கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்/போப்பையர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

2. போப்பையர்


போப்பையர் என்று தமிழ் நாட்டார் போற்றும் அறிஞர் பத்தொன்பதாம் வயதில் தமிழ் நாட்டில் கிருஸ்தவப் பணி செய்ய வந்தார் ; அறுபதாண்டளவும் தமிழகத்தில் அரும்பணி ஆற்றினார் : பின்பு சீமைக்குச் சென்று ஆக்ஸ்போர்டு சர்வ கலாசாலையில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிக்கும் ஆசிரியராக அமர்ந்து, இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்த் தொண்டு செய்தார். சுருங்கச் சொல்லின், இவர் மேலை நாட்டார்க்குத் தமிழகத்தின் கலைச் செல்வத்தைக் காட்டினார் ; நீதியின் நீர்மையை உணர்த்தினார் ; ஞானச் செல்வத்தை வழங்கினார்; தமிழ்ப்பணியே தம் உயிர்ப்பணியாகக் கொண்டார் என்னலாம்.[1]


இத்தகைய பெரியாரது தமிழ்த் தொண்டு நெல்லை நாட்டிலே தொடங்கிற்று. அந்நாட்டில் [2]சாயர்புரம் என்னும் ஊர் ஒன்று உண்டு. அது கிருஸ்தவ நாடார்கள் நிறைந்த சிற்றூர். அங்கே கிருஸ்து மத போதகராகச் சென்றார் போப்பையர்; அவ்வூரில் உள்ள சிறுவர்களின் அறிவை வளர்ப்பதற்கு ஒரு கல்லூரி அமைத்தார்; சிறந்த ஆசிரியர்களைப் பாடம் சொல்ல நியமித்தார். எல்லாக் கலைகளும் அங்கே போதிக்கப்பட்டன. பள்ளிப் பிள்ளைகள் தினந்தோறும் படிக்க வேண்டிய பாடம்: தமிழ், லத்தீன், கிரீக்கு, ஈபுரு ; அதற்கு மேல் கணிதம், தர்க்கம், தத்துவம் இவற்றைப் போதிப்பதற்குப் பகற் பொழுது போதாமையால் இரவிலும் நெடுநேரம் பாடம் நடைபெற்றது. சாயர்புரக் கல்லூரி ஒரு சர்வகலாசாலையாக விளங்குதல் வேண்டும் என்பது போப்பையரின் ஆசை. தம் இளங் குழந்தைகள் இனிது வளர வேண்டும் என்ற ஆசையால் அளவுக்கு அதிகமாக உணவையூட்டி வயிற்று நோயை வரவழைக்கும் தாயாரைப்போல் பள்ளிப் பிள்ளைகளின் அறிவை வளர்க்கக் கருதிய போப்பையர் பளுவான பாடங்களைச் சுமத்தி மலைப்பையும் திகைப்பையும் உண்டாக்கினர். மாணவர்கள் ஒருவர் பின்னே ஒருவராய் நழுவத் தொடங்கினர். ஐயரும் ஊக்கம் இழந்து, உடல் நலம் குன்றி ஆங்கில நாட்டுக்கு இளைப்பாறச் சென்றார்.

இரண்டு ஆண்டுகள் இளைப்பாறி மீண்டும் இவர் தமிழ் நாட்டுக்குப் பணி செய்ய வந்தார். தஞ்சாவூரிலும், நீலகிரியிலுள்ள உதகமண்டலத்திலும், மைசூர் தேசத்தில் உள்ள பங்களுரிலும் பல்லாண்டுகளாகச் சிறந்த தொண்டு புரிந்தார். நீலகிரியிலுள்ள ஊட்டியில் போப்பையர் பத்தாண்டு பாடசாலை யொன்று நடத்தினார். அப்பொழுது அம்மலையில் வாழும் தோடர் என்ற இனத்தாரோடு இவர் நெருங்கிப் பழக நேர்ந்தது. தோடர் பேசும் மொழியில் பாட்டும் இல்லை ; வசனமும் இல்லை. எருமை மாடு மேய்ப்பதே அவர்கள் தொழில். அன்னார் குடியிருக்கும் ஊருக்கு மந்து என்பது பெயர். கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுச் சென்னை அரசாங்கத்தாரும் செல்வரும் சென்றடைகின்ற 'ஒத்தக்க மந்து' என்ற ஊரின் பெயரில் அச்சொல்லைக் காணலாம். [3]ஒத்தைக்கல் மந்து என்று தோடரால் இடப்பட்ட பெயரே ஒட்டக்க மண்டாயிற்று என்று சிலர் கருதுகின்றார்கள். நீலகிரித் தோடர் பேசும் மொழியைப் போப்பையர் ஆராய்ந்து அதன் இலக்கணத்தை எழுதியுள்ளார்.

