கால்டுவெல் ஒப்பிலக்கணம்/020-033
அ. திராவிட மூலமோழியின் இயல்பை உள்ளவாறறிவிக்கும் மொழி எது?
திராவிட மொழிகளின் இலக்கண அமைப்புக்களை ஒப்புமைப்படுத்துமுன் திராவிட மூலமொழியின் அமைப்பை எங்ஙனம் அறியலாகும், அதற்குத் துணைசெய்யும் மொழி யாது என்பவற்றை ஆராய்தல் நலம். சிலர் செந்தமிழ் என்று கூறப்படும் இலக்கியத் தமிழே பண்டைக் திராவிட மூல மொழியின் சிறந்த வகைக்குறிமொழி எனக்கருதுகின்றனர். (செந்தமிழின் மதிப்பை ஈண்டு ஒரு சிறிதும் குறைவுபடுத்தக் கருதவில்லை.) எந்த ஒரு தனிப்பட்ட மொழியையும் திராவிட மொழிகளின் தொன்மையை விளக்குங் கண்ணாடியாகக் கொள்வதற்கில்லை என்றுமட்டும் துணிந்து கூறலாம். இன்றுள்ள மொழிகள் அனைத்தையும் ஒப்புமைப் படுத்துவதனலேயே நாம் கிட்டத்தட்ட அப்பண்டையமொழியின் நிலையை ஒருவாறு அறியமுடியும். இவ்வகையில் செந்தமிழ் மட்டுமன்று ; கொடுங் தமிழும், பிறமொழிகளில் மிகக் திருந்தா முரட்டு மொழியுங்கூடப் பயன்தருவனவேயாகும். இதில் பங்குகொள்ளாத மொழி இல்லை என்றே சொல்லலாம். தமிழ்த் தன்மை முன்னிலைப் பெயர்களைப் பழங்கன்னட வடிவங்களின்றி அறியமுடியாது. திராவிடத்தின் படர்க்கை ஆண்பால் பெண்பால் விகுதிகளின் அமைப்பை நன்குவிளக்க உதவும் மொழி, ஒருசில ஆண்டுகளுக்கு முன்புவரை வரிவடிவே இல்லாமலிருந்துவந்த காட்டுமொழியாகிய கந்தம் அல்லது கு மொழியே என்பது உண்மை. இங்ஙனமாயினும் மூல திராவிடத்தின் நிலைமையை உணர்த்தும்வகையில் பிறமொழிகள் அனைத்தையும் விடத் தமிழே, அதிலும் சிறப் பாகச் செந்தமிழே, மிகவும் பயன் தருவதென்பதை ஒப்புக் கொள்ளல் வேண்டும். இதற்குக் காரணம் திராவிட மொழிகள் அனைத்தினுள்ளும் முன்னதாகத் திருத்தமுற்ற மொழி தமிழ் என்பதேயாம்.
(1) திராவிட மொழிகளின் இலக்கிய நடைமொழி எவ்வளவுக்கு அவ்வம் மொழிகளின் பண்டைய உருவங்கள் எனத் தகும் ?
ஒரு மொழி இலக்கிய மொழியாகப் பயிலத் தொடங்கியதும், அஃது அம்மொழியின் பேச்சு நடைமொழியுடன் தொடர்பற்றுப் பிறிதொரு மொழியாய் விடுதல் இந்திய மொழிகளிடைக் காணப்படும் புதுமைகளுள் ஒன்றாகும். இப்பண்பு வடக்கிலுள்ள ஆரிய மொழிகள், தெற்கிலுள்ள திராவிட மொழிகள் ஆகிய இரண்டிலுமே காணப்படுகின்றன. இவ்வகையில் வடமொழிக்கும், பாகதங்களுக்கும், தற்கால வடஇந்திய மொழிகளுக்கும் உள்ள தொடர்பு, இலத்தீன் போன்ற உயிரற்ற ஐரோப்பிய மொழிகளுக்கும் ஐரோப்பாவின் இன்றைய உயிருள்ள மொழிகளுக்கும் உள்ள தொடர்பைப் போன்றதன்று. ஐரோப்பாவில் " உயிரற்ற " மொழிகள் என்று சொல்லப்படுபவை ஒரு காலை உயிருள்ள மொழிகளாகவே இருந்தன ; அஃதாவது, கிட்டத்தட்ட எழுதுவது போன்றே பேசப்பட்டு வந்தன. ஸிஸரோவும் 1, டெமாஸ்தனீஸும் 2 இதற்குச் சான்று பகர்வர். அவற்றை " உயிரற் மொழிகள்" என்று சொல்லும்போது அவை உயிருள்ள நிகழ் காலத்து மொழிகள் அல்ல, உயிரற்ற இறந்த காலத்து மொழி கள் என்பதே குறிப்பு. வடமொழியை " உயிரற்ற " மொழி என்பது இதே பொருளிலன்று. பெரும்பாலும் அஃது என்றும் உயிரற்ற மொழியாக இருந்ததென்றே
1. Cicero, 2. Demosthenes. தோற்றுகிறது ; அஃதாவது என்றும், எவ்வளவு தொலைப்பட்ட பண்டைக் காலத்தும், எந்தவிடத்தும், ஆரிய இனத்தாருள் எவ்வகையோராலும் அது பேசப்பட்டதில்லை. அதன் பெயர் ஸம்ஸ்கிருதம் என்பதில் இருந்தே அது பண்படுத்தப்பட்ட, நிறைவு படுத்தப்பட்ட மொழி என்று விளங்குகிறது. அஃது; ஓரினத்தாரது மொழியோ, ஓரிடத்தின் மொழியோ அன்று; ஒரு வகுப்பாரின் மொழி: அஃதாவது புலவர், கவிஞர், அறிஞர் ஆகியோர்களது மொழி; சுருங்கக் கூறின் அஃது இலக்கிய மொழியாம். எனவே, இலக்கிய வளர்ச்சி முன்னேற முன்னேற, அதுவும் வளர்ந்து