உள்ளடக்கத்துக்குச் செல்

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/தில்லுமுல்லு வீரன் தியாஜனிஸ்

விக்கிமூலம் இலிருந்து
20. தில்லுமுல்லு வீரன் தியாஜனிஸ்

உயிருக்கும் மேலாக, ஒலிம்பிக் பந்தயங்களை மதித்தார்கள் கிரேக்கர்கள். அதைப் புனித விழா என்று போற்றினார்கள். களங்கம் எதுவுமின்றி நடத்திட வேண்டும், என்று கவனத்தோடும் கருத்தோடும் பாதுகாத்தார்கள். தலைமைக் கடவுளான சீயசுக்குப் பன்றியைப் பலியிட்டு, அந்த ரத்தத்தின் மூலம் விசுவாசப் பிரமாணம் செய்து கொண்டு விளையாட்டுக்களைத் தொடங்கினார்கள். போர்க்காலமாக இருந்தாலும், ஆயுதங்களை வேறிடத்தில் வைத்துவிட்டு, ஓரிடத்தில் பொறுமை காட்டி அமைதி காத்து, பந்தயங்களை நடத்திடவேண்டும் என்று விதிமுறை அமைத்து வெற்றிகரமாக நடத்தினார்கள்.

அவர்கள் மத்தியிலே தீரமுள்ளவர்கள், தியாகப் பண்பு நிறைந்தவர்கள்தானே திகழ்ந்திட முடியும் தில்லுமுல்லுக்காரன் ஒருவன் வீரனாக சிறந்திருக்க முடியும் என்றால், அதுதான் தியாஜனிசிடம் இருந்த திறமை என்று ஒத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. திறமையின் முன்னே, சட்டமும் விதியும் சில சமயங்களில் சரணாகதியடைந்து விடவில்லையா? அது போல் தான்! அப்படி சட்டத்தை வளைத்தவன் கதையை இனி தொடர்ந்து காண்போம்.

தியாஜனிஸ் எனும் அந்த வீரன், தாசஸ் (Thasos) என்ற நகரத்தைச் சார்ந்தவன். அந்த நகரில் கிரேக்கக் கடவுளனா சீயஸ் எனும் கடவுளுக்கும் மனித இனத்தின் அழகு மங்கையான அல்க்மின் (Alcmene) என்பவளுக்கும் பிறந்த ஹிராகிலிஸ் என்பவனுக்கு ஒரு கோயில் இருந்தது. அந்தக் கோயிலில் மதகுருவாக (பூசாரியாக) (Priest) வேலை செய்து வந்தவரின் மகன் தான் இந்த தியாஜனிஸ்.

இவன் தன் பலத்தில், ஆற்றலில், மிகுந்த நம்பிக்கையையும் மாறாத கர்வத்தையும் வைத்துக் கொண்டு திரிந்தான். மிலோ தனது சிலையை, தானே தூக்கிச் சென்று ஒலிம்பியா மைதானத்தில் வைத்த வரலாற்று நிகழ்ச்சியை, இவன் என்றும் மறக்காமலேயே நினைவில் கொண்டிருந்ததால், அதைப்போல் தானும் ஒரு வீர தீர செயலைச் செய்ய வேண்டுமென்று விரும்பினான். அதனால் தனது எட்டாம் வயதில் இப்படி ஒரு காரியத்தைச் செய்துவிட்டான்.

நகரின் ஒரு மூலையில் எங்கேயோ இருந்த ஒரு கோயிலுக்குச் சென்று, அங்கு இருந்த சாமி சிலையை மட்டும் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டான்.

சேதி அறிந்த அவ்வூரார், அவன் வீட்டுக்கு வந்து ஆத்திரத்துடன் திட்டித் தீர்க்கவே, அவன் தெரியாமல் செய்து விட்டான் என்று தியாஜனிஸின் பெற்றோர், பணிவுடன் வேண்டிக் கொண்டனர். அவன் செய்த பிழையை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

மீண்டும் அந்த சிலை இருந்த இடத்திற்கு, அவனே தூக்கிக் கொண்டு சென்று வைத்து விட்டால், அவனை மன்னிக்கிறோம் என்று ஊரார் உரைத்தவுடன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அதன்படி அந்த சிலையைக் கொண்டு சென்று வைத்த சாமர்த்தியசாலி அவன்.

