கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/இரண்டு கெட்டான் ஈதிமஸ்
ஒருவன் ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றிபெற்று புகழடைந்து விட்டான் என்றால், அவனை இந்திரன் சந்திரன் என்று நம்மவர்கள் போல புகழந்து பேசி, ஓகோ என்று வானளாவ உயர்த்தி, கதை கட்டி விடுகின்ற பழக்கம், கிரேக்கத்தில் நம்மைவிட சற்று அதிகமாகவே இருந்திருக்கிறது.
அந்த வீரன் எப்படிப்பட்டவன் என்பதைக் கூட அவர்கள் எண்ணிப்பார்ப்பதுமில்லை. அந்த இரண்டுங்கெட்டான் நிலைக்கு உள்ளாகியிருந்த ஈதிமசுக்கும் அதே போல புகழும், புராணம் தோற்பதுபோன்ற பின்னணியில் உள்ள கதையும் உருவாயின.
தியாஜனிசிடம் தோற்று ஈதிமஸ், பணத்தைக் காட்டி, அவனைப் பக்குவப்படுத்தி, தான் வெற்றி பெற சமரசம் செய்து கொண்ட சுத்த சுகுணவீரன் என்பது, பின்னர் அடுத்து வந்த ஒலிம்பிக் பந்தயத்தில் குத்துச்சண்டைப் போட்டியில் வெற்றி பெற்ற மகாவீரன் என்பதையும் நீங்கள் தியாஜனிஸ் கதையில் படித்தீர்கள்.
இத்தாலியின் மேற்குக் கரையோரப் பகுதியில் தெமிசா என்றொரு நகரம் இருந்தது. அந்த நகரில் பொலைட்ஸ் என்றொரு வீரன் இருந்தான். அவன் ஒரு சமயம் போர் செய்து கொண்டிருக்கும் பொழுது அகால மரணமடைந்து விட்டான். அதன்பின் அந்த வட்டாரத்தில் அவன் பேயாகத் திரிந்து கொண்டிருந்தானாம்.
பேயாகத் திரிந்த பொலைட்ஸ், தெமிசா நகரத்து மக்களை ஒரு பயங்கர நிலைக்கு ஆளாக்கியிருந்தான்.
அதாவது, வருடத்திற்கு ஒருமுறை தனக்கொரு கன்னிப்பெண்ணைக் கொண்டு வந்து காணிக்கையாகத் தரவேண்டும் என்று தெமிசா நகரத்து மக்களைத் தொந்தரவு செய்து பயமுறுத்தி வந்தான். பெண்ணாசை பேயையும் விடவில்லை பார்த்தீர்களா?தெமிசா நகரத்து மக்களும், அஞ்சி நடுநடுங்கி வருடம் ஒரு பெண்ணைத்தானே இழக்கிறோம் என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு, ஆண்டுக்கு ஒரு முறை அழகான பெண்ணொருத்தியை அனுப்பிக் கொண்டிருந்தார்களாம். (பகாசூரன் ஒரு பையனையும் உணவையும் கேட்டதாகவும், பீமன் சென்று பகாசூரனைக் கொன்றதாகவும் நம் நாட்டுப் பாரதக் கதையில் இருக்கிறதே!)
வழக்கம் போல, பேய்க்குப் பெண்ணை அனுப்புகின்ற நாளும் வந்தது. கன்னிப் பெண்ணையும் தேர்ந்தெடுத்தாகி அனுப்புகின்ற சமயத்தில், ஈதிமஸ் அந்த நகரத்திற்கு வந்து சேர்ந்தான். அழகே உருவான ஒரு பெண் நிற்பதைக் கண்டான்.
அந்த அழகி சாகப்போகிறாள் என்பதை அறியாமல், அவள் அழகிலே தன் மனதைப் பறிகொடுத்தான் ஈதிமஸ். காலங் கடந்து போனநிலை என்று தெரிந்து கொண்ட பின்னும் எண்ணத்தை விட்டு விடவும் அவனுக்கு மனமில்லை.
தான் விரும்பிய பெண்ணுக்காகப் பேயுடன் போரிடவும் தயார் ஆனான். பேயைத் தோற்கடித்து, வென்று தொலைத்ததுமின்றி பெண்ணையும் மணந்து கொண்டான். அந்தத் தெமிசாநகரத்து மக்களுக்கு நிரந்தரவிடுதலையையும் அச்சத்திலிருந்து வாங்கித் தந்தான் என்பது ஒரு கதை.
இந்த ஈதிமசும் ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு தன்னை ஒரு மனிதப்பிறவி என்று கூறாமல், தெய்வப் பிறவி என்று பேசினான். நதிக்கடவுளான காசினஸ் (Caecinus) தான் தனது தந்தை என்று கூறியதை பலரும் ஏற்றுக் கொள்ளத்தான் செய்தனர்.
பேயைக் கொன்ற கதையும் இவன் வாழ்க்கை வரலாற்றுடன் சேர்ந்து கொண்டது. மனிதனாக நடமாடி, ஆவியுடன் போராடி வாழ்ந்த ஈதிமஸ், நிலையில் இரண்டுங்கெட்டானாக இருந்தாலும், சரித்திரத்தில் வீரனுக்குரிய புகழ் நிலையிலிருந்து விழாமல் இன்றுவரை வாழ்ந்து வருகிறான்!