தமிழ் மொழிக்கு ஐயர் செய்த தொண்டுகள் பலவாகும். தமிழில் அமைந்த அருமையான நீதி நூல்களை இவர் படிப் படியாகக் கற்றார். பள்ளிச் சிறுவர் முதலாகப் பரிபக்குவமடைந்த பெரியோர் ஈருக எல்லோருக்கும் பயன்படத்தக்க முறையில், தமிழ் மொழியில் நீதி நூல்கள் அமைந்திருக்கக் கண்டு மனம் மகிழ்ந்தார். ஐந்து வயதில் பள்ளிக்குச் செல்லும் சிறுவர் "அறச்செய விரும்பு“, "ஆறுவது சினம்“ என்று பாடல் ஓதுகிறார்கள். அறிவு வளர வளர தாலடியார், திருக்குறள் முதலியவற்றை நுணுகி நுணுகி, ஆராய்கின்றார்கள். நீதி நூல் வகையில் தலை சிறந்த பெருமை தமிழ் நாட்டில் நால்டியாருக்கும் திருக்குறளுக்கும் உண்டு. "ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி“ என்பது இந்நாட்டுப் பழமொழி. நாலு என்பது நான்கு அடிகளில் அமைந்த நாலடியார். இரண்டு என்பது ஈரடிகளில் அமைந்த திருக்குறள். இவ்விரண்டு நீதி நூல்களிலும் அடங்கிய அறிவுச் செல்வத்தை ஆராய்ந்தறிந்தார் போப்பையர்; அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

போப்பையர் காலத்திற்கு முன்னமே திருக்குறள் சில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. வீரமாமுனிவர், திருக்குறளின் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் லத்தீன் மொழியில் மொழியில் பெயர்த்திருந்தார். ஜெர்மன் மொழியில் கிரால் என்பவர் திருக்குறளை முற்றும் மொழி பெயர்த்திருந்தார். பிரஞ்சு மொழியில் ஏரியல் என்பவரால் திருக்குறளின் ஒரு பாகம் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் அதனை மொழி பெயர்க்க முயன்றவர்கள் அரைகுறையாக விட்டுப் போயினர். எல்லீசர் என்னும் அறிஞர் பதின்மூன்று அதிகாரங்களின் சில பகுதிகளை மொழிபெயர்த்திருந்தார். துருவர் என்னும் ஆங்கிலப் பாதிரியார் அறுபத்து மூன்று அதிகாரங்களை மொழிபெயர்த்து விட்டு விட்டார். இந்த நிலையில் இருந்த திருக்குறளை முற்றும் ஆராய்ந்து, நன்றாக மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் வெளியிட்ட பெருமை போப்பையருக்கே உரியதாகும்.

அந்நூலை மொழி பெயர்க்கும் பொழுது கிருஸ்து நாதர் அருளிய சில கருத்துக்களும், திருவள்ளுவர் கருத்துக்களும் ஒற்றுமையுடையனவாக இருக்கக் கண்டு இவர் உள்ளம் மகிழ்ந்தார். இவ் வகையில் போப்பையர் மனத்தைக் கவர்ந்த குறள்களில் இரண்டொன்றைப் பார்ப்போம்.