பெருகிப் பண்பட்டு வந்தது. உயிர் என்பது வளர்ச்சி, வளர்ச்சி என்பது மாற்றம் என்ற பொருளில் வழங்குமாயின், வடமொழி உயிரற்ற மொழியன்று, உயிர் ததும்பி நிற்கும் மொழி என்றே. பல்காலும் கூறத்தகும். எனினும், அதன் வளர்ச்சி மட்டும் மிகவும் மெதுவானதொன்று (இந்தியாவில் எல்லாப் பொருள்களும் மெதுவான வளர்ச்சியுடையனவே); பேச்சுமொழியை விட மெதுவான வளர்ச்சியுடைய தென்பதற்கு ஐயமேயில்லை. புராண வடமொழி வேத வடமொழியின் மாறுபட்டது; வேதங்களுக்குள்ளேயும் அதன் பிந்திய மந்திரங்கள் முந்திய மந்திரங்களை நோக்க மொழியில் மாறுபாடுடையவை. ஆனால், நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான வட மொழிகூடப் பேச்சு மொழியன்று, பண்பட்ட மொழியேயாம். அதுவும் பேச்சு மொழியிலிருந்து பண் பட்டதன்று; தனக்கு முந்தி வழங்கி இறந்துபட்டதோர் இலக்கிய மொழியினின்று பண்பட்டதேயாகும். இங்ஙனம் வடமொழி இலக்கியமொழியாதல் பற்றி, வட மொழியா லியன்றுள்ளது ஒரு நால் என்ற காரணத்தால் அந்நூல் பழைமையானது என்று முடிவு கட்டி விடுதல் கூடாது. ஏனெனில், புத்த சமயத்தவர் நீங்கலாக வட இந்திய, மேல இந்தியப் புலவர்கள் அனைவரும், அவரையொட்டித் தென் இந்தியாவிலுள்ள புலவருள் ஒரு சாராரும், சமயக் கருத்துக்களைத் தெரிவிக்க வட மொழியையே ஏற்ற கருவியாகக் கொண்டு அம் மொழியில் எழுதி வந்துள்ளனர்.
'கி.மு.ஆறாம் நாற்றாண்டில் வாழ்ந்த உயர் சீர்திருத்த அறிஞரான புத்தர் தம் கோட்பாடுகளைப் பரப்ப மக்களது பேச்சு மொழியையே வழங்கலானர். அவர் தம் மாணாக்கர்கள் கணக்கு வழக்கின்றி நூல்களை எழுதித் தள்ளினர். அக்காலப் பேச்சு மொழி பாகதம். அப் பேச்சு மொழியில் எழுதிய இவர்களும் மேலே குறிப்பிட்ட குருட்டுக் கொள்கையைப் பின்பற்றினர். என்று பாகதம் புத்த சமயத்தின் இலக்கியத்துள் வழங்கிற்றோ அன்றே அதுவும் 'தெய்வ மொழி'யின் பாற்பட்டு வடமொழியின் வளர்ச்சியற்ற போக்கைப் பின்பற்றத் தொடங்கிற்று. இந்திய மொழிகளுள் எதுவும் இவ் "ஊழ் வலி" யினின்றும் தப்பவில்லை. எழுத்தில் வந்ததும் பேச்சில் செத்தது. இன்று வங்காளத்தில் இந்த நிலைமையைத்தான் பார்க்கிறோம். ஆங்கில அறிவும் பயிற்சியும் உடைய ஒரு சிலரைத் தவிர வேறெவரும் பேச்சுமொழியை எழுதுவது கொண்டு மன நிறைவடைவதில்லை. எழுதுகோலைக் கையில் எடுத்து விட்டால், "எல்லாரும் பேசுவதையா எழுதுவது? பிறர் மலைக்கும்படியான பகட்டும் உருட்டும் மிக்க வடமொழி வண்டவாளங்கள்தான் எழுதத் தக்கவை" யென்னும் நினைப்பு வந்துவிடுகிறது! (இந் நடையைப் பொது மக்கள் அறிய முடியாது என்று அவர்களே ஒப்புக் கொள்ளவும் தயங்குவதில்லை!)”
வடஇந்தியாவில் மட்டுந்தான் இந்நிலைமையென்பதில்லை; தென்இந்தியாவிலும் இதே நிலைமைதான்; இதே பயன்தான். நான்கு திருந்திய திராவிட மொழிகளுள்ளும் கிட்டத்தட்ட எல்லாமே இலக்கிய மொழி ஒருபுறமும் பேச்சுமொழி ஒருபுற முமாக இரண்டுபட்ட மொழிகளாகவே நிலவுகின்றன. இலக் கியத்தில் வழங்கும் கன்னடத்தைப் பழங் கன்னடம் என்று அழைக்கின்றனர். ஆனால் உண்மையில், அது பழையதும் அன்று, புதியதும் அன்று; ஏனெனில் கேசவர் இலக்கணம் 1 வகுத்த நாள் முதல், அஃதாவது, 12-வது நூற்றாண்டு முதல், இன்றுவரை, கன்னட இலக்கிய எழுத்தாளர் அனைவரும் அதிலேயே எழுதுகின்றனர். இப்பழங் கன்னடத்தைவிடப் பழைமை என்ற பெயருக்கு உரிமை மிகுதியுடையது பழமலையாளம்; ஏனெனில் இதில் இன்று வழக்காறற்றுப் போன வடிவங்கள் மிகுதி. மேலும் இன்றைய மலையாள இலக்கியம் முற்றிலும் வடமொழிமயமாயிருப்பவும், பழ மலையாள இலக்கியம் பழந்தமிழ் இலக்கியச் சார்புடையதாக இருக்கிறது. தெலுங்கில் செய்யுள் மொழி