குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13/வாக்கும் வாழ்வும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

6. [1]வாக்கும் வாழ்வும்

ம்முடைய சுதந்திரபாரத சமுதாயத்தை இரண்டு வழிகளில்-வெவ்வேறல்ல - ஒன்றுபட்ட - பண்பின் வழிப்பட்ட துறைகளில் செழுமைப்படுத்தி வளர்க்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். ஒருவழி மக்களாட்சி-, மற்றையது கூட்டுறவு வாழ்க்கை, வளர்ந்து வாழவிரும்பும் சமுதாயத்திற்கு இவ்விரு கொள்கைகளும் விழிகள் போலவாம். நமது நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, பல தேர்தல்கள் (பொதுத் தேர்தல்கள் மட்டுமல்ல) நடைபெற்றிருந்தும்கூட நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மக்களாட்சி முறைக்கேற்ற செழுமை வளரவில்லை - கூட்டுறவுப் பண்புகளும் வளரவில்லை. அதுமட்டுமன்று. அவைகளுக்கு மாறாகக்கூடப் பலதடவைகளில் சொந்த நலனுக்காகச் செயல்படுகிறோம். சாதாரண மக்கள் மாத்திரமே இப்படியல்ல-தேர்ந்தெடுக்கப்பெற்ற பிரதிநிதி களிலும்கூடப் பலர் இவ்வண்ணமே வாழுகிறார்கள். தேர்தல், ஒருவகைப் பயிற்சியேயாகும். தேர்தல்வழி சமூக ஒப்புரவுப் பழக்கவழக்கங்கள் மலர்ந்து உருப்பெற வேண்டும்.

தேர்தல் கருத்து வழிப்பட்ட புரட்சி இயக்கமாகும். தேர்தலில் பகைமையைக் காட்டுகிறவர்கள் மக்களாட்சிப் பண்பைப் பொறுத்த வரையில் சிறு பிள்ளைகளாகவே கருதப் பெறுவார்கள். மற்றவர்கள் கருத்தைக் கேட்க மறுப்பவர்கள்-சிந்திக்க மறுப்பவர்கள் மக்களாட்சி முறைக்குத் தகுதி யுடையவர்கள் அல்லர். மற்றவர் கருத்தில் நியாயமிருக்கிறது என்று தெரிந்திருந்தும் கட்சிக்காக-வெற்றிக்காக மறைத்துப் பேசுகின்றவர்கள் மிகவும் பொல்லாதவர்கள். தேர்தலில், தம்முடைய கருத்தை-தாம் இந்தச் சமுதாயத்திற்காக வழங்கும் திட்டங்களை முன்வைத்தே வாக்குகளைக் கேட்க வேண்டும். மற்றவர்களுடைய பலவீனத்தால் வெற்றி பெறுவது தன்னுடைய கருத்து வலிமையைக் காட்டாது. வெற்றி பெறுவது வளர்ந்த முழுநிறைவான ஜனநாயகமுமாகாது. ஜனநாயகம் என்பது உயர்ந்த-ஆழமான-தூயதத்துவம். அங்கு தனிமனித ஆதிபத்தியத்திற்கு இடமில்லை. நம்முடைய நாட்டை நாம் ஆளுந்தகுதி யுடையதாக்குவது நம்முடைய வாக்குரிமை. சுதந்திர நாட்டில் வாக்குரிமை பெற்றிருப்பதும், அவ்வாக்குரிமையை முறையாகப் பயன்படுத்துவதும் வாழ்க்கையின் இன்றியமையாத கடமைகளில் ஒன்று. வாக்குரிமையைப் பெறாமலேயே பலர் வாழுகின்றார்கள். அவர்கள் அடிமைகளாகவே வாழ விரும்புகின்றார்கள். வாக்குரிமை பெற்றிருந்தும் அதைப் பயன்படுத்தாதவர்கள் வாழ்ந்தும் வாழாதவர்களாகவே கருதப் பெறுவார்கள். வாக்குரிமையைச் சில இடங்களில் காசுக்கு விற்கிறார்கள். ஐயகோ! என்ன கொடுமை! பெற்ற தாயைக் காசுக்கு விற்கும் கொடுமையினுங் கொடுமை வாக்குரிமையைக் காசுக்கு விற்பது, வாக்குரிமையை யாருமே காசுக்கு விற்காதவாறு கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். இது ஒரு பெரிய தொண்டு, தேர்தலுக்குப் பல மாதங்கள் முன்பே சில கட்சிகள் கோடிக்கணக்கில் நிதி திரட்டி வைத்துக் கொண்டிருக்கின்றன. அவைகளின் எண்ணம் எப்படியும் காசு கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்பதுதான் போலும். வாக்குகளைப் பெறவும், வாக்குகளை வழங்கவும் நடைபெறும் தேர்தலில் பணத்திற்கு வேலையில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையிருந்தும் வாக்குகளைப் பெற விரும்பித் தேர்தலில் குதிக்கும் கட்சிகளில் பல பண பலத்தையே இன்றியமையாத ஒன்றாகக் கருதிப் பணத்தைத் தேடிக் குவித்து வைத்துள்ளன. பணத்திற்கும் வாக்குக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் எப்படியோ மக்களாட்சி முறைக்கு விரோதமாக இன்றைக்கு மேற்கண்ட நிறுவனங்கள் செயற்படுகின்றன என்பது “குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு” என்ற கொள்கைக்கு எத்துணை மாறுபட்டது என்பதை வாக்காளர்களாகிய நாம் நன்றாகச் சிந்தனை அடிப்படையிலும், செயலின் அனுபவத்திலும் ஆராய்ந்து முடிவு செய்தல் வேண்டும்.

