்பால் பெஹிஸ்தன் பட்டயங்களிலும், சீன மொழியிலும், ஒஸ்தியக்கு[7] மொழியிலும், லாப்பர்[8] மொழியிலுங்கூட இவற்றுட் சில காணப்படுகின்றன. மேலும், இம் மொழிகளில் திராவிடத் தாக்கு எதேனும் இருந்திருக்கக் கூடுமாயின், கை, கால், கண், காது (செவி) போன்ற முதன்மையான சில சொற்களேனும், அவற்றின் சிதைவுகளேனும் இவற்றுள் எம் மொழியிலாயினும் காணப்படாமலிருக்க இடமில்லை. உண்மையில் அத்தகைய எச் சொல்லும் இவற்றுள் யாண்டுங் காணப்பட வில்லை. பேராசிரியர் ஸ்டீவென்ஸன் கண்ட சில ஒப்புமைகள் அருவழக்காய் எங்கோ மூலையிலிருந் தெடுக்கப்பட்ட சொற்கள் ஆகும். வேறு முதற்சொற்களும், இலக்கண அமைதி ஒப்புமைகளும் இல்லாவிடத்து அச் சிறுபான்மையான ஒப்புமைகளைக் கொண்டு ஒரு முடிவுக்கு வரமுடியாது. ஆகவே, முதன்மையான வேர்ச் சொற்களைப் பொறுத்த வரையில் திராவிட மொழிகளுக்கும், வட இந்திய மொழி களுக்குமிடையே எத்துணை வேறுபாடு! ஆனால் திராவிட மொழிகள் எல்லாவற்றுள்ளும் எத்துணை ஒற்றுமை! வியக்கத்தக்க இவ் வுண்மைகளைக் கீழ்வரும் அட்டவணையிற் காணலாம்: தன்மை முன்னிலை யொருமைப் பெயர், இடப் பெயர்களுள் எழுவாயில் ஒர் உருவும், பிற வேற்றுமைகளில் வேறு உருவும், வினைவிகுதிகளில் மற்றோருருவுமாக மாறி வருவதுடன், ஒரே இடத்திலும் உருக்கள் பண்டைக் காலத்தில் ஒருவகையாகவும், பிற்காலத்தில் வேறாகவும் இருக்கின்றமையால் வேண்டிய இடங்களில் அவை யாவும் ஒப்புமைக்காகத் தரப்படுகின்றன.

(பின்வரும் அட்டவனைகளில் எளிதில் ஒப்பிட்டறிதற்காக வடமொழி இடப்பெயர்களும், துருக்கிய இடப்பெயர்களும் பிறைக்குறிகளிட்டு முதலிற் கொடுக்கப்பெற்றுள்ளன.)

  1. Rev. Dr. Stevenson of Bombay—Journal of the Asiatic Society of Bombay
  2. Mr. Hodgson of Nepal-Journal of the Asiatic Society of Bengal; also “Aborigines of India.”
  3. "Tuture an or Chaldee"
  4. Sir. W. Jones (Asiatic Researches Vol. |.)
  5. Indian Antiquary (April 1872).
  6. Mr. Growse B. C. S.
  7. Ostiak
  8. Language of the Lapps