வலிமையுடன், வேறுபல திறமைகளையும் வளர்த்துக் கொண்டு எழில் வீர வாலிபனானான் தியாஜனிஸ், ஒலிம்பியா சென்று, ஒலிம்பிக் பந்தயங்களில் 2 முறை வென்று புகழடைந்தான். ஒன்று குத்துச்சண்டைப்போட்டி, மற்றொன்று பங்க்ராசியம் எனும் போட்டி, அதாவது குத்துச் சண்டையும், மல்யுத்தமும் இணைந்து உருவான பயங்கரப்போட்டி அது.

அந்தப் பயங்கரப் போட்டியில், ஒரு வீரன் இன்னொரு வீரனை அடிக்கலாம். கடிக்கலாம். உதைக்கலாம். குத்தலாம்.

அழுத்தலாம். நகத்தால் பிறாண்டலாம்; என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்றால் பாருங்களேன். அத்தனைப் பயங்கரப் போட்டியில் வென்றவன் தியாஜனிஸ்.

இதைத்தவிர, எங்கெங்கு போட்டிகள் நடந்தாலும், அங்கே போய் கலந்து கொண்டு, ஏறத்தாழ 1400 முறை வெற்றி பெற்றிருக்கிறான். 22 ஆண்டுகள் வரை, இவனை குத்துச் சண்டையில் யாராலும் வெற்றி பெற முடியவில்லை என்ற தன்மையில்; இவன் குன்றாத வலிமை கொண்டவனாக விளங்கினான்.

ஒலிம்பிக் பந்தயத்தில் ஒருவன் வெற்றி பெற்று விட்டான் என்றால், அவன் உயர்ந்த ஆற்றல்மிக்க வீரன் என்பதே பொருளாகும். அதனால், அவன் சாதாரணமாக நடக்கின்ற பந்தயங்களில் கலந்து கொள்ளவே கூடாது என்பது சம்பிரதாயம். அது ஒரு மனிதாபிமான அடிப்படையில் அமைந்திருந்த மரபும் ஆகும்.

மீறி யாராவது அவ்வாறு போய் கலந்து கொண்டால், அது நல்ல மதிப்பையோ, நாட்டாரிடம் கௌரவத்தையோ அளிக்காது. ஆனால், இந்த தியாஜனிஸ் கொஞ்சம் கூட கௌரவம் பார்க்காதவன். அவனுக்கு வேண்டியது வெற்றியும் பரிசும்தான்.

மிகச்சிறிய அளவில் நடக்கின்ற போட்டிப் பந்தயங்களுக்கும் கூட தியாஜனிஸ் போவான். இவன் வருகையைக் கண்டவுடன், போட்டியில் பங்குபெற வந்த போட்டியாளர்கள் பயந்து கொண்டு, போட்டியிடாமல் விலகிக் கொள்வார்கள்.

பிறகென்ன? தியாஜனிஸ் போக வேண்டியது. வெற்றி வீரன் என்று அறிவிக்கப்பட வேண்டியது. பரிசினைப் பெற்றுக் கொள்ளவேண்டியது. இப்படியாகத்தான் 1400க்கு மேற்பட்ட வெற்றிகளையும் பரிசுகளையும் பெற்றான் என்று சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றார்கள்.

வெகுமதிக்காகத்தான் தியாஜனிஸ் இவ்வாறு வெறி கொண்டு அலைந்தான் என்று அவன் அரிய வரலாற்றை ஆராய்ந்தோமானால், இவன் வெற்றிபெறுவதற்காக எதையும் செய்யத் தயாராக இருந்தான் என்றும் அறிகிறோம். இப்படியும் ஒரு வீரன் இருந்தான் என்பதுபோல இவனும் வாழ்ந்தான் என்று தானே நம்மால் நினைக்கத் தோன்றுகிறது!

பாரசீகத்தார் படையெடுத்து வந்த போது, பந்தயத்தில் கலந்து கொள்ள இருந்த பயிலஸ் எங்கே? பந்தயத்தை மறந்து தன்னை மறந்து போரிட்ட தியாகம் எங்கே? வெற்றியும் வெகுமதியும் தான் சிறந்த வாழ்க்கை என்று வெறி பிடித்தலைந்த வீரன் தியாஜனிஸ் எங்கே?

கி.மு. 480 ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளச் சென்றான் தியாஜனிஸ், முதல் நிகழ்ச்சி குத்துச் சண்டை. இரண்டாவது போட்டி பங்க்ராசியம். இரு போட்டிகளிலும் கலந்து கொள்வதென்று தியாஜனிஸ் முடிவுசெய்திருந்தான்.

