உள்ளடக்கத்துக்குச் செல்

கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்/தொழிலும் வாணிகமும்

விக்கிமூலம் இலிருந்து

9. தொழிலும் வாணிகமும்

செல்வர் இன்பம் அடைய வறியர் உழைக்க வேண்டியது அன்றும், இன்றும், என்றும் உள்ள ஒரு கொள்கை போலும்! ஆதலின், ஏதென்ஸ் நகரில் இருந்த செல்வர்கள் தம் வாழ்நாளை உழைப்பின்றி இன்பமாகக் கழித்து வந்தனர் எனலாம். ஏதென்ஸ் நகர மக்களில் பலர் வறியராகவே இருந்தனர். அவர்கள் தம் தினசரி வாழ்வு நடத்த உழைத்தே தீர வேண்டியவராயினர். ஏதென்ஸ் நகரில் வாணிகத்திற்கும் இயந்திரக் கைத்தொழிற்கும் வளர்ச்சி இருந்தது என்றாலும், அந்நகர மக்களில் பலர் உழவுத் தொழிலேயே மேற்கொண்டு உழைத்து வந்தனர். ஒவ்வொரு நகர வாசியும், சிறு நிலமேனும் தனக்குச் சொந்தமாகக்கொண்டு அதனை உழுது பயிரிட்டு உண்டுவந்தனர். ஏதென்ஸ் நகர மண் வளம் விளைவுக்கு அத்துணைப் பொருத்தமான தன்று. ஆதலின் அவர்கள் உழைப்பில் முழுப்பங்கு இலாபம் அடைய இயலாமல், மூன்றில் ஒரு பங்கு அடைந்துவந்தனர். அவர்கள் உழுத பயிரை ஏப்ரல், மே, சூன் மாதங்களில் அறுவடை செய்து வந்தனர். அவர்கள் பயிரிட்ட முறையும் தானியம் பெற்ற முறையும் நம் நாட்டு முறைக்கிணங்கவே இருந்தன. நெற்களத்தில் நெல்லரியைப் பரப்பி, அவற்றின் மீது எருதுகளை விட்டுத் தெழிக்கச் செய்தனர். முறத்தைக்கொண்டு பதர் வேறு, நெல் வேறு பிரியத் துாற்றி வந்தனர்.

நெற்கதிர்களைப் பயிரிட்டு வந்ததுபோல், ஒலிவ மரங்களை வைத்து வளர்த்து வந்தனர். இந்த மரங்களை பயனளிக்கப் பதினான்கு ஆண்டுகள் ஆகும். இவற்றினின்று பொரி பழங்களைப் பறித்தும், அவற்றினின்றும் எண்ணெய் எடுத்தும் வந்தனர். இவர்கள் எண்ணெய் எடுத்த விதம், இக் காலத்தில் பெரிய கட்டடம் கட்டுவதற்காகச் சுண்ணும்பும் நீரும் மணலும் கலக்க ஒரு வட்டம் அமைத்து, அவ் வட்டத்தின் இடையே சுற்றிலும் பள்ளம் செய்து, பெரிய வட்டமான கல் சுழன்று வரும்படி செய்து, சுண்ணம்பைக் கலப்பது போலாம். நாம் இக்காலத்தில் செக்கில் ஆட்டி எண்ணெய் எடுப்பது போன்றதன்று திராட்சையும் இவர்கள் பயிரிட்டு வந்த பொருளாகும். இதிலிருந்து திராட்சைச் சாறு எடுத்து வந்தனர். இன்னோரன்ன தொழில்களே யன்றி, ஆடு, மாடுகளை மேய்த்து வயிறு வளர்த்த ஆயர்களும், மலைகளில், காடுகளில் மரங்களைக் கொளுத்தித் தீக்கிரையாக்கி விற்று வாழ்வு நடத்தியவர்களும் இம் மக்களிடையே இருந்தனர். நாம் நகரத்திலிருந்து, கொண்டு நாட்டுப்புற வாசிகளைச் சிறிது வேருகக் கருதுவது போல, ஏதென்ஸ் நகரவாசிகளும் கிராம வாசிகளைச் சிறிது அசட்டையாகவே பார்த்து வந்தனர். நகர வாசிகளின் நவீன நாகரிகச் செருக்கே இதற்குக் காரணம் ஆகும்.