வாக்காளர்கள் சாதிமுறை வழிப்பட்டுத் தமது வாக்குகளைப் பயன்படுத்தக் கூடாது. வாக்குரிமை பெற்றிருக்கும் ஒருவன் தனது வாக்கைத் தான் விரும்புகிற ஒருவருக்குத் தான் விரும்பியபடி வழங்குகிற சூழ்நிலையை உருவாக்காத நிலையில், இன்றையச் சமுதாய அமைப்பின்படி சாதியின் பெயரால் - காசின் பெயரால் வாக்குகளைப் பெறத் தொடர்புடைய நிறுவனங்கள் முயற்சி செய்வதை எப்படித் தடுத்து நிறுத்துவது என்பது மக்களாட்சிக் கொள்கையுடைய அறிஞர்கள் சிந்திக்க வேண்டிய ஒன்று. தேர்தலில் ஈடுபடும் கட்சிகளில் பல சாதிமுறை அமைப்பை வெறுத்து ஒதுக்கும் கொள்கையுடையனவேயாம். ஆனாலும், தேர்தலில் உடனடியாக வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கையால் தேர்தல் காலத்தில் அவர்கள் சாதியைத் துணிந்து பயன்படுத்தத் தவறவில்லை.

வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு முன்பு, தெளிந்த சிந்தனையோடு சிந்திக்கவேண்டும். தேர்தலுக்கும் உணர்ச்சிக்கும் நெடுந்தொலைவு. எழுத்தால்-பேச்சால் எடுத்துக்காட்டுக்களால் வாக்காளர்களை உணர்ச்சி வசப்படுத்தி, அந்த உணர்ச்சியில் வாக்காளர்கள் மயங்கிக் கிடக்கும்போது, வாக்குகளைப் பெற முயற்சிப்பார்கள். தேர்தல் மேடைகளில் பேசுகிறவர்கள் உணர்ச்சி வசப்படுவார்கள். ஆனால் கேட்கின்ற வாக்காளர்கள் உணர்ச்சி வசப்படக்கூடாது. உணர்ச்சி வசப்படுத்தி வாக்குரிமையைப் பறிப்பது ஒரு வழிப்பறி போன்றதே. வாக்குரிமையைப் பயன் படுத்துவதில் தெளிந்த-அறிவின் வழிப்பட்ட சிந்தனைக்கு இடங்கொடுக்கவேண்டும்.

கணவனுக்கும் மனைவிக்கும் தனித்தனியே வாக்குரிமை உண்டு. மனைவியைப் பார்த்துக் கணவனோ கணவனைப் பார்த்து மனைவியோ வாக்குரிமைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது நியதியில்லை. அப்படியிருக்க யார்யாரையோ காட்டி வாக்குகளைக் கேட்பார்கள். அவர்கள் காட்டக்கூடியதைக் காட்டினாலும் வாக்காளர்கள் காட்சி வசப்பட்டு வாக்குரிமைகளை வழங்கி ஏமாறக் கூடாது. காட்சிகளைக் காணும் இடம் தேர்தல் களமல்ல.

தேர்தல், சமுதாயத்தின் கருத்துவழிப்பட்ட புரட்சி இயக்கமேயாகும். எந்தக் கருத்து சமுதாயத்திற்கு நல்லது என்று கருதுகிறதோ அவ்வழியில் மக்களை வழிநடத்தி அமைத்துச் செல்வதே ஜனநாயக வழிப்பட்ட இயக்கங்களின் கடமை. அக்கருத்தை ஏற்றுக் கொள்வதென்பது மக்களுடைய பரிபூரண சுதந்திர உரிமை. நம்முடைய கருத்து சரியானது தானா? அதை, மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்கின்றனரா? அக்கருத்துக்கு மக்களின் ஆதரவு எந்த அளவிற்கு இருக்கிறது என்பனவற்றையெல்லாம் பரிசீலனை செய்யவே தேர்தல் முறை கையாளப்பெற்றது. சமுதாயம் வளர்ச்சியுறுவதன் காரணமாகக் கருத்து மாற்றங்களும் வளர்ச்சியும் ஏற்படக் கூடும். அவற்றைக் கணக்கிலெடுத்துக் கொண்டு ஒருநாடும் சமுதாயமும் முன்னேற வேண்டும். அதற்காகவே சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது. மக்களாட்சி முறைக்கும் தேர்தலுக்கும் வேண்டிய இன்றியமையாத பண்பு தன்னுடைய கருத்துக்கு மாறுபட்டிருக்கிற கருத்துக்களையும் கேட்டு சிந்திப்பதில் ஆர்வம் காட்டுவதாகும். பிற கருத்துக் களை விமரிசனத்திற்கு எடுத்துக் கொள்ளாது தன்னுடைய கருத்தே முற்றிலும் சரியானது-அதில் குற்றங்குறை இருக்க முடியாது என்ற பிடிவாதம் மக்களாட்சி முறைக்கு ஏற்புடைத்தல்ல. அப்படியானால் கொள்கை உறுதிப்பாடு வேண்டாமா? என்ற கேள்வி எழக்கூடும். பிடிவாதம் வேறு- கொள்கை உறுதிப்பாடு வேறு. தன்னுடைய கருத்துக்கு முரண்பட்ட கருத்துக்களையும் கேட்டு கருத்தின் அடிப்படையிலும் விவாத ரீதியிலும் விமரிசனம்செய்து எதிர்க் கருத்து சரியல்ல என்று ஒதுக்குவதன் மூலமே கொள்கையில் உறுதிப்பாடு தோன்றமுடியும். எதிர்க் கருத்துத் தெரியாமல் கொள்கை உறுதிப்பாடு என்று கூறுவது செக்குமாடு, தான் சுற்றிய தூரத்தைக் கணக்கிட்டு உலகத்தைச் சுற்றினேன் என்று கூறுவதாகும்.

