கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்/ஸ்பார்ட்டர்களின் வாழ்க்கை

விக்கிமூலம் இலிருந்து

3. ஸ்பார்ட்டர்களின் வாழ்க்கை

இயற்கை அழகு

அக்கேய மக்களால் தோற்றுவிக்கப்பட்ட சிடி ஸ்டேட்டுகளில் வளமான நகர் ஸ்பார்ட்டா (Sparta) வாகும். இந்நகர் லேசிடமன் (Lacedae mon) பள்ளத்தாக்கில் அழகு நகரமாக விளங்கியது. இந்நகரின் ஆழகுக்கு அழகு செய்வனபோல் இரோடஸ் (Eurotas) ஆறும் ஏனைய ஆறுகளும் பாய்ந்து சிறப்பளித்தன. ‘ஆறில்லாத ஊருக்கு அழகு பாழ்’ என்பதும் நம் நாட்டுப் பழமொழி அன்றோ ! இவ்விடத்தை டோரியர்கள் (Dorians) தம் வசமாக்கிக் கொண்டு, ஸ்பார்ட்டாவில் ஏற்கனவே வசித்து வந்த உள்குடி மக்களைத் தமக்குக் கீழ்ப்படியச் செய்து நிலபுலங்களை உழுமாறு வற்புறுத்தி வந்தனர். வலியார் மெலியாரை அடர்த்து ஒறுப்பது உலக இயற்கைகளில் ஒன்று. டோரியர்களின்  மக்கள் தொகை சிறியதாகும். ஆகவே, உள்ளுர் ஸ்பார்ட்டாவின் பூர்விகக் குடிகளிடத்தில் அச்சங் கொண்டே வாழ்ந்தனர்.

உழுதொழிலையே மேற்கொண்ட கூலி உழவர்களுக்கிடையே கி. மு. 7 ஆம் நூற்றாண்டில் ஒரு குழப்பம் தோன்றியது. அக்குழப்பத்தை ஸ்பார்ட்டா மக்கள் அடக்கி ஒடுக்கினர். இதனால் தங்கட்குத் தீங்கு நேரும் என்று மனதில் அச்சங் கொண்ட ஸ்பார்ட்டா நாட்டு மக்கள் தங்கள் வாழ்வைச் சிறிது மாற்றி அமைப்பதற்காகவும், உள்ளுர் வாசிகள் எதிர்த்தால் அவ்வெதிர்ப்பைச் சமாளிக்கவுமான வழி வகைகளைக் கோலுவதற்குத் தீர்மானித்தனர். வருங்கால நாட்டை நன்னிலைக்குக் கொண்டு வரும் பொறுப்பு இவர்களைச் சார்ந்தது. ஆதலின், அவ்விளைஞர்களை வளர்க்கும் முறையில், முதல் முதல் சிந்தை செலுத்துவாராயினர்.

பிள்ளை வளர்ப்பு

குழந்தைகளின் வளர்ப்பில் சில முறைகள் கையாளப்பட்டன. குழந்தை பிறந்ததும், அது வன்மை வாய்ந்ததா, மென்மை வாய்ந்ததா என்பது குடும்பப் பெரியோர்களால் தீர்மானிக்கப்பட்டுவந்தது. திருக்காளத்திவேடவர் தலைவனான நாகனும் தன் பிள்ளையைப் பெரியவர் கையில் கொடுத்து, அவர்கள் தூக்கிப் பார்த்துக் கனமான பிள்ளை என்று அறிந்தே திண்ணன் என்று பெயரிட்டதாக நாமும் அறிந்தோம். மெலிந்து காணப்பட்டால் அதனை வளர்ப்பதில் பயனில்லை எனக் கருதி, மலையில் ஒர் இடத்திலிட்டு, அது தானே அழுது சாகுமாறு செய்துவிடுவர். இது கொடுமையே! அதே குழந்தை நல்ல உடல் பலம் வாய்ந்ததாக இருப்பதை அறிந் தால், அது பின்னல் ஒரு சிறந்த வீரனுக விளங்க வல்லது என்பதை உணர்ந்து ஏழாண்டுகள் தாயின் வளர்ப்பில் விட்டு வைப்பர். ஸ்பார்ட்டர் தேய மாதர் கள்நல்ல உடற்கட்டும் உயரமும் படைத்தவர்கள். கிரீஸ் தேசத்தில் வேறு இடங்களில் வாழும் மாதர்களே விட ஸ்பார்ட்டா தேசத்தில் வாழும் பெண்கள் சுதந்திரம் பெற்று விளங்கியவர்கள்.

அவர்கள் தாம் ஈன்ற மக்களுக்கு வீரமும், தீரச் செயலும் உடன் ஊட்டித் தம் மக்களை நன்முறையில் வளர்த்து விடுவதில் கண்ணும் கருத்தும் வாய்ந்தவர்கள். ஈன்று புறந்தருதல் என். தலைக் கடனே’ என்றன்றே நம் தமிழ் நாட்டு வீரப் பெண் மணி ஒருத்தியும் உரைத்திருக்கின்றனள் ! இம் முறையில் ஏழாண்டுகள் வரை உயரமும் உள்ளக் கிளர்ச்சியும் அமைய வளர்க்கப்பட்ட குழந்தையை இவ்வேழாண்டுகட்குப் பிறகு, குருகுல வாசத்தின் பாருட்டுக் குருகுலப் பள்ளியில் கல்வி கற்க விட்டு வைப்பர். அங்கு இச்சிறுவனது கல்வி முன்னேற்றத்தைப் பற்றிய கலையை ஒரு முதியவர் மேற்கொண்டு கல்வி கற்பித்து வருவார். இவ்விளைஞர் கம் கிராமப் பள்ளிக்கூடத்துச் சட்டாம்பிள்ளைப் போன்றவர்.

பள்ளிக்கூடப்பிள்ளைகள் பயிற்சி பெற்ற விதம்

இந்தக் குருகுலப் பள்ளியில் இடப்பட்ட பிள்ளைகள் நாளுக்கு நாள்வயதிலும், கல்வியிலும் முதிர்ந்து வருவார் ஆதலின், அவர்கள் தம்மினும் இளைய பிள்ளைகளைக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்று நடத்துபவர் ஆவர். ஒருவரே எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்று எதிர்பாராமல், அவரவர்கள் செய்யக்கூடியதை ‘இயல்வது கரவேல்’ என்னும் முதுமொழிக்கிணங்கப் பங்கிட்டுக் கொண்டு செய்தால் ஒவ்வொரு துறையிலும் யாவரும் முன்னேறுவர் அன்றோ ! உணவு கொள்ளுங்கால் எல்லாரும் ஒன்று சேர்ந்து உணவு கொள்வர். இன்னார் முன்னும், அதன்பின் இன்னார் பின்னும் உண்ணல் வேண்டுமென்னும் குறுகிய நோக்கம் அவர்கள்பால் இல்லை. அப்பள்ளியை நடத்துபவர்பாலும் இக்குறுகிய நோக்கம் இல்லை. இப்பழக்கம் ஒற்றுமை உணர்ச்சியை உண்டு பண்ணுவதற்குக் கையாளப் பட்டதாகும். இங்குப் பயிலும் பிள்ளைகள் பால் ஒரு தீக்குணம் மட்டும் இருந்து வந்தது. நெல்லுக்கு உமி உண்டு; நீர்க்கு நுரையுண்டு ; புல்லிதழ் பூவிற்கும் உண்டு அல்லவா ? உணவு இல்லாத பொழுது அடுத்த வயல்களில் வளர்ந்துள்ள தானியங்களைத் திருடிக் கொணர்ந்து தம் வயிற்றை நிரப்பி வந்தனர். தம் வயிற்றுக்குத் துரோகம் செய்யக்கூடாது என்பது இவர்கள் இயல்புபோலும்! இப்பிள்ளைகளுக்கு வறுமையையும் செம்மையாகக் கொண்டு நடக்கவேண்டும் என்னும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்தது. காலில் மிதியடி இல்லாதப்போது வெறுங்காலில் நடக்கவும், ஒரே உடை இருப்பினும் அதைக்கொண்டு மண் அமைதி அடையவும், பஞ்சனேயின்றிப் புல்லணையில் படுத்து உறங்கவும், பயிற்றுவிக்கப்பட்டனர். இப்பள்ளிச் சிறார்கள் இரோடஸ் ஆற்றில் நீந்திப் பழகினர். ஓட்டம், மற்போர், எறிபந்து முதலியன ஆடித் தம் உடல் உரத்தைப் பெருக்கிக் கொண்டனர். இவர்கட்குப் பரதமும் இடையிடையே பயிற்றுவிக்கப்பட்டது. இவர்கள் தமக்குள்ளேயே இருதொகுதிகளாகப் பிரிந்து விளையாட்டுக்களை ஏற்படுத்தி விரோத உணர்ச்சியற்று விளையாட்டு உணர்ச்சி கொண்டு விளையாடி வந்தனர்.

இங்ஙனமாக உடல் உரத்தின் பொருட்டுப் பெரிதும் இவர்கள் பயிற்றுவிக்கப்பட்டனரே அன்றி உள்ளப் பயிற்சியாகிய எழுதுதல், படித்தல் ஆகிய பயிற்சியில் குறையுடையவராகவே காணப்பட்டனர். ஆனால், மனனம் செய்யும் பழக்கம் கையாளப்பட்டு வந்தது. நாட்டுச் சட்டங்கள், ஹோமர் முதலான புலவர் பெருமக்களின் பாடல்கள் மனப்பாடத்திற்கு உரியனவாக விளங்கின. பொதுமக்களிடையே சொற்பொழிவு ஆற்றும் கலைமட்டும் பழகுதற்குச் சிறிதும் இடம்கொடுத்திலர். இவர்கள் சுருங்கிய அளவில் பேச மட்டும் பழக்கப்படுத்தப்பட்டனர்.

இத்தகைய பயிற்சி காரணத்தால் ஸ்பார்ட்டா மக்கள் இலக்கிய அறிவில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போயிற்று எனலாம். இவர்கள் பெற்ற பயிற்சிகள் எல்லாம் நாட்டுக்குரிய நல்ல போர் வீரர் ஆதற்கேற்ற பயிற்சியாகவே இருந்தன.

பிள்ளைக்குப் பதினெட்டு வயது வந்ததும், அவன் இரகசியக் கூட்டம் என்று அமைக்கப்பட்ட ஒரு கூட்டத்தில் பயிற்சி பெறும் நிலையைப் பெறுகிறான். அக்கூட்டம் கிரிப்டியா (Crypteia) என்று கூறப்படும். இங்கு இரண்டு ஆண்டு பயிற்சிபெற வேண்டும். இந்த இரண்டாண்டில் கூலி உழவர்களோடு மறைமுகமாகப் பழகிவர ஏற்பாடு செய்வர். இவ்வாறு பழகியே இரண்டாயிரம் கூலி உழவர்களைத் தம் வசமாக்கினர் என்பது அறிய வருகிறது. இக்கூட்டத்தின் நோக்கத்தை ஒரு சிலரே அறிவர். இதுவே அவ்விரகசியக் கூட்டம் செய்து வந்த பணியாகும்.

பெரியவரானதும் பெற்ற பயிற்சி

இவர்கள் பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்டு வந்த காலத்தில் பெற்ற ஒழுங்கு நடத்தை, மனிதராக மாறியகாலத்திலும், தொடர்ந்து நற்பயன் அளித்தது. உணவு கொள்ளும் முறை எவ்வாறு ஒன்றாக நடந்து வந்ததோ, அவ்வாறே உடற்பயிற்சியும் முறையாக எல்லாருக்கும் ஒன்றாகவே நடந்துவந்தது. இதனால் இவர்கட்கிடையே தோழமைப் பண்பு ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஊடுருவி வளர்ந்து வந்தது. ஸ்பார்ட்டா மக்களின் உடையும் உணவும்