பேச்சு மொழியிலிருந்து எவ்வளவோ வேறுபட்டுள்ளது. ஆனால், இதற்குத் தனியாகப் பெயரில்லை. தெலுங்குப் புலவர்கள் இதனைத் தூய்மை மிக்க உயர்ந்த தெலுங்கு எனவே கொள்கின்றனர். இலக்கிய நடைமொழிகளுக்கிட்ட பெயர்களுள் தமிழ் இலக்கிய நடை மொழிகளுக்கு இட்ட பெயர்தான் மிகவும் பொருத்தமானதாம். அது செந்தமிழ் என்பது ; அஃதாவது நேரான, திருத்தமான தமிழ் என்பது. இதனின்றும் பிரித்து வேறாகக் கூறப்படும் கொடுந்தமிழ் என்பது பேச்சுத் தமிழையும், தமிழின் இடவகைத் திரிபுகளாக இலக்கண அறிஞரால் வகுத்துரைக்கப்பட்ட பன்னிரு மொழிகளையும் குறிக்கும். ஐரோப்பிய அறிஞர் இச் செந்தமிழைக் குறிக்க "உயர் தமிழ்” என்ற தொடரை வழங்குகின்றனர். கன்னட இலக்கிய மொழிக்குக் கொடுத்த பெயரை விட இது மிகவும் சரியான பெயர் என்பதில் ஐயமில்லை; ஏனெனில், இந்த இலக்கிய மொழிகள் அனைத்துமே ஒரு
1. Kesava's Grammar. , வகையில் பழைய மொழிகள் என்று கூறத்தக்கவையேயாயினும், அவற்றின் சிறந்த பண்பு பழைமையன்று; அவற்றின் திருந்திய உருவும், செம்மைப்பாடுமேயாம். வட மொழிக்கும் பழைய பாகதங்களுக்குமோ, அல்லது வட மொழிக்கும் இன்றைய கெளரிய மொழிகளுக்குமோ இடையில் என்ன தொடர்பு உளதோ, அதே தொடர்புதான் செந்தமிழுக்கும் இன்றைப் பேச்சுக் தமிழுக்கும் இடையே உளது. இன்று பேச்சுத் தமிழுக்கும் இவ் உயர் செந்தமிழ் நடைக்கும் இடையே எவ்வளவு மாறுபாடு இருக்கிறதோ, அவ்வளவு பெரும்பாலும் அவை எழுதப்பட்ட காலத்துப் பேச்சு மொழிக்கும் அதற்கும் இடையே இருந்திருக்கக் கூடும். இவ்வளவு திருத்தமும் செம்மைப்பாடும் உடையதொருமொழி என்றேனும் எத்தகைய வகுப்பாரிடையேனும் பேச்சு வழக்கிலிருக்கக் கூடுமென்பது நம்பக்கூடாத செய்தியேயாம். அகில் பல பழைய சொல் வடிவங்கள் இருக்கின்றமை உண்மையே. ஆனால், இலக்கிய வழக்கு ஏற்பட்ட போது கொச்சை என்று கூசாது விலக்கப்பட்ட சொற்களுள் மிகப் பழமையான சொற்களும் விலக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
எனவே, இலக்கியச் சொல் பழைமை மிக்க சொல்லாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. அடிக்கடி பேச்சு வழக்குச் சொற்கள் அவற்றுக்குச் சரியான இலக்கியச் சொற்களை விடப் பழைமை உடையவையாயிருப்பதும் உண்டு. ஆயினும், ஒரு வகையில் இலக்கியச் சொல் உயர்வு உடையதென்று ஏற்றுக் கொள்ளத் தக்கதே. அதாவது, ஒரு சொல்லின் பழைமையை அல்லது பழைய வடிவை வரையறுக்கும் இடத்தில் அதன் பேச்சு வடிவைவிட இலக்கிய வடிவையே பழைமைக்குச் சான்றாகக் கொள்ள முடியும். பேச்சு வழக்கிலுள்ள சொற்கள், என்று, எவ்வடிவில் வழங்கின என்று கூற முடியாது. ஆனால், இலக்கியத்திலோ இலக்கணத்திலோ ஒரு சொல் வழங்கினால் அஃது அந்நூல் எழுதப்பட்ட காலத்திலேயோ, அன்றி அதற்கு நெடுநாள் முன்னரேயோ அவ்வடிவில் வழங்கி வந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்யலாகும். ஒரு சொல் இலக்கியத்தில் வழங்குவதற்கு முன்னமேயே அது நெடுநாள் பேச்சு வழக்கில் வழங்கியிருக்க வேண்டுமாதலால், இலக்கிய வழக்கால் அதன் பழைமை இன்னும் நன்றாக வலியுறுமென்பதில் ஐயமில்லை. திராவிட மொழிகள் எதனிலும் ஒரு நால் இலக்கிய வழக்கு உடையது என்று எற்பட்டால் அது குறைந்தது 1000 ஆண்டுகளுக்கு முன்னமேயே வழங்கப்பட்டதொன்று என்று தயங் காமற் கூறி விடலாம். புலவர்களெல்லாரும், பண்டைக் காலப் புலவர்கள் கூட, வழக்காற்றில் மிக அருகி வழங்குவனவாயுள்ள சொற்களையே செய்யுளுக்குச் சிறந்தனவாகக் கருதிப் பொறுக்கிச் சேர்க்கும் வழக்கத்தைக் கையாண்டு வங்துள்ளனர் என்பதும் இங்குக் குறிப்பிடற்பாற்று.
