கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்/மாதர்கள் நிலை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
7. மாதர்கள் நிலை

ஏதென்ஸ் நகர மக்கள் பல்வேறு தொழிலில் ஈடுபட்டிருந்தனர் என்றாலும் அவர்கள்க்குப் போதுமான ஓய்வு நேரங்கள் இருந்தன. அந்நேரங்களைக் கேளிக்கைகளிலும் விளையாட்டுகளிலும் கழித்தனர் உழவர்கட்கு ஆண்டு முழுவதும் வேலை இராது என்பதை எவரும் அறிவர். அவர்கள் தமக்கு நிலம் பணி இல்லாதபோது, வேறு பணியில் ஈடுபட்டு இன்புற்றிருந்தனர். மாலுமிகள் மாரிக்காலத்தில் மாக்கடல் வழியே மரக்கலங்களைச் செலுத்தமாட்டார்கள். அக்காலங்களை இன்பமாக ஓய்வு எடுத்துக்கொண்டு கழித்து வந்தனர். ஏனெனில் கடல் பெரிதும் மாரிக் காலத்தில் கொந்தளிப்புடன் துலங்கும். கைத்தொழிலாளிகளும் கடைக்காரர்களும் பிறர்க்குக் கைகட்டி விடைகூறும் நிலையினர் அல்லர். ஆதலின், அவர்களின் இன்பப் பொழுது போக்கைப் பற்றி இயம்ப வேண்டா. இந் நிலையில் மாதர்களின் நிலையைப் பற்றிச் சிறிது கவனிப்போம்.

பொதுவாகக் கூறுமிடத்து ஏதென்ஸ் நகர் ஆண் மக்கள் வீட்டைப்பற்றிய பொறுப்பே அறியாதவர் என்னலாம். ஏனெனில் ஏதென்ஸ் நகர மாதரிகள் மனைவி என்னும் சொல்லுக்குரிய பொருட் பொருத்தமுற வீட்டு வேலைகளைத் தாமே கவனித்து வந்தனர். மனைக்கு விளக்கம் மடவாள்தானே ! செல்வர்கள் இல்லங்களில் அடிமை ஆட்கள் ஆவணி ஆற்றிவந்தனர்.

மாதர்கள் பணி

கி. மு. ஐந்தாம் நூற்றாண்டில் ஏதென்ஸ் நக மாதர்கள், ஊழியம் செய்து ஓய்வு பெற்றவர் போல் வீட்டிலேயே அடைபட்ட நிலையினராய் இருந்தனர். ஆண் மக்கள் கலந்து கொள்ளும் எத்தகைய பொது திகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் வாய்ப்புப் பெறாதவராய் விளங்கினர்.

“சிறை காக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை”

என்னும் கொள்கையைச் சிறிதும் சிந்தித்திலர். தம் வீட்டிற்க்கு விருந்தினராக வந்தவர் ஆண்களாயின் அவர்களைப் பாராமல் தமக்கென அமைந்த அறைகளில் கரந்து உறைவர். விருந்துக்கு உகந்தவைகளை வேலையாட்கள் செய்து வைப்பர். வீதியில் இம் மாதர்கள் உலாவச் சென்றபோது இவர்களுக்குக் காவலாக அடிமைகள் உடன் வந்து கொண்டிருப்பர். பெண்கள் உரிமை இவர்கள் நாட்டில் இல்லை போலும் !

இளைய சிறுமி, தாயின் பாதுகாப்பில் வளர்க்கப்பட்டு வருவாள். தாய் அச் சிறுமிக்கு வீட்டு வேலைகளைச் செம்மையுறச் செய்யும் பழக்கத்தை ஊட்டி வருவாள். ஸ்பார்ட்டன் நகரச் சிறுமியர் விளையாட்டில் பங்கு கொள்வது போல் ஏதென்ஸ் நகரச் சிறுமியர் பங்கு கொள்வதில்லை. இப்பெண்களைக் காண வேண்டுமானால் மலர்க் கூடைகள் ஏந்திச் செல்லும் போதும், நீர்க்குடங்களைத் தாங்கிப் போகும் போது மட்டும் காணலாம். ஏதென்ஸ் நகரப் பெண்கள் மணமின்றி வாழ்வு நடத்துவது பெரிய இழுக்காக இவர்கள் இடையே கருதப்பட்டது. திருமணம் பெற்றோர் விருப்பத்திற்கிணங்க முடிவு பெறும். திருமணத்தின் போது மணமகளின் நண்பர்களாகிய நங்கைமார்கள் வெகுமதிகள் பல தருவர்.

