கால்டுவெல் ஒப்பிலக்கணம்/030-033

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

௪. திராவிட மொழிகள்


இந்தியப் பெரு நாடெங்கணுங் திராவிடப் பெருங்குழு பரவிப் படர்ந்திருந்தது உண்மையே. எனினும், அப்பெருங் குழுவைச் சேர்ந்த மக்களியாவரும் திராவிட மொழியினத் தைச் சேர்ந்த மொழிகளையே பேசி வந்தார்களென்பதில்லை. வடபால் அமைந்தோர் பின்னர்த் தம்மை அடிமைப்படுத்திய ஆரியர் நாகரிகத்தில் இயல்பாய்ச் சிக்குண்டு, முற்றிலும் ஆரியராகவே மாறி, ஆரிய மொழிகளையே பேசி வருவாராயினர்; எனினும், ஆராய்ந்தால் எளிதில் வேறு பிரித்துக் காணக்கூடிய திராவிடக் குழுஉச் சிறப்பியல்புகளை அவர்கள் முற்றிலும் இழவாதவர்களாகவே இருந்துவருகின்றனர்.

இனி, வடபாலுள்ள இவ்வாரியக் கலப்பினரை யொழித் துவிடின், முண்டா மொழியினத்தைச்[1] சேர்ந்த மொழிகளைப் பேசி வருவோர்களிற் பெரும்பான்மையோரும், திராவிட மொழியினத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசிவரும் ஏனையோரிற் பெரும்பான்மையோரும் திராவிடர்களே என்று ஒருவாறு துணிந்து கூறலாம். ஒரே திறப்பட்ட உடலமைப் பியல்பு வாய்ந்த மக்களால் இந்த ஈரின மொழிகளும் பெரும்பாலும் பேசப்பட்டு வருகின்றமை கொண்டு, முண்டா மொழியினத்திற்கும் திராவிட மொழியினத்திற்கும் தொடர் புண்டென்று கருதினர் அறிஞர் பலர்; எனினும், இந்திய மொழியாராய்ச்சி யளவைக் கழகத்தினர்[2] இடைவிடாது அரிதிற் றெடர்ந்து நடத்திவந்த ஆய்வுகளின் பயனாய் அக் கருத்துத்தானும் நிலைபெரு தாயிற்று. சொற்களின் ஒலிப்பு முறையையாதல், ஆக்கமுறையையாதல் ஆராய்ந்து பார்க்கினும் அவ்வீரின மொழிகட்கிடையே ஒற்றுமை யன்றி வேற்றுமைகளே மிகுந்து கிடக்கக் காணலாம். ஒலிப்பு முறையில் வேறுபாடு; பால் குறிப்புமுறையில் வேறுபாடு; வேற்றுமை ஏற்கும் முறையில் வேறுபாடு; எண் முறையமைப்பில் வேறுபாடு ; இன்மை, அன்மை, மறுதலை என்ற எதிர்மறையைக் குறிப்பதில் வேறுபாடு; சொற்கூட்டத் தொகுதியிலோ அளவற்ற வேறுபாடு! அவற்றிடையே காணப்படும் ஒற்றுமைகள் இரண் டொன்றும் உண்டாலோவெனின், அவை யிரண் டொன்றும், உலகமெங்கனும் பரவியுள்ள பன்மொழித் தொகுதிகளுள் ஒன்றற் கொன்றினிடையே பொதுப்படக்காணப் பெறும் ஒற்றுமைப் பெற்றிகளே யாமென விடுக்க.

திராவிட மொழியினத்தைக் குறித்து இனி, நோக்குவாம்: இவ்வினத்தைச் சேர்ந்த மொழிகள் தென்னிந்தியாவிலுஉம், மத்திய இந்திய மலைநாடுகளிலும் பெருவாரியாக வழங்கி வருவனவாம். அவற்றுள் இரண்டு மொழிகள் இவ்வெல்லையுங் கடந்து வடக்கே சென்று, சோட்டாகாகபுரியிலும், சந்தாளபர்கணாஸ்[3] பகுதிகளிலும் முண்டா மொழியினங்களோடு உடன் வழங்கியும், இந்தியப் பெருநாட்டின் வட மேற்கு மூலையிலுள்ள பலூச்சிஸ்தானத்திடையே பிராகுவி என்ற பெயரால் வழங்கியும் இன்றளவும் இருந்து வருகின்றன. வடமொழிவாணர் பலருக்கு மேற்குறித்த பிராகுவி என்ற திராவிட மொழியிருந்ததாகவே தெரிந்ததில்லை. ஆந்திரபாஷா,[4] திராவிட பாஷா[5] என்ற இரண்டு பிரிவுகளே அவர்களறிந்தன ; அவற்றுள் ஆந்திரபாஷா என்பது இப்போதைய தெலுங்கு மொழி; பின்னையதான திராவிட பாஷா என்பது தெலுங்கு ஒழிந்த ஏனைய மொழிகள். இப்பிரிவு ஒருவாறு உண்ணாட்டு மொழிக்கணக்குப் புள்ளி விவாங்களோடு ஒத்திருக்கின்றமை நோக்கற்பாற்று :—