(2) தமிழ் இலக்கியத்தின் பழைமை
ஒப்பியல் இலக்கண முறைக்குப் பயன்படுவ தொருபுற மிருக்க,பொதுவாகவே, செந்தமிழிலக்கியங்களின் பண்டைத் தொன்மை தனிப்பட்ட சிறப்புடையது. அதற்குரிய சான்றுகளிற் சில கீழே தரப்படுகின்றன :-
1. செந்தமிழ் என்பது செம்மைப்பட்ட அல்லது திருத்தமுற்ற தமிழ் மட்டுமன்று; தமிழின் மிகப் பழைமையான முதல் வடிவங்களைப் பெரும்பாலும் அழியாமற் பாதுகாத்து வந்திருப்பதும் அதுவே. இதன் பயனாக, பிற திராவிட மொழிகளில் இலக்கிய நடை பேச்சு நடையினின்றும் வேறுபடுவதை விட, இச்செந்தமிழ் பேச்சுத் தமிழினின்றும் மிகுதியும் வேறுபட்டுக் காணப்படுகிறது. இவ் வேறுபாட்டின் அளவை நோக்க இதனைப் பேச்சுத் தமிழின்
வேறானதொரு தனி மொழி என்று கூடக் கூறி விடலாம். உண்மையில், செந்தமிழின் செய்யுள் நடை மட்டுமேயன்றி, உரைநடை கூடத் தற்காலத் தமிழனுக்கு விளங்காத அளவு கடுமையானதெனல் மிகையாகாது. இக்கால இத்தாலியனுக்கு இலத்தீன் மொழியிலுள்ள விர்கிலின் ஈனிட்1 எவ்வளவு தொலைவோ,அவ்வளவு இன்றைத் தமிழனுக்குச் செந்தமிழும் தொலைவுடையது என்று கூறலாம். மணிக்கணக்காகச் செந் தமிழில் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றைப் படிக்கக் கேட்ட பின்னரும் கல்வியறிவற்ற தமிழனொருவன் தான் கேட்ட பொருளை ஒரு சிறிதும் அறியான். ஆனால் இவ்வளவுக்கும் திராவிடப் பேச்சு மொழிகளிற் காணப்படும் வட மொழிச் சொற்களை விட, செந்தமிழில் குறைந்த அளவிற்கே அச்சொற்கள் காணப்படுகின்றன. உண்மையில், செந்தமிழின் புதுமை என்னவெனில், அது பேச்சுத் தமிழைவிட வடமொழிச் சொற்கள் குறைந்ததும், தாய்மை மிகுந்ததும் ஆகும் என்பதே. தாய்மையும், நாட்டுப் பற்றும் அதன் உயிர் நிலைகள் ஆகும். அதன் திருத்தம் அனைத்தும் தற்சார்பில் உண்ணின்றெழுந்த திருத்தமேயாம்; வெளிவரவால் ஏற்பட்ட திருத்தமன்று. செந்தமிழ்ச் சொற்களும் இலக்கண அமைதியும் சில பல புலவர்களால் ஒரே காலத்தில் தோற்றுவிக்கப் பட்டிருத்தல் வேண்டும் என்பது ஒப்புக்கொள்ளத் தக்கதன்று ; படிப்படியாகவும் மெதுவாகவுமே பழக்கத்தில் வந் கிருக்க வேண்டும். கீழை நாட்டில் எல்லாம் மெதுவாகவே வளர்ச்சியுற்று வருகிற பான்மைக் கேற்பவே தமிழும் மெது வாகவே வளர்ச்சியுற்றிருத்தல் வேண்டும். அப்படியிருக்க,பேச்சு வழக்கினின்று செந்தமிழ் இன்று காணப்படும்
1. Virgil's ÆNEID. அளவுக்கு மாறுபாடடைந்துள்ள தொன்றே அதன் பழைமையை நன்கு விளக்கும் சான்றாகும்.
2. செந்தமிழில் சொற்களும், அவற்றின் இலக்கணத் திரிபுகளும் எண்ணிறந்தவையாய் மலிந்து கிடக்கின்றமையும் அகன் பழைமைக்கு இன்னொரு சான்று ஆகும். செந்தமிழின் இலக்கணம் இறந்துபட்ட சொல்வடிவுகள், பழங்கால விகுகிகள், அருவழக்குகள் முதலியவை நிறைந்ததொரு பழம் பொருட்காட்சிசாலை போன்றதேயாகும். சிறப்பாகக் கூறுமிடத்துப் பழந்தமிழில், எளிமை வாய்ந்த பழைய இலக்கண முடிபுகளும், திரிபற்றவையோ அன்றி ஒரு சிறிது திரிபுற்றனவோ ஆன வினைகளும் காணப்படுகின்றன. இப் பழைமைக் குறிகள், செந்தமிழ் மொழியின் முதிரா இளமையிலேயே, எழுத்து வடிவம் ஏற்பட்ட காரணத்தால் செந்தமிழ் வினைச்சொற்களின் வளர்ச்சி தடைப்பட்டதென்பதைக் குறிப்பனவாகக் கொள்ளல் வேண்டும். சீனமொழியிலும் இவ்வாறே வினைச் சொற்கள் இதே காரணத்தால் வளர்ச்சியுறாமல் தடைப்பட்டமை வியக்கத்தக்கக்கதொன்றாம். செந்தமிழின் சொல் வளத்திற்குச் சான்று வேண்டின், யாழ்ப்பாணத்திலிருந்த அமெரிக்கப் பாதிரிமார்கள் வெளியிட்டுள்ள பள்ளிக்கூட அகரவரிசையை 1 எடுத்துக் கொள்ளலாம். அதில் 58,500 சொற்கள் வரை உள்ளன. இவற்றுடன் ஆயிரக்கணக்கான மரபுச் சொற்களையும், தொடர்களையும் சேர்த்தால்தான், தமிழ்மொழிச் சொற்றொகுதி நிறைவுறும். தமிழிற் பயிற்சியுடைய எவரேனும் பிற திராவிட மொழிகளின் அகரவரிசைகளை மேற்போக்காகப் பார்த்தால்கூட அவற்றுள் வியக்கத்தக்க ஒரு வேற்றுமையைக் காண்பர் ; அஃதாவது: தமிழைப்போல அவற்றுள் ஒருபொருட் பலசொற்கள் இல்லை என்பதே. மேலும், ஒவ்
