கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்/சமய வாழ்வு
பண்டைக் காலத்துக் கிரேக்கர்களின் வழிபடு தெய்வங்கள் அவர்களாலேயே அமைத்துக் கொள்ளப்பட்டவை. சமயம் என்னும் சொல் அவர்கட்கு மிகமிக ஏற்புடைத்தான சொல்லாகும். செய்து கொள்ளுதல் என்பதுதானே சமயம் என்பதன் வேர்ப்பொருள். அவர்கள் தெய்வங்கள் யாவும், அவர்களின் செல்வ நிலைக்கும் அழகிய தோற்றங்களுக்கும் உட்பட்ட எழுச்சிகளாகும். சுவையாகப் பல்வேறு கதைகள் தெய்வங்கள் ஈடுபட்டு நடத்தினவாக அவர்களால் புனையப்பட்டன.
கிரேக்கர்கள் போற்றும் தெய்வங்களில் ஸீயஸ் (Zeus) என்னும் பெயரிதே சிறந்ததாகும். நாம் கருதும் மன்மதனை இதற்கு ஒப்பிடலாம். அவர் பருகும் திராட்சைச் சாற்றிற்கும் உரிய கடவுளாகப் பேக்கஸ் (Bacchus) என்னும் தெய்வத்தைக்கொண்டிருந்தனர் இதனோடு நம் மதுரை வீரனை இணைத்து நாம் கருதலாம்.
சகுனம், கனா முதலிய கொள்கைகளில் கிரேக்கர்கள் பெரிதும் நம்பிக்கையுடையவர்கள். சகுனம் பார்ப்பதிலும் கனவின் பலனைக் கருதுவதிலும் நம் பண்டைய தமிழரும் பின்வாங்கியவரல்லர். சகுனத்தை விரிச்சி என்று கூறி வந்தனர். இவ்வாறே நம்மவர் கனாவின் பயனை நன்குணர்ந்தவர் என்பதைச் சிலப்பதிகாரத்துக் கனத்திறம் உறைத்த காதையாலும் தெளிய உணரலாம்; சீவக சிந்தாமணியில் விசயை கண்ட கனவின் மூலமும் அறியலாம்.
அவர்கள் தொடங்கும் புதிய தொழிலில் ஏதேனும் முதலில் சகுனத்தடை ஏற்பட்டால் அதனால் தீங்கே விளையும் என்று தீர்மானித்திருந்தனர். மாந்திரிகத்திலும் அவர்களுக்குப் பெரிதும் நம்பிக்கை உண்டு. அவர்கள் சகுனத்தில் ஆழ்ந்த கருத்துடையவர்கள் என்பதை எதினியர்களின் போர்க் கப்பல் சிசிலியோடு போர் புரியப் புறப்பட ஆயத்தமாய் இருக்கையில், அன்று இரவு அவர்களின் தெய்வ உருவங்கள் யாவும் முகத்தைத் திருப்பிக் கொண்டிருப்பதாகக் கனவு கண்டதனால், தீங்கு நிகழும் என்று எண்ணிப் பயணத்தை நிறுத்திக் கொண்டதனை இன்றும் நன்கு அறியலாம்.
தம் மீது மருள் ஏறப் பெற்றவர்கள் ஏதேனும் கூறினால் அதனை அப்படியே நம்பி அதன்படி நடக்கும் தன்மை கிரேக்கர்பால் குடிகொண்டிருந்தது. எந்தக் கிரேக்கனும்தான் திராட்சைச் சாற்றைப் பருகுவதற்கு முன் சிறிது நிலத்தில் ஊற்றிய பிறகே தான் உட்கொள்வான். இவ்வாறு செய்வது தன் தெய்வத்திற்கு முன் கொடுத்துப் பின் தான் உட்கொள்வது என்னும் கருத்தினலாகும்.
இந்த முறை நம் இந்தியப் பொதுவாழ்விலும் இருப்பதைக் கவனிக்கலாம். நீரைப் பருகும்போது சிறிது பூமியில் கொட்டுகிறோம், உணவு கொள்ளும் போது ஒரு பிடி சோற்றை இலையில் பிடித்து வைக்கிறோம்; அன்றிக் காக்கைக்கும் வைக்கிறோம். அப்போது காக்கைகள் கூட்டமாக வந்து உண்ணுவதைத் தாயுமானவர், ‘காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர்’ என்றும் பாடிவிட்டார்.
ஹெர்மஸ் (Hermes) நிதிக்குரிய தேவதையாகும். நாம் குபேரன் என்று கூறுவது இதற்குப் பொருத்தமாகும். அதை அன்றித் திருமகளையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம். நிரம்பச் செல்வமுடையவரை நாம் குபேரர் சம்பத்தாய் வாழ்கின்றனர் என்றும், இலச்சுமி கடாட்சம் பெற்றவர் என்றும் கூறுகின்றோம்.
மாலுமிகள் பாசிடோன் (Poseldon) என்னும் தேவதையைக் கடற்கடவுளாகக் கருதினர். இது நாம் கூறும் வருணன் போன்ற தெய்வமாகும்.
நாம் ஆடிப் பட்டம் தேடிவிதை என்று கூறி நல்ல நாளில் விதைத்தலோ அறுவடை செய்தலோ நடத்துவது போலக் கிரேக்க உழவர்களும் நல்ல நாளில் விதைத்தலும், அறுவடை செய்வதிலும் கண்ணுங் கருத்துமாய் இருந்து வந்தனர். உழவர்கள் பருவந்தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை முறையாகக் கொண்டனர். நாம் சனிதோறும் நீராடுகிறோமல்லவா?
