கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்/பழக்க வழக்கங்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

6. பழக்க வழக்கங்கள்

ஒரு நாட்டு மக்களின் நடையுடை பாவனைகளும் வாழ்க்கையும் அந்நாட்டின் தட்பவெப்ப நிலையைப் பொறுத்தவையாகும். ஏதென்ஸ் நகரின் ஒரு பகுதி அட்டிக்கா (Attica) என்பது. இது வெம்மை மிகுந்த நாடாதலின், இந்நிலப் பரப்பை வறண்ட பிரதேசம் எனவும் கூறலாம். ஆனால், மாரிக் காலத்தில் மழையும் மிகுதி. கோடைக்காலத்திலும் சிற்சில சமயங்களில் பலத்த மழையுண்டு. எனினும் பகற்போது வெம்மை மிகுந்து காணப்படும். வானம் மாசு மறு இன்றி விளங்கும். காலை நேரத்திலும் பரிதி தன் வெம்மை ஒளியை வீசி விளங்குவான். இங்கு இயற்கை அழகு இயம்பவொண்ணா நிலையில் திகழும். பறவைகளின் ஒலி காதைத் துளைக்கும். மாலை நேரத்தில் பரிதியங் கடவுள் தன் பொன் மயமான கதிர்களை வீசிக் கொண்டு விளங்கும் தோற்றம் காணக்கவினுடையதாக இருக்கும். ‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறன்றோ’ அவன் ?

உடைகள்

ஏதென்ஸ் நகர மக்கள் உடுத்திய உடைகள் கோடைக்காலம், மாரிக்காலம் ஆகிய இருகாலங்கட்கும் ஒத்துவரக் கூடியனவாக இருந்தன. இவர்கள் நீண்ட அங்கியை அணிந்திருந்தனர். நாம் பொத்தானை மார்புப் பக்கம் பிணித்துக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் தோள்பக்கம் முடியிட்டுக்கொள்வர். இவ்வாடை அணிதலின் தோற்றத்தை இப்போது நம் மனக்கண்ணுக்குக் கொணர விரும்பினால், பாதிரிமார்கள் அணிந்திருக்கும் தோற்றத்தை நம் நினைவிற்குக் கொணரின் நன்கு அறிந்துகொள்ளலாம். மாதர்களின் உடையும் நீண்ட அங்கியே ஆகும். என்றாலும், மாதர் அங்கி நீண்டும், ஆண்கள் அங்கி சிறிது குறைந்தும், முழங்கால் அளவுக்குத் தொங்கக் கூடியதாகவும் இருக்கும். குளிர் காலத்தில் வெம்மை தரும் பொருட்டு அங்கிக்கு மேல் ஒரு மேற் சட்டையை அணிந்து கொள்வர். அது சிறிது கனத்த ஆடையாக இருக்கும். இதைக் கோடை காலத்திலும் மேற்சட்டையாக அணிந்து கொள்வர். இதனால் யாதொரு துன்பமும் கொள்ளமாட்டார்கள். தொழிலாளிகள் தம் தொழில் முறைக்கேற்ற ஆடைகளை அணிந்து கொள்வர். மிதியடி அணிந்துகொள்ளும் வழக்கம் அவர்களிடையே இருந்தது. அம்மிதியடிகள் பல்வேறு திறத்தனவாக இருந்தன. தலையணியாகிய தொப்பியை அவர்கள் வெளியூர்ப் பயணமாகச் சென்ற பொழுதுதான் அணிந்து வந்தனர். கிரேக்கர்கள் தம் உடலை மறைத்து ஆடையால் மூடிக்கொண்டுதான் இருக்க வேண்டும் என்னும் கட்டிாயமுடையவர்களல்லர். அவர்கள் தம் உடலில் சட்டையின்றி இருக்கச் சிறிதும் கவலைப் படுவதில்லை. இப்படிப்பட்டவர்கள் விளையாட்டிலும் உடற்பயிற்சி செய்யுங் காலத்திலும் எப்படி இருந்திருப்பர் என்று கூறவும் வேண்டுமோ? அக் காலங்களில் தம் ஆடைகளை அகற்றி விடுவர்.

வீட்டமைப்பு

இவர்கள் அமைத்துக்கொண்ட இல்லங்கள் நாட்டுத் தட்ப வெப்பத்திற்கு இயைந்தனவாக இருந்தன. பழைய முறையில் கட்டப்பட்ட வீடுகளில் ஒரு சமையல் அறை, தாழ்வாரம் இல்லாத புறக்கடை உடையதாய் இருக்கும். போதுமான இடவசதி இல்லாத இடங்களில் வீட்டின் இடையில் பரந்த வெளியை அமைத்துக் கொண்டனர். இவ்வாறு அமைத்துக் கொண்டதனால் நல்ல ஒளியும், வளியும் தாராளமாக உலவ இடம் பெற்றிருக்கும். பரந்த முற்றங்களை அடுத்த தாழ்வாரங்கள் தூண்களால் தாங்கப்பட்டிருக்கும். இவ்வாறு அமைத்த வீடுகள் கோடையிலும், மாரியிலும், வாழ்வதற்கு வசதியுள்ளவனவாக இருந்தன. சிற்சில சமயங்களில் விருந்துணவு உண்ணுதற்கெனத் தனி முறையில் அமைக்கப்பட்ட அறைகளும் உண்டு. இங்குச் சமைக்கப்பட்ட உணவைக் கொணர்ந்து பரிமாறி உண்பர். மற்றும் வீட்டு அலுவல்களைப் பேசி ஒரு முடிவுக்கு வருவதற்கும் இவ்வறைகள் பயன்பட்டு வந்தன. பள்ளியறைகள் வீட்டின் நடுப்பகுதியிலிருக்கும். மாதர்கள் நடமாடுவதற்கு வீட்டின் புறக்கடையில் தனித்தனி அறைகள் அமைக்கப் பட்டிருக்கும். இவை நாம் கூறும் அந்தப்புரம் போன்றவை. வீட்டைச் சுற்றித் தெருவரையில் புறச்சுவர் உண்டு. இது சூளையிடாத கற்களால் ஆக்கப்பட்டிருக்கும். இதனால், கள்வர்கள் சுவரைத் துளைத்து உட்புகுந்து களவாட வசதியாக இருந்தது.

கி. பி. 1ஆம் நூற்றாண்டுக் கிரேக்க மக்கள்; எளிய வாழ்வு வாழ்ந்து வந்தனர். உடலிற்கான வசதிகளைக் கவனிப்பதில் அவ்வளவு கருத்துடையவர்கள் அல்லர். மழைக் காலங்களில் வெம்மை தரும் பொருட்டுத் தீச்சட்டிகளை மட்டும் மூட்டிக் கொள்வர். குளிப்பதற்கெனப் பொது நீர் நிலயங்கள் உண்டு. அங்குக் குளித்து வந்தனர். வீட்டு முகப்புக்கு முன் திரைச்சில தொங்கிக்கொண்டிருக்கும். கீழே சமுக்காளங்கள் விரிக்கப்பட்டிரா. மரச் சாமான்களும் மிகுதியாக இரா. “ஸ்டுல்’, ‘பெஞ்சு’ ஆகிய சாதாரண மரச்சாமான்களே உண்டு. கழிநீர் போதற்குக் கால்வாய்கள் இன்மையால் குப்ன்பகள் தெருவில் நிறைந்து சாலைகள் புழுதி மிகுந்து காணப் படும். இதனால் இவர்களைச் சுகாதாதாரக் குறை அடையவர்கள் என்று கூசாமல் கூறிவிடலாம்.

நம்மவர்கள் இந்த விஷயத்தில் விஞ்சியவர்கள். கழிநீர் செல்லுதற்குக் கரந்து படை (underground drainage) என்ற ஒன்றை அமைத்திருந்தனர். இது கருங்கல்லால் மூடப்பட்டிருந்தது. இந்நீர் கடைசி யில் அகழியில் சென்று விழுந்துவிடும். இது விழு தற்கு அமைந்த உறுப்பு யானைத் துதிக்கை போன்றது என்று உவமையால் புலப்படுத்தியுள்ளனர் நம் முன்னோர்.

தினசரிச் செயல்கள்

கிரேக்கர்களின் நாட்டின் தட்ப வெப்பங்கள் வெளியிடங்களில் வாழவேண்டிய இன்றியமையா நிலையை இயற்கையில் கொண்டுவந்தன. ஆதலின் எத்தக் கிரேக்கன் வெளியில் எவருடனும் பழகாமல் வீட்டிற்குள்ளேயே அடைபட்டு இருக்கிருனோ, அவன் எவராலும் மதிக்கப்படுவதில்லை. வெளியில் ஒருவர்க்கொருவர் நெருங்கிப் பழகியதால் தமக்குள் சகோதர நேய ஒருமைப்பாடுடையவராய் வாழ்ந்தனர். ஏதென்ஸ், நகரம், மக்கள் தெருக்கம் மிகுதியாகக் கொண்டிருந்ததனால், ஒருவரை ஒருவர் அறிந்து வாழ்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் இருந்தது. பல்வேறு இனத்து மக்கள் ஒன்று கூடி இனத்துக்கு இனம் தம் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளாமல் ஒரே முறையைக் கையாண்டனர்; செல்வக் குடியில் பிறந்த இளைஞர்கள் தம் முடியை நீளத்தொங்கவிட்டுக்கொண்டு பரிகள்மீது ஊர்ந்து செல்வர். கிரேக்கர்கள் சிலம்பக் கூடங்களிலும், மற்றும் பல பொது இடங்களிலும் அடிக்கடி கூடுவர். அக் காலங்களில் நன்கு ஒருவரோடு ஒருவர் உரையாடுவர். இவர்கள் பேச்சு வெறும் வாய்ப்பேச்சளவில் இராது. உடனுக்குடன் கைச் சைகை, முகச் சைகை முதலான அங்க அசைவுகள் கலந்தனவாகவே இருக்கும். இஃது இவர்கட்குப் பரம்பரையாக் அமைந்த ஒரு பண்பாகும். இவர்கள் சோம்பலை அறவே வெறுத்தவர் என்றும், சுறுசுறுப்பாகவே இருக்க விரும்புபவர். பேசிக்கொண்டிருக்கும்போது உலவிக்கொண்டே இருப்பர். உலவுவதில் இவர்கட்குப் பெரு விருப்பம் உண்டு. பத்து மைல் நடந்தாலும் சோர்வு தட்டாது என்பது இவர்கள் கொள்கை. கிராம வாழ்க்கையைப் பெரிதும் விரும்புவர். அதன் இயற்கை எழிலே இதற்குக் காரணமாகும். ஆவணங்களே இவர்கள் விரும்பி நடமாடும் இடங்கள். அங்குத் தோன்றும் இரைச்சலும், சுறுசுறுப்பும் இவர்கட்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டுவனவாகும். ஆவணங்கள் நகரின் நடுப்பகுதியில் இருக்கும். இக்கடைகள் நிறைந்த இடங்களில்தான் பெரிய பெரிய கட்டடங்களைக் காணலாம். இங்குத் தான் சிறு சிறு கடைகள் நிறைந்து காணப்படும். பல்வேறு இடங்களில் இருப்பவர்களும் இங்கு வந்து தம் சரக்குகளை விற்றுப் பணமாக்கிச் செல்வர். பணம் வட்டிக்குக் கொடுத்து வாங்கும் சவுக்கார்களும் இங்குத்தான் வருவர். இந்த இடமே அரசியல், தத்துவம் முதலிய பொருள்களைப் பற்றி ஒருவருக்கொருவர் உரையாடற்குரியது.

‘வைகறைத் துயிலெழு’ என்னும் தமிழ்நாட்டுப் பழக்கம் எதினிய மக்கள் பாலும் இருந்தது. எழுந்ததும் கால உணவை முடித்துக் கொள்வர். காலையில் எழுந்ததும் குளித்து முழுகிக் கடவுளைத் தொழுதல், அதன் பின் உண்ணல் என்பது இவர்பால் கட்டாயம். இல்லைபோலும் இவர்களது காலை உணவு ஒரு துண்டு ரொட்டி ஆகும். அதனைத் திராட்சைச் சாற்றில் தோய்த்து உண்பர். பிறகு வெளியே புறப்பட்டுச் சந்தைக்குச் செல்வர். இடைவழியில் நண்பர்களைச் சந்தித்து உரையாடுவதும் உண்டு. வெளியே செல்பவர் பெரும்பாலும், கையில் ஒரு கழியுடன் புறப்படுவர். கழி இருத்தலின் இன்றிய மையாமையை நாமும் நன்கு உணர்ந்திருக்கிறோம்.

இவர்களோடு இவர்களிடம் வேலைசெய்யும் இரண்டோர் அடிமைகள் தொடர்ந்துவருவதுண்டு. தெருவில் நடக்கையில் நன்கு கம்பீர்த்தோடு நடப்பர். சுறுசுறுப்பின்றிச் சோம்பி நடத்தலை இவர்கள் வெறுத்தனர். ஏறுபோல் பீடு நடை இவர்பால் இருந்தது. தினமும் முடி திருத்தும் அகத்திற்குச் செல்லாதிரார். அங்குச் சென்று தம் முடியைக் கோதிக் கொள்வர். புழுதி நிறைந்த ஏதென்ஸ் நகரில் வாழ்ந்தவர் கண்களில் தூசி படிவதால் அடிக்கடி கண்ணோய் உற்று வந்தனர். அந்நோயைத் தீர்த்து வைப்பதிலும் அந்நாட்டு நாவிதர்கள் நல்ல பழக்கம் பெற்றிருந்தனர். மருத்துவம் செய்தல் நாவிதர் மரபுக்குப் பரம்பரை பழக்கம் போலும்! நம் நாட்டிலும் பண்டைக் காலத்தில் நாவிதர்களே மருத்துவம் செய்ததுண்டு. முடிதிருத்தகம் ஊர் வம்பு அளப்பதற்கு உகந்த இடமாய் இருந்தது. இங்குச் செல்பவர் மூலமுடுக்குச் செய்திகளை அறிந்துகொள்வர். எதினிய மக்கட்கும், சிசிலி மக்கட்கும் நடந்த போரட்டத்தில் எதினிய மக்கள் வென்ற செய்தி முதல் முதல் முடிதிருத்தகத்தினின்றே வெளி வந்தது.

சந்தைக்கு வந்தவர்கள் காலை ஒன்பது மணிக்கெல்லாம் வாங்க வேண்டியவற்றை வாங்கிவிடுவர். வாங்கியவற்றை வீட்டிற்கு தம்முடன் வந்த அடிமை ஆளிடம் கொடுத்து அனுப்பி விடுவர். இதன் பின் கொடுக்கல் வாங்கல் இருந்தால் அவற்றைச் சவுக்காரிடம் முடித்துக்கொள்வர். பகற்போதில் தம் வீட்டிற்குச் சென்றுதான் உணவு கொள்ள வேண்டும் என்பதில்லை. இவர்கள் காலையில் வெளியில் கிளம்பியதும் கையில் கட்டுணவு கொண்டே புறப்படுவர். கட்டுச் சாதம் கொண்டுபோதல் எந்நாட்டவர்க்கும் உரிய பழக்கம் போலும் நம்மவர் இதனை ஆற்றுணா என்று தம் இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ளனர். அதனைப் பகல் வேளையில் உண்டு விடுவர். “உண்டஇளைப்புத் தொண்டர்க்கு முண்டு” என்னும் முதுமொழிக்கிணங்கப் பகலில் சிறிது வசதி ஏற்பட்ட இடத்தில் உறங்குவர். ஆனால் வாகடநூல் பகலுறக்கத்தை மறுக்கின்றது. “பகலுறக்கம் செய்யார் நோயின்மை வேண்டுவார்” என்பது விதி. மாலையானதும் உடற்பயிற்சி புரிவர்; பயிற்சிக்குப் பிறகு நீராடுவர். ஆனால், நீராடுவதற்கு அடிமைகளைக் கொண்டு தம் யாக்கைக்கு எண்ணெய் தேய்க்கச் செய்வர். எண்ணெய் தேய்த்துச் சிறிது நேரங்கழித்து ஓர் உலோகக் கருவியால் அழுக்கு உள்பட எண்ணெயை வழித்து எடுத்து விடுவர். நம் போன்று எண்ணெய் நீக்கச் சிகைக்காயையோ அன்றி வேறு எதையோ தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இவர்கள்பால் இல்லை. எண்ணய் வழித்து எடுக்கப்பட்டபின் நீரில் குளிப்பர். இக்குளியலும் மேலிருந்து சிறு சல்லிகள் மூலம் வரும் குளிர் நீரில் ஆகும். இஃது உடற்கு இன்பமாக இருக்கும். வெந்நீரில் மூழ்கும் பழக்கம் கி.மு. 3ஆம் நூற்றாண்டுவரை பழக்கத்தில் வந்திலது.

வெந்நீர்க் குளியலைப் பற்றி நாமும் சிறிது விழிப்பாக இருத்தல் நல்லது. இளைஞர்களும் காளைகளும் தண்ணீரில்தான் மூழ்குதல் வேண்டும். தண்ணீர் தான் நரம்புகளுக்கு உரமூட்டுவது. வெந்நீரை நோயாளிர், வயது முதிர்ந்தோர் பயன்படுத்த வேண்டும். “சனி நீராடு” என்பதற்குச் சனிக்கிழமை தோறும் வெந்நீரில் குளி என்பது ஒரு பொருளாக இருப்பினும், ஊறிவருகின்ற கிணற்று நீரிலோ, கீர் வீழ்ச்சி நீரிலோ ஆற்று நீரிலோ நீராடு என்பது பொருளாகும். ஆகவே குளிப்பதற்குத் தண்ணிரே சாலச் சிறந்தது என்பதை உணர்க.

உணவு முறை

பகல் உணவே சிறப்புடைய உணவாக ஏதென்ஸ் நகர மக்கள் கருதினர். அதுவும் பகலில் காலங் கடந்து உண்ணப்படும். தம்மோடு உடனிருந்து உண்ணுதற்குத் தம்மை ஒத்த ஆண்களை விருந்தினராக அழைக்கப்பட்டனர். மாதரீகள் ஆண்களோடு உடனிருந்து உண்ணும் வழக்கம் இவர்கள்பால் இலது. இதுவும் நாம் உணவு முறையைக் கொள்ளும் முறையை ஒத்தது என்னலாம். உணவு கொள்கையில் காலில் மிதியடி அணியார்.

இது நம்மவரது தொன்றுதொட்ட பழக்கம் அன்றோ? உணவுக்கு முன் கை கால் சுத்தம் செய்து தானே நாம் உண்கிறோம். ‘கூழானுலும் குளித்துக் குடி’ என்பது இது பற்றியே. அவர்கள் பாதங்கள் அடிமைகளால் சுத்தம் செய்யப்படும். தலையில் மலர் அணியப்படும். உணவு முக்காலியிலோ நாற்காலியிலோ வைத்துப் பறிமாறப்படும். இந்த முறையும் நம் பண்டைக் காலத்துக் கையாண்ட முறையாகும்.

கிரேக்கர் இறைச்சியை அவ்வளவாக விரும்புவர் அல்லர். ஆனால், தெய்வத்தின் பெயரால் பன்றியோ ஆடோ பலியிடப்பட்டால் அதனை மட்டும் விரும்பி உண்பர். இது யாகத்தில் பலியான இறைச்சியை வடவர் உண்பது போன்ற முறையாகும். கூழ் அல்லது கஞ்சி உணவே அவர்கட்கு விருப்பமான உணவாகும். இறைச்சி உண்ணாதார் என்றதனால் தூய உணவினர் என்பதில்லை. முட்டை, உலர்த்தி, உப்புச் சேர்த்துப் பக்குவப்படுத்தப்பட்ட மீன், பால் கச்டி ஆகிய இவற்றை விருப்பமாக உண்டு வந்ததனர். தொழிலாளிகள் பார்லி உணவைச் சோறு போலவும், கஞ்சி போலவும் சமைத்து உணவாகக் கொள்வர். எதினியவர்கள் காரம் மிகுந்த பொருள்களை மிகுதியும் உண்ணவும் விரும்பினர்.

ஒலிவ எண்ணெய் வெண்ணெய்க்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. தேனையும் உணவுக்கு இனிமையூட்டச் சேர்த்து வந்தனர். சிற்சில நேரங்களில், அஃதாவது விசேட காலங்களில் சிறப்பு உணவுகள் தயாரிக்கப்படும். பால், முட்டை, மா, பாற்கட்டி, தேன் ஆகிய இவற்றால் ஆம்லட் என்னும் உணவுப் பொருளைச் செய்து வந்தனர். ஆனால் ஏழைகட்கு இன்னோரன்ன கறிவகைகள் செய்யவோ உண்ணவோ வாய்ப்பு இராது.

பண்டைக் காலத்தில் கத்தியோ முள் கரண்டியோ உணவின்போது உபயோகப்படுத்தப்பட வில்லை. கைகளையே உண்பதற்குப் பயன்படுத்தி வந்தனர். சிற்சில வேளைகளில் மாவினால் செய்யப்பட்ட கரண்டிகளைப் பயன்படுத்தியதும் உண்டு. அவற்றை உபயோகித்த பிறகு எறிந்து விடுவர். உணவிற்குப் பிறகு உண்டபோது கழிக்கப்பட்ட பொருள்களை அடிமைகள் எடுத்து எறிந்துவிட்டுச் சுத்தமாக அந்த இடத்தைக் கூட்டி எடுப்பர். உணவின் பின் பழம் சாப்பிடுவர். நாமும் முப்பழத்துடன் சாப்பிடும் பழக்கமுடையவர்களன்றோ? முப்பழமொடு பால் அன்னம் என்பது தம் நாட்டுத் தொடர் மொழி விருந்தினர்க்கு இனிய பருப்பு, அத்தி கேக், மிட்டாய் ஆகிய இவைகளை ஈந்து மகிழ்வர். திராட்சைச் சாற்றையும் கொடுப்பர். வெறும் திராட்சைச் சாற்றைப் பருகாமல் அதனோடு தண்ணீர் கலந்தே பருகுவர். இவ்வளவு தண்ணீரதான் கலக்க வேண்டும் என்பதை விருந்தில் கலந்து கொண்டவர்களுள் ஒருவரைத் தலைவராக நியமித்து, அவர் கூறிய அளவுக்கு அந்நீரைக் கலப்பர். பொதுவாக எவ்வளவு திராட்சைச் சாறு இருக்கிறதோ, அதற்கு இரண்டு மடங்கு நீரைக் கலந்து வந்தனர். இவ்வாறு கலக்கும் தொழில் அடிமை ஆட்களால் நடைபெறும். இதன்பின் குவளைகளில் ஊற்றப்பட்டு இந்த மது யாவர்க்கும் அளிக்கப்படும். கிரேக்கர் இந்த மதுவைத் தாம் இன்பமாகவும் சுறுசுறுப்பாகவும் தம்மை மறந்தும் இருப்பதற்காக அருந்துவர். அடிமைச் சிறுவர்களும் சிறுமியர்களும், இந்நேரங்களில் ஆடல் பாடல்களை நிகழ்த்தி விருந்தினர்க்கு இன்பமூட்டுவர். விருந்திற்குப் பிறகு நிகழ்ந்ததைச் சேரர் பெருமான் சுந்தரர்க்கு இட்ட விருந்தில் நாம் காண்கிறோம்.

“பாடல் ஆடல் இன்னியங்கள் பயிறல் முதலாப் பண்ணையினில்
நீடும் இனிய வினோதங்கள் நெருங்கு காலந் தொறும் நிகழ’,

என்று பெரிய புராணம் புகழ்கிறது.

இன்பமாக உரையாடுபவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவர். இன்றியமையாத செய்திகளைப்பற்றிய விவாதங்களுக்கும் இதுவே இடமாகவும் அமையும். இந்தத் தருணத்தில்தான் அழகு, அன்பு என்னும் பொருள்பற்றிய ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்ததாக அவர்கள் நூலால் அறிகிறோம். விருந்தினர் ஆடற்கேற்பப் பாடுவர்; விடு கவிகள் புனைவர்; சிற்சில விளையாட்டுகளை ஆடுவர். பிளேட்டோ (Plato) எழுதியுள்ள விருந்தைப்பற்றி நாம் வாசித்தால் மிகுதியாக மது வகைகள் இருந்தனவாகவும். இதனால் எல்லாரும் தம்மை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் அழுந்தியதாகவும், இந்த விருந்தில் சாக்ரடீஸ் (Socrates), அரிஸ்டோபானிஸ் (Aristophanes) அகோதன் (Agothon) ஆகிய மூவர் மட்டும் உறங்கிலர் என்பதும் அறியலாம்.

சாக்ரடிஸ் உறங்காமைக்குக் காரணம் அவர் முனைய இருவரோடு, ‘துன்பியல்’ ‘இன்பியல்’ ஆகிய இவற்றை ஒரு நூலில் முடிந்துக் காட்டுவது ஆசிரியரின் ஒப்புயர்வற்ற அறிவின் திறத்தைப் பொறுத்திருத்தலின் இருவரின் அறிவும் ஒன்றே அன்றி முன்றினும் மற்றென்று விஞ்சியது அன்று’ என்பதைப் பற்றி நீண்ட விவாதம் நடத்தியதேயாகும். அரிஸ்டோபானிஸ், அகோதன் ஆகிய இருவரும் குடிமயக்கத்தில் மிகுதியும் அழுந்தி இருந்ததனால் சாக்ரடிஸ் சொன்னவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டனர். பிறகு இருவரும் உறங்கிவிட்டனர். பிறரு சாக்ரடிஸ் அந்த இடத்தில் இராமல் புறப்பட்டுப் போய்க்கொண்டே இருந்தார். இம்மாதிரியான வாய்ப்புக்கள் அடிக்கடி நிகழ்வதில்லை. கிரேக்கர் மதுவை ஒரு பழக்கமாக வைத்துக்கொண்டிருக்கவில்லை. சில நேரங்களில் சிறிது உற்சாகமாக இருக்கவே பயன்படுத்திவந்தனர்.