இவர்களின் உடைகளும் உணவுகளும் எளியனவாகவே இருந்து வந்தன. ஓர் உடை தரித்தே உலவ வேண்டியிருந்ததால், ஆடை அழுக்குப் படிந்ததாய் இருந்தது. உணவு சுவையின்றி இருந்தது. இவர்கள் பாடுபட்டுப் பணத்தைச் சேர்த்து வைக்கவேண்டும் என்னும் எண்ணம் இல்லாதவர்கள், கூடுவிட்டு இங்கு ஆவி தான் போனபின் அப்பணத்தை யார் அனுபவிப்பவர் என்பது அவர் நினைவு. வாணிகத் தொழிலையும், இவர்கள் மேற்கொள்ள விரும்பவில்லை. அதனைத் தம் தலைநகர்க்கு வெளியே வாழ்ந்த ஒரு சிறு கூட்டத்தினர்க்கு விட்டுக் கொடுத்தனர். இவர்கள் கையாண்டுவந்த நாணயங்கள் இரும்பால் ஆனவையாகும். செல்வத்தை எவ்வகையிலேனும் தேடிக்குவித்துச் செல்வச் செருக்குடன் திரிந்தால் அச்செல்வம் இல்லாதவர் செல்வரைக் கண்டபோது பகையும் பொறுமையும் கொள்கின்றனர். செல்வர்களும் ஏழைகளை அடக்கி ஆள முற்படுகின்றனர். ஆகவே, தேவைக்கு மேல் செல்வம் இல்லாதது நல்லதன்றே! ஆகையினால், இவர்கள் செல்வத்தைச் சேகரித்து வைக்க எண்ணாததால் என்றும் நாட்டினிடத்துப் பற்றும், நியாயமும் கொண்ட உணர்ச்சியுடையவராய் இருக்க வாய்ப்பு உண்டாயிற்று. ஆகவே, இவர்களது ஒழுங்கு நடத்தை இவ்வாறு சிறந்த முறையில் இருந்தது. எந்நாட்டு மக்களும் இவர்களுடைய தலைவர்கள் எவ்வாறு நடந்து கொள்ளுகிறார்கள் என்பதை அறியத்தக்க ஒற்றர்களையும் வைத்து உளவு அறிந்து வந்தனர். இவர்கள் நாட்டிற்குள் இருக்கின்ற காலங்களில் சட்டங்களுக்கு அடங்கியும், நீதிநெறி கடவாதவர் களாயும் நடந்து கொண்டனர். இவர்கள் பெற்ற ஒழுங்கு நடத்தை இவர்கள் சிறந்த போர் வீரர்கள் என்பதை நிலைநிறுத்திக் காட்டியது.

போர் முறை

ஹோமர் காலத்தில் ஒருவருக்கொருவர் தனித்து நேர்முகமாக இருந்து போரிட்டனர். ஆனால், இந்தத் தனிப்போர் முறை மாறிப் படைகள் என்னும் பெயரால், பலரும் ஒன்று சேர்ந்த தொகுதிகள் இரு புறங்களிலும் நின்று எதிர்த்துப் போரிடும் முறை பழக்கத்திற்கு வந்தது. ஆனால், எய்யும் போர்க் கருவிகளில் யாதொரு மாறுபாடும் ஏற்பட்டிலது. தலை கை கால்களில் அணிய வேண்டிய போர் உடைகளைத் தரித்தே இருந்தனர். ஆனால், பண்டை முறையில் இருந்த ஈட்டி போன்ற படைக் கருவி மேலும் சிறிது மாறுபாடுற்று, மாவீரர் பயன்படுத்தத்தக்க ஆறடி நிளமுள்ள ஈட்டியாகப் பயன்படுத்தப்பட்டுவந்தது. வீரர்கள் அணியணியாக நிறுத்திப் பழக்கப்பட்டு வந்தனர். போர் வீரர்கள் தம்மைக் காத்துக் கொள்ளவும், எதிரிகளைத் துரத்திப் போரிடவும் இருந்தமையால், தம்மால் சுமக்க வொண்ணாக் கருவிகளைத் தாங்கி இருந்தனர். இதனால், இவர்கள் நிலத்திலிருந்தே போர் புரிய வேண்டியது இன்றியமையாததாயிற்று.