இவர்களிடையே அப்டுரியா (Apaturia) என்னும் பண்டிகை சிறந்து விளங்கியது. இந்நாளில் குடும்பத்தினர் ஒன்றுகூடிப் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஒருவர்க்கொருவர் வெகுமதி கொடுத்துக் கொண்டு நல்விருந்து அயர்வர். இவ்வாறு செய்து குடும்பத்தார் தமக்குள் ஒருவர்க்கொருவர் ஒற்றுமையாய் அன்பு நிலவி வாழ வழிசெய்வர்.
ஹீப்ரு மக்கள் மேற்கொண்ட சமயத்திற்கும், பண்டையக் கிரேக்கர் கைக்கொண்ட சமயக் கொள்கைக்கும், சிறிது வேறுபாடு இருந்து வந்தது. கிரேக் கிரேக்கர் தாம் வழிபடும் தெய்வங்களிடத்துப் பயபக்தி கொண்டு இருந்தனர். கிரேக்கர் வழிபாடு செய்கையில் நின்றுகொண்டு அமைதியாகப் புரிவர். அவர்கள் மண்டியிட்டு வணங்கும் வணக்க முறையை வெறுத்து ஒதுக்கினர். அவர்கள் இறப்பு என்பது தடுக்க முடியுாத ஒர் இயற்கை நிகழ்ச்சி என்று நன்கு உணர்ந்திருந்தனர்.
‘வாழ்வானது மாயம்; இது மாய்ந்து போவது திண்ணம்’ என்னும் நம் கொள்கையே அவர்கள் கொள்கை. ஆகவே, இவ்விறப்பை அமைதியாகவும் வீரத்தோடும் ஏற்றுக்கொள்வதே தக்கது என்பது அவர்கள் துணிவு.
இறந்த உயிர் கீழ் உலகம் செல்லுமென்பதும், அவ்வுலகில் ஊக்கமாகவோ உணர்ச்சியாகவோ இருந்து எதையும் அனுபவிக்க முடியாதென்பதும் அவர்கள் உள்ளக்கிடக்கை. அவர்கள் இறந்த உடலைச் சுட்டெரித்து வந்தனர். பின்பு அவ்வுடற் சாம்பலை ஒரு குவளையில் வைத்து மூடி, நகர்க்கு வெளியே புதைத்து வைப்பர். இவ்வாறு செய்வதன் நோக்கம் இவ்விறந்த உடலினிடத்து இரங்கும் தன்மையாளர் தம் நன்றியை அறிவித்துக் கொள்ளுவதற்குப் படையல் முதலியவற்றை அளிப்பதற்காக ஆகும். இறந்த உயிர் எளிதில் தான் வாழ்ந்த இடத்தை விட்டுச் செல்ல இசையாமல், தான் அனுபவித்த இன்பங்களை விரும்பி எதிர்நோக்கி இருப்பதாகக் கிரேக்கர் கருதி இருந்தனர். ஆதலால் அவ்வுயிர்க்குப் படையலும் விருந்தும் அளித்து வந்தனர். இது நாம் ஆண்டுக்கொருமுறை திவசம் கொடுக்கும் முறையை ஒத்ததாகும். இறந்தவர் ஆண்களாயின் நகைப் பெட்டியுடனும் குழந்தை களாயின் விளையாட்டுப் பொருளுடனும் காட்சி யளிக்கும் முறையில் உருவங்களை வைப்பர்.
இதுவே கல் எடுப்பு என்று நாம் தொன்று தொட்டு மேற்கொள்ளும் முறையாகும்.
ஆனால், நம் கல்லெடுப்பில், உருவத்தோடு இறந்தவர் பீடும் பெருமையும் பொறித்தல் இயல்பு. நோய் வாய்ப்பட்டும் வயது முதிர்ந்தும் இறப்பு ஏற்படுவதினும், போரில் இறப்பதையே கிரேக்கர் பெரிதும் விரும்பினர். இவ்வியல் தமிழரது இயல்புக்கு மிக மிகப் பொருத்த முடையது. கிரேக்கர் இயற்கையையும் வழிபடும் இயல்பினர்.
கிரேக்கர் வந்தனை வழிபாடு இயற்றும்போது சமயக் கொள்கையில் உள்ள மரபுப்படி தீட்சை பெற்றவர்களே வழிபட இடம் பெறுவர். இத்தீட்சை உணவு முறையில் ஏற்பட்டதாகும். கண்டதை உண்போர் வழிபாட்டிற்கு உரியவர் ஆகார். உடற்றுாய்மை, உளத்தூய்மை அவர்களுக்கு இன்றியமையாதவை. இவையும் நம் மதக் கொள்கையைப் போன்றவையே. அவர் வழிபாடு செய்யுங் காலங்களில் தூய வெள்ளிய ஆடையை உடுத்திக் கொள்வர். செல்லும் வழியில் இருள் நிறையில் ஒளி காணத் தம் கையில்வேண்டியபோது ஒளிதரும் கைவிளக்கைக்கொண்டு போவர். வழிபடச் செல்கையில் வாளாசெல்லாது தம் தெய்வங்களைப் பற்றிய அருட்பாடல்களே அகங் குழைய்ப் பாடிச் செல்வர். எல்லா வழிபாட்டிலும் பாடல் வழிபாடே சிறந்தது போலும்!