மற்றும், இங்கு கருத்து விமரிசனமே தவிர மனித விமர்சனம் அல்ல. கருத்து மாறுபாடேயொழிய மனித மாறுபாடல்ல. உயர்ந்த ஜனநாயக வாழ்க்கையில், பகைமைக்கும் மாச்சரியத்திற்கும் இடம் கிடையாது. ஜனநாயகத்திலும் தேர்தலிலும் பகைமையையும் மாச்சரியத்தையும் காட்டுபவர்கள் ஜனநாயகத்துறையில் வளராத-பக்குவம் அடையாத சிறு பிள்ளைகளாகவே கருதப்பெறுவர். மக்களாட்சி முறையில் தேர்தலுக்கு நிற்கும் கட்சிகள் அனைத்துமே மக்கள் நலனை இலட்சியமாகச் சொல்லியே நிற்கின்றன. தம் தம் நிலையில் நாட்டு மக்களுக்கு இன்னின்ன கொள்கைகள் நலம் தருவன என்று கருதி அவற்றை வாக்காளர்கள் முன்னே வைத்து வாக்குகள் மூலம் தீர்ப்பை எதிர்பார்க்கின்றன. அக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுகின்ற அல்லது இயல்புடையனவல்ல என்று ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்குகின்ற உரிமை வாக்காளர்களுக்கே உண்டு. அப்படியிருக்க மக்களின் நலனுக்கான கருத்தை வைப்பவர்களிடையே காழ்ப்போ பகையோ வர வாய்ப்பு ஏது? அதுபோலவே கருத்தை ஏற்றுத் தீர்ப்பளிக்கின்ற உரிமை மக்களுக்கு இருக்கும்போது தன்னுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளாத மக்களிடமோ அல்லது மாற்றுக் கருத்துடையவர்களிடமோ வெறுப்பும் பகையும் காட்டுவது ஜனநாயக முறைக்கே முரண்பட்ட ஒன்று என்பதை வாக்காளர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றோம். ஆதலால், தேர்தலைக் கருத்து வளர்ச்சிப் பிரச்சார இயக்கமாகவும் அதன்வழிச் செயற்படும் இயக்கமாகவும் நடத்தாமல், மனிதர்களுக்குள் பகைமையை- வளர்க்கும் இயக்கமாகப் பயன்படுத்துகிறவர்களிடத்தில் வாக்காளர்கள் விழிப்போடு இருக்கவேண்டும். அவர்கள், பகைமையை வளர்க்கும் முறையில் ஈடுபட்டாலும் அல்லது வாக்காளர்களை ஈடுபடுத்த முயன்றாலும் அவர்களை ஒதுக்கித் தள்ளுவது வாக்காளர்களின் உரிமை வழிப்பட்ட கடமையாகும்.

ஒரு சிறப்பான எதிர்காலத்தை அமைக்க விரும்புகிறவர்களுக்குக் கடந்த கால வரலாற்றறிவு இன்றியமையாத ஒன்று, தமிழ்ச் சமுதாயம் இவ்வுலகின் பல்வேறு சமுதாயங்கள் நாகரிகம் பெறுவதற்கு முன்னரேயே உயர்ந்த நாகரிகத்தில் வாழ்ந்த சமுதாயமாகும். இந்த நூற்றாண்டில் “ஓருலகம்” பேசப்பெறுகிறது. ஆனால், இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே புறநானூற்றுக் காலக் கவிஞன்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கூறி ஒருலக ஒருமைப்பாட்டை வலியுறுத்தியிருக்கின்றான். இக் கவிதையின்படி நாடு, எல்லை, மொழி, இனம் ஆகிய வேற்றுமைகளையெல்லாம் கடந்து, “மனித குலம்” என்ற அடிப்படையில், ஓர் ஒருமைப்பாட்டைக் காண்கின்றோம். பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டக் காவியம் செய்தருளிய சேக்கிழார் பெருமானும், “உலகம்” என்றே பல இடங்களில் முதன்மைப்படுத்தி வற்புறுத்தியுள்ளார். ஏன்? திருமூலர் “ஒன்றே குலம்” என்று தெளிவாகவும் உறுதியாகவும் பேசுகின்றாரே. ஆனாலும், அயல் வழக்கு நுழைவின் காரணமாகவும் வேண்டாத ஆதிக்கத் தத்துவங்களின் ஆட்சியின் காரணமாகவும் நம்மிடையே எண்ணத் தொலையாத-பொல்லாத சாதி வேற்றுமைகள்- பிரிவினையுணர்ச்சிகள் சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நுழைந்தன. இத் தீவினைகளை சில சமயச் சான்றோர்களும் அறிஞர்களும் தொடர்ந்து வன்மையாகச் சாடி வந்தும் கூட இப்பிரிவினை உணர்வுகளினின்றும் நாம் விடுதலை பெற்றோம் இல்லை. இதன் காரணமாகவே இந்த நாடு பலகோணங்களில் அடிமைப்பட்டது என்பதை நாம் மறந்து விடுவதற்குமில்லை. அதுமட்டுமா? தவறான கொள்கைகளின் காரணமாகவும் அயல் ஆட்சிகளின் காரணமாகவும் நமதுநாட்டு மக்களில் பெரும்பான்மையோர் கல்வியறிவில்லாதவர்களாக ஆனார்கள். இல்லாமை, அறியாமை, பிரிவினையுணர்வு. அந்நிய ஏகாதிபத்தியம், அந்த ஏகாதிபத்தியத்திற்குக் கங்காணம் பார்க்கும் வேலை இவற்றின் காரணமாக நம்முடைய நாட்டில் மலையும் மடுவும் அனைய பொருளாதார ஏற்றதாழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. சிலர் வாழ்வதும் பலர் வாடுவதுமாக இருக்கின்ற சமுதாய அமைப்பைக் காண்கின்றோம். மேற்காட்டிய குறைபாடுகளை மாற்றி நிறைவு பெறச் செய்யும் முயற்சிக்கே சமுதாய நலம்பேணும் வாக்காளர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் இருக்கவேண்டும் என்று சொல்லவும் வேண்டுமோ?