இந்நிலையில் மலைச் சரிவில் இருந்து போர் புரிய நேர்ந்ததால், அவ்வளவு கனமுள்ள பொருளைச் சுமத்தல் இன்றி எளிதான இலேசான வில்லும் நாணும் மட்டும் ஏந்தியிருக்க வேண்டிய வராயினர். இவர்கள் காலாட் படையினராக இருந்தனரே அன்றிக் குதிரைவீரர் என்னும் நிலைமை எய்த அறியாதிருந்தனர். குதிரை வீரராயின் அதன் மீது இருந்து போர் புரிவதற்கு தன் முறையில், பயின்றிருக்கவேண்டுமன்றோ? கிரேக்கர்கள் தம்போர் முறையைப் பண்டைத் தம் முன்னோர் எம்முறையில் மேற்கொண்டு வந்தனரோ, அம்முறையிலேயே நடத்தி வந்தனர். இது பரம்பரைக் குணமாக இவர்களிடம் அமைந்திருந்தது என்றாலும், இம்முறை சிற்சில சமயங் களில், எதிரிகளை அழிக்கும் பொருட்டுச் சிறிது மாற்றப்பட்டது; தம் பொது விதியினின்றும் விலகிப் போரிடவும் நேர்ந்தது. இவர்கள் நகர்ப் புறங்களின் சுவர்களுக்குப் புறத்தே மறைந்து நின்று எதிர்ப்பது பொதுவான வழக்கமாகும். பகைவர்களின் அரண்களைத் தகர்த்தற்குத் தீப் பொறி ஊடுருவிகள் பயன்படுத்தப்பட்டன. நாடு நகரங்களை எரிகொளுவச் சிற்சில பொறிகள் உபயோகப் படுத்தப்பட்டன. சிற்சில இடங்களில் கோட்டை அரண்கள் கடத்தற்கருமையாக இருந் தால், அவற்றைத் தாண்டி உள்செல்ல, மண் மேடுகள் அரணைச்சுற்றி ஆக்கப்பட்டன. சிற்சில இடங்களில் எதிரிகளை உள்ளே வரவொட்டா திருக்கப் பள்ளங்கள் எடுக்கப்பட்டன. மற்றும் சிற்சில இடங்களில் பெரியபெரிய மதில்கள் எழுப்பப் பட்டு எதிரிகள் வெளியிடங்களில் யாதோர் உதவி யும் பெருவகையில் தடைகள் செய்யப்பட்டன.

ஸ்பாட்டர்கள் போர், தொடர்ந்து நீ ண் ட நாளைக்கு நடைபெருது. இவர்கிள் பெரிதும் உழவுத் தொழிலில் ஈடுபட்டவர். ஆதலின், இவர்களது போர், மாரிக் காலத்தில் நடப்பது அரிதாகும். கோடைக்கும் மாரிக்கும் இடைப்பட்ட காலத்தில் தான் போருக்கும் கிளிம்புவர். அப்போரும் விரை வில் முடிவதாய் இருக்கும். ‘உண்டி முதற்றே உணவின் பிண்டம்’, அன்னம் ஒடுங்கில் அனைத்தும் ஒடுங்கும்’ ஆதலின் எதிரிகள் ஒருவரை ஒருவர் எதிர்க்கும்போது முதலில் பயிர் பச்சைகளை அழிக்க முனைந்து நிற்பர்.

கிரேக்கர் இனத்தில் ஸ்பார்ட்டர்களே, நன்கு பழகிய போர் வீரர்களைத் தனித்து வைத்திருந்தனர். போர் வீரர்கள் சாகுபடிகளைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டியவர்களல்லர். இவர்கள் ஏனைய தொழில் புரியும் குழுவினர்களினும், சீரியராக எண்ணப்பட்டு வந்தனர். இத்தகைய போர் வீரர் கூட்டத்தான், பாரசீக தேசத்து மன்னன் எக்ஸர் 6r36mo6io (King Xerxes of Persia) கிரேக்க நாட்டின் மீது’. கி. மு. 80இல் படையெடுத்தபோது எதிர்த்து எதிரிகளை அடக்கி வெற்றி கொண்டதாகும். கிரேக்கர்களுக்குத் துணையாயிருந்து இந்த ஸ்பாட்டர் போர்ப் படையேயாகும். எதினியர்கள் பெர்ஷியாவின் கடற்படைச் சாலமிஸ் (Stait of Salamis) என்னும் குறுகிய கடல் நீர் வழியில் தோற்கடித்தனர். பாரசீக மன்னனுல் விடுத்துச் செல்லப்பட்ட பட்டாளத்தைப் பொயோஷியாவில் (Boeotia) இந்த ஸ்பார்ட்டர்கள்தான் ஓடச் செய்து முறியடித்தனர். இன்னேரன்ன வெற்றி ஸ்பாட்டர்களுக்கு ஒப்புயர் வற்ற வெற்றியாகும். ஏனெனில், அதுகாறும் பாரசீகர்கள் தம்மை வெல்லக் கூடியவர்கள் எவரும் இலர் என்னும் இறுமாப்புக் கொண்டிருந்தனர். அவர்கள் தோல்வி ஸ்பார்ட்டர்களுக்குச் சீரிய வெற்றிக் கறி குறி ஆயிற்று.