முதல் போட்டியாக குத்துச் சண்டைப் போட்டி (Boxing) நடந்தது. அதில், முந்தைய ஒலிம்பிக் போட்டியில் குத்துச் சண்டையில் வெற்றி பெற்ற, பெருவீரன் ஈதியமஸ் (Euthymus) என்பவனுடன் பொருத நேர்ந்தது.

மிகவும் போராடியே தியாஜனிசால் அதில் வெற்றி பெற முடிந்தது. அதிகமாகக் களைத்துப் போயிருந்த தியாஜனிசுக்கு, அடுத்த போட்டியும் காத்திருந்தது. அதுதான் அந்தப் பயங்கர பங்கராசியப் போட்டியாகும்.

களைத்துப் போயிருந்த தியாஜனிஸ் போட்டியிட விரும்பவில்லை. ஒலிம்பிக் பந்தயத்தின் விதிகளின்படி, யாரும் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளவும் முடியாது. ஆனால் பங்கு பெறாமல் இருக்கவும் முடியாது இருந்தாலும் தியாஜனிஸ் விலகிக் கொண்டு போட்டி நடவாமல் தவிர்த்துவிட்டான்.

ஒலிம்பிக் போட்டியில் இததான் முதல்தடவையாக, போட்டியில்லாமல் ஒருவனுக்கு வெற்றி போய்ச் சேர்ந்தது. டிராமியஸ் என்பவன் வெற்றி வீரனாக அறிவிக்கப்பட்டான். ஒலிம்பிக்கில் போட்டியிடாமல் வெற்றி பெற்ற முதல் வீரன் என்ற பெருமையையும் பெற்றான்.

இவ்வாறு நடைபெற்ற துரோக நிகழ்ச்சியைக் கண்டு ஒலிம்பிக் அதிகாரிகள் ஒருமித்த ஆத்திரம் அடைந்தனர். அப்பொழுதேதியரஜனிசை அழைத்து விசாரனை நடத்தினர். ஒலிம்பிக் போட்டியானது, சிறப்பு மிக்க சீயஸ் கடவுளின் பெருமைக்காக நடத்தப்படுவதால், அதற்கு இழுக்குத் தேடித் தந்தவனை தகுந்த முறையில் தண்டித்துவிடத் தீர்மானித்தனர்.

கண்ணைப்போல் போற்றும் கடவுளை அவமதித்தற்கு ஓர் அபராதம். ஒப்பற்ற ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நிர்வாகத்தை நிலைகுலைய வைத்த செயலுக்காக இன்னொரு அபராதம். குத்துச்சண்டைப் போட்டியில் முறையற்ற கடுமையான முறைகளில் ஈதிமஸ் என்பவனைத் தாக்கிக் காயப்படுத்தியதால் அதற்கும் ஒரு அபராதம் என்று பல்முனைத்தாக்குதல் என்பது போல, ஒலிம்பிக் நிர்வாகத்தினர் அபராதத் தொகையை மிகுதிப்படுத்திக் காட்டினர்.

இவ்வாறு அபராதத்தை கடுமையாக விதித்ததால், தியாஜனிசை இனிமேல் குத்துச்சண்டையில் பங்கு பெறாமல் தடுத்துவிட வேண்டும், என்பதுதான் அவர்களது ரகசியத் திட்டமாக அமைந்திருந்ததுபோலும், அவர்கள் நினைத்தது ஒன்று. ஆனால் நடந்ததோ வேறு.

எவ்வாறோ அபராத தொகையை சரிசெய்து, கடவுளுக்கான அபராதத் தொகையையும், நிர்வாகத்திற்கான அபராதத்தையும் கட்டிவிட்டான் தியாஜனிஸ். ஆனால், ஈதிமசுக்குக் கொடுக்க வேண்டிய ஈட்டுத்தொகையைத்தான் அவனால் கொடுக்க முடியவில்லை.

எதிரி ஈதிமசை தனியே அழைத்தான். அவனிடம் ஒரு ரகசிய உடன்படிக்கையை செய்து கொண்டான். தன்னிடம் பணம் இல்லை என்றதால், தந்திரமான முறையிலே தான் அந்த ஒப்பந்தம் அமைந்திருந்தது.

அதாவது, கி.மு. 476ம் ஆண்டு நடக்கப்போகின்ற குத்துச் சண்டைப் போட்டியில், தியாஜனிஸ் கலந்து கொள்ளாமல் விட்டுக் கொடுத்துவிடவேண்டியது. அவ்வாறு வெற்றியை பெற்றுத்தரும் தியாஜனிசுக்கு அவன் கொடுக்க வேண்டிய அபராதத் தொகையை வாங்கிக் கொண்டதாக சரிகட்டிக் கொள்வது என்பதுதான் அந்த ரகசிய உடன்படிக்கையாகும்.