"ஒறுத்தார்க்(கு) ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்“

என்ற குறள் இவர் உள்ளத்தை அள்ளுவதாயிற்று. கிருஸ்து நாதரது வாழ்க்கையின் சிறப்பினை எடுத்துக் காட்டுவதுபோல் தோன்றிற்று இப்பாட்டு. தீயவர் பலர் கிருஸ்து நாதரைத் துன்புறுத்தினார்கள் ; கழியால் அடித்தார்கள் ; அவர் மீது காறி உமிழ்ந்தார்கள். இவ்வாறு அவரை ஒறுத்த சிறியோர் ஒரு நாளை இன்பத்தையே பெற்றார்கள். ஆனால் அச்சிறுமை யெல்லாம் பொறுத்திருந்த கிருஸ்து நாதரோ உலகமுள்ளளவும் அழியாப் புகழ் பெற்றார். இவ்வுண்மையைக் குறட்பாவிலே கண்டு இன்புற்றார் போப்பையர். இன்னும் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்தல் வேண்டும் என்பது திருவள்ளுவர் கொள்கை. "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண, நன்னயம் செய்துவிடல்“ என்பது வள்ளுவர் வாக்கு. கிருஸ்து நாதரைப் பகைவர்கள் சிலுவையில் அறைந்த பொழுது அவர் பேசிய வாசகத்தின் பொருளும், வள்ளுவர் குறளின் பொருளும் ஒன்றுபட்டிருக்கக் கண்டார் போப்பையர். தம் கையிலும் காலிலும் இருப்பாணி அறைந்து பொறுக்க முடியாத துயரம் விளைத்த பகைவரைக் கிருஸ்து நாதர் வெறுத்தாரல்லர் ; சபிக்க நினைத்தாரல்லர் ; அக்கொடியாரிடம் இரக்கம் கொண்டார்; அவரை மன்னிக்கும்படி ஆண்டவனை வேண்டிக்கொண்டார். இது இன்னா செய்தார்க்கு நன்னயம் செய்தல் அன்றோ ?

இங்ஙனம் சிறந்த ஒற்றுமைகளைக் கண்ட போப்பையர் மனத்தில் ஒரு கருத்துத் தோன்றிற்று. திருமயிலாப்பூரில் வாழ்ந்த திருவள்ளுவர், அர்ச்தாமஸ் முதலிய கிருஸ்தவ சீலர்கள் அங்குச் செய்த போதனையை அறிந்து இவ்வுண்மைகளை வெளியிட்டிருக்கலாம் என்னும் பொருள்பட எழுதியுள்ளார். [4]இது அறிஞர் ஆராய்தற்குரியதாகும்.

இன்னும் போப்பையர் மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் என்னும் அருள் நூலையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தமிழ்நாட்டில் திருவாசகத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. படிப்போர் மனத்தை உருக்கிப் பக்தியை விளைவிக்கும் பான்மையில் ஒப்பற்ற நூல் திருவாசகம். "திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்“ என்பது இந்நாட்டில் நெடு மொழியாக வழங்குகின்றது. அந்நூலில் அடங்கிய அறுநூற்று ஐம்பத்தெட்டுப் பாடல்களையும் போப்பையர் ஆராய்ந்து அறிந்தார். ஆக்ஸ்போர்டு சர்வகலாசாலையில் ஆசிரியராக இருந்தபோது இவர் அந்நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கத் தொடங்கினர். அப்போது இவருக்கு வயது எழுபத்தேழு. எடுத்த வேலை முடியுமளவும் உயிர் இருக்குமோ என்ற ஐயம் இவர் உள்ளத்தில் எழுந்ததுண்டு.

