கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்/பொழுது போக்கு

விக்கிமூலம் இலிருந்து

10. பொழுதுபோக்கு

“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்பது திருமூலர் வாக்கு. இந்த வாக்கின் உண்மையை அறிந்தவர் போன்றவர் ஏதென்ஸ் நகரவாசிகள். பொதுவாக ஒவ்வோர் ஏதென்ஸ் நகரத்தவனும் உடற்பயிற்சி செய்வதற்கோ மற்றும் உடற்பயிற்சிக்கான விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கோ மிகவும் அவா உள்ளவனாய் இருந்தான். கிரேக்கர் உழைத்ததனால், அன்று பெறவேண்டிய கூலியைக் கூடவிரும்பாமல், பயிற்சி செய்வதிலேயே விருப்பமுடையவராய் இருந்தாரெனில், அவர் உடற்பயிற்சியின் மீது கொண்ட விருப்பத்தை விளக்க வேண்டுவதில்லை யன்றோ! வயது முதிர்ந்தவர்களும் ஏதேனும் ஒரு பயிற்சியை மேற்கொண்டுதான் இருந்தனர். அவர்கள் கோழிச் சண்டை விளையாட்டை மேற்கொள்வர். இவ்விளையாட்டில் நம்மவரும் பெரு விருப்புடையர். இதனைக் கோழியையும் யானையையும் சண்டையிட விட்டு,கோழி வென்றதற்கு அறிகுறியாகக் கோழியூர் என்ற ஒன்றை அமைத்துக் கொண்டனர் என்பதனால் நன்கு அறியலாம்.

செல்வர்கள் குதிரைகளை வளர்த்துப் பந்தயம் விட்டு வந்தனர். இவை யாவும் நமக்குரிய பயிற்சியும் ஆகும். சுந்தரரும், ‘காற்றனைய பரிமாவும் கடி தருள வேண்டும்’ என்று இறைவனைக் கேட்கின்றனர். இதனால் குதிரை மீதிவர்ந்து குலவவேண்டுமென்பது, அவர் குறிக்கோளாகுமென்பது தெரிய வருகிறதன்றோ?

இளைஞர்கள் நாம் ஆடும் கண்ணும்பூச்சி ஆட்டம் போன்ற ஆட்டத்தில் பழகி வந்தனர். இதனை அவர்கள் பிரான்ஸி பிளை (Bronze Fly) என்று குறிப்பிடுவர். பந்தாட்டங்களும் அவர்கள் ஆடிய ஆட்டமாகும். அவற்றுள் ஒன்று வளைகழிப் பந்தாட்டம் என்பர். அதாவது ஹாக்கி ஆட்டம். சாதாரண நடனமும் இவர்கள் கொண்ட பயிற்சியில் ஒன்று. அப்போது பந்துகளையும் பயன்படுத்தினர். நடனம் கிரேக்கர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட ஆட்டமாகும். இதில் கலந்து கொண்டவர்களுக்கிடையே நட்புரிமையும் நல்வாழ்வும் உடன்வளர்கின்றனவாக அவர்கள் கருதினர். தனித் தனியே தம் தம் ஆற்றலைக் காட்டத்தக்க பயிற்சிகளும் இவர்கள் பால் அமைந்திருந்தன. பயிற்சிகளை நன்கு பயில்வதற் கெனத்தனித்தனி வெளி இடங்கள் இருந்தன. இவ்விடங்களேயன்றிச் சிலம்பக் கூடங்கள் மரங்கள் அடர்ந்தவையாய், இயற்கை மறைவு பெற்றுக் குளிக்கவும், உடுக்கவும், தகுந்த வசதி பெற்றனவாக விளங்கின. பயிற்சியில் கலந்துகொள்பவர் திகம்பரர் போல இருந்து எண்ணெய் தேய்த்துக் கொள்வர். இவ்விடங்களில் ஒட்டம், குதித்தல், நிறைப்பொருள்கள் வீசி எறிதல் முதலான பயிற்சிகள் நடைபெறும். உயரக் குதித்தல் (High Jump) இவர்கட்குப் பழக்கமில்லை. நீளக்குதித்தலில் மட்டும் (Long lump) இவர்கட்குப் பயிற்சி இருந்து வந்தது. ஓடிவந்து தாண்டுதல் நம் நாட்டில் நடக்கும் பயிற்சி. ஆனால், ஏதென்ஸ் நகரப் பயிற்சியாளர்கள் நீளத் தாண்டுதலில் பங்கு கொண்டால், ஒடி வந்து தாண்டாமல், நிறையுள்ள பொருள்களைக் கையில்கொண்டு குதிக்கையில் தமக்குப் பின்னால் எறிந்துவிட்டுத் தாண்டுவர். இப்படிச் செய்வதால் தாமதமின்றிக் குதிக்கும் பயிற்சி ஏற்படுகிறதாம். யார் நீண்ட தொலைவில் இந்நிறைப் பொருள்களை எறிகின்றனரோ அவர்களே வெற்றி கொண்டவர் என்பது தீர்மானிக்கப்படும். குத்துச் சண்டையும் (Boxing) மற்போரும் பயிற்சிகளில் இடம் பெற்றிருந்தன. குத்துச் சண்டை நடைபெறுகையில், காதுவரை மூடிக் கொள்ளக்கூடிய தொப்பியும் கைகளுக்குத் தோல் உறையும் அணியப்படும். மற்போரைப் பற்றி நாம் ஒன்றும் கூறவேண்டுவதில்லை. இக்கால முறையையே அக்காலத்திலும் கைக்கொண்டனர். இந்தப் பயிற்சியின் ஒரு தனிச்சிறப்பு யாதெனில், ஒரே சமயத்தில் மற்போரும் குத்துச் சண்டையும் நடப்பதுதான். இக்காலத்தில் குத்துச் சண்டைக்கென ஒவ்வியவர் குத்துச் சண்டைதான் புரியவேண்டும். ஆனால், அக்கால ஏதென்ஸ் நகர மக்கள் இருவர் குத்துச் சண்டைக்கென இறங்கினாலும், அவர்களே மற்போரும் புரியலாம். அஃது அதில் கலந்து கொண்டவருடைய மனத்தைப் பொறுத்ததாகும். இதனால் இவ்விரு பயிற்சிகளிலும் நன்கு தேர்ந்தவர்களே இதில் ஈடுபட வேண்டும் என்பது புலனாகிறது. ஆனால் இப்பயிற்சியில் கலந்து கொண்டவர் கடித்தல் கூடாது; கண்களில் அடித்தல் கூடாது. இவையே நிபந்தனைகள். இவ்விரு பயிற்சி பெற்றவர் தம் வல்லமையைக் காட்ட இறங்கிய போது இருவரில் ஒருவர் இறத்தலும் உண்டு. ‘விளையாட்டு வினையாயிற்று’ என்பது ஒரு பழமொழி தானே !

ஒலிம்பியாவில் ஐந்தாண்டுகளுக்கொரு முறை நடைபெறும் விளையாட்டு மிகவும் முக்கியமானதாகும். இந்த இடம் வன்மைக்குரிய தெய்வமான ஸீயஸ் (Zeus) கோயில் கொண்டுள்ள இடமாகும். இங்கு எல்லா இடங்களிலும் உள்ள விளயாட்டில் நற்பயிற்சி பெற்றவர்கள் யாவரும் வந்து சேர்வர்; சேர்ந்து போட்டியில் கலந்து கொள்வர். இக்காலத்திலும் இந்த ஒலிம்பியா என்னும் இடத்தில் குறி கூறுவர், யாசகர் முதலியோர் கூட்டம் கூட்டமாகக் கூடுவர். கலைஞரும், ஞானியரும் தம் அறிவைக் காட்டுமிடம் இதுவே ஆகும். இங்கு நடக்கும் விளையாட்டுக்கள் தெய்வக் குறிப்பையும் காட்டுவனவாகும். இந்த விளையாட்டுப் பந்தயங்கள் நடக்கை யில் பகைகொண்டு நாடுகள் போர் தொடுத்திருந்தாலும் அதனை நிறுத்தியே ஆகவேண்டும். விளேயாட்டுக்கள் முடிந்ததும் போரைத் தொடங்க வேண்டும். இதனால் விளையாட்டு இங்கு முதன்மை பெற்றிருந்தது என்பது புலனாகிறது.

விளையாட்டுத் தொடங்கப்பெறும் முதல் நாள் ஸீயஸ் (Zeus) தெய்வத்திற்குப் பலிகொடுத்த பிறகே தொடங்கப் பெறும். இரண்டாவது நாள் சிறு சிறு விளையாட்டுக்கள் நடைபெறும். மூன்றாவது நாள் உணர்ச்சி ததும்பக்கூடிய விளையாட்டுக்களான ஒட்டப் பந்தயம், குத்தும் மல்லும் கலந்த பந்தயங்கள் நடைபெறும். நான்காவது நாளில் தீப்பந்தாட்டம், மற்போர், நீளத்தாண்டுதல், நிறைப்பந்தெறிதல் முதலான விளையாட்டுக்கள் நடைபெறும். இந்தப் பந்தயங்களில் யார் மிகுதியாக ஈடுபட்டு மிகுந்த எண்ணிக்கைகளைப் பெறுகிறார்களோ, அவர்களே வெற்றிக் கொண்டவர்கள் என்று முடிவு கூறப்படும். இந்தப் பந்தயத் திருவிழாவின் இறுதி நாள், தேர்ப்பந்தயம், குதிரைப் பந்தயம், நடைப் பந்தயம் ஆகிய இவற்றோடு முடிவுறும். பந்தயங்கள் முடிந்து வெற்றி பெற்றவர்களுக்கு நண்பர்களும் ஏனையவர்களும் தம் பாராட்டுக்கு அறிகுறியாக மலர் மாலைகளை அளித்து மகிழ்வார்கள். வெற்றிக்கு அறிகுறியாக விலை மதிப்புக்குரிய யாதொரு பெரும் பரிசும் அளிக்கப்படவில்லை. வெற்றி பெற்றவர்கள் தம் நகர மக்களால் புகழப்படுகின்ற புகழ்ப் பரிசுகளை மட்டும் என்றும் பெற்றவர் ஆவர். ஆனால், வெற்றியாளர்கட்கு ஒரு நன்மை மட்டும் உண்டு. வெற்றி பெற்றவர் தம் ஆயுள்

முன்நாள் வரை உணவுக்கு வருந்தாதிருக்க, உணவு அளிக்கும் முறையும் இருந்து வந்தது. வெற்றி கொண்டவன் ஒரு சிறந்த வீரன் என்றும், பாராட்டிற்கு உரியவன் என்றும் கருதப்பட்டான். தெய்வமாகவும் வெற்றியாளர்களை மதித்தனர். இம்முறையில் சிறப்பிக்கப்படும் அர்ச்சுனன், மதுரை வீரன் முதலியவர் நம் நாட்டு வீரர் ஆவர். பல பந்தயங்களில் வெற்றி காண்பவர் பின் ஒரு பந்தயத்தில் ஈடுபட அதனை நன்கு பயிற்சி செய்து வந்தனர். இதனால், பல பந்தயங்களில் வெற்றி பெறுதலாகிய பெருமை நாளுக்கு நாள் குறைந்து தனித்தனிப் பந்தயங்களில் வெற்றி பெறுதலே சிறப்பாகக் கருதப்பட்டது. வெற்றி பெற்றவர் சில உருவிலும், கலை உருவிலும் நிரந்தரமாகப் பெருமை பெறும் முறையில், சிற்பிகளாலும், புலவர்களாலும், சிறப்பிக்கப்பட்டனர். இதுவே வீரர் வழிபாடு என்னலாம். இந்த வழிபாடு தமிழர்க்குரிய ஒரு தனிப் பழக்கமாகும். இதன் விரிவைப் புறநானூற்றில் பர்க்கக் காணலாம்.

கிரேக்கர் தம் இலக்கியமும் நாடகமும் ஆங்கிலப் பெருமக்களால் பெரிதும் பாராட்டப்பட்டனவாகும். ஆங்கிலேயர்கள் கூறும், செய்யுள் நாடகம் துன்பி usb (tragedy) @oriouso (comedy), utiliu obful இக்கலைகளுக்கெல்லாம் மூலம் கிரேக்க மொழி என்பதில் ஐயமில்லை. கிரேக்கர் தம் விசேட தினங்களில் விருந்துகள் நடத்துகையில் இன்பமாகப் பொழுது போக்குவதற்குப் பல விளையாட்டுக்களை நடத்துவதில் பெரு விருப்பமுடையவர்கள். இதில் ஒரு தனிப்பயிற்சியும் வாய்ந்தவர்கள் என்னலாம். திரு விழாக்களின் போது புராண சம்பந்தமான நாடகங்களை நடத்துவர்.

இவர்கட்கு அமைந்த நாடகமேடை ஒரு வட்டமான மேடையாகும். பின்னல் கூடாரம் அமைத்து அதில் நடிகர்கள் தங்கித் தயாராகிக் கொண்டிருப்பர். கூடாரத்தின் மேல் பல விதமான வர்ணங்கள் தீட்டியவையாக இருக்கும். திரை (சீன்) மாற்றம் என்பது கிடையாது. எல்லா நடிப்புக்களும் ஒர் இடத்தில்தான் நடக்க வேண்டும். அப்படி ஏதேனும் நாடகத்தில் இடம் மாறிப் பேசவேண்டிய இடங்கள் நேரின், வர்ணம் தீட்டப்பட்ட இருபக்கங்களில் உள்ள திரைகளை மட்டும் மாற்றிவிடுவர். இதிலிருந்து அடுத்த காட்சி வேறு ஓர் இடத்துக் காட்சியாகும் என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும்.

பார்ப்பவர் வட்டமாக அமர்ந்திருப்பர். கிரேக்க நாடகங்களில் ஒருவரே பல பாத்திரங்களாக நடிப்பர். ஆகவே, ஒரு நாடகத்தை நடத்த இருவர் மூவர் இருத்தலே போதுமானது. நடிப்பு வேறுபடும் போது உடையும் வேறுபடும்.

பார்ப்பவர் உணர்ச்சி வேகத்தைப் பாராட்டுவரே அன்றிக் கதையின் உண்மை பொய்மையைப் பற்றிக் கவலைக் கொள்ளமாட்டார். இதனை உணர்ந்தே மக்களின் உள்ளக்கிடக்கைக்கு ஏற்ற முறையில் கிரேக்க நாடக ஆசிரியர்கள், சிறந்த கருத்துக்களைத் தாம், புராணக் கதைகளில் நல்ல மொழியில் நாடகமாக எழுதிக்காட்டலாயினர்.

நாடகத்தில் நடிப்பவர் தம் திறமையினால் ஒரு வனது சீற்றம், பகைமை, பொருமை, வெறுப்பு ஆகிய இவற்றை நடிப்பில் உணர்த்திக் காட்டுவர். இந்த மெய்ப்பாராட்டினால் நிகழப் போவது இன்னது என்பதை அறிந்து கொள்ளலாம் அன்றோ? நாடகங்கள் பெரும்பாலும் விடியற்காலத்திலிருந்து தொடங்கப் பெறும். இது முற்பகல் வரை நடக்கும். நாடகத்தில் கூட்டுப் பாடலில் கலந்து கொள்பவர் கட்குச் செலவாகும் தொகையைச் செல்வக்குடி மக்கள் ஏற்க முன்வருவர். நாடகங்களைக் காண்பதற்குச் சேய்மையினின்றும் வருவர். நாடகம் பார்ப்பதற்குரிய கட்டணம் சாதாரணமாக இருக்கும். இதனால் பொருள் ஈட்டும் கொள்கையுடன் நாடகம் நடத்தப் பெறாமல் கலை வளர்ச்சிக்காக இது நடத்தப்பட்டது என்பதை நாம் நன்கு அறியலாம்.

கொட்டகை கூட்டம் மிகுந்து பின்னால் வருபவர்க்கு இடம் இன்றித் துன்புறும் நிலையில் நிறைந்துவிடும்.

நாடகத்தைப் பற்றியோ நடிகனைப் பற்றியோ தங்கள் கருத்தை அறிவிக்க ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து அவரைக் கூறுமாறு செய்வர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் கூறும் கருத்துக்கள் எவரும் ஒப்புக் கொள்ளக் கூடிய நிலையில் இருக்கும். இவர்கள் ஒவ்வொன்றையும் ஊன்றிக் கவனித்துத் தம் கருத்தைக் கூறுவர்.