ஒலிம்பிக் வெற்றியில் கொண்டிருந்த பேராசையின் காரணமாக, ஈதிமசும் இந்த யோசனையை ஏற்றுக் கொண்டான். இது தெரிந்துபோனதால், குத்துச்சண்டையில் பங்கு பெறவே கூடாது என்று தியாஜனிஸ் விலக்கப்பட்டு விட்டான். மீண்டும், அவனால் குத்துச் சண்டைப் போட்டியில் பங்கு பெற முடியாமலே போயிற்று.

பணத்திற்காக எதையும் செய்கின்ற பழக்கம், புனிதமான ஒலிம்பிக் பந்தயங்களிலும் பின்பற்றப்பட்டது. தான் பணம் கொடுத்து, லஞ்சம்போல தனது போட்டிப் பாதையை ராஜபாட்டையாக்கிக் கொண்ட ஈதிமசும், தொடர்ந்து நடைபெற்ற கி.மு. 476, கி.மு. 472ம் ஆண்டுகளின் பந்தயங்களில் எளிதாக குத்துச் சண்டையில் வெற்றிபெற்று புகழடைந்தான். ஆனால், பங்கராசியப் போட்டியில் மட்டும் வெற்றி பெற்றான் தியாஜனிஸ்

வெற்றி வீரன் தியாஜனிசின் வீரத்தையும் பலத்தையும் பலரும் பாராட்டினர். அவனை கௌரவிக்கும் வகையில், தாசஸ் நகரத்தினர் அவனைப்போல சிலை ஒன்றையும் செய்து நிறுவினர். தனக்கும் சிலை என்றதும், தியாஜனிசுக்குத் தலை கால் புரியவில்லை.

கருத்துக் குழப்பம் மிகுதியாகும் அளவிற்கு தியாஜனிஸ் நினைவில் கர்வம் பெருக்கெடுத்தோடி விட்டது. தன்னை மனிதப் பிறவி என்பதையே அது மறக்கடித்துவிட்டது. தன்னை மகேசன் பரம்பரை என்று மார்தட்டிப் பேசும் அளவுக்குக் கொண்டு சென்று விட்டது. அவனது டமார வாயும் அடிக்கடி அலற ஆரம்பித்து விட்டது.

ஆமாம், அவன் தன்னைப்பற்றி உயர்வாகப் பறைசாற்றத் தொடங்கினான். ஹிராகிலிஸ் எனும் தெய்வம் வாழும் கோயிலில் பூசாரியாக வேலை செய்யும் மனிதரின் மகனல்ல நான், நான் கடவுளின் குமாரன் என்றான்.

ஆகவே, ஒரு குட்டிக் கடவுளுக்குரிய சகல விதமான பூசைகளும், புனிதச் சடங்குகளும், மரியாதையும் எனக்கு நீங்கள் செய்திடவேண்டும் என்று மக்களிடம் முதலில் வாதாடத் தொடங்கினான், பிறகு அனைவரையும் வம்பிழுக்கத் தொடங்கியும் விட்டான்.

ஒரு முறை கோயில் திருவிழா ஒன்று நடந்து கொண்டிருக்கும் பொழுது, தனக்குரிய உன்னதமான கௌரவம் தனக்குத் தரப்படவில்லையென்று கலாட்டாவே செய்தான் என்று புளூடார்ச் எனும் ஆசிரியர் குறித்துக் காட்டுகின்றார்.

இப்படி தரம் மாறிப் போன தியாஜனிசுக்கு, அநேக விரோதிகள் அவனைச்சுற்றி எப்பொழுதும் இருந்தார்கள் என்பது உண்மைதான். என்றாலும், அவனை எதிர்த்திட யாருக்கும் தைரியமே இல்லை.

இவ்வாறு வாழ்நாள் முழுவதும் வரட்டு ஜம்பத்திலும் அதே சமயத்திலும் வல்லமை நிறைந்தவனாகவும் இருந்து, மாற்றார்களும் மதிக்கும் வண்ணம் வாழ்ந்து காட்டினான் தியாஜனிஸ் என்றால், அது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

இருந்த பொழுது அவனைப்பற்றி எல்லோரிடையிலும் இருந்த மதிப்பு, இறந்த பிறகு இன்னும் அதிகமாயிற்று என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! நம் நாட்டில் முகராசி, கவர்ச்சி என்பார்களே, அது அவனுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்ததுபோலும்.

