உள்ளடக்கத்துக்குச் செல்

கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்/இறுவாய்

விக்கிமூலம் இலிருந்து

13. இறுவாய்

எதினிய நகரத் தலைவராக இருந்த பெரிகில்ஸ் மிகவும் சீரிய நோக்கங் கொண்டவர். இவர் ஏதென்ஸ் நகர மக்களின் நடை உடை பாவனைகளையே ஏனைய கிரேக்க மக்கள் பின்பற்ற வேண்டுமென்று எண்ணங் கொண்டனர்; இதனை நிறைவேற்றியும் வைத்தனர். எதினியவாசி அரசியல் வாதியாகவோ, சொல்மாரி பொழிபவனாகவோ, வீரனாகவோ இருப்பான். தனக்குக் கலை அறிவு, பாடல், ஆடல் பயிற்சி இல்லை என்றாலும், இக்கலைகளைப் பாராட்டாமல் இரான். எப்பொழுதும் சோம்பல் இன்றிச் சுறுசுறுப்பாக வாழவே இவன் விரும்புவான்.

ஏதென்ஸ் நகரவாசிகள் பொலோபோனேஷியப் போரில் (Poloponnesian) வீழ்ச்சியால் துன்புற்றனர். சிசிலியை நோக்கி எதிர்க்கப் புறப்பட்டதும் வெற்றிகரமாக முடியவில்லை. பெர்ஷியாவும், ஸ்பார்ட்டாவும், எகோஸ்போடாமி (Aegospotami) என்னுமிடத்தில் கி. மு. நாலாம் நூற்றாண்டின் முடிவில் கடற் போரில் ஏதென்ஸ் நகரை முறியடித்தன. ஏதென்ஸ் நகர மக்கள் கடற்போரில் தலைசிறந்தவ வர் என்பது பழங்கதையாகப் போய்விட்டது. என்றாலும் ‘கடுகு சிறுதாலும் காரம் போவதில்லை’ என்பதுபோலத் தன் பண்டைய கடற் போர்ச் சிறப்பு அழியாதிருக்கப் பெரிதும் முயன்று வந்தனர்.

மெசிடோன் (Macedon) அரசராகிய பிலிப் (Philip) தம்மிடம் நன்கு பயிற்சி பெற்ற படையினைப் பெற்றிருந்தார். இவர் இன்னும் தம் நாட்டைப் பெற்றிருக்க வேண்டுமென்றும் அவாக் கொண்டிருந்தமையால், அதற்கேற்ற வாய்ப்பை எதிர்நோக்கி இருந்தனர். ஏதென்ஸ் நகரத்திற்கும், தீபஸ் நகரத்திற்கும் நடந்த போரைக் குறித்தும் பிலிப் ஒரு முடிவு அறவேண்டுமென்று கேட்டுக் கொண்டபோது இவ்விரு நகரங்களும், மெசி தோனின் படையையே எதிர்க்க ஆரம்பித்தன. இதன் பலன் தோல்வியே ஆகும்,

ஏதென்ஸ் நகர மக்கட்கு இருந்த உயர்ந்த நாட்டுப் பற்றும், போர்ப் பயிற்சியும் நாளுக்கு நாள் பிற்போக்கு அடைந்தன. பிலிப் மன்னர்க்குப் பிறகு, அவர் குமாரர் அலெக்சாண்டர் பாரசீகப் பேரரசை வென்றார். அதனால் லெவண்டர் (Levent) பட்டின முழுமையும் கிரேக்கர்கள் நாகரிகம் வளர லாயிற்று. இவ்வாறு நாகரிகம் வளர்ந்த பட்டினங்களில், ஈஜிப்த் தேசத்து அலெக்ஸாண்டிரியா முதன்மை பெற்றதாகும். இந்தச் சமயத்தில் தான், நோய்க்கேற்ற மருந்துகளைக் கண்டு பிடிக்கவும் நுண் கலைகளை வளர்க்கவும் மக்கள் அறிவைச் செலுத்தினர்.

நாளடைவில் உரோமா புரியும் (Rome) தன் உச்சநிலையை அடைய ஆரம்பித்தது. தானும் தன் இராச்சியத்தைப் பரப்பிக் கிரேக்கர்களோடு உறவு கொண்டு கலையறிவு, நாகரிகம், உணர்சி முதலியவற்றில் முன்னேறலாயிற்று. இவ்வாறாக உரோமாபுரியின் மக்கள் கிரேக்கரின் முறைகளை அப்படியே பின்பற்றினர் என்னலாம். இதன்பின் ஐரோப்பிய சாம்ராச்சியத்திலும் கிரேக்க நாகரிகம் பரவலாயிற்று. உலகத்தின் மூலமுடுக்குகளில் எல்லாம் இந்தக் கிரேக்க நாகரிகமே பரவலாயிற்று.

பதினாறாம் நூற்றாண்டில் கிரேக்கரின் கலைகளைப் படித்து மறுமலர்ச்சி அறிவைப் பெருக்க மக்கள் பெரிதும் முனைந்து நின்றனர்.

பொதுவாக, இவர்கள் நாம் இக்காலத்தில் வாழும் வாழ்க்கையைவிட நல்ல முறையில் மகிழ்ச்சியோடும் உயர்ந்த எண்ணங்களோடும், சுறுசுறுப்பான உணர்ச்சியுடனும் வாழ்ந்து வந்தனர், என்பதில் ஐயமில்லை. நாமும் நம் பண்டைப் பெருமைகளையுணர்ந்து அம்முறையில் வாழ்ந்து நலனுற முயல்வேனமாக.