 பேசுவோர் தொகை
 (1901-ஆம் ஆண்டு)
I திராவிடக் குழுவினம்:—
தமிழ் ... ... 16,525,500
மலையாளம் ... ...6,029,304
கன்னடம் ... ... 10,365,047
குடகு ... ... 39,191
துளுவம் ... ...535,210
துதம் ... ... 805
கோதம் ... ...1,300
குறுக்கம் ... ... 592,351
மால்தோ ... ... 60,777
II இடைப்பட்ட மொழி :—
கோண்டு முதலியவை 1,123,974
III ஆந்திரக் குழுவினம் :—
தெலுங்கு 20,696,872
கந்தம் 494,099
கோலாமி 1,505
IV பிராகுவி 48,589

 மொத்தம் .... 56,514,524


சென்னை மண்டில அரசியன்முறை விளக்கம்[6] என்னும் ஒப்பரிய தொகுப்பிலிருந்து, திராவிட மொழிச் சிறப் பியல்புகளைக் காட்டுவதான பின்வருங் குறிப்பு தமிழில் மொழி பெயர்த்துத் தரப்படுகிறது :-

“திராவிட மொழிகளில் உயிரில் பொருள்களும், அறிவில் உயிர்களுமாய அஃறிணைப் பெயர்களெல்லாம் பொதுப் பாலனவே. படர்க்கைச் சுட்டு, குறிப்புப் பெயரெச்சம், படர்க்கை வினை ஆகிய இவற்றிற்கு அம் மொழிகளில் ஆண்பால், பெண்பால் என்ற பால்வேறுபா டில்லை; ஏனைய எல்லாப் பெயர் வினைகளும் பால் குறித்தனவே. திராவிட மொழிப் பெயர்ச் சொற்கள் வேற்றுமை ஏற்குங் காலத்துச் சாரியை அல்லது உருபுச் சொற்களின் பிற்சேர்ப்பினாலேயே வேற்றுமை யடைகின்றன. பால்பகா வஃறிணைப் பெயர்கள் பெரும்பாலும் பன்மை குறித் தெழுதப் படா. திராவிட மொழிகளில் சாரியை, இடைநிலை, உருபு முதலியன பெயர் வினைச் சொற்களுடன் பின்னிணைப்புப் பெறுவனவேயன்றி முன்னிணைப்புப் பெறுமாறில்லை. உரிச் சொற்கள் வேற்றுமை ஏலா; ‘இந்திய-ஐரோப்பிய[7] மொழியினத்தைப் போலன்றி இத் திராவிட மொழிகளின் தனிச் சிறப்புக்களிலொன்றென்ன வென்றால், வேண்டுமிடத்துப் பண்புப் பெயரென்னும் உரிச் சொற்களை விடுத்துப் பெரும்பாலும் வினையெச்சங்களையே உரிச் சொற்களைப் போன்று இவை பயன்படுத்துகின்றன என்பதேயாம். முண்டா மொழியினத்தைப் போன்று திராவிட மொழியினத்திலும் தன்மை முன்னிலைப் பன்மைப் பெயர்களுக்கு இரண்டிரண்டு சுட்டுப் பெயர்கள் அமைந்துள ; அவை முன்னிலையை உட்படுத்தியதும், உட்படுத்தாது விலக்கியதுமான இருவகையாம். செயப்பாட்டு வினை என்பது பொதுவாகத் திராவிட மொழியினத்திற்கில்லை. ‘படு’ என்னும் வினை முதலைச் சேர்த்தே இஃது இக்காலை குறிக்கப்பட்டு வருகிறது. இந்திய-ஐரோப்பிய மொழிகளைப் போலன்றித் திராவிட மொழிகள் இடைச் சொற்களைப் பயன் படுத்துவதினும், சாரியை, உருபு முதலியவற்றையே பெருவாரியாகப் பயன்படுத்துகின்றன. திராவிட மொழிகளிலுள்ள வினைச் சொற்களுக்கும் உடன்பாடு, எதிர்மறை யென்ற இரண்டும் உண்டு. சொற் ருெடர்களைவிடக் குறிப்புப் பெயரெச்சங்களையே திராவிட மொழிகள் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றன.’’

 1. 1. The Munda.
 2. 2. The Linguistic Survey of India.
 3. 1. Santal Parganas.
 4. 2. Andhra-bhasha
 5. 3. Dravida-bhasha.
 6. 1. The Manual of the Administration of the Madras Presidency.
 7. 1. Indo-European.