1. Dictionary.
9 வொரு கருத்தையும் குறிக்கத் தமிழில் பெரும்பாலும் பிற மொழிகளிற் காணப்படாத சிறப்புச் சொற்கள் இருப்பதோடு அப் பிறமொழிகள் ஒவ்வொன்றுக்கும் சிறப்பான அதே கருத்துடைய சொற்களையும் தமிழ் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. (எ-டு.) வீடு என்பது தமிழுக்கே சிறப்பான சொல் ஆகும். இதே கருத்தில் தமிழ் இல் (தெலுங்கு இல்லு), மனை (கன்னடம் மன), குடி (வட மொழி குடீ ; பின்னிஷ் மொழிகள் குடி) என்ற சொற்களும் தமிழில் உள்ளன. இங்ஙனம் ஒவ்வொரு திராவிட மொழியிலும் உள்ள சொற்களின் பழந் திராவிட வடிவங்களும், வேர்ச் சொற்களும் தமிழில் இருப்பதால் இதனை அத்தகைய பழந் திராவிட வேர்ச் சொற்களுக்கும் வடிவங்களுக்கும் ஒரு களஞ்சியம் என்னலாம். இச் செய்திகளை நோக்க, தமிழ் மொழி இலக்கிய மொழியாகக் திருத்தமுற்றது மற்றைத் திராவிட மொழிகள் இலக்கிய மொழிகளானதற்கு நெடுங் காலம் முன்னராகும் என்றும், தமிழைத் தவிர்ந்த ஏனைய திராவிடமொழிகள் பண்டைத் தமிழர் மொழியினின்று அக்காலத்தில் பிரிந்திருக்கக்கூட முடியாதென்றும் முடிவு கட்டலாகும். -
3. தமிழின் பழைமைக்கும் தூய்மைக்கும் இன்னொரு சான்று அஃது ஒருபுறம் பழங் கன்னடம், பழ மலையாளம், துளுவம் முதலியவற்றுடனும், இன்னொருபுறம் . துதம், கோண்டு, கு முதலியவற்றுடனும் ஒற்றுமை உடையதாயிருப்பதாகும். பல இடங்களில் இக்காலக் கன்னடமும், தெலுங்கும் தமிழுக்கு மாறுபட்டிருக்கும் போதுகூட, பழங் கன்னடம் முதலிய பழைய மொழிகள் தமிழை ஒத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
4. தெலுங்கு மொழியின் முதற்சொற்களும், விகுதிகளும் தமிழின் முதற்சொல், விகுதி இவற்றின் மரூஉவாக மிகுதியும் இருப்பதும் தமிழின் பழைமையைக் காட்டுவதாகும். (எ - டு.) திராவிட மொழியின் சுட்டுக்களில் அ தொலைவையும் இ அண்மையையும் காட்டுபவை. இவற்றுடன் பால் உணர்த்தும் விகுதியும், இடையே உடம்படு மெய்யாகிய வகரமும் வர அவன், இவன் என்னும் இடப்பெயர்கள் அல்லது சுட்டுப் பெயர்கள் ஏற்படுகின்றன. இவற்றிற்குச் சரியான தெலுங்குச் சொற்கள் எங்ஙனம் அமைந்துள்ளன என்று பார்க்கலாம். தமிழின் அன் விகுதிக்குச் சரியான தெலுங்கு விகுதி டு, உடு, அல்லது, அடு ஆகும். எனவே, தமிழில் அ + வ் + அன் என்பதற்கும், இ + வ் + அன் என்பதற்கும் சரியாக, தெலுங்கிலும் அ + வ் + அடு (அவடு), இ + வ் + அடு (இவடு) என்ற புணர்ப்பு உருவை எதிர்பார்க்கலாம்; ஆனால் இன்றைத் தெலுங்கிலுள்ள சொற்கள் ’வாடு’ (= அவன்) வீடு (= இவன்) என்பவையாம். இச் சொற்கள் வந்தமை எப்படி? தெலுங்கு இலக்கணத்தின் ஒலியியல் அமைதிப்படி, முதலில் சுட்டு அகரமும் இகரமும் இரண்டாம் உயிரைத் தம்மினமாக்கிய பின் தாம் இறந்துபட்டன. இறந்துபட்ட உயிரின் மாத்திரை பின் உயிருடன் கூட்டப்பட்டு உயிர் நீள்கின்றது. இங்ஙனம் பெரிதும் மாறுதலடைந்த தெலுங்கு வடிவங்கள் தமிழ் வடிவங்களுக்குப் பிந்தியவை என்பது தெளிவு. மிகப் பழைய இலக்கியத் தெலுங்கில்கூட இவ் வடிவே காணப்படுவதால் தெலுங்கில் இலக்கியச் சார்பான திருந்திய மொழி ஏற்பட்டது. இம் மாறுதலுக்குப் பின் என்றும், அதிலிருந்தே தெலுங்கு இலக்கியமொழி தமிழ் இலக்கியமொழிக்குப் பிந்தியதென்றும் ஏற்படுகின்றன.
5. தமிழில் காணப்படும் வடமொழித் திரிபுகள் (தற்பவங்கள்) பிற மொழிகளிலுள்ள வடமொழிக் திரிபுகளை விட எவ்வளவோ சிதைந்திருக்கின்றமையால் அவற்றின் வழக்கு மிகப் பழைமையானது என்று ஏற்படுகிறது. தமிழின் பழைமைக்கு இதுவும் ஒரு சான்றாகும்.
தமிழில் வந்துள்ள வடமொழிச் சொற்கள் வெவ்வேறு காலத்திற்குரிய மூன்று வகைப்பட்டவை:
(அ) அவற்றுள் காலத்தால் மிகப் பிந்தியவை சமய நூல்களில் வழங்குபவையாம். தமிழ்நாட்டிலுள்ள சமயங்களுள் மக்களிடையே செல்வாக்குடையவை மூன்று: முதலாவது, ஆகமங்களைப் பின்பற்றி எழுந்த சைவ சித்தாந்தம். தமிழரிடையே[1] பெருவழக்கா யிருப்பதும் இதுவே. அத்து விதத் தலைவரான சங்கராச்சாரியரது கட்சி இரண்டாவது. இராமானுஜரது வைணவம் இவ்விருவரது கட்சிக்குமே எதிரிடையானது. இம் மூன்று கட்சியினரின் சமய நூல்களும் தழைத்தோங்கிய காலம் 11-ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டுவரை என்னலாம். இன்றியமையாச் சில மாறுதல்கள் நீங்கலாக, இவற்றுட் பெரும்பாலும் காணப்படுவன தூய வடமொழிச் சொற்களே.