தியாஜனிஸ் சிலை நிறுவப்பட்டது என்பதை முன்னரே கூறியுள்ளோம். தியாஜனிஸ் உயிரோடிருந்தபோது, அவனை எதுவும் செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தான் எதிரி ஒருவன்.

அன்றைய தினம் ஆங்காரம் மிகுதியாகிப்போய் உயிரோடிருக்கும் பொழுதுதான் அவனை அடிக்க முடியவில்லை. அவனது சிலையையாவது அடித்து ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வோம் என்ற நப்பாசை மிகுதியால், நள்ளிரவு நேரத்தில் சிலையருகே சென்றான். தன் ஆத்திரம் தீர, ஆவேசமும் ஆசையும் அடங்க, சாட்டையால் சிலையை அடித்துத் தீர்த்தான்.

அந்த அடியால் அசைந்த சிலை, அவன் மீதே விழ, அந்த எதிரியும் அதே இடத்தில் நசுங்கிச் செத்தான்.

மறுநாள் காலையில் வந்து பார்த்த மக்கள், சிலையின் கீழ் ஒருவன் செத்துக்கிடப்பதை அறிந்து வியந்தார்கள். தியாஜனிசைப் போற்றினார்கள் ஏன் தெரியுமா?

உயிரோடிருந்த பொழுது எல்லோரையும் வென்று புகழ் பெற்றான். செத்துச் சிலையான பிறகும் கூட, தன் எதிரியைக்கொன்று வென்று கிடக்கிறானே என்பதாக அவர்கள் கற்பனை செய்து கொண்டு அவன் வலிமையை வாயாராப் புகழ்ந்தார்கள்.

அவர்கள் புகழ்ந்தால் போதுமா? அரசாங்கம் அதனைப் பார்த்துக்கொண்டு வாளா இருக்கமுடியுமா?

ஓருயிரைப் போக்குகின்ற எந்த ஜீவனுக்கும் அல்லது எந்தப் பொருளுக்கும் சரியான தண்டனையை நல்கிட வேண்டும் என்பதே அந்தக் காலத்தில் அந்நாட்டின் சட்டமாக இருந்தது. அதன்படி, ஓர் மனித உயிரைக் கொல்லக் காரணமாக இருந்த சிலைக்கும் உரிய தண்டனை தந்தாக வேண்டும் என்று அரசு சார்பில் உறுதியாயிற்று.

அந்தத் தீர்ப்பின்படி, கப்பல் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்டு, நடுக்கடலில் தூக்கியெறியப்பட்டது கொலைகார தியாஜனிஸ் சிலை.

சிலையின் சிறப்பு மேலும் பெருகுவது போல பல சம்பவங்கள் அதற்குப்பிறகு தோன்றின. தியாஜனிஸின் பேர் ராசிக்கு இன்னும் உயிர் இருந்தது போலும்! அது வேலை செய்யத் தொடங்கிற்று.

தியாஜனிஸ் வாழ்ந்த நகரமான தாசஸ் நகரத்தில் பஞ்சம் பெருகியது. பயிர்கள் விளைச்சலிழந்தன. நாடே வறுமையில் உழலத் தொடங்கியது. மருண்ட மக்கள், வேறு வழி அறியாது டெல்பி (Delphi) எனும் இடத்திற்குச் சென்று அருள்வாக்குக் கேட்க நின்றார்கள். அப்பொழுது அசரீரி (Oracle) ஒன்று எழுந்தது.

தாசஸ் நகரத்து அதிகாரிகள், தங்கள் அரசியல் எதிரிகளை எல்லாம் திரும்பவும் அழைத்துக்கொள்ள வேண்டும் என்று அசரீ ஆணையிட்டது.

அஞ்சிக் கொண்டிருந்த அதிகாரிகள் அந்த ஆணைக்கு அடங்கினர். அதன்படி எதிரிகளை அழைத்து அரவணைத்துக் கொண்டனர். என்றாலும் பஞ்சம்போன பாடில்லை. பழைய நிலையே நீடித்து வந்தது. ஆகவே மீண்டும் டெல்பியை நோக்கிப் படையெடுத்தார்கள் தங்கள் குறையைச் சொல்ல.

