கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்/கால்டுவெல் ஐயர்

விக்கிமூலம் இலிருந்து

கால்டுவெல் ஐயர்


மேல் நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற் போந்து தமிழ்த் தொண்டு செய்த அறிஞருள்ளே தலை சிறந்தவர் மூவர். வீரமாமுனிவர் ஒருவர் ; போப்பையர் மற்றொருவர்; இன்னொருவர் கால்டுவெல் ஐயர். இம்மூவரும் மூன்று வகையிலே தமிழ் மொழிக்குத் தொண்டு செய்தவர்கள். வீரமாமுனிவரும் போப்பையரும் செய்த சேவையை முன்னமே அறிந்தோம். இனி, கால்டுவெல் ஐயர் ஆற்றிய தமிழ்த் தொண்டைச் சிறிது கருதுவோம்.

கால்டுவெல் ஐயர் தம் வாழ்க்கை வரலாற்றை நான்கு வாக்கியங்களில் நன்கு விளக்கியுள்ளார். "நான் அயர்லாந்து தேசத்திலே பிறந்தேன். ஸ்காத்லாந்து தேசத்திலே கல்வி பயின்றேன்; ஆங்கில நாட்டுக் கிருஸ்தவ சங்கத்தைச் சார்ந்தேன் ; ஆயினும் இந்திய தேசத்திலே நெடுங்காலம் வாழ்ந்து, இந்தியரது வாழ்க்கையில் ஈடுபட்டமையால் நான் இந்தியருள் ஒருவனுய் விட்டேன்“ என்று அவர் கூறுகின்றார்.

கால்டுவெல், கிருஸ்தவ சங்கத் தொண்டராய் ஆயிரத்து எண்ணூற்று முப்பத்தெட்டாம் ஆண்டில் சென்னமா நகர் வந்துசேர்ந்தார். அப்போது அவருக்கு வயது இருபத்து மூன்று. அது முதல் அவர் ஐம்பத்து மூன்று ஆண்டுகள் தமிழ் நாட்டில் அருந்தொண்டு புரிந்தார். திருநெல்வேலி நாட்டிலுள்ள இடையன்குடி என்னும் சிற்றூரை அவர் இருப்பிடமாகக் கொண்டார். நெல்லைநாடு அவரைத் தன் மகனக ஏற்றுக்கொண்டது. இங்ஙனம் தம்மை ஏற்றுக்கொண்ட நெல்லை நாட்டிற்குச் சிறந்த முறையில் நன்றி செலுத்தினார் கால்டுவெல். திருநெல்வேலி நாட்டுச் சரித்திரத்தை வரன் முறையாக முதன் முதல் எழுதியவர் அவரே. அதனைச் சென்னை அரசாங்கத்தார் அச்சிட்டு வெளிப்படுத்தினர்; ஆசிரியருக்கு ஆயிரம் ரூபாய் நன்கொடையும் அளித்தனர்.