(ஆ) மேற்கூறிய சமயத் தலைவர்கள் காலத்திலும், அதற்குச் சில நூற்றாண்டுகள் முன்னும், அஃதாவது 9, 10-ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டுவரை, இருந்த சமணர்களே[2] தமிழில் இன்று காணும் வட சொற்களிற் பெரும்பாலானவற்றை வழக்கிற்கொண்டுவந்தவர்கள் ஆவர். சமணர்கள் அந்நாள் தழைத்தோங்கியது அரசியல் உலகில் அன்று; கல்வியுலகினும் அறிவுலகிலுமே யாம். உண்மையில், அவர்கள் தழைத்தோங்கிய காலமே தமிழ் நாகரிகத்தின் பொற்காலம் என்று கூறத்தக்கது. மதுரையில் சங்க மிருந்ததும், குறள், சிந்தாமணி முதலிய செந்தமிழ் நால்களும், இலக் கண நூல்களும், நிகண்டுகளும் எழுதப்பட்டமையும் இக் காலத்தேதான். இக்காலத்தில் வழக்காற்றில் வந்த வட சொற்கள் தமிழ் ஒலிப்பியலுக்குத் தகுந்தபடி மாற்றப்பட்டு விளங்குகின்றன. (எ-டு) வடமொழி லோக - தமிழ் உலகு; வடமொழி ராஜா - தமிழ் அரசு.
தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் காணப்படும் வட சொற்கள் அனைத்துமே பெரிதும் மேற்கூறிய இரண்டு காலப் பகுதிகளிலும், அதிலும் சிறப்பாக முதலிற் கூறப்பட்ட அண்மைக் காலப் பகுதியிலேயே, வந்திருக்கவேண்டும் என்னலாம். எப்படியும் அவை இக்காலப் பகுதியில் வந்த தமிழ்மொழியின் வட சொற்களைப் பெரிதும் ஒத்தவை என்பதில் ஐயமில்லை. இவற்றில் காணப்படும் மாற்றத்தின் அளவை ஒட்டி இவை இயற்கை வரவுகள் (தற்சமம்) திரிபுகள் (தற்பவம்) என இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இயற்கை வரவுகள் வட மொழியிலும் தாய் மொழியிலும் ஒரே உரு உடையன. திரிபுகள் என்பவை திராவிட மொழியின் ஒலிப்பியலை ஒட்டி மாறுதல் பெற்று உரு மாறியவை. இயற்கை வரவுகளுள் பெரும்பா லானவை பிற்காலத்திலேயே புகுந்திருக்கவேண்டும். ஏனெனில், அவை வட மொழியின் எழுத்துக்கள் அனைத்தும் திராவிட மொழிகளில் புகுத்தப்பட்ட பின்னர் பார்ப்பனரால் வடமொழி ஒலிப்புத் தவறா வண்ணம் எழுதப்பட்டவை யாகவே காணப்படுகின்றன என்க. திரிபுகள் என்பவை வட மொழியிலிருந்து நேரில் கொள்ளப்பட்டவை யல்ல; பண்டைய பேச்சு மொழியாகிய பாகதங்களிலிருந்தோ, வட நாட்டில் பிற்காலத்தில் வழங்கப்பட்ட கெளரிய மொழிகளிலிருந்தோ எடுக்கப்பட்டவையே என்று தெலுங்கு, கன்னட இலக்கண அறிஞர்கள்தாமே ஒப்புக்கொள்கின்றனர். (இ) ஆனால், தமிழில்மட்டும் மேற்கூறிய இரண்டு காலங்களிற்கும் முந்திய மூன்றாவது வகையான வடசொல் வரவுகள் உள்ளன. இவை வேதாந்த, சைவ, வைணவ, சமய நூல்களுக்கு முன்னாகவே, இலக்கியத் திருத்தம் ஏற்பட்ட முதற் காலத்தில்தானே, வடமொழியிலிருந்து வந்து நாட்டுவழக்காலும் காலப்போக்காலும் பெரிதும் சிதைந்த சொற்கள் ஆம். இவை பிற திராவிட மொழிகளிலுள்ள வடசொற்களைவிடக் காலத்தால் முந்தியவையாம். இவ் வரவுகள் வட பாகத மொழிகளைக் காட்டிலும் மிகுதியாகச் சிதைவடைந்தவையே யாயினும் அவ் வடபாகதங்களிலிருந்து வந்தவையல்ல; தமிழ்நாட்டிற்கு முதன்முதல் வந்த பார்ப்பனக் குருமார், சோதிடர், புலவர் முதலியவர்களது வாய் மொழியினின்று நேராகக்கொள்ளப்பட்டுத் தமிழர் கூட்டுறவால் சிதைந்தவையேயாம். இவை சமணகாலத்துப் பாகத வரவுகளைவிட மிகுதியுஞ் சிதைந்தவை என்பது மட்டுமன்று, இவற்றின் சிதைவு வேறுவகைப் பட்டதுமாகும். அஃதாவது, பின்னைய சிதைவுகள் பெரிதும் பிற்காலத் தமிழ் இலக்கண நூலார் வகுத்த வடசொல் ஆக்க அமைதிக்கு இணங்கிய வையா யிராமல், யாதொரு வரம்புமற்றுச் சிதைந்தவையாம். இவ் வகையுட் சேர்ந்த சொற்களிற் சிலவே கீழ்வருவன:–
(அ) வடமொழி ஸ்ரி (ஸ்ரீ); பழந்தமிழ் திரு; பிற்காலத் தமிழ் சிரீ, சிறீ, சி.
(ஆ) வடமொழி கர்ம (ன்)-மிகப் பழந்தமிழ் கம்; பழந்தமிழ் கன்மம்; பிற்காலத்தமிழ் கருமம்.