ஒரு நாள் மாலேப்பொழுதில் பால் நிலா எங்கும் பரந்திருந்தது. பாலியல் கலாசாலைத் தலைவராகிய பெரியாரும் போப்பையரும் ஒரு நிலாமுற்றத்தில் இருந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப் பெரியாரிடம் திருவாசகத்தின் பெருமையை எடுத்துரைத்தார் போப்பையர். இப்படிப்பட்ட புத்தகத்தை விரைவில் அச்சிட்டு வெளியிடல் வேண்டும் என்று அழுத்தமாகக் கூறினர் பெரியவர். அவரது ஆர்வத்தை அறிந்த போப்பையர், "ஐயனே, அவ்வேலை முடிவதற்கு நெடுங்காலம் செல்லுமே; நான் சாகாவரம் பெற்றிலேனே“ என்றார். அது கேட்ட பெரியவர் போப்பையர் தோளைப் பற்றிக் கொண்டு, அறிஞரே! ஒரு பெரிய வேலையைத் தொடங்கி நடத்துவதுதான் நெடுங்காலம் வாழ்வதற்குரிய வழி. அவ்வேலை முடியுமளவும் உயிர் இருந்தே தீரும்“ என்று உறுதியாகக் கூறினர். அவ்வாய்மொழியைப் போப்பையர் தாரக மொழியாகப் போற்றினார்; தளர்வுற்ற பொழுதெல்லாம் அம்மொழியை நினைத்து ஊக்கமும் உறுதியும் பெற்றார் ; தமது எண்பதாவது பிறந்த நாளன்று திருவாசகத்தை அச்சிட்டு வெளிப்படுத்தினார். அப் பெரும்பணியை நிறைவேற்றிய போது இவர் மனம் சிறந்த இன்பம் அடைந்தது. தோன்றாத் துணையாக நின்று உதவிய இறைவன் கருணையை ஐயர் வாயார வாழ்த்தினார்; நேர் முகமாக நின்று ஆசியுரை கூறி ஊக்கப்படுத்திய பாலியல் கலா சாலைப் பெரியார் அம் மகிழ்ச்சியிற் கலந்து கொள்ளாது மாண்டுபோயினரே என்று மனம்வருந்தினர்.

போப்பையர் வெளியிட்ட திருவாசகத்தை அறிஞர் உலகம் ஏற்றுப் போற்றுவதாயிற்று. பாரிஸ் நகரத்தின் தேசியக் கலாசாலையில் பேராசிரியராக விளங்கிய சூலியன் வின்சன் என்பவர் ஒரு தமிழ்ப் பாட்டு இயற்றிப் போப்பையரைப் புகழ்ந்தார். "இரு வினை கடந்த செல்வன் இசைத்த வாசகத்தை யெல்லாம், வரு விளையாட்டாற் போலும் மறுமொழி யதனில் வைத்தீர்" என்பது வின்சன் வாக்கு. தமிழ் நாட்டுப் புலவர்கள் ஐயர் திருவாசகத்தைப் பாட்டாலும் உரையாலும் பாராட்டினர்கள்."[5]

இத்தகைய அரிய தமிழ் நூல்களை அச்சிட்டு வெளிப்படுத்தும் வகையில் மிகுந்த கைப்பொருளைச் செலவிட்டார் போப்பையர். அவற்றை ஆங்கில நாட்டார் அதிகமாக வாங்கி ஆதரிக்க மாட்டார் என்பது இவருக்கு நன்கு தெரியும். ஆயினும் தம் கைப்பொருளைச் செலவு செய்தேனும் தமிழ் நாட்டாருடைய கலைச் செல்வத்தையும் ஞானத்தையும் மேலே நாட்டாருக்குக் காட்டுதல் வேண்டும் என்பதே இவர் கருத்து. 'தமிழ்ப் புலமையே வறுமைக்கு நேரான வழி' என்று இவர் அடிக்கடி கூறுவதுண்டு. எனவே, பயன்கருதாது தமிழ் மொழிக்குத் தொண்டு புரிந்த பெருமக்களில் போப்பையரும் ஒருவர் என்று கூறுதல் ஒரு சிறிதும் மிகையாகாது.

பழுத்த புலவராகிய போப்பையர் எண்பத்தாறாவது வயதை எட்டினர். அப்பொழுது ஆங்கில நாட்டுக் கலைஞர் சங்கம் இவரைப் பெருமைப்படுத்த முன்வந்தது. மாட்சிமை தங்கிய விக்டோரியா மகாராணியாருடைய வயிர விழாவின் ஞாபகார்த்தமாக ஆங்கில நாட்டு ராயல் 'ஏஷியாட்டிக் சொசைட்டி' என்ற சங்கத்தில் ஒரு தங்க மெடல் பரிசு ஏற்படுத்தியிருந்தார்கள். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசாங்கத்தார் தேர்ந்தெடுக்கும் அருங்கலைவாணர் ஒருவருக்கு அப்பரிசு வழங்கப்பட்டு வந்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஆறாம் ஆண்டில் அப்பரிசு பெறுவதற்கு உரியவராகப் போப்பையர் தேர்ந்தெடுக்கப்பட்டார்[6]. அப்பொழுது இந்திய நாட்டு மந்திரியாக இருந்த சர். ஜான் மார்லி என்பவர் தலைமையில் ஒரு பாராட்டுச் சபை கூடிற்று. போப்பையர் தமிழுக்குச் செய்துள்ள அரும்பெருஞ் சேவைகளைத் தலைவர் புகழ்ந்து பேசித் தங்கப் பதக்கத்தைப் புலமைப் பரிசாக அளித்தார். பலர் அறிஞர் ஐயரைப் பாராட்டி ஆசி கூறினாள்கள்.