பாண்டி நாட்டின் பழம் பெருமையை அச்சரித்திர நூலிற் பரக்கக் காணலாம். முற்காலத்தில் பாண்டி நாட்டின் சிறந்த செல்வம் முத்துச் சலாபமே. அந்நாட்டைச் சேர்ந்த கடலில் நல்முத்து ஏராளமாக[1] விளைந்தது. பிற நாட்டார் தென்னுட்டு முத்தைப் பிரியமாக வாங்கி அணிந்து கொண்டார்கள். தமிழ் நாட்டுக் கவிகள் தென்னாட்டு முத்துச் செல்வத்தை வியந்து பாடி மகிழ்ந்தார்கள். இத்தகைய புகழ் வாய்ந்த முத்துச் சலாபம் திருநெல்வேலிக் கடற் கரையின் அருகே அமைந்திருந்தது. நெல்லை நாட்டை நீர் ஊட்டி வளர்க்கும் தாம்பிரபரணியாறு கடலோடு கலக்குமிடத்தில் கொற்கைத் துறைமுகம் விளங்கிற்று. முற்காலத்தில் கொற்கை உலகறிந்த பெருந் துறைமுக நகரமாய் இருந்தது. அத்துறையிலே மிகுதியாக முத்து விளைந்தது. அழகாக உருண்டு திரண்ட ஆணி முத்து அங்கே அகப்பட்டதென்று நெல்லை நாட்டுக் கவிஞராகிய குமர குருபரர் கூறுகின்றார்[2]. முத்து விளைந்த கொற்கைத் துறையைப் பழைய கிரீக்க ஆசிரியர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சீரும் சிறப்பும் வாய்ந்து விளங்கிய கொற்கை இப்பொழுது திருநெல்வேலி நாட்டிலே கடற்கரையிலிருந்து ஐந்து மைல் தூரத்தில் உள்ள சிற்றூராகக் காணப்படுகின்றது. அவ்வூருக்குச் சென்றார் கால்டுவெல் ஐயர் ; அதனைச் சிறிது துருவிப்பார்க்க ஆசைப்பட்டார்; திருநெல்வேலிக் கலெக்டரிடம் அனுமதிபெற்றுக் குறிப்பிட்ட சில இடங்களைத் தோண்டுவதற்கு ஏற்பாடு செய்தார். அப்போது கொற்கையூர் வாசிகள் திரண்டு எழுந்தார்கள் ; "வெள்ளைக்காரப் பாதிரியார் புதையல் எடுக்கப் புறப்பட்டு வந்தார்“ என்று எண்ணினார்கள். முன்னோர் பாடுபட்டுத் தேடி மண்ணிலே புதைத்து வைத்த பொன்னும் பொருளும் பூதங்களின் வசப்பட்டிருக்கும் என்றும், அவற்றை எவரேனும் புரட்டி எடுக்க முயன்றால் அப் பூதங்கள் கிளர்ந்தெழுந்து ஊராரையெல்லாம் அறைந்து கொன்று விடும் என்றும் அவர்கள் அஞ்சினார்கள். அவர்களது துயரத்தை யறிந்த கால்டுவெல் ஐயர், புதையலருகே தாம் போவதில்லை என்று வாக்களித்தார்; ஊரார் சிலரை உடன் இருந்து பார்த்துக்கொள்ளும்படி வேண்டினார். அங்கும் இங்கும் சில இடங்களை அவர் தோண்டிப் பார்த்தபொழுது பழைய கொற்கைத்துறை தரை மட்டத்திற்கு எட்டடிக்குக் கீழேயிருந்ததென்றும், அப்போது அதன் அருகே கடல் இருந்ததென்றும் தெளிவாகக் கண்டார்; தாம்பிரபரணியாற்று நீரில் கலந்து வந்த மண்ணும் மணலும் நாளடைவில் துறைமுகத்தைத் தூர்த்துக் கடலை ஐந்து மைல் தூரம் துரத்தி விட்டதென்று தெரிந்துகொண்டார்.

கொற்கைத் துறைமுகம் தூர்ந்த பின்னர் காயல் என்னும் கடற்கரையூர் சிறந்த துறையாயிற்று. அத்துறையும் தாம்பிரபரணி கடலோடு கலக்குமிடத்திலேயே அமைந்திருந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டி நாட்டுக்கு வந்த மார்க்கோபோலோ என்னும் மேலை நாட்டு அறிஞர் காயல் துறையைத் தமது நூலிற் குறிப்பிட்டுள்ளார். பாண்டி நாட்டில் "காயல் சிறந்ததொரு பெரு நகரம்“[3] என்று அவர் கூறுகின்றார். அரேபியா, சைனா முதலிய அயல் நாட்டுக் கப்பல்கள் காயல் துறைமுகத்தை நாடி வருவதையும், அத்துறையில் பரதவர் மூழ்கி முத்தெடுக்கும் முறையினையும் அவர் விவரமாக எழுதியுள்ளார். அக்காயலைத் துருவிப் பார்த்தார் கால்டுவெல். அவர் பார்த்த காலத்தில் காயலினின்றும் கடல் இரண்டு மைல் விலகி நின்றது. செம்படவரும் லெப்பையரும் அச்சிற்றூரில் வசித்து வந்தார்கள்.

காயல் துறைமுகம் துர்ந்த பின்னர் தூத்துக்குடி பாண்டி நாட்டுத் துறைமுகமாயிற்று. பதினைந்தாவது நூற்றாண்டு முதல், தமிழ் நாட்டில் வியாபாரம் செய்யத் தொடங்கிய போர்ச்சுகீசியர் முதலிய மேலே நாட்டார் தூத்துக்குடியைச் சிறந்த துறைமுகமாகத் திருத்தினர்கள். ஆகவே, பாண்டி நாட்டின் முற்காலத் துறைமுகம் கொற்கை : இடைக்காலத் துறைமுகம் காயல்; தற்காலத் துறைமுகம் தூத்துக்குடி. இவற்றை எல்லாம் நன்கு ஆராய்ந்து நமக்கு அறிவித்தவர் கால்டுவெல் ஐயரே.