இன்றைய நீதி சமகுல சமுதாயம் காண்டதுதான். நாம் மொழிவழி தமிழர்கள். நாட்டுவழி இந்தியர்கள்; கூடிவாழ உலகம். இதைத்தவிர நாட்டை வேறுபடுத்தும் வேறு எந்த தத்துவமும் நமது வாக்காளர்களை ஆட்கொள்ள இடம் கொடுக்கக் கூடாது. அப்படி வேறுபடுத்தும் தத்துவங்களை நாம் ஏற்றுக்கொள்ளுவது நமக்கும் நம்முடைய நாட்டுக்கும் நல்லதல்ல. இந்த நீதி வழிப்பட்ட கொள்கையைக் கொணர வாக்காளர்களின் ஆதரவும் முயற்சியும் வேண்டும். முன்னர் குறிப்பிட்டதுபோல இன்றைய சமுதாய அமைப்பில் சிலர் வாழ்வதும் பலர் வாடுவதும் என்ற நிலை நிலவிவருகிறது. இத்தகைய சமுதாய அமைப்பு கடவுள் தத்துவத்துக்கும், நீதிக்கும், நியாயத்திற்கும், தர்மத்திற்கும் முற்றிலும் முரண்பட்டது. ஒரு சிலரின் தேவையற்ற ஏகபோக வாழ்க்கைக்கும் கூட தர்மத்தின் வடிவங் கொடுக்கச் சிலர் முயற்சிக்கின்றனர். அம்முயற்சி பகலை இரவாக்கும் முயற்சி போன்றதே. பழங்கால சமுதாயத்தில், சிறந்து விளங்கிய சான்றோர்களும் சமயப் பெரியோர்களும், எல்லோரும் வாழ்கின்ற வாழ்க்கையே, அறநெறியின்பாற்பட்ட கொள்கையென வற்புறுத்தி வந்துள்ளனர்.

“எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லால்
வேறொன் றறியேன் பராபரமே”

என்று வலியுறுத்தினார் தாயுமானார். உண்மை இப்படி இருக்க இடைக்காலத்தில் முதலாளித்துவத்தின் இரும்புப் பிடியில் சமயம் சிக்கியது. அதனால் ஒருவனுடைய ஏகபோக சொத்துரிமை புண்ணியத்தின் பயன் என்ற தவறான கருத்துப் பரப்பப்பெற்றது. அதுபோலவே வறுமையில் கிடந்து வாடி உழலுவதற்குப் பாபம் காரணம் என்று காட்டிப் படுகுழியில் ஆழ்த்தினர், உழைப்பை உறிஞ்சி-செல்வத்தைச் சுரண்டி சமுதாயத்தை வாட்டிவதைப்பவர்கள்-மக்களின் மதப் பிடிப்பைத் தவறானவழியில் தங்களது சுயநலத்துக்குத் திருப்பிவிட்டுக் கொள்ளத் தவறவில்லை. புண்ணியத்திற்கும் செல்வத்திற்கும் என்ன உறவு? பாபத்திற்கும் வறுமைக்கும் என்ன உறவு? ஒரு உறவும் இல்லை. புண்ணியத்தின் விளைவு நல் நெஞ்சமும், நல்உணர்வுமாகும். பாபத்தின் விளைவு தீய நெஞ்சமும், தீய உணர்வுமாகும் என்பதே உண்மை. இறைவனும்-இறைமைத் தன்மையும்-அவனது அருட் கொடைகளும் பொதுவானவை-நீலவானும் நீலக்கடலும் போலப் பொதுமையானவை. ஈசனது இணையடி நிழலின் அனுபவத்தைக் கூறும் அப்பரடிகள், உலகமக்கள் அனை வரும் விரும்பி அனுபவிக்கும் பொருள்களையே வரிசைப் படுத்திக் கூறுவது நினைக்கத்தக்கது:

“மாசில் வீணையும் மாலை மதியமும்
விசு தென்றலும் வீங்கிள வேனிலும்
முசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே”

பண்பட்ட சமயத் தத்துவத்திற்கும் சிலர் வாழும் கொள்கைக்கும் சிறிதும் உறவில்லை. ஆனாலும், நன்னலத்தின் விளைவு வழிவழிச் சமுதாயத்தை வாழ்வாங்கு வாழ்வித்துக் கொண்டு வந்த உயர்ந்த-தூய சமயத்தத்துவங்களைக் களங்கப்படுத்தவும், சமுதாய விரோதமாகச் சுயநலத்திற்குப் பயன்படுத்தவும் தயங்கவில்லை. இப்படி உபயோகப்படுத்தியதன் காரணமாகவே அருள் நெறிக்கு முற்றிலும் மாறுபட்ட “பொருள் முதல்வாத” தத்துவங்களும் “எண்ண முதல்வாத” தத்துவங்களும் தோன்றின என்பதை மறுப்பதற்கில்லை. இத்தவறான-பொய்யான கருத்தின் தொடர்பு இன்றும் சிலரிடம் இருந்து வரத்தான் செய்கிறது. ஆனாலும் வளர்ந்து வரும் சமுதாயத்தின் முன்னிலையில் சக்தியற்று மூலையில் ஒதுங்கிக்கிடந்தது. மூலையில் முடக்கப்பெற்ற தத்துவத்தை மீண்டும் தர்மத்தின் பேரால் உயிர்ப்பிக்க முயற்சிக்கின்றார்கள். இவர்களிடத்தில் நாம் மிகமிக விழிப்பாக இருக்கவேண்டும். அவர்களுக்கு நாம் கொடுக்கின்ற ஆதரவு நம்மைப் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின் தள்ளி விடும். ஒழுக்கம் நிறைந்த அறநெறியின் பாற்பட்ட சமுதாயத்தைக் காண-சமவாய்ப்புச் சமுதாயம்-சோஷலிஸ சமுதாயம் இன்றியமையாத ஒன்று. சோஷலிஸ் சமுதாய அமைப்பின் மூலமாகத் தனிமனித வாழ்க்கை நசித்து விடுமோ என்ற அச்சம் தேவையில்லை. தனிமனித வாழ்க்கையும் சமுதாய வாழ்க்கையும் மலரும் மணமும் போல. மலர் தனி மனிதனைப் போல-அதன் மணம் சமுதாயத்தைப் போல. மலரின் செழிப்பு மணத்திற்கு உண்டு. மனம் நின்று நிலவிப் பயன்தர மலரும் இன்றியமையாத ஒன்று. மலரினாலேயே மணம் வாழுகிறது; மணத்தினாலேயே மலர் சிறக்கிறது. தனிமனிதனாலேயே சமுதாயம் செழிப்படைகின்றது; சமுதாயத்தினாலேயே தனிமனிதன் சிறப்படைகின்றான். தனிமனிதனுடைய வாழ்வின் நசிப்பில் தோன்றுவதல்ல சமுதாய அமைப்பு.