நீங்கள் தியாஜனிசை மறந்து விட்டீர்கள் என்று அசரீரீ சொல்லிவிட்டது. தியாஜனிஸ் இறந்தல்லவோ போய் விட்டான்! அவனை எங்கே போய் பிடிப்பது? அர்த்தம் விளங்காமல் துடித்துப் போய் நின்றவர்களுக்கு, வைத்த சிலையின் ஞாபகம் வந்தது.

அதைத்தான் நடுக்கடலில் போய் தூக்கியெறிந்து விட்டோமே என்ற நினைவு வந்ததும், பெரிதும் குழம்பினார்கள். கடலில் போய் எங்கே தேடுவது? பஞ்சப் பிரச்சினையை விட பெரிய பிரச்சினையாக இந்த நினைவு வாட்டி வதைத்தது.

சில நாட்கள் கழித்து, செம்படவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்று, வலைவீசிய பொழுது, தியாஜனிஸ் சிலை வந்து சிக்கிக் கொண்டது. கனமாயிருக்கிறது என்று கடினப்பட்டு வலையை இழுத்தவர்களுக்கு சிலையாயிருந்தது மிகவும் ஏமாற்றமாக இருந்தாலும், அதிகாரிகளை ஆனந்தப்பட அதுவே போதுமானதாக அமைந்துவிட்டது.

சிலை வந்து சேர்ந்து, பீடத்தில் அமர்த்தப்பட்டபோது, தாசஸ் நகரத்துப் பஞ்சம் தீர்ந்துசெழிப்படைந்தது, மக்களுக்கு தியாஜனிஸ் மேலிருந்த அன்புமாறி இப்பொழுது பக்தியாகிவிட்டது.

மீண்டும் சிலை காணாமற் போனால் கஷ்டத்துக்குள்ளாக நேரிடும் என்று எண்ணிய அவர்கள், அந்த சிலையை பீடத்தோடு பீடமாக சேர்த்து, இரும்புச்சங்கிலியால் பிணைத்து விட்டார்கள். இப்பொழுது அவர்களிடம் பயபக்தி அதிகமாயிற்று.

வாழ்க்கையில் அபரிதமான வலிமையும் ஆற்றலும் கொண்டு வாழ்ந்த வீரர்களைப் போற்றி வைத்திருக்கும் சிலைகளுக்கு, நோய்களைத் தீர்க்கும் தெய்வ சக்தி வந்து விடும் என்ற நம்பிக்கை, அக்கால மக்களுக்கு இருந்திருக்கிறது. அந்த நம்பிக்கையின் விளைவாக தியாஜனிஸ் சிலைக்கு மேலும் புகழ் வந்து குவியலாயிற்று.

நோய்களைத் தீர்த்து வைக்கும் தெய்வசக்தி நிறைந்தது நம் தியாஜனிஸ் சிலை என்று தாசஸ் நகரத்து மக்களின் நம்பிக்கையின் வேகம் பெருகலாயிற்று. அதனால் அந்தச் சிலையைத் தரிசிக்க வருபவர்களின் கூட்டமும் பெருகலாயிற்று.

பக்கதர்கள் கொண்டு வரும் காணிக்கையும் பெருகலாயிற்று, காணிக்கை நிறைந்தவுடன் அதைக் கணக்கிடவும் கண்காணிக்கவும் ஒரு நீதிபதியே நியமிக்கப்பட்டிருந்தார் என்றால் பாருங்களேன்!

ஓராண்டு காலத்தில் வசூலான காணிக்கைத் தொகையை வைத்துக்கொண்டு, தியாஜனிஸ் சிலைக்கு எவ்வாறு பெருமையும் மரியாதையும் செலுத்தலாம் என்பதையும் தீர்மானிக்க ஒரு குழு உருவாக்கப்பட்டிருந்தது என்றால், தியாஜனிஸ் ஒரு ஜெகதலப் பிரதாபன் என்று கூறுவதைத் தவிர, வேறென்ன கூற முடியும் வேறு எப்படி நினைக்கத் தோன்றும்?

உண்மையான உடலமைப்புள்ள, சாதாரண மனிதனாக வாழ்ந்த வீரன் ஒருவன், செத்தபிறகு தெய்வ வாழ்வு பெறுகின்ற விந்தையான கதையாக அல்லவா தியாஜனிஸ் வாழ்வு நிறைவு பெற்றிருக்கிறது. வாழ்க தியாஜனிஸ் என்று வாழ்த்துவோமாக!

அடுத்தது தியாஜனிஸ் ரகசிய உடன்பாடு செய்து கொண்ட ஈதிமஸ் எனும் வீரனைப் பற்றிக் காண்போம்.