(இ) தமிழ்த் திங்கட்பெயர்கள் இத்தகைய முதல் வடமொழிச் சிதைவுகளுக்கு நல்ல எடுத்துக்காட்டுகள் ஆகும். தமிழ்த் திங்கட் பாகுபாடு இன்று ஞாயிற்றியல் சார்பாய்[3] இருப்பினும் முன்னாட்களில் திங்களியல் சார்பாகவேயிருந்தது. எனவே, அவற்றின் பெயர்கள் திங்கள் தங்கும் விண்மீன்களின் பெயரையே பெரும்பாலும் கொண்டன. இவ் விடங்களிலும், நேரிடையான விண்மீன்களின் பெயர்களிற்கூட சிதைவு மிகுதி காணப்படுகின்றது. (எ-டு):விண்மீனின் பெயராகிய வடமொழி பூர்வ-ஆஷாட(ம்) தமிழில் பூராடம் ஆயிற்று; திங்களின் பெயரிலோ ஆஷாடம் என்ற வடசொல் ஆடம் என்றாகி, அதன்பின் ஆடி என்ற உருப்பெற்றது. வட மொழி விண்மீனின் பெயராகிய அஸ்வினி என்பதே தமிழ்த் திங்கட்பெயர் ஐப்பசி ஆயிற்று. இன்னும் தொலைப்பட்ட சிதைவு புரட்டாசி என்பது. இதன் வடமொழி முதற்சொல் பூர்வ-பாத்ர-பத என்பதாம். இவ் வடசொல்லே விண்மீனின் பெயராக வரும்பொழுது பூாட்டாதி என்றாகின்றது; பின்னர் புரட்டாசி என்று திங்கட் பெயராகத் திரிகின்றது. இவ் விண்மீன்பெயர்கள், திங்கட் பெயர்கள் அனைத்திற்கும் தெலுங்கு கன்னடம் முதலிய மொழிகளில் தனி வட மொழிச் சொற்கள் வடமொழி உருவிலேயே வருகின்றன. இதிலிருந்து இப்பெயர்கள் வடமொழியினின்று அம்மொழிகளில் எடுக்கப்பட்ட காலத்திற்கு நெடுங்காலத்திற்கு முன்னரே தமிழிலக்கியத்திலோ தமிழ் மொழியிலோ எடுத்தாளப்பட்டிருக்க வேண்டுமென்பது தெளிவாகும்.
6. தமிழ்மொழி திருந்திய உருவடைந்த காலத்தின் பழைமையைத் தமிழ்க் கல்வெட்டுக்களிலிருந்தும் அறியலாகும். கர்நாடகத்திலும் தெலிங்காணத்திலும் முற்காலக் கல்வெட்டுக்கள் யாவும், பிற்காலக் கல்வெட்டுக்களிற் பெரும்பாலனவும் வடமொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் இக் கல்வெட்டுக்கள் பழங்கன்னடம் அல்லது பழந் தெலுங்கு எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. எனினும், இக் கல்வெட்டுக்களின் மொழியோ பெரும்பாலும் அதிலும் பழங்காலக் கல்வெட்டுக்களாயின், வடமொழியிலேயே காணப்படுவது குறிப்பிடத் தக்கதாம். வடமொழியின் சிறப்பொலிகளுக்குக் தகுந்த எழுத்துக்கள் ஆங்காங்குப் புதியனவாக வகுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இவற்றிற்கு நேர்மாறாக, தமிழ் நாட்டிலுள்ள பழங்கல்வெட்டுக்கள் எல்லாம் தமிழ்மொழியிலேயே உள்ளன. பண்டைய பாண்டிநாட்டைச் சேர்ந்தவையான தென் திருநெல்வேலி, தென் திருவாங்கூர்ப் பகுதிகளிலுள்ள கல்வெட்டுக்களின் படிவங்கள் அத்தனையையும் துருவிப்பார்த்தும் 14-ஆம் நூற்றாண்டுக்கு முந்தியதாக ஒரு வடமொழிக் கல்வெட்டுக் கூட அகப்படாதது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டுக்கள் பெரும்பாலும் கோவில்களின் சுவர்களிலும், தூண்களிலும், நிலைக்கற்களிலும், நிலத்திலும் எழுதப்பட்டுள்ளன. இவற்றுள் 150-க்கு மேற்பட்டவற்றின் படிவங்கள் எம்மிடமுள்ளன. இவற்றுள் காலத்தால் மிகப் பிந்தியவை திராவிடப் பார்ப்பனர் வடமொழியை எழுதப் பயன்படுத்தும் கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன ; முக்கியவையோ இன்றைய தமிழ் எழுத்துக்களிலும் பழைமையானதோர் எழுத்தில் எழுதப்பட்டுள்ளன. இப்பழந்தமிழ் எழுத்துப் பழந்தமிழ் நாட்டிற்கும், பழைய மலையாள நாட்டிற்கும் பொதுவானதொன்றாகக் காண்கிறது. கொச்சியில் யூதர்களுக்கும், திருவாங்கூரில் சிரியக் கிறிஸ்தவர்களுக்கும் வழங்கப்பட்ட பட்டயங்கள் இப்பழந்தமிழ் எழுத்திலேயே எழுதப்பட்டிருக்கின்றன. இன்னும் வட மலையாளத்திலுள்ள முகம்மதியர் இவ்வெழுத்தினையே சில மாறுதல்களுடன் எழுதிவருகின்றார். இந்த எழுத்து இக்காலத் தெலுங்கு-கன்னட எழுத்தினுடனும், இலங்கையிலும் கீழைஇந்தியத் தீவுகளிலும் இதுகாறும் இன்னமொழி என்று விளக்கமுறுக சில கல்வெட்டுக்களின் எழுத் தினுடனும் ஒருவாறு ஒற்றுமை உடையதாய் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய இப்பழந்தமிழ்க் கல்வெட்டுக்களின் மொழியை எடுத்துக்கொண்டால் அது தமிழே என்பதும், அதுவும் பழைமையும் தாய்மையும் மிக்க செங்தமிழே என்பதும் காண்க : இவற்றின் நடை இலக்கியச் செங்தமிழாயிருப்பதுடன், இக்காலத் தமிழ் நடையைக் கெடுக்கும் பிற்காலப் புது வழக்குகளான (நீர் என்பதனிடமாக) நீங்கள் என்பது போன்ற இரட்டைப் பன்மைகளையும் விலக்கியிருப்பதும், செய்யுள் வழக்கிற்குரிய சுருங்கச் சொல்லலும், சிக்கலான நடையுமாயில்லாமலிருப்பதுங் குறிப்பிடத்தக்கதாம். தெலிங்காணத்திலும் கர்நாடகத்திலும் (தெலுங்கு, கன்னட எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்த போகிலும்) அம் மொழிகளில் எழுதப்பட்ட ஒரு பழங்கல்வெட்டுக்கூடக் கிடையாமலிருப்பது தமிழிலக்கியத் திருத்தத் தொன்மையை ஒருபுறமும், அதன் தனிப்பட்ட சுதந்திர உணர்ச்சியை மற்றொரு புறமும் விளக்குவதாகும் என்று கொள்ளலாம்.
மேலும், டாக்டர் குண்டெர்ட்டால் மொழிபெயர்க்கப் பெற்று வெளியிடப்பட்ட மேற்குறிப்பிட்ட திருவாங்கூர், கொச்சிப் பட்டயங்கள் பழந்தமிழும் பழமலையாளமும் ஒரே மொழிதான் என்பதையும் நிலைநாட்டுகின்றன. இப்பட்டயங்களின் காலம் 9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தி இருக்க முடியாது; 7-ஆம் நூற்றாண்டுக்கு முந்தியும் இருக்க முடியாது. ஏனெனில், இவற்றுட் காணப்படும் (ஆரியபட்டரின் சூரிய சித்தாங்கத்தை ஒட்டி எழுந்த) ஞாயிற்றியல் சார்பான காலப்பாகுபாட்டை ஒட்டிய மரபுச் சொற்கள் 7-ஆம் நூற்றாண்டுகட்கு முன் ஏற்படவில்லை. இவை எழுதப்பட்ட காலத்து அரசரும் கரள அரசரேயாவர். எனினும், இவற்றின் மொழிநடையென்ன, பெயர் வினைத்திரிபுகளென்ன, மரபு வழக்குகள் என்ன, எல்லாம் முற்றிலும், தமிழே : மலையாளத்திற்கே சிறப்பான ஒன்றிரண்டு தனி வடிவங்கள் இடையில் காணப்படலாம். எனினும், இதிலிருந்து அன்றைய மலையாள நாட்டில் அரசியலார், கற்ற உயர்தர மக்கள் ஆகிய இவர்களது மொழியேனும் தமிழ் என்றும், மலையாளம் என்ற மொழி இருந்திருக்குமானால் மலைகளிலும் குன்றுகளிலும் உள்ள மக்களது திருந்தா வாய்மொழியாகவே இருந்திருக்க முடியும் என்றும் முடிவு செய்யலாம். "மதுரைப் பாண்டிய அரசர் எக்காலத்திலேனும் மலையாள நாட்டின் எப்பகுதியையேனும் ஆண்டிருப்பர் ; அதனால்தான், யூதர்களுக்கும், சிரியக் கிறித்தவர்களுக்கும் கொடுக்கப்பட்ட இப் பட்டயங்கள் தமிழில் கொடுக்கப்பட்டிருத்தல் வேண்டும்” என்று கொள்வதற்குச் சற்றேனும் இடமில்லை ; ஏனெனில், இவற்றைக் கொடுத்த அரசர் பாண்டியரல்லர்; கேரள உரிமைப் பட்டங்களும், சின்னங்களும் முற்றிலும் பெற்றுள்ள கேரள முடிமன்னரே யாவர் என்க! மலையாளக் கரையில் பாண்டியர் எங்கேனும் ஆட்சி செலுத்தியிருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள் உண்டானால் அவை கிரேக்க நிலவியலார் குறிப்புக்களேயாம். ஆனால், அவர்கள் குறிப்புக்களில் பாண்டியன் வென்றனவாகக் கூறப்படுபவை மலையாளக் கரையின் சில தனியிடங்களையேயன்றி வேறல்ல ; பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்திருக்கக்கூடிய இடம் ஆய்நாடு அல்லது பரலிய நாடு என்ற தென் திருவாங்கூரே யாகும். இவ்விடத்தில் அன்றுமட்டுமல்ல, இன்றும் பேசப்படும் மொழி தமிழே; மலையாளமன்று.
மேற்கூறியவற்றிலிருந்து திராவிட மொழிகள் அனைத்தினும் தமிழே பழைமை வாய்ந்தது என்பதும், இக்காலத்திராவிட மொழிகளின் வேறுபாடுகள் அனைத்திற்கும் மூலமான பழங் திராவிட வடிவங்களை ஆராயும் வகையிற் பேருதவி தருவது அதுவே என்பதும் பெறப்படும். ஆனால் நாம் மேலே குறிப்பிட்டபடி தமிழோ மற்ற எந்தத் தனிப்பட்ட மொழியோ (அது பழைமையுடையதாயினும் சரி, அன்றாயினும் சரி) பண்டைத் திராவிட மொழியின் வகைக்குறி மொழியாகக் கொள்ளுதற் குறியதாகாது. இம்மொழிகளின் சிறப்பான பண்புகள் அனைத்தையும் நன்கு ஒர்ந்து ஒப்பிட்டுப் பார்த்து அவற்றின் ஒற்றுமைகளைப் பிரித்தறிவதால் இம்மொழிகளின் இலக்கணங்கள் வகுக்கப்பட்ட காலங்களுக்கெல்லாம் முந்தி, இம்மொழிகள் வேறு வேறாகப் பிரிவதற்குங்கூட முந்தி, இவை இருந்த நிலைமையும் அமைப்பும் நன்கு விளங்கும். அவற்றை ஆராய்ந்து காணும் ஒப்புமையே. பெரிதும் மொழியியலார்க்குத் துணை புரிவதாம்.