தனிமனிதனை வளர்க்கவும், வாழ்விக்கவுமே சமுதாய அமைப்பு. தனி மனிதனுடைய வாழ்க்கை எவ்வளவு முக்கியமானதோ, அவ்வளவு முக்கியமானதுதான் சமுதாய வாழ்வும். தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் பொதுவாகச் சில ஒழுக்கத் துறைகளை வகுத்துக்கொண்டு போற்றிக் காப்பாற்றுவது முற்போக்கான கடமைகளில் ஒன்று.

தனிமனிதனின் சமுதாய நலனுக்கு மாறுபட்டதாகவோ தன்னிச்சைப் போக்குடையதாகவோ இருக்கக் கூடாது. அது போலவே, சமுதாயமும் தனிமனிதனின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறது. இங்கு சோஷலிஸ சமுதாய அமைப்பு என்பது பொருளியல் வழிப்பட்ட அமைப்புக்கேயாம். சிந்தனைக்கும் - உணர்வுக்கும் அல்ல. சோஷலிஸ சமுதாய அமைப்பின் தத்துவத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சிலர் வேண்டுமென்றே சோஷலிஸ சமுதாய அமைப்பைப் பகிரங்கப்படுத்தி மக்களிடம் காட்ட முயற்சிக்கின்றனர். சோஷலிஸ தத்துவம் அப்படி ஒன்றும் பயங்கரமானதல்ல-அதைப் பார்த்து நாம் பயப்பட வேண்டியதுமில்லை. இன்றைய சமுதாய அமைப்பில் திறமையுடைய பலருக்கு வாய்ப்பில்லை; வாய்ப்பின்மையின் காரணமாகவே, நாட்டை வளமாக்கப் பயன்படக்கூடிய பலருடைய திறமை பாழ்பட்டுப்போகிறது. திறமையற்றவர்களிடத்தில் வாய்ப்புக்கள் குவிந்துள்ளன. இது எப்படி எனில், செவிடர்கள் அவையில் இசைக் கச்சேரியும், குருடர்கள் அவையில் வாண வேடிக்கையும் நிகழ்த்துவது போன்றதுதான். குருடர்கள் அவையில் இசைக்கச்சேரியும் செவிடர்கள் அவையில் வாணவேடிக்கையும் நிகழ்த்தினால் பயன் உண்டு. உழைப்பு பொருளைக் கொண்டுவரும் என்பது பொதுவிதி. ஆனால் இன்றோ, பொருள் உழைப்பை விலைக்கு வாங்குவதைக் காண்கிறோம். உழைப்பவன் உலருகிறான். உழைப்பைக் கொள்ளை கொள்ளுகிறவர்கள் வாட்டமின்றி வாழுகின்றார்கள். இந்நிலையை மாற்றுவதே சோஷலிஸ சமுதாயப் போக்கின் நோக்கம்; சோஷலிஸ தத்துவத்தின் விழுமிய பயன். இக்கருத்தினையே வள்ளுவப் பெருந்தகை “ஒப்புரவு” என்ற அதிகாரத்தில் தெளிவாக விளக்குகிறார். “உலகத்தோடு ஒட்ட ஒழுகலே ஒழுக்கத்தின் விதி” என்று அறுதியிட்டுக் கூறுகின்றார். சமுதாயத்தோடு ஒப்புரவாக ஒத்ததறிந்து வாழும்போது தனிமனிதனுக்குக் கேடுவராது. அப்படியே வருமாயினும், அது விரும்பி ஏற்றுக் கொள்ளத்தக்கதே என்று பேசுகின்றார்.

“ஒப்புரவி னால்வரும் கேடெனில் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து”

–குறள் 220

என்பதே குறள்.

சோஷலிஸ சமுதாய அமைப்பின்மூலம், தனி மனிதனின் சிந்தனைகளுக்கோ, அல்லது தார்மீக வாழ்வுக்கோ எந்த விதமான ஊறும் விளைவதற்கு வழியில்லை. ஆதலால், இன்றைய உடனடியான நம்முடைய கடமை சோஷலிஸ சமுதாயத்தை அமைப்பதேயாகும். இத்தகைய ஒரு சமுதாயத்தின் இன்றியமையாத தேவையை இற்றைக்கு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னமேயே கம்பன் வலியுறுத்தியிருக்கிறான்.

“தெள்வார் மழையும் திரை
ஆழியும் உட்க நாளும்
வள்வார் முரசம் அதிர்
மாநகர் வாழும் மக்கள்
கள்வர் இலாமைப் பொருள்
காவலும் இல்லை; யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்
பார்களும் இல்லை மாதோ!”

என்று பேசுகின்றான்.

இது கம்பன் கண்ட இராமநாடு. தசரத இராமனைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஏன் இத்தகைய நாட்டைக் காண மனம் வரவில்லையோ தெரியவில்லை.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து எல்லார்க்கும் எல்லா வாய்ப்புக்களையும் வழங்குகின்ற சோஷலிஸ சமுதாய அமைப்பை மனமார விரும்பி நடை முறை வாழ்க்கையில் கொண்டுவர விரும்புகின்றவர்களுக்கே வாக்காளர்கள் தங்கள் ஆதரவைக் கொடுத்துதவ வேண்டும்.

