குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13/இரட்டை உருளைகள்
சுதந்திர பாரத சமுதாயம் இனி வருங்காலத்தில், மக்களாட்சி முறையில், எல்லாரும்-எல்லாச் செல்வங்களும், பெற்று வாழும் சமநிலை சம வாய்ப்புச் சமுதாயமாக-பூரண ஜனநாயக சோஷலிச அமைப்புடையதாக இருக்கவேண்டும் என்பது நம்முடைய திட்டம். இந்த ஜனநாயக சோஷலிச சமுதாயத்தை உருவாக்குவதில் ஆட்சிக்கு இருக்கும் பொறுப்பைவிட இந்த நாட்டுக் குடிமக்களுக்கு இருக்கும் பொறுப்பு அதிகம். தனி வாழ்வு உணர்ச்சியிலிருந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் சமுதாயப் பொதுவாழ்வு உணர்ச்சிக்குத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த முறையில் மக்களை வளர்த்துப் பக்குவப்படுத்தவே ஊராட்சி மன்றங்களும், ஊராட்சி மன்ற ஒன்றிப்புக்களும்.
தமிழர் வரலாற்றில் பஞ்சாயத்துசபை-ஊராட்சி மன்றம் புனிதமான ஒரு பேரவையாகவே இருந்து வந்தது. அவ்வாறே கருதப்பெற்று வந்தது. அண்ணல் சிவபெருமானுக்கும், ஆரூரருக்கும் இருந்த வழக்கைத் திருவெண்ணெய் நல்லூர் பஞ்சாயத்துச்சபை விசாரித்தது என்றால் பஞ்சாயத்தின் தொன்மைக்கும் தூய்மைக்கும் வேறென்ன சான்று வேண்டும்?
பல சுவர்கள் கடந்த-வீதி வேற்றுமைகளைக் கடந்த இவர் அவர் என்ற இரண்டாட்டு எண்ணங்களைக் கடந்த கிராம ஒருமைப்பாட்டின் சின்னமே பஞ்சாயத்து. அந்நிய ஆட்சியினாலும், பயன் தராத-பழங்கால சமுதாய அமைப்பின் வழிவழி வந்த பழக்க வழக்கங்களாலும் வலிவும் பொலிவும் இழந்து நிற்கும் கிராமத்திற்குப் புத்துணர்வும் புதுப் பொலிவும், புது வாழ்வும் கொடுப்பது பஞ்சாயத்து. இக்கருத்துடனேயே நமது அரசு பஞ்சாயத்தை-பஞ்சாயத்துக் கூட்டு மன்றங்களை அதிகமாக ஊக்குவிக்கின்றது; ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்குப் பஞ்சாயத்து முறை ஆழமாகவும் அகலமாகவும் செயற்பட்டிருக்கிறதா என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
ஆண்டுதோறும் ஒவ்வொரு பஞ்சாயத்தும் செய்து முடித்திருக்கிற வேலைகளை-நடைமுறைகளைப் பஞ்சாயத்துக் கூட்டு மன்ற ஆணையர் விமரிசனம் செய்து, அதைக் கூட்டுமன்றத்தில் வைத்து, அதன்பின் வட்டாரப் பஞ்சாயத்து அலுவலர்களுக்கு அனுப்பி, அவர்களின் குறிப்புக்களைப் பெற்றுக் குறைபாடுகளை நீக்கி நிறைவுபடுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும். பஞ்சாயத்து ஆட்சி என்று வருகின்றபொழுது, மேலேழுந்த வாரியாக வரி வசூலித்தல், செலவு செய்தல் ஆகிய இரண்டை மட்டுமே வைத்துப் பஞ்சாயத்தின் நடைமுறைகளை அளந்து பார்க்கக் கூடாது. பஞ்சாயத்து மூலம் வளரவேண்டிய ஆட்சித்திறன்-உற்பத்திப் பெருக்கம், கிராம ஒற்றுமை, நாட்டுப்பற்று, கிராம மக்களிடையே உடன் பிறப்புணர்ச்சி, கல்வி வளர்ச்சி சிறந்த-காலத்திற்கேற்ற மனவளர்ச்சி ஆகியன மக்களிடையே வளர்ந்து வலுப்பெற்றிருக்கின்றனவா என்பதையும் பார்க்க வேண்டும். இத்தகு தூய-சிறந்த பஞ்சாயத்து, சமுதாயம் என்ற பெருவண்டியின் ஓர் உருளையாகும்.
“கூடித்தொழில் செய்தால் கோடி லாபம் பெறலாம்” என்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். கூடி வாழ்ந்தால் நாம் கோடி நன்மை பெறலாம். ‘குறைந்தகாலத்தில்-குறைந்த செலவில்-குறைந்த உழைப்பாற்றலின் மூலம் மற்றவர்களுக்குக் காழ்ப்போ கசப்போ, ஏற்படுத்தாமல் பொருள் தேடிக்குவிக்கும் புதிய முறையைக் கையாள வேண்டும். அந்தப் புதிய முறையின் பெயரே கூட்டுறவு, கூடிவாழ்தல் மனித சமுதாயத்தின் சிறப்பொழுக்கம், அதனால்தான் மனிதர்களைச் சுற்றியே நாடும் நகரமும் எழுகின்றன. அவ்வாறு கூடிவாழ்கின்ற வாழ்க்கை முறையை மேற்கொள்ளுவதன் மூலம் தனிமனிதனும் பண்புகள் நிறையப் பெற்றுப் பக்குவமடைகிறான். அத்தோடு சமுதாயமும் பொருள்வளம் பெற்றுப் பொலிவுறுகிறது. குற்றங்கள் குறைகின்றன-காவல்கள் நீங்குகின்றன.
நம்முடைய சமுதாய அமைப்பில் கூட்டுறவு இயக்கம் ஒரு முக்கியமான-பொறுப்பு வாய்ந்த இடத்தைப் பெறுகிறது. ஒரு கிராமத்தில் இன்று 600 வீடுகள் இருக்கின்றன என்றால் 40 அல்லது 50 கடைகள் இருக்கும். அத்தனை கடைகளுக்கும் இடவாடகை, ஊழியர்கள், மேலாளர்கள், தனித்தனியே அன்றாடச் செலவுகள், தனித்தனிக் கணக்குகள் இத்துணையையும் கணக்குப் போட்டுப் பார்த்து, அத்துணை பேரும்-அந்தக் கிராமத்தில் உள்ள எல்லா மக்களும் சேர்ந்து ஒரு கூட்டுறவு பண்டக சாலையை வைத்தால் எத்துணைப் பொருள் மிச்சமாகும் என்று கணக்கிட்டுப் பார்க்கவேண்டும்.
மேலும், இன்று பல கடைகளில் பாத்திரங்களில் பல பண்டங்கள் இல்லாமலே இருக்கும். இதற்குக் காரணம், போதிய முதலீடு இன்மையே! இதுபோலவேதான் விவசாயமும், வேறுபல துறைகளும் பொதுவாகப் பலரிடம் தனிமனித உணர்ச்சிகள் வளர்ந்திருப்பதால் அவர்களும் அல்லற்படுகிறார்கள்-சமுதாயத்தையும் அல்லற்படுத்துகிறார்கள். பலரிடம் சிறிய அளவில் சிதறிக் கிடக்கின்ற மூலதனத்தைக் கூட்டுறவு மூலம் ஒன்றாக்கிப் பெரிதாக்கபெரும் மூலதனமாக்க முடியும். பலர் முயன்று, நிறைந்த செலவில் குறைவான இலாபத்தைப் பெறுவதோடன்றிச் சிலரே இலாபத்தைப் பெற்றுப் பலர் பெறாமல் இருப்பதால் ஏற்படுகின்ற பொருளியல் ஏற்றத்தாழ்வு அவ்வழி ஏற்படுகின்ற விருப்பு வெறுப்புணர்ச்சிகள் ஆகியவற்றிலிருந்தும் விடுதலை பெற, சிலர் முயன்று குறைந்த செலவில் நிறைந்த லாபத்தைப் பெற்று அன்போடியைந்த உறவு வாழ்க்கை வாழத் துணை செய்யும் கூட்டுறவு வாழ்க்கை. அதற்கு கூட்டுறவு வாழ்க்கை புதிய பாரத சமுதாயம் என்ற பெரு வண்டியின் இன்னோருளையாகும். பஞ்சாயத்து, கூட்டுறவு என்ற ஈருளைகளையும் இணைக்கின்ற அச்சு மனங்கலந்த - உளமொத்த நம்பிக்கையேயாகும். உருளைகள் அச்சோடு பொருந்தி - அவை சுழலும்போது கழன்று ஓடாதவாறு தடுத்து நிறுத்தும் அச்சாணிகள் தந்நலத் துறவும் பிறர் நலம் பேணும் வெற்றியுமே யாகும். இத்தகு சமுதாயம் பெரு வண்டியை இணைத்துக் கோத்துச் செலுத்த சுதந்திர பாரதக் குடிமக்களாகிய நாம் அனைவரும் தம்மைத் தகுதிப் படுத்திக் கொள்வோமாக!
- ↑ மண்ணும் விண்ணும்