அதற்கு அடுத்த ஆண்டில் போப்பையர். இவ்வுலகத்தை விட்டகன்றார். தமது கல்லறையில் "போப்பையர்—[7] ஒரு தமிழ் மாணவர் என்ற வாசகம் எழுதப்படல் வேண்டும் என்று இவர் ஆசைப்பட்டார். இவரது தமிழ் ஆர்வத்திற்கு இவ்விருப்பம் ஒன்றே போதிய சான்றாகுமன்றோ ? எந்நாட்டிற் பிறந்தாலும், எந்நாட்டில் இறந்தாலும் போப்பையரைப் போன்றவர்கள் சிறந்த தமிழரே. என்பதில் தடையும் உண்டோ?


குறிப்புகள்

 1. Dr. Pope himself had truly said that Tamil Scholarship was the direct road to poverty. Notwithstanding this disadvantage, Dr. Pope had devoted almost sixty years of his life to the study of the Tamil. literature and to its critical examination.-Siddhanta Deepika Vo. VII p. 192.
 2. சாமுவேல் சாயர் என்னும் போர்ச்சுகீசியக் கிருஸ்தவரது பொருள் உதவியால் வாங்கப்பட்ட நிலத்தில் எழுந்த ஊர் சாயர்புரம் என்று பெயர் பெற்றது.
 3. ஒத்தைக்கல் மந்து என்பது ஒற்றைக்கல் மன்று என்ற சொல்லின் சிதை வென்பர்.
 4. “Pope speaks of the Kural as the one Oriental book much of whose teachings is an echo of the Sermon on the Mount.........Many Christians have a tendency to think that the ideas of forgiving one's enemies, abstaining from returning evil for evil, humility etc. have been first taught to the world only by Jesus Christ. But it can be safely asserted that these ideas were the common property of great minds at least for centuries before Jesus was born, and Tiruvalluvar had enough in the sacred literature of India, to say nothing of his illumined Self to enable him to build these truths is his grand scheme of life without being in any way indebted to the teachings of Jesus, though he would certainly have studied with love and humility the teachings of the great Risihi had he known of his existence "-Preface to V. V. S. Iyer's Tirukurai,
 5. தெய்வத் தமிழ்மறைச் செய்யமெய்ப் பொருளைச்
  செந்தமிழ் பயிலா மைந்தர் நன்குணரத்
  தீங்கில தாகிய ஆங்கில மொழியில்
  பெயர்த்தினி தளித்துப் பேரிசை நிறுவினன் அன்னபேர் அறிஞன் யாரெனிற் கூறுதும்
  ஆங்கில நாட்டுக்கு அணியென உதித்து
  அருந்தமிழ் அணங்கைத் திருந்திய செவிலித் தாயென வளர்க்கும் நேயமிக் குடையோன்
  கிருஸ்தவ சமயக் குருத்துவ சீலன்
  போப்பெனும் நாமம் புனைந்த நாவலனே“

  என்று பாடினர். சரவணப்பிள்ளை என்ற புலவர்.

 6. In commemoration of the Diamond Jubilee of Queen Victoria the Royal Asiatic Society established a Gol; Medal to be awarded every third year to some specially selected savant of repute by whose labours Oriental learning has been encouraged amongst English speaking people throughout the world. The time for this triennial award has once more come round and the choice has fallen on that eminent Tamil scholar, the Rev. G. U. Pope—The Times of India dated 20th April 1906.
 7. Whenever I die "A Student of Tamil wil be inscribed on my monument "-Dr. Pope's letter dated 20th October, 1900, to J. M. Nallasami Pillai–Editor of the Siddhanta Deepika.