தனி மனித வாழ்க்கையாயினும் சரி, சமுதாய வாழ்க்கையாயினும் சரி திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலமே முன்னேற்றம் காணமுடியும். “திட்டமில்லாத வாழ்க்கையைத் தேவனாலும் காப்பாற்ற முடியாது” என்ற பழமொழி நினைவிற் கொள்ளத்தக்கது. நடைமுறைக்கு ஒவ்வாத பழக்கவழக்கங்களின் காரணமாகவும், அடிமை வாழ்வின் காரணமாகவும் இந்த நாட்டின் சுதந்திரத்திற்கு முன்னர் திட்டமிட்ட முன்னேற்றங்கள் கிடையா. இந்த நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, ஆளும் உரிமையை நம்முடைய வாக்குகளின் மூலம் பெற்ற காங்கிரஸ் கட்சி தேசத்தின் முன்னேற்றத்தைத் தொழிற் புரட்சியின் மூலமே காண முடியும் என்ற நம்பிக்கையுடன் ஐந்தாண்டுத் திட்டத்தையும் மக்கள் முன்னே வைத்திருக்கிறது. ஆளுங்கட்சியின் ஐந்தாண்டுத் திட்டங்களைப் பொறுத்தவரையில், பழமை விரும்பும் கட்சிகளைத் தவிர, ஜனநாயக வாக்காளர்களின் நலன் விரும்பும் கட்சிகளின் கருத்துக்கும், ஆளும் கட்சியின் கருத்துக்கும் இடையே வேறுபாடுகள் அதிகமில்லை. திட்டமிட்ட முன்னேற்றத்தை விரும்புகிறவர்களுக்கும், திட்டங்களைச் செயற்படுத்தும் திறனுடையவர்களும், திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் விளையும் பலன்களை அதை நிறைவேற்றும், இந்த நாட்டு மக்கள் அனைவருமே அனுபவிக்க ஒழுங்குபடுத்துகிறவர்களுக்குமே வாக்காளர்கள் வாக்குகளைத் தந்துதவ வேண்டும். அடுத்து, இன்றைய வாக்காளர்களிடத்தில் எழுப்பப் பெற்றுள்ள ஒரு பெரிய பிரச்சனை வாழ்க்கையின் இன்றியமையாத அன்றாடத் தேவைப் பொருள்களின் விலை ஏற்றம், விலைவாசி ஏற்றத்திற்குக் காரணம் உற்பத்திக் குறைவு என்று கூறுவது நிறைவுடைய கருத்தாகாது. உற்பத்தி பெருகியிருப்பதைப் புள்ளி விவரங்கள் தெளிவாக விளக்குகின்றன. தேசிய வருமானமும் கணிசமான அளவிற்கு அதிகரித்திருக்கிறது. இவ்விரண்டிலும் எவ்விதமான குறைவும் ஏற்பட்டு விடவில்லை. ஆனாலும், சோஷலிஸ சமுதாய அமைப்பை ஒத்துக்கொள்ளாத தன்னலச் சார்புடைய பிற்போக்குச் சக்திகள் இன்னமும் நாட்டில் வலிவுடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அவற்றின் காரணமாக தேசிய வருமானம் உயர்ந்த அளவிற்குச் சராசரி மனிதனின் வருமானம் உயரவில்லை. பொதுநலனை மனத்தில் கொள்ளாதவர்கள் வருமான உயர்வைத் தம் வழிப்படுத்திக் கொண்டுள்ளனர். விலைவாசி ஏற்றம் ஒன்றும் கடுமையானதல்ல. ஆனால், மக்களின் வாங்கும் சக்தி குறைவாக இருப்பதனால் விலைவாசிகளின் ஏற்றம் நமக்குத் தெரிகின்றது. திட்டமிட்ட காரியங்கள்மூலம் பொருள் வருவாய் உயர் வதனால் பண்டங்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று-இயற்கையும் கூட. சோஷலிஸ சமுதாய அமைப்பை நோக்கி நாம் ஒழுங்காக நடை பயில்வதன்மூலம் நம்முடைய வாங்கும் சக்தி அதிகரிக்கும். விலைவாசி ஏற்றம் மறைந்து விடும். அதுமட்டுமன்றி, உற்பத்தி செய்வோரும், வாங்குவோரும் தம்முடைய வாணிபத்தைக் கூட்டுறவு அமைப்புகளின் மூலமே நடத்திக் கொள்வார்களானால் விலைவாசி ஏற்றத்தைத் தவிர்க்க முடியும். ஆதலால், மக்களின் வாங்கும் சக்தியை அதிகப்படுத்த விரும்புகிறவர்களுக்கும், வாணிகத் துறையில் கூட்டுறவு முறையை வளர்க்க விரும்புகிறவர்களுக்குமே வாக்காளர்கள் வாக்குகளை வழங்க வேண்டும்.

மொழி வழித் தமிழர்களாகவும், நாட்டு வழி இந்தியர்களாகவும் வாழும் நமது எதிர்காலத்தைப்பற்றித் தெளிவான முடிவெடுக்க நம்முடைய நாட்டின் சென்றகால நடைமுறை அல்லது கருத்து இவற்றைத் தெளிவான அடிப்படையில் கணக்கிலெடுத்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம். சென்றகால நிகழ்ச்சிகளின் தெளிவில் உருவாகி வளரும் நிகழ்கால சிந்தனை வாக்காளர்களுக்கு யாரை ஆட்சியில் அமர்த்துவது என்பதை முடிவு செய்யத் துணை புரியும்.

நமது விடுதலைக்குத் தொடர்ந்து போராடி வெற்றி பெற்று, விடுதலையைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்டக் காலத்தில் மக்களிடத்தெழுந்த உள்ளக் கிளர்ச்சிகளைத் தெளிவுற உணர்ந்து, மக்களை அவ்வழி நடத்திச் செல்லும் ஆற்றல் பெற்ற சக்தி எது?

கட்டும் துணிக்காக மான்செஸ்டரை நம்பியிருந்த நாட்டை, மான்செஸ்டருக்குத் துணியனுப்பி அந்நாட்டுச் சந்தையிலும் வாகை சூடத்தக்க தொழிற்புரட்சியை உருவாக்கிய சக்தி எது?

இயந்திர அறிவு எள்ளளவும் இல்லாதிருந்த நாட்டிற்குப் பல்வேறு இயந்திரங்களையும் உற்பத்தி செய்து அவற்றை உலகச் சந்தைகளுக்கு அனுப்பும் இயந்திரப் புரட்சியைக் கண்ட சக்தி எது?

மின்சாரத்தால் ஊரெல்லாம் ஒளிபரப்பி ஒண்புகழ் கொண்ட சக்தி எது?

வழிவழியாகக் கலைமகளைத் தெய்வமெனக் கொண்டாடியும் எழுதப்படிக்கத் தெரியாதவரே மிகுந்திருந்த இந்நாட்டில், "கல்விக்குக் காசு வேண்டும்-சாதி வேண்டும்" என்றிருந்த நிலையை மாற்றி, எல்லார்க்கும் கல்வி-சோறொடு துணி கொடுத்துக் கல்வி வழங்கிய சக்தி எது?

