கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்/ஏதென்ஸ் நகரின் முன்னேற்றம்
ஸ்பார்ட்டா நகர், வெற்றிக்குமேல் வெற்றி பெற்று வந்தது. இந்த வெற்றி வேகம் ஏதென்ஸ் நகர மக்களைப் பல்வேறு வழிகளில் இசையால் திசை போகும் அளவுக்கு உயர்த்தி வந்தது. உழவுத் தொழிலில் முதன் முதலில் ஈடுபட்டு வந்த இவர்கள் கைத்தொழில் வளர்ச்சியிலும் கருத்தைச் செலுத்தி வந்தனர். இவர்கள் மேற்கொண்ட கைத்தொழில் மட்பாண்டம் செய்தல், சிறந்ததாக எண்ணப்பட்டு வந்தது. தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட வெண்தாதுப் பொருள்கள், வன்மை மிக்க போர்க்கப்பல் செய்யப்பயன்பட்டன. இதனால் செய்யப்பட்ட போர்க்கலனே பாரசிகர்களின் கடற்படையை முறியடித்தற்குத் துணையாக இருந்தது. கைத்தொழில் நாளுக்கு நாள் வளர்ந்து நன்னிலை அடையவே, வாணிபத்துறையில் உள்ள மக்கள் பெருநிலக்கிழவர்களுடன், எல்லாப் படியாலும், ஒப்பான தகுதி பெறும் உரிமையோடு நின்றனர். இந்த முறையில் ஏதென்ஸ் நகரில் குடியரசு வளர்ந்து வருவதாயிற்று.
எதினியர்கள் தாம் விடுதலே பெற்றமைக்கும், பாரசீகர்களை வென்று வெற்றி கொண்டமைக்கும், பெரிதும் மகிழ்வும் பெருமையும் கொண்டனர். இதனால். தம் அரசாட்சியை .இன்னமும் பரவச் செய்ய எண்ணங்கொண்டனர். ஏகியன் கடற்கரை ஒரமாக உள்ள சில சில தீவுகளும், பட்டினங்களும் பாரசீகர்களின் ஆளுகையின்கீழ் இருந்தன. இந்த ஆளுகையினின்றும் அவற்றை மீட்பதற்கு முயன்றனர். மேற்கூறிய தீவுவாசிகளும், பட்டினவாசிகளும் ஏதேன்ஸ் மக்களை உதவுமாறு வேண்டினர். இவ்வேண்டுகோளுக் கிணங்கிய ஏதென்ஸ் மக்கள் டிலோஸ் (Dleos) என்னும் தலைநகரில், தீவுகளில், பட்டினங்களில் வாழ்பவர்களுக்கெல்லாம் நலன் பல புரியும் கழகம் ஒன்றை நிறுவினர். ஒருவர் செய்யும் காரியத்திலும் பலர் கூடி அக்காரியத்தைப் புரிதல் நல்லமுறையாகும். இதன்பொருட்டே கழகம், சங்கம், மன்றம் முதலியன தோன்றலாயின. இஃது ஒவ்வொரு துறைக்கும் அமைந்து பல நலனை ஆற்றலாம் அன்றோ? இக்காலத்திலும் சங்கங்களை அமைத்து நலனை அடைந்து வருதல் கண்கூடன்றோ? மேற்சொல்லப்பட்ட அத்தகைய சங்கமொன்றை இம்மக்களுக்கு நிறுவித்தந்தனர். அது டெலியன் லீக் (Delian League) என்று அழைக்கப்பட்டது. பிறகு எதினியர்கள் பாரசீகரிட மிருந்து ஏகியன் கடற்கரை ஓரமாக இருந்த தீவுகளையும் பட்டினங்களையும் கைப்பற்றி, அவை சுதந்திர நாடுகளாகத் துவங்கும் நிலைக்குக் கொணர்ந்தனர். இதனால் எதினியர்கள், டைவர்ஸ் கிரிக் (Diverse Greek) பட்டினங்கள், தீவுகள் ஆகிய இவற்றிற்குத் தாமே தலைவர் என்னும் தகைமையையும் அடைந்தனர். இதனுல் டிலோஸ் தலைநகரில் இருந்த கழகத்தின் நதிய8னத்தும், கி.மு. 456-ஆம். எதினியர்களின் கைக்கு உரியதாயிற்று.
இன்னோரன்ன ஏற்பாடுகளுக் கெல்லாம், காரணர்களாய் இருந்தவர் பெரிகில்ஸ் (Pericles) எனப் பெயரினர் ஆவர். இவரே சிறந்த தலைவர் ஆயினர். இவர் வன்மையிலும் நன்னடைத்தையிலும் ஒரு சிறுதும் பின்வாங்கியவர் அல்லர்; ஆட்சித் திறத்திலும் தலைசிறந்தவர். ஆதலின், ஆட்சி முறையை அறிந்த மக்களும் இவர் ஒவ்வோர் ஆண்டும் தேர்தல் முறையில் நிற்கையில் தலைவராக இவரையே தேர்ந்தெடுக்கலாயினர். இவ்வாறாக முப்பதாண்டாகத் தொடர்ந்து இவர் தேர்ந்தெடுக்கப் பட்டாரென்றால், இவருக்கிருந்த திறமையையும், பொதுமக்கள் ஆதரவையும், என்னென்று இயம்பு வது! இத்தகைய பொது மக்களது ஆதரவு பெற்ற அரசராலேயோ, தலைவராலேயோதான் நாடும் நகரமும் முன்னேற முடியும். நாடு மன்னனைத் தான் உயிராகக் கொண்டது.
நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
என்பதுதான் யாவரும் அறிந்த உண்மை. இந்த முறைக்கு இணங்கப் பெரிகில்ஸ் இருந்தது பாராட்டற்குரிய தாகும். இவர் தலைமை வகித்திருந்த காலங்களில் தம் ஆட்சியின் கீழிருந்த குடிமக்களின் முன்னேற்றத்தைக் குறித்துப் பெரிதும் பாடுபட்டனர். இவர் காலத்தில் வாணிபம் செழித்தோங்கியது. நாட்டின் செல்வமும் நனிமிக வளர்ந்தது. குடி மக்கள் தொகுதியும் செறிந்தது. வெளி நாட்டவர் பலரும் இங்கு இருக்க விழைந்து குடியேறின்ர். பெரிகில்ஸ் கலைச் செல்வம் வளர வழி வகைகளைக் கோலினர். கோயில்கள் பல கட்டப்பட்டன. அக் கோயில்கள் யாவும் ஒவியமும், சிற்பமும் மலிந்து விளங்கின.
புலவர் பெருமக்கள் புரவலர்களால் புரக்கப்பட்டனர். வரலாற்று அறிஞர்களும், கல் தச்சர்களும், தத்துவஞானிகளும் பெரிதும் ஆதரிக்கப்பட்டனர். பெரிகில்ஸ் தலைவர்க்குத் தம் நாடே ஏனைய நாடு களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்பது வேணவா; இந்த முறையில் ஏதென்ஸ் நகரம் ஆட்சித் திறத்திலும் கலாசாரத்திலும் முன்னேற்ற முற்றுச் சிறந்து விளங்கியது.