ஒரு நாட்டின் தொழிலும் வாணிகமும் சரிவர நடக்க வேண்டுமானால், செலாவணி செம்மையாக இருத்தல் வேண்டும். இச்செலாவணி பண்ட மாற்றாகவோ நாணயமாகவோ அமையலாம். முன்னாளில் செலாவணி எம்முறையில் இருந்தது என்பதை அறிவது ஒர் ஆர்வமுடைய செயலாகும். ஸ்பார்ட்டா நகரில் உலோகப் பொருள்கள் கட்டி கட்டியாகச் செலாவ்ணிப் பொருளாக இருந்து வந்தன. நாள் ஆக ஆக இந்தக் கட்டியான உலோகத்தின்மீது இந்தக் கட்டிக்கு இவ்வளவு நிறை உண்டு என்பதை உணர்த்தத் தக்க முத்திரை பொறிக்கப்பட்டது.

அட்டிக்கா நகரத்து நாணயங்கள் வெள்ளியால் இயன்றவை. அவற்றின் ஒருபுறம் அதினா (Athena) தலையும், மற்றொரு புறத்தில் கிழஆந்தையின் வடிவும் அமைந்தனவாக இருந்தன. பாரசீகர்கள் (Persians) கையாண்ட பொன் நாணயமாகிய டாரிக்ஸ் (Darics) என்பன ஏதென்ஸ் நகரில் புழங்  கிக் கொண்டிருந்தன. இவைகள் யாவும் நடை முறையில் இருந்த பிறகு நான்காம் நூற்றாண்டின் இறுதியில்தான் கிரீஸ் நகரில் பொன் நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன. அக்காலத்தில் ஒரு ஷில்லிங்குக்குச் சமமான டிரச்சிமா (Drachma) என்னும் நாணயம்தான் நிரந்தரமான நாணயமாகும். சிறு சிறு வெள்ளி நாணயங்கள் ஒபல்ஸ் (Obols) என்று குறிக்கப்பட்டிருந்தன.

நாட்டுப் புறங்களில் வாழும் மக்கள் ஒபல் நாணயங்களை வாயில் அடக்கிக் கொண்டு இருப்பர். இந்தப் புழக்கம் இந்தியாவிலும் சிற்சில இழிவினர் பாலுண்டு. ஏதென்ஸ் நகர மக்கள் இறந்தாலும் சிற்சில இடங்களில் இறந்தவர் வாயிலும் இந்நாணயத்தை வைத்துச் சுடுகாட்டிற்குக் கொண்டு செல்வர். இவ்வாறு செய்வதன் நோக்கம், இறந்த வர்ஸ்டைக்ஸ் (Styx) நதியைத் கடக்க வேண்டி இருத்தலின், இதனக் கடத்தி அடுத்த கரையில் சேர்க்கும் ஒடக்காரனுக்குக் கட்டணம் கொடுப்பதற்காகும் என்னும் அவர்களின் எண்ணமாம். இஃது ஒரு கற்பனையே. அவ்வோடக்காரனைச் சாரோன் (Charon) என்பர். ஒரு தொழிலாளி நாள் ஒன்றுக்கு மூன்று ஒபல் நாணயங்களையோ அரை டிரச்சிமாவையோ கூலியாகப் பெற்று வந்தான். அந்நாள் ஜூரிகளின் செலவுக்காகக் கொடுக்கப்பட்டதும் இந்த அளவான தொகையே ஆகும். பொதுவாக ஒரு தொழிலாளியின் தினசரிக் கூலி ஒரு டிரச்சிமா வாகும். நல்ல புத்திக் கூர்மையுள்ள தொழிலாளி பின் சாதாரணத் தினசரி ஊதியம் இரண்டரை டிரச்சிமாவாகும். பொதுவாக ஆசிரியர்கள் ஆண் டுக்கு எழுபது பவுன் ஊதியமாகப் பெற்று வந்தனர். ஓர் அடிமை நான்கு பவுன் முதல் நாற்பது பவுன் வரை மதிக்கப்படுவான் ; அஃதாவது விற்கப்படுவான்

எவன் ஒருவன் ஐம்பது டேலண்டுகள் அஃதாவது ஆயிரத்து இருநூறு பவுன் வைத்திருக்கிறானோ அவனைத் தனவான் என்று கருதி வந்தனர். அந்நாளில் வட்டிக்குப் பணம் கொடுக்கும் நிலையே பெரிய நிலையாகக் கருதப்பட்டது. இவ்வாறு கொடுக்கும் சவுக்கார்கள் ஆண்டுக்கு வட்டி மூலம், 1,000 பவுன் சம்பாதித்து வந்தனர். 100க்கு 12வீதம் ஆண்டுக்கொரு முறை வட்டி விதித்து வந்தனர்.

வாணிகம் தடையின்றி நடைபெற வேண்டி இருந்தமையின், ஏதென்ஸ் நகரில் வெளிநாட்டு நாணய மாற்றங்களும் தடையின்றி நடைமுறையில் இருந்து வந்தன. இந்த முறை பெரிதும் கடல் வாணிகம் செய்வோர்க்கே பயன்பட்டது. இது வெளி நாட்டினின்றும் ஏதென்ஸ் நகரில் குடியேறியவர்களுக்கும் அளிக்கப்பட்டஉரிமையாக இருந்தபையினால், அவர்களே அந் நாணய மாற்றத்தைக் கவனித்து வந்தனர்.

கிரேக்கர்கள் பிறநாடு சென்று மீள்வதில் பெரு விருப்புடையவர்கள். பிறநாடு சென்று ஆண்டிருந்த நடை உடைபாவனைகளைக் கண்டறிந்தவர்களாயினும் தம்மினும் நாகரிகத்தில் குறைந்தவர்களைக் கண்டு வெறுத்து வந்தனர். அவர்களோடு உறவாடச் சிறிதும் விரும்பிலர். அவர்களிடையே திருமணம் செய்து கொள்ளவும், பழக்க வழக்கங் களையும் நடையுடை பாவ8னகளையும் கைக்கொள்ளவும் விரும்பிலர். இசையால் திசை போய வரலாற்றுப் பேராசிரியர்களான ஹெரோடோடஸ் (Horedotus) ஈஜீப்த் (Egypt), மெஸப்பட்டோமியா (Mesopatamia) ஆகிய இடங்களுக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர். இன்னாரென வெளிநாடு செல்லும் விருப்பினர்களின் உருவச்சிலை ஒன்று ஈஜிப்துக்குத் தெற்கில் காணப்பட்டது. இதிலிருந்து கிரேக்கர்கள் வெளிநாட்டுப் பயண விருப்பினர் என்பதை வெளிப்படுத்தினர். ஏதென்ஸ் நகர வாணிகர்கள் நீண்டதுாரம் எல்லாம் பயணம் செய்தனர். இதன் மூலம்தான் வாணிகத்தைப் பெருக்கிப் பொருள் ஈட்டினர். இவ்வாறு பயணம் செய்து கருங்கடலின்று தானியங்களைத் தம் நாட்டிற்குக் கொணர்ந்தனர். இவ்வாறே லெவண்டினின்றும் (Lavant) வாசனைப் பொருள்களைக் கொணர்ந்தனர். தம் கைத்தொழில் வன்மையால் செய்த மண் பாத்திரங்களைக் கினியா (Guinea), தென் இதாலி (South Italy), சிசிலி (Sicily) முதலிய இடங்களில் விற்று வந்தனர். இந்த வியாபாரம் நீண்டநாள் நடந்து வந்தது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலில் பயணம் செய்வது என்றால் கடுமையானது என்று கூற வேண்டியதில்லை. அக்காலம் மாலுமிகளுக்குத் தம் கலங்களைத் திசையறிந்து செலுத்துதற்குத் திசையறி கருவி இல்லாத காலமாகும். இவர்கள் பெரும்பாலும் காற்று, மழை இல்லாத காலத்தில் கடற் பயணத்தைத் தொடங்குவர். இவர்கட்கு இரவில் திசையறிவித்து வந்த கருவிகள் விண்மீன்களே யன்றி வேறில்லை. மாலுமிகள் தம் மரக்கலங்களை நடுக்கடலில் உந்தார். கூடுமான வரையில் கரை ஒரங்களிலேயே செலுத்தி வந்தனர். இராக்காலங்களில் தாரகைகளும் திசையறிவிக்க இயலாமல் இருந்தால், இவர்கள் யாதேனும் ஒரு தீவிலாகிலும், கரை ஓரத்திலாகிலும் தம் கலத்தை நிறுத்திக் கொள்வர். ஏதோ சிற்சில சமயங்களில்தான் இவர் பெருங்காற்றோடு போராட வேண்டியிருந்தது. பெரும்பாலும் இவர்களின் கடற்செலவு இவர்கட்குக் கழி பேரின்பமாக இருந்தது.

மாலுமிகள் தம் கடற்செலவில் பாறைகளையும் பெருங்காற்றையும் கடந்து செல்ல வேண்டிய துன்பங்கள் ஒருபுறமிருக்க, இவர்கள் கடற்கொள்ளைக்காரர்களேயும் தப்பிப் போவதுதான் இவர்கட்குப் பெருந்துன்பமாகும். சிற்சில வாணிகர் தம் சரக்குகளைக் கப்பலில் ஏற்றிச் செல்லும்பொழுது, கப்பல்கள் கடலில் மறைந்து கிடக்கும் பாறைகளில் மோதி சிதறி வாய்ப்புண்டாதலின், இவர்கள் தம் சரக்குகளை இன்ஷுர் செய்து வந்தனர்.

நாம் இக்காலத்தில் காணும் அவ்வளவு வசதியான சாலைகள் அக்காலத்தில் இல்லை; புழுதி நிறைந்தனவாகவும், கரடு முரடானவைகளாகவும் இருந்தன. இதனால் வண்டிகளும் மற்றும் சில ஊர்திகளும் வேகமாகச் செல்ல வசதி இல்லாமல் இருந்தது. ஆகவே, வண்டிகளில் செல்வதினும் நடையை மேற்கொள்வதே நலமாக இருந்தது. சாதாரணமாகக் கோவேறு கழுதைகளும், குதிரைகளும் ஊர்தியாகவே உபயோகிக்கப்பட்டன. சிவிகைகள் மாதர்

களுக்குப் பயன்பட்டன. இவற்றை அடிமைகள் சுமந்து செல்வர்.

நம் நாட்டுப் புனிதவதியாரும் பல்லக்கில் சென்றனர் என்பதைப் பெரிய புராணத்தால் நாம் அறியலாம்.

கிரேக்கர் அடுத்துள்ள ஊர்களுக்குச் சென்று மீளுதலில் மிக விருப்பமுடையவர். இவர்கட்கு மிகவும் விருப்பமான பயணத்துக்குரிய இடமாகக் கருதப்பட்ட ஒலிம்பியா (Olympia) அல்லது காரின்த் (Corinth) போன்ற இடங்களில் இவர்கள் சென்று தங்குதற்கான தனிப்பட்ட விடுதிகள் எங்கும் கட்டப்பட்டு இருந்தன. ஏனைய இடங்கட்கு இவர்கள் செல்லின், பொது விடுதிகளில் தங்கி வந்தன்ர்.

இந்த விடுதிகள் யாத்திரிகர்களிடமிருந்து அதிகக் கட்டணத்தை வாங்கி வந்தனவேனும், அதற்கேற்ற வசதிகளைச் செய்து கொடுத்தில. யாத்திரிகர்கள் இத்தகைய விடுதிகளில் தங்கிப்படுக்க வசதியற்று மூட்டுப் பூச்சிகளால் துன்பப்பட்ட நிலையை அரிஸ்டோபென்ஸ் (Aristophanes) தாம் எழுதிய ஒரு நாடகத்தில் நன்கு தெரிவித்துள்ளார். ‘டிண்டி பத்'தின் தொந்தரவு தொன்று தொட்டது போலும்!

பல்வேறு கிரீஸ் நகர மக்கள் மேற்கொண்ட தொழில்களில், அரசியல் சார்புடைய தொழில்கள் பெரிதும், சாதாரணப் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டன. இவர்களிடையே வழக்கறிஞர்களோ குருக்கள்மார்களோ இலர். குறிப்பிட்ட வேலைகளைப் புரிந்து தொண்டாற்றுதற்கு மக்களிடையே, ஒருவரைக் குருவாகத் தேர்ந்தெடுத்து வந்தனர். இவ் வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட குருக்களும், நிரந்தரமாக அந்தப் பதவியையும் பெற்றிருந்தவர் அல்லர். குறிப்பிட்ட காலம் கழிந்ததும், வேறொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்.

இந்த முறை நம் நாட்டிலும் கையாளப்பட்டு வந்தால் பிறப்பால் உயர்வு தாழ்வு கருதும் மனப் பான்மை நீங்கிச் சகோதர நேயமும் ஒருமைப்பாடும் நிலவும்.

கிரேக்க நாட்டில் குறிசொல்பவர்கள், சோதிடர்கள், பாடகர்கள், மருத்துவர்கள் ஆகிய தொழிலோர் இல்லாமல் இல்லை. மருத்துவர்கள் தம் மருத்துவ அறிவை, ஈஜிப்த் நகரினின்று பெற்றனர் என்பது ஊகிக்கப்படுகிறது. இந் நாட்டினர் பழைய நம்பிக் கையில் பெரிதும் நாட்டமுற்றிருந்தனர். இந் நம்பிக் கையின் மூலம் நோயையும் போக்கி வந்தனர். இவர் கள் அஸ்லியின்ஸ் (Asclepins) என்னும் பெயரால் ஒரு தெய்வத்தை வணங்கி வந்தனர். இத்தெய்வம் நோயைப் போக்கும் ஒரு தெய்வமாகும். ஆகவே நோய் கண்டவர்களை இத்தெய்வ உருவம் அமைக்கப்பட்டுள்ள ஆலயத்தில் படுக்க வைத்து வந்தனர்.

இவ்வாறு படுக்கவைக்கப்பட்ட நோயாளியை அத்தெய்வம் பாம்பு வடிவில் இரவில் தோன்றி நோயுள்ள பாகங்களைத் தன் நாவால் நக்கி, நோயை போக்கிவிடுமாம். இதனால் கிரேக்க நாட்டு மருத்துவர், மருந்துகளைக் கையாளாமல் இல்லை. இவர்கள் வேர், மூலிகைகள், மேற் பூச்சு, பசை, களிம்பு முதலானவற்றைக் கொண்டு கையாண்டு வந்தனர்.

அறுப்பு முறையில் நோய் நீக்கும் முறையும் நடைமுறையில் இருந்தது. ஆனால், அதுவும் திருந்திய முறையில் செய்யப்பட்டது என்று கூறுவதற்கில்லை அறுப்பு முறைச் சிகிச்சையும் பண்டும் இன்றுமுள்ள சிகிச்சை முறை போலும் ! இன்றேல்.

‘வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல்’

என்று குலசேகரரும்,

கருவியிட்டாற்றுவார் புண்வைத்து மூடார் பொதிந்து

என்று குமரகுருபரரும் கூறுவரோ ?

உடற் கூற்றை நன்கு கவனித்து இன்னின்ன பாகங்கள் இவ்விம் முறையில் அமைந்துள்ளன என்பதை இறந்த ஓர் உடலைச் சோதித்து, அறிவதற்கான வாய்ப்பு அந்நாட்டில் இல்லை. ஏனெனில் இறந்த உடலை சுட்டெரித்து வந்தனர். அலெக்சாண்டர் கீழ்த்திசை நாடுகளைக் கைப்பற்றி வெற்றி கொண்ட பின்னரே ஈஜிப்த் தேசத்தில் உடல் உறுப்புக்களை ஆய்ந்து பார்க்கும் முறை நடைமுறையில் கையாளப்பட்டது என்னலாம்.

கைத்தொழில்கள் பெரிதும் ஏதென்ஸ் நகரில் பரவி இருந்தன. கிரேக்க நாட்டில் நகர்ப் புறங்களில் களிப்பு மண் நிரம்ப உண்டு. இம்மண் பாத்திரங்கள் செய்யப் பெரிதும் பயன்பட்டது. இதனால் குயவர் பணி பெரிதும் அந்நாளில் பயனுடைய பணியாக இருந்தது எனலாம். இப்பணியின் மூலமே குடி நீர்க் குவளைகள், சட்டிகள், ஜாடிகள், மற்றும் குடும்பத்திற்கு வேண்டிய சாமான்கள் செய்யப்பட்டன. இந்தப் பொருட்கள் அப்படியே பயன்படுத்தப்படா மல் இவற்றின் மீது சித்திரங்களும் தீட்டப்பட்டு அழகு செய்யப்பட்டன. இவ்வாறு தீட்டப்பட்ட சித்திரங்கள், புராண காலத் தொடர்புடையனவாகவும், மக்கள் வாழ்வுகளே நன்கு தெரிவிப்பனவாகும் இருக்கும்.

சிற்பக்கலை கிரேக்க நாட்டில் தலைசிறந்து விளங்கியது. பெரிய பெரிய வாயில்களின் வளைவுகள் மிகவும் அற்புதமாக இருக்கும். கோயில்களிலும், சிற்பங்கள் அமைந்திருந்தன. ஆனால், அவை சாதாரணமானவை. மூலத்தான உருவம் நீண்ட சதுரமான இடத்தில் அமைத்திருக்கும். மேற்கூரை பெரிய பெரிய தூண்களால் தாங்கப்பட்டிருக்கும்.

இதன் கைத்திறன் மிகமிக வியக்கத்தக்கதாகும். ஆலயக் கட்டட அமைப்பு கவினுடையதாக இருந்ததோடு அல்லாமல் ஆலயத்தில் இரு முனைகளில் இருக்கும் தெய்வங்களின் சிலேகள் வேலைப் பாடு அமைந்த உருவங்களாக உள்ளன. இத்தகைய சிற்பங்களின் அமைப்பை நம் தென்னாட்டுக் கோயில்களிலும் சிறக்கக் காணலாம். காண விழைவோர் சித்தன்ன வாசல், மகாபலிபுரம், தஞ்சை, திருவிடைமருதுார், ஆவுடையார் கோயில் முதலான இடங்கட்குச் சென்று கண்டு களிப்பாராக. கோயிலின் புறச்சுவர்களும் ஓவியச் சிற்பங்களால் பொலிவுற்று இருந்தன.

நம் நாட்டில் வீடுகளும் சித்திரம் தீட்டப்பெற்றனவாகச் சிறந்து விளங்கின. இவ்வாறு எழுதப்பட்ட மாடங்கள் பல இருத்தன என்பது பரிபாடல் முதலான சங்கத்துச் சான்றோர் நூல்களில் பரக்கக் காணலாம். அண்மையில் இருந்த மாயூரம் திரு. வேதநாயகம் பிள்ளை அவர்களும், தம் நீதி நூலில் வீடுகள் சித்திரங்களால் பொலிவுற்றதை நயம்படப் பாடியுள்ளார்.

சிற்சில தெய்வங்களின் உருவம் செம்பினாலும் சலவைக் கல்லாலும் இயன்றவையாய் இருந்தன, இவை ஆலயங்களிலே அன்றித் தனித்தனி இடங்களில் இருக்கும் நிலையைப் பெற்றிருந்தன. எக்ரோ போலிஸுக்கு (Acropolis) அருகிலிருக்கும் எதினி (Athene) என்னும் பெரிய தெய்வத்தின் உருவம் செம்பினால் இயன்றது. இதனை அமைக்கும் பொறுப்பு சிற்பத்தில் சிறந்த பியிடியஸ் (Pheidias) என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இவருடைய முழுத்திறன் அதே உருவம் பொன்னாலும் தந்தத்தாலும் செய்யப்பட்ட ஒன்றில் மிகுதியும் காட்டப்பட்டது எனலாம். இன்னாரன்ன சிற்பிகளால் அமைக்கப்பட்ட சிற்ப ஒவியங்களின் கலைநுட்பம் பின்னால் வந்த கிரேக்கர்களுக்குத் துணைபுரிந்ததாகத் தெரிகிறது. இதிலிருந்து கிரேக்கர்களின் சிற்பக்கலையின் மேம்பட்ட அறிவு நுட்பத்தை நன்கு மதிப்பிடலாம். உடல் உறுப்புக்களே நன்கு கவனித்துச் செயற்கை அமைப்பிலும், இயற்கை அமைப்பைக் கொண்டு வரும் திறன் படைத்திருந்தனர் எனலாம்.

ஏதென்ஸ் நகரமக்கள் இச்சிற்பக் கலையைப் பிறர் கண்டு பாராட்டுவதற்காக மட்டும் செம்மையாகச் செய்யாமல் தாமே அதில் ஒர் ஊக்கமும், உணர்ச்சியும், கொண்டு தாமே வியக்கும் வண்ணம், செம்மையுறச் செய்தனர் என்பதை அறியலாம். இப்படிப்பட்ட எண்ணமே ஒவ்வொருவருக்கும் அமைதல் வேண்டும். பிறரை மகிழ்விக்க வேண்டுவதற்காக இதனை இயற்றுகிறேன் என்று கருதாமல் இப்படி இயற்றுவது எனக்கே நலனாக இருக்கிறது என்று எண்ணி இயற்றுதல் வேண்டும். இப்படிச் செய்யப்படும் செயல்கள் எவராலும் எக்காலத்திலும் பாராட்டப்படும் என்பதில் ஐயமில்லை.

ஏதென்ஸ் நகரின் சாலைகள் புழுதி படிந்திருக்கும் என்று முன்பே கூறப்பட்டது. ஆங்குக் கழிநீர்களை அவ்வப்போது அகற்றுவதற்குரிய முறை அக்காலத்தில் இல்லை. இது சுகாதாரம் பாதிக்கப்படவும் மக்கள் நோய்வாய்ப்படவும் ஏதுவாயிற்று. வீடுகள் எளிய தோற்றம் அளித்தன. இவ்வீட்டு இளஞ்சிறுவர்கள் புழுதியில் படிந்து விளையாடி வந்தனர். பிள்ளைகளையன்றிப் பெரியவர்களும், மாசுபடிந்த மேனியராய் விளங்கினர். இரவலர்கட்கோ குறைவில்லை. இவர்கள் தெருவெங்கும் நிறைந்திருந்தனர். இவர்கள் நோய்வாய்ப்பட்டவர்களாதலின், அந்நோயின் காரணமாக உருமாறிக் காணப்பட்டனர். புழுதிகளுக்கும், அழகற்ற தோற்றங்கட்கும் இடையே மேகத்திடையே மின்ஒளி தோன்றுவது போன்று தூய்மைக் கோலமும், தெய்வச் சிலைகளும் மக்கள் உருவங்களும், கவிஞர் தோற்றமும் காட்சியளித்துக் கொண்டிருந்தன. வானளாவிய கோபுரங்கள் எல்லாருடைய மனங்களையும் கவர்ந்து கொண்டு விளங்கின. சேய்மையில் இருந்து வருவோரை “எம்மைக் காண ஈண்டு வருக வருக” என்று அழைப்பன போன்று நிலவும் இவற்றை நெடுந்தூரத்திலிருந்து வீடு திரும்பும் மாலுமிகள் கண்டபோது, அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நாம் புற நகரை அண்டிவிட்டோம் என்பதே அவர்கள் மகிழ்வுக்குக் காரணம். ஈண்டுக் கூறப்பட்ட அமைப்புக்களோடு நம் நாட்டு அமைப்பையும் ஒப்பிட்டு இவ்விரண்டு நாடுகளின் அமைப்புத் தன்மையை நன்கு அறிந்து கொள்ளலாம். கடலில் சென்று கலத்தில் வீடு திரும்புபவரோ, அன்றி நெடுந்தொலைவிலிருந்து வருபவரோ, இன்ன இடத்தில் ஊர் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காகவே நம்மவர், கோபுரங்களையும், உயரிய மாடங்களையும் அமைத்து இரவில் விளக்கேற்றி வைத்தனர். இதன் விளக்கத்தைப் பத்துப் பாட்டு முதலான பனுவல்களில் பரக்கக் காணலாம்.