ஈசன் இவ்வுலகத்திற்குத் தாயும் தந்தையும் என்பர். இறைவனின் படைப்பே இவ்வுலகம் என்பர்; எண்ணிலடங்கா வேத சாத்திரங்களை எடுத்து ஒப்பிப்பர். ஆனால், மனிதருக்குள் சாதியை ஒழித்தாரில்லை. நமது மக்களில் ஒரு பகுதியினர் தீண்டத்தகாதவர்களாக இருந்த நிலைமையை மாற்றி, எல்லோரும் ஓர்குலமாக வாழும் உரிமையை வழங்கிய சக்தி எது?

“உழுவோர் உலகத்திற்கு ஆணி”, “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்”, “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே?”, என்றெல்லாம் பேசினார்களே தவிர உழவர்களுக்கு நிலம் தந்தாரில்லை.

உலர்ந்து போனவர் வாழ்க்கையில் வளம் ஏற்பட நியாய வாரம், நிலச்சீர்திருத்தம் ஆகியவற்றின் மூலமாக வாழ்க்கையில் நம்பிக்கையும் நல்வளமும் நல்கிய சக்தி எது?

“செப்பும் மொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்,” என்ற பாரதி வாக்குக்கேற்ப, நம் கண் முன்னேயே ஒரு மொழி இன்னொரு மொழியை அடக்கி ஆளவிடாமல், மொழிவழி மாநிலம் கண்டு மொழி வழி தேசியத்தை வளர்த்து எந்த ஓர் இனமும் தன் மொழியையும், நாகரிகத்தையும் இழக்காமல் வாழக்கூடிய உத்திரவாதத்தைக் கொடுத்த சக்தி எது?

காலரா, பிளேக் என்றால் கதிகலங்கிய நாட்டில்-பத்திலும், இருபதிலும் பல்லாயிரவர் செத்த இந்நாட்டில் நோயற்ற வாழ்வைக் கணிசமாக வளர்த்து மனிதனின் சராசரி வயதை 45 ஆக உயர்த்திய சக்தி எது?

ஆசியாவிலேயே வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமையைத் தந்து ஆளும் உரிமையுடையவர்களாக்கிய சக்தி எது?

எல்லாவற்றிற்கும் மேலாக, உலக நாடுகள் பலவற்றையும் விட பாரதத்திற்குச் சிறப்பான பாரம்பரியம் ஒன்றுண்டு. அப்பாரம்பரியமானது அன்பிலே பிறந்து, தியாகத்திலே திளைத்து, அமைதியிலே தழைத்து, அருளியல் வழியாகச் சமாதானம் காண்டது. இன்று, உலக வல்லரசுகளிடையே உறவையும் நட்புரிமையையும் வளர்த்துச் சமாதானம் நிலைக்கச்செய்யும் தலைமை எது?

இங்ஙனம் சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த நாட்டைப் பல துறைகளில் புதுமையும்-பொதுமையும், வலிவும் வளமும் நிறைந்த நாடாகத் திகழச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கும் சக்தியைப் பற்றி மேலும் சொல்லவேண்டிய அவசியமில்லை. நாம் மேலே காட்டியபடி பாரதத்தையும் சிறப்பாக, தமிழகத்தையும் வழி நடத்திச் செல்லும் தலைமையும், சக்தியும் எவை என்பதை நான் சொல்லவும் வேண்டுமா? இக்கருத்துக்கள் இன்றைய ஆட்சிப் போக்கைப் பற்றிய உண்மை நிலை.

மற்றொரு சக்தியான இரண்டாவது சக்தியையும் பார்க்க வேண்டும். மேற்சொன்ன முதல் சக்திக்கு ஆக்க ரீதியான கருத்துக்களைத் தருதல், செயல்பட ஆதரித்தல், ஒத்துழைத்தல், தேவைப்படும் இடங்களில் நிர்மாண ரீதியில் விமரிசித்தல் ஆகியவைகளின் மூலம் வாக்காளர்களின் வாழ்வுத்துறை வளர்ச்சிக்குத் துணைநிற்கும் சக்தியே அது.

இதைத் தவிர மூன்றாவதாகவும் ஒரு சக்தி உலவுகிறது.

நமது நாட்டை அந்நியர்கள் ஆண்ட காலத்தில் அவர்களுக்குக் கங்காணிகளாக இருந்த ஜமீன்தார்களும், மன்னர்களும், நிலச்சுவான்தார்களும் இன்று சிலரைத் துணைக் கொண்டு எல்லோரும் வாழ்வதா? என்ற விபரீத உணர்வில் நிரந்தரமாக மக்களை ஆன்மீக ரீதிக்கும் உலகாயத ரீதிக்கும், நியாயத்திற்கும் முரண்பட்ட-வழிவழியாக வளர்ந்து வந்துள்ள அருளியல் வழிப்பட்ட சமயநெறிக்கும் முற்றிலும் முரண்பட்ட ஒரு கொள்கையைத் துணிந்து தர்மத்தின் போர்வையில் சமயத்தின் பேராலேயே சொல்லி சமூகத்தி லுள்ள-அழிந்து கொண்டிருக்கும் தீய சக்திகளையெல்லாம் ஒன்று திரட்டி உயிர் கொடுத்து வல்லடி வழக்குப் பேசும் சக்தி. அதுவே மூன்றாவது சக்தியாகும்.

இம்மூன்று சக்திகளிலும், எந்த சக்தி ஊக்கப்படுத்தத்தக்கது? எந்த சக்தி ஒதுக்கப்படத் தக்கது என்பதை நிர்ணயிக்கும் ஆற்றல் வாக்காளர்களாகிய உங்களுக்குண்டு என்று நாம் அறிவோம். எனினும், இந்த நாட்டின்மீதும், நமக்குள்ள கடமையுணர்ச்சியால், உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், மீண்டும் நினைவுபடுத்துவது நல்லது என முனைந்தோம். மூன்றாவது சக்தியைச் சமுதாயத்தினின்றும் ஒதுக்கித் தனிமைப்படுத்துவது வாக்காளர்களின் தலையாய கடமை என்பதையும் நினைவு படுத்துகின்றோம்.

அத்தீயதை ஒதுக்கும் கடமை முயற்சி எவ்வளவு இன்றியமையாதது என்பதை, என்னைக் காட்டிலும் வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நீங்கள் தெளிவாக உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.