மணவாட்டியை மண்ணுறுத்தும் செயலனைத்தையும் மாபெரும் முதியவள் கவனித்து வந்தனள் ஏதென்ஸ் நகர மாதர்கள் தம்மைப் பிறர் புகழ்வதையோ, வேடிக்கையாகப் பேசுவதையோ சிறிதும் விரும்பாதவர். இக்காலத்துக் காளைகளும், களிமயில்களும் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து உரையாடுவது போல் ஏதென்ஸ் நகர வாலிபர் சிறுவர் சிறுமியர் யாண்டும் தனித்துக் கூடும் வழக்கம் பெறாதவர்கள். திருமணம் பெற்றோரின் முடிவுக்கு இணங்க இசைவு பெற்றதாக இருந்தாலும் மணமகள் விரும்பும் சீதனங்களை மணமகன் ஈந்தே மணக்க வேண்டியவனாய் இருந்தான். திருமணம், மணமக்கள் இல்லத்திலேயே அதற்கென அமைந்த திருமண மேடையில் நடைபெறும். அப்போது வந்தனை வழிபாடுகளை நடத்துவர். இவை முடிந்ததும் மணமக்கள் தம் உற்றார் உறவினருடன் அமர்ந்து சிறிது சிற்றுண்டி கொள்வர். அவ்வுண்டியில் சிறந்த உணவாக இருப்பது எள் அடையாகும்: இன்னோரன்ன மகிழ்வுக்குரிய நேரங்களிலும் கூட ஆண்களும் பெண்களும் தனித்திருந்தே எல்லாச் சடங்குகளையும் முடிப்பர். இது பெண்களின் அச்சம், நாணம் முதலிய நற்குணங்களைக் காட்டுவதாகும். மணமான மாலைப்பொழுதில் தம்பதிகளை ஊர்வலமாகப் பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்வர். இதனால் திருமணம் பெண் வீட்டில் நடப்பது என்பதும் அறியக் கிடைக்கிறது. ஊர்வலத்தில் கேளும் கிளையும் ஆகக் கிளர்ந்து வருவர். இளஞ் சிறுமியர்.

“முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டான்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யாளுள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள் தன்னுமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தானே”

என்ற கருத்தடங்கிய பாடலைப் போன்ற பாடலைப் பாடி வருவர். அஃதாவது இதுகாறும் தாய் வீட்டில் வளர்ந்த பெண் தனக்கென வாய்ந்த கணவனோடு வாழ உற்றார் உறவினரைப் பிரிந்து செல்கிறாள் என்பதாம்.

மணமகளுக்குரிய சொத்து சுதந்திரங்கள் எல்லாம் மணமகனுக்குரியனவாகிவிடும். மணமான மகள் கணவன் பொறுப்பிலும், மணமாகி விதவையான மகள் தாய் தந்தையர், அண்ணன்மார் பொறுப்பிலும் இருக்க வேண்டியது இவர்கள் மரபாகும். பெண்கள் வீட்டிலிருந்தபோது சோம்பலோடு காலங் கழிக்கமாட்டார்கள். பின்னல், நெசவு போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தம் கணவன் ஆடைகளைத் தூயனவாக்கி நன்கு மடித்தும் வைப்பர். வீட்டு வேலைகளைச் சரிவரக் கவனிப்பதில் ஏதென்ஸ் நகர மாதர் தலை சிறந்தவர் என்னலாம். இப்பெண்கள் தம்மை அலங்கரித்துக் கொள்வதெல்லாம், பிறர் கண்டு மகிழ்வதற்கின்றித் தம் கணவர் கண்டு களிப்பதற்காகவேயாகும். இந்த ஒப்பனையை மாஸ்க் காலத்தில்தான் மகிழ்ச்சியுடன் செய்துகொள்வர். ஏனெனில், கணவன் தன் வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்புகையில் தம் மனைவிமார் இன்பமாக ஒப்பனை செய்து கொண்டிருப்பதைக் காணின், அவர்கள் அன்றடைந்த சோர்வு அனைத்தும் நீங்கப்பெறுவர். நம் நாட்டுப் பண்டைத் தமிழ்ப் பெண்களும், கணவன் பொருட்டே அலங்காரம் செய்திருந்தனர்.

இதுகாறும் கூறப்பட்டு வந்த எதினிய மாதர்களின் நிலைகளினால் அவர்கள் அடக்கி ஒடுக்கப் பட்டனரோ என்று கருதவேண்டா. அவர்கட்குரிய பெருமையும் நன்மதிப்பும் சிறிதும் குறைந்தனவாகக் கருதப்படவில்லை. சதிபதிகளுக்குள்ள காதல் அன்பு நாளடைவில் நன்கு முதிர்ந்து கனிந்து காணப்படும். அக்காதலன்பு ஒரு குறிக்கோளுடனேதான் இருந்து வந்தது. கணவன்மார் தம் மனைவியர் வீட்டு வேலைகளில் யாதொரு சிறு தவறு ஏற்பட்டாலும், அது குறித்து முகஞ்சுளிக்கும் தன்மை பெறாதவர். அவர்கள் அந்த அந்த இல்லக்கிழத்தியார் உடல் வன்மைக்கேற்ப மாறாது செய்து வந்ததைப் பாராட்டியே வந்தனர். எதினிய மாதர்களும் வரம்பு மீறி நடந்து கொள்ளமாட்டார்கள். ஒவ்வொரு மாதம் தான் பெருந்தன்மை வாய்ந்த நல் வாழ்வு நடத்த வேண்டுமென்னும் கொள்கையையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தனள். இம் மாதர்கள் வீட்டளவில் தம் கடமைகளை ஒழுங்காகவே செய்து வந்தனர் என்னலாம். தம் கணவன்மார்களுக்கு அவ்வப்போது யோசனை கூறுவதும் நல்வழி காட்டுவதும் கணவன்மார் மகிழ நடந்து கொள்வதும் ஆன பொறுப்பை இவர்கள் ஏற்றுத் தாம் ஆண்களிலும் இத்துறையில் விஞ்சிவிடுபவர்கள் என்பதைக் காட்டியது நாம் பாராட்டத் தக்கதன்றோ !