இன்னும் முற்காலத்தில் சேர நாட்டுக் கரையிலும், சோழ நாட்டுக் கரையிலும் அமைந்திருந்த சிறந்த துறைமுகங்களைப் பிற நாட்டார் எழுதி வைத்த சரித்திரக் குறிப்புக்களிலிருந்து கண்டறிந்தார் கால்டுவெல் ஐயர். தென்னாட்டு முத்து பிற நாடுகளுக்குச் சென்றது போலவே உணவுப் பொருளாகிய அரிசியும் மரக்கலமேறிச் சென்றது. தமிழ் நாட்டில் வளமார்ந்த காவிரியாறு சென்ற இடமெல்லாம் செந்நெல் விளைத்தது. காவிரி நாடு எனப்படும் சோழ நாடே அன்றும் தமிழகத்தின் களஞ்சியமாய் விளங்கிற்று; இன்றும் களஞ்சியமாய் விளங்குகின்றது. காவிரியாறு கடலோடு கலக்குமிடத்தில் சிறந்த துறைமுகம் ஒன்று இருந்தது. காவிரிப்பூம்பட்டினம் என்றும் பூம்புகார் நகரம் என்றும் பண்டை இலக்கியங்கள் அதனைப் பாராட்டுகின்றன. அத்துறைமுகத்தின் வழியாகத் தமிழ் நாட்டு அரிசி மேல் நாடுகளுக்குச் சென்றது. கிரிக்கு மொழியில் அரிசியை அருஸா எனச் சிதைத்து வழங்கலாயினர் ; அதனடியாகவே ஆங்கிலத்தில் வழங்கும் ரைஸ் என்னும் சொல் பிறந்தது. இவற்றையெல்லாம் ஆராய்ந்து கண்டவர் கால்டுவெல் ஐயரே.

இன்னும் தோகை என்னும் சொல், தமிழிலும் மற்றைய திராவிட மொழிகளிலும் மயிலின் இறகைக் குறிப்பதாகும். மயிலிறகு தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட காலத்தில் தோகை என்ற சொல்லும் அதனுடன் பிற நாடுகளுக்குச் சென்றது. ஈபுரு மொழியிலுள்ள கிருஸ்தவ வேதமாகிய பைபிளிற் காணப்படும் துகி என்னும் சொல் தோகையின் சிதைவேயாகும் என்று விளக்கிக் காட்டினார் கால்டுவெல் ஐயர்.

தமிழ் நாட்டுக் கோழியைப்பற்றி அவர் செய்துள்ள ஆராய்ச்சியும் அறியத்தக்கதாகும். மத்திய ஆசியாவில் வழங்கும் சித்திய மொழிகளில் கோழியைக் கோரி என்ற சொல்லாற் குறிக்கின்றார்கள். கோரி என்பது கோழி என்ற தமிழ்ச் சொல்லின் சிதைவே என்று கால்டுவெல் ஐயர் காட்டியுள்ளார். தமிழில் சிறப்பெழுத்தாக வழங்கும் ழகரம் பிறநாட்டார் நாவில் எளிதாக நுழைவதில்லை. சோழ மண்டலக் கரையைக் கோர மண்டலக் கரையாகச் சிதைத்தனர் மேலே நாட்டார். தமிழகத்தைத் தமரிக்கா என்று குறித்தார் பழைய யவன ஆசிரியர் ஒருவர். இவ்வண்ணமே ஆசிய தேசத்து மொழிகளிலும் கோழி என்பது கோரியாயிற்று. தமிழ்நாட்டில் வான்கோழி என்னும் ஒரு வகைக் கோழி உண்டு. அதைக் குறித்துப் பாடியுள்ளார் ஒரு தமிழ்க் கவிஞர்.

"கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத்—தானும்தன்
பொல்லாச் சிறகைவிரித் தாடினாற்போலுமே
கல்லாதவன் கற்ற கவி.”

என்பது மூதுரை யென்னும் தமிழ் நூலிற் கண்ட பாட்டு. அந் நூல் செய்தவர் ஔவையார் என்பர். கால்டுவெல் ஐயர் அதைப்பற்றி ஒன்று கூறுகின்றார். வான்கோழி ஐரோப்பிய நாடுகளிலிருந்து பதினாறாம் நூற்ருண்டில் தமிழ் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆங்கிலத்தில் அதற்கு டர்க்கி என்பது பெயர். வான்கோழியைப் பற்றிய குறிப்பு மூதுரையில் காணப்படுவதால் அந்நூல் பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்னே எழுதப்பட்டிருத்தல் இயலாது என்று அவர் கருதுகின்றார்.

இவ்வாறு சரித்திர ஆராய்ச்சியால் பல உண்மைகளே வெளிப்படுத்திய கால்டுவெல் ஐயர் தென்னிந்தியாவில் வழங்கும் திராவிட மொழிகளுக்குச் செய்த அருந்தொண்டு எந்நாளும் அழியாததாகும். நெடுங்காலமாகத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் என்னும், ஐந்து மொழிகளும் தென்னிந்தியாவில் வழங்கி வருகின்றன. ஆயினும் அவை ஐந்தும் ஒரு தனிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் என்றும், அவற்றுள் சாலப் பழமை வாய்ந்தது தமிழ் மொழியே என்றும் ஆராய்ச்சி யுலகத்திற்குக் காட்டியவர் கால்டுவெல் ஐயரேயாவர். இன்று தென்னிந்திய சர்வ கலாசாலைகளில் திராவிட மொழிகள் ஏற்றமும் தோற்றமும் பெற்று விளங்குவதற்கு அடிப்படை கோலியவர் அவரே. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் பெயரால் அவர் எழுதியுள்ள ஒப்பற்ற இலக்கணம் தென்னிந்திய மொழிகள் உள்ளளவும் அழியாததாகும்.

கால்டுவெல் ஐயர் பல மொழிகளைக் கற்றறிந்த வித்தகர். அவர் இளமையிலேயே மேலைநாட்டுச் செம்மொழிகளாகிய கிரிக்கும் லத்தீனும் கற்றிருந்தார் ; கிருஸ்து மதப் பழைய வேதங்களை விளக்கமாகத் தெரிந்துகொள்ளும் பொருட்டு ஈபுரு மொழியைப் படித்தார் ; தமிழ் நாட்டுக்கு வந்த பின்னர் வடமொழியாகிய ஆரியத்தையும், தென் மொழியாகிய தமிழையும் ஆர்வத்தோடு பயின்றார்; ஜெர்மானிய அறிஞர்கள் இந்திய மொழிகளைக் குறித்து எழுதியிருந்த ஆராய்ச்சி நூல்களை அறிந்து கொள்வதற்காக ஜெர்மானிய மொழியைக் கற்றார். இவ்வாறு சிறந்த பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்த கால்டுவெல் ஐயர் தென்னிந்திய மொழிகளுக்குத் தொண்டு செய்யத் தலைப்பட்டார்.

இயற்கையிலேயே மொழி நூல் ஆராய்ச்சியில்[4] ஆர்வமுடையவராயிருந்தார். கால்டுவெல். ஸ்காத்லாந்து தேசத்திலுள்ள கிளாஸ்கோ சர்வ கலாசாலேயில் அவர் கல்வி பயின்றபோது அவ்வாசை அதிகரித்தது. அதற்குக் காரணமாக இருந்தவர் அச்சர்வகலாசாலையில் கிரீக்குமொழி கற்பித்த பேராசிரியர். அவர் ஊக்கமாக நடத்திய மொழி நூற்பாடம் கால்டுவெல் உள்ளத்தில் பசுமரத்தாணிபோற் பதிந்தது. பல மொழிகளை ஒப்பிட்டு ஆராயும் முறையில் அவருக்கு இருந்த ஆசை வளர்ந்தெழுந்தது. சர்வகலாசாலையில் பி. ஏ. பட்டம் பெற்றுத் தமிழ்நாட்டில் தொண்டு செய்யப் போந்தபோது அவர் மனத்திலெழுந்த ஆசை நிறைவேறுவதற்கு நல்லதோர் வாய்ப்புக் கிடைத்தது.

கால்டுவெல் ஐயர் தமிழ் மொழிக்குச் செய்துள்ள நன்மையை நன்கு அறிந்துகொள்ள வேண்டுமானல், அவர் காலத்திற்கு முன்னே தமிழ் நாட்டில் வழங்கிய சில கொள்கைகளைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். தென்னாட்டு மொழியாகிய தமிழை வடநாட்டு மொழியாகிய ஆரியத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. நினைப்பிற்கு எட்டாத நெடுங் காலமாக ஆரியமும் தமிழும் இந்திய நாட்டில் வழங்கி வருதலால் அவற்றைக் கடவுளே பிறப்பித்தார் என்று அறிஞர்கள் கருதினார்கள். ஆதிபகவனே ஆரிய இலக்கணத்தைப் பாணினி முனிவர்க்கும், தமிழ் இலக்கணத்தை அகத்திய முனிவர்க்கும் அறிவுறுத்தியதாகப் பாடினர் ஒரு புலவர்.[5]

அகத்தியர் இயற்றிய இலக்கணம் மறைந்துவிட்டமையால் ஆரிய இலக்கணத்தைப் பின் பற்றித் தமிழிலக்கணம் எழுதத் தலைப்பட்டார் பலர். வீரசோழியம் என்னும் இடைக்காலத் தமிழிலக்கணம் அப்போக்கை நன்கு காட்டுகின்றது. நாளடைவில் ஆரிய மொழியிலிருந்தே தமிழ் முதலிய தென்னாட்டு மோழிகள் எல்லாம் பிறந்தன என்னும் கருத்து நிலைபெறுவதாயிற்று. பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கணக் கொத்து என்ற நூலில் இக்கொள்கை அழுத்தமாகக் கூறப்படுகின்றது. "வட மொழி தென்மொழி எனும் இரு மொழியினும், இலக்கணம் ஒன்றே என்றே எண்ணுக“ என்றார் அவ்விலக்கண ஆசிரியர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கால்டுவெல் செய்த ஆராய்ச்சியின் பயனாக அக்கொள்கை தவறு என்பது நன்கு விளங்கிற்று. அக்காலத்தில் மதிநலம் வாய்ந்த மேலைநாட்டுத் தொண்டர் நால்வர். நான்கு சிறந்த திராவிட மொழிகளையும் ஆராயத் தொடங்கினார்கள். மலையாள மொழியை [6]டாக்டர் குந்தார்த்தர் துருவி யறிந்தார். கன்னடத்தை டாக்டர் கிட்டல் கற்றுணர்ந்தார். தெலுங்கை பிரெளவுன் என்னும் அறிஞர் ஆராய்ந்தார். தமிழின் நீர்மையை அளவிட்டறிந்து கொண்டிருந்த கால்டுவெல் ஐயர், இம் மூவரும் செய்த ஆராய்ச்சியைத் துணைக்கொண்டு "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்“ என்னும் சிறந்த நூலை இயற்றினார்.

ஆரிய மொழியின் இலக்கணம் வேறு, திராவிட மொழியின் இலக்கணம் வேறு என்பதைக் கால்டுவெல் தமது ஒப்பிலக்கணத்தில் தெள்ளத் தெளிய உணர்த்தினார்; தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளுக்கும் அடிப்படையான இலக்கணம் ஒன்றே என்பதைச் சான்று காட்டி நிறுவினார் ; தென்னிந்திய மொழிகளைத் திராவிட மொழி என்னும் பொதுச் சொல்லாற் குறித்தார். அவர் இட்ட பெயர் மொழிநூல் உலகத்தில் நிலைத்துவிட்டது.

தமிழ் மொழியைக் குறித்து ஒப்பிலக்கணத்திற் காணப்படும் இரண்டொரு கருத்துக்களை இங்கே கூறலாம். சங்க காலம் என்று சொல்லப்படும் பழங் காலத்தில் எழுதப்பட்ட நூல்களில் ஆரியச் சொற்கள் அருகியிருத்தலையும், பிற்காலத்தில் எழுதப்பட்ட தமிழ் நூல்களில் ஆரியப் பதங்கள் பெருகியிருத்தலையும் கால்டுவெல் ஐயர் எடுத்துக் காட்டுகின்றார். தமிழ் மொழியில் பல கருத்துக்களை உணர்த்தக்கூடிய பதங்கள் இருந்தும், அவற்றைக் கைவிட்டு ஆரியப் பதங்களே எடுத்தாளும் பழக்கம் ஏற்பட்டதனாலேயே நாளடைவில் பல தமிழ்ச் சொற்கள் இறந்து பட்டன என்று கூறுகின்றார். இன்னும், ஆரியச் சொற்களின் உதவியின்றியே தமிழ் தனித்து இயங்கவும், செழித்து ஓங்கவும் கூடும் என்று சொல்கின்றார். இவை போன்ற பல ஆழ்ந்த கருத்துக்கள் ஒப்பிலக்கணத்தில் ஆராய்ந்து கூறப்பட்டுள்ளன. சுருங்கச் சொல்லின், திராவிட மொழிகளுக்குப் புத்துயிர் அளித்தவர் கால்டுவெல் ஐயரே. அம்மொழிகளின் பழமையையும் பண்புகளையும் மேலைநாட்டார்க்குச் செப்பமாகக் காட்டியவர் கால்டுவெல் ஐயரே. ஆதலால் திராவிட மொழிகள் உள்ளளவும் அவர் இயற்றிய ஒப்பிலக்கணம், குன்றில் இட்ட விளக்குப்போல் நின்று. நிலவும் என்பது திண்ணம். கால்டுவெல் ஐயர் வாழ்ந்த இடையன்குடி இக்காலத்தில் எல்லா வன்கயிலும் ஏற்றமுற்று முன்னணியில் நிற்கின்றது. அங்குள்ள பெரிய கிருஸ்தவக் கோயில் கால்டுவெல் ஐயரின் சிறந்த ஞாபகச் சின்னமாக விளங்குகின்றது. அத்திருப் பணியைச் செய்து முடித்தவர் அவரே. கோயில் கட்டுமான வேலை அரை குறையா யிருக்கும் பொழுது சென்னைக் கவர்னர் லார்டு நேப்பியர் இடையன்குடிக்கு விஜயம் செய்தார் ; பரிவாரங்களோடு ஒரு வாரம் அங்குத் தங்கி ஐயரோடு அளவளாவி மகிழ்ந்தார்; ஐந்நூறு ரூபாய் திருப்பணிக்கு நன்கொடையாக அளித்தார்.

கால்டுவெல் ஐயர் தமிழ் நாட்டில் வாழ்ந்த ஐம்பத்துமூன்று ஆண்டுகளில் மூன்று முறை ஆங்கில நாட்டுக்கு இளைப்பாறச் சென்றார். மூன்றாம் முறை சென்றபொழுது அங்கேயே தங்கி விடும்படி அன்பர் பலர் அவரை வேண்டிக்கொண்டார்கள். அதற்குக் கால்டுவெல் இணங்கவில்லை. "இத்தனை காலமும் இந்தியர்களுக்காகவே வாழ்ந்தேன்; இன்னும் உயிர் உள்ள அளவும் அவர்களுக்காகவே உழைப்பேன் ; அவர்கள் நாட்டிலேயே உயிர் துறப்பேன்“ என்று உருக்கமாகக் கூறினார். அவ்வாறே எழுபத்தேழாம் வயதில் கொடைக்கானல் மலையில் அவர் ஆவி பிரிந்தது.

ஐயர் மேனியை இடையன்குடிக்கு எடுத்துச் சென்று அவர் கட்டிய கோயிலிலே அடக்கம் செய்தார்கள். தன்னலம் கருதாது, மெய்வருத்தம் பாராது, தமிழ் நாட்டுக்காகவே ஐம்பத்து மூன்று ஆண்டுகள் அரும்பணி புரிந்து அமைதியுற்ற கால்டுவெல் ஐயர் தமிழ்த் தாயின் தவப்ப்தல்வர் அல்லரோ ?







குறிப்புகள்

  1. "வேழம் உடைத்து மலைநாடு, மேதக்கச்
    சோழ வளநாடு சோறுடைத்து-பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து, தெண்ணீர் வயற்றொண்டை
    தன்னாடு சான்றோர் உடைத்து“

    என்று பாடினார் ஔவையார்.

  2. "கோடும் குவடும் பொருதரங்கக் குமரித்துறையிற்
    படுமுத்தும் கொற்கைத் துறையில் துறைவாணர்
    குளிக்கும் சலாபக் குவால் முத்தும்
    ஆடும் பெருந்தண் துறைப் பொருநை
    ஆற்றிற் படுதெண் நிலா முத்தும்
    அந்தண் பொதியத் தடஞ்சாரல்
    அருவிசொரியும் குளிர் முத்தும்“

    என்பது அவர் அருளிய பாட்டு.

  3. “a great and noble city.”
  4. Comparative Philology.
  5. "வடமொழியைப் பாணினிக்கு
    வகுத்தருளி அதற்கிணையாத்
    தொடர்புடைய தென்மொழியை
    உலகமெலாம் தெர்ழுதேத்தும்
    குடமுனிக்கு வலியுறுத்தார்
    கொல்லேற்றுப் பாகர் எனில்
    கடல்வரைப்பின் இதன் பெருமை
    யாவரே கணித்தறிவார்.“

  6. Dr. Gundert