மற்றைய இரண்டு சக்திகளிலும் முதலாவது பரந்த தேசிய மனப்பான்மையுடையது-நாட்டின் முன்னேற்றம் கருதித் திட்டங்கள் தீட்டும் போக்குடையது-தீட்டிய திட்டங்களை நிறைவேற்றும் ஆற்றலுடையது.

மேலும் வாழ்க்கையில் நம்பிக்கையைத் தந்து ஒளிமிக்க எதிர்காலத்தை நமக்குக் காட்டுவது-தலைமை தாங்கி நடத்திச் செல்லும் சக்தி அது.

இக்கருத்து கணிசமான கணக்கின் வழி ஏற்புடையது என்பதே நமது எண்ணம். ஆதலால் உயர்ந்த ஆக்க ரீதியான தலைமைக்கும், சக்திக்கும் வாக்காளர்கள் துணை நிற்க வேண்டும். அங்ங்ணம் நிற்பீர்கள் என்றே நாம் நம்புகின்றோம். முதல் சக்தி ஏற்புடையதாக ஆகிறது; மூன்றாவது சக்தி மக்களை விட்டு ஒதுக்கப்பட்டு விடுகிறது.

எஞ்சி நிற்பது இரண்டாவது சக்தி. இது, முதல்சக்தி சொல்லும் சோஷலிசப்பாதையில் செயல்முறையில் துணை நிற்கவும், ஆக்க ரீதியில் விவாதிக்கவும், விமரிசிக்கவும் செய்து முழுமையான ஜனநாயக ரீதியில் ஆற்றப்படுத்தி நட்பு வழியாக நானிலத்தை வளப்படுத்தத் துணை செய்யவும், இச்சக்தியைப் பயன்படுத்த முடியும். அச்சத்தியும் நாம் கருதும் வழி இயங்கும் என்று நாம் நம்புகின்றோம். இந்த அடிப்படையில் இரண்டாவது சக்தியை நாம் ஒதுக்கித் தள்ளாமல், ஆனால் அப்படியே நாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலைமையில் இல்லாததால் முதல் சக்தியின் ஆக்கப் போக்கில் துணையாக நிற்க அவர்களுக்கும் தேவையான அளவிற்குப் பலம் கொடுக்க வகை செய்யலாம் என்பதும் நமது கருத்து. அப்படிச் செய்வது நாட்டின் வளர்ச்சிக்குப் பேருதவியாகவும் இருக்கும்.

நாம் மேற்சொன்ன கருத்துக்களை நினைவிற்கொண்டு வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும். ஒருகுல சமுதாயத்தை-சமவாய்ப்புச் சமுதாயத்தை-திட்டமிட்ட முன்னேற்றத்தை உருவாக்கும் தகுதியும் வாய்ப்பும் எந்தக் கட்சிக்கு இருக்கிறது என்று தேர்ந்து தெளிந்து அந்தக் கட்சிக்கே தங்கள் மேலான வாக்குகளை வழங்க வேண்டும். நம்முடைய ஜனநாயக ஆட்சியின் இன்றியமையாத் தேவைகளில் ஒன்று எதிர்க்கட்சி. நம்முடைய கருத்துக்கு இயைய ஆட்சி நடத்துகிறவர்களுக்கே நமது வாக்குரிமைகளைப் பெற முழுவதும் தகுதியுண்டு. எனினும் நம்முடைய கருத்தை மேலும் முழுமைப்படுத்திச் செழுமைப் படுத்தவும், மாறுபட்ட கருத்தை விவாத ரீதியில் விவாதித்து ஒதுக்கவும், மாறுபட்ட கருத்துடையவர்களிடையேயும் சிறந்த பாரம்பரியமுடையவர்களாகத் திகழும் சிலரைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஆனால், இக்கருத்தை எல்லைக்குட்படுத்தியே செயற்படுத்த வேண்டும். அப்படி யில்லாது போனால் நிலையான அரசாங்கம் அமைப்பது சாத்தியமில்லாமல் போகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சி என்றால், ஆளும் கட்சியோடு முற்றிலும் முரண்பட்ட கட்சியாக இருக்கவேண்டும் என்பது நியதியில்லை. அப்படி இருப்பதும் இந்தத் தேசத்திற்கு நல்லதல்ல. எதிர்க்கட்சிகளில் சிறந்த முற்போக்கு எண்ணம் படைத்தவர்களாகவும், இந்த தேசத்தின் நம் வாழ்வில் நாட்டம் உடையவர்களாகவும், நல்ல முற்போக்கு பாரம்பரியம் உள்ளவர்களாகவும், இருப்பவர்களையும் தேர்ந்து எடுத்தனுப்புவது, ஜனநாயகத்தைச் செழுமைப்படுத்த உதவும். இது நம்முடைய கடமையும்கூட ஆனாலும் எதிர்க்கட்சி வேண்டுமே என்ற சம்பிரதர்யத்திற்காகப் பிற்போக்குச் சக்திகளுக்கு ஊக்கமும் உரிமையும் அளிப்பது விரும்பத்தக்கதல்ல.

பொதுவாக தனிமனிதன் தன் நலனை அடிப்படை யாகக் கொண்டே பெரும்பாலும் தன் இலாபத்திற்காகத் தன் வாக்கை உபயோகப்படுத்த நினைக்கிறான். அப்படித் தன்னலத்திற்காக உபயோகப்படுத்தப்படத்தான் வேண்டும் என்று முடிவு செய்து விட்டானானால் வாக்காளர்களிடத்தில் சாதி, இன பொருளாதார பலவீனங்கள் ஏற்பட்டு விடுகின்றன. இத்தகைய பலவீனங்களிடையே, வாக்காளர்களிடத்தில் சமுதாய பொது நல உணர்வு குன்றி விடுகிறது. இந்த பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டு வாக்கு வேட்டையாடுபவர்கள், தவறுகள் செய்ய வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. இத்தகைய பலவீனங்களிலிருந்து வாக்காளர் ஒவ்வொருவரும் தம்மை விடுவித்துக் கொள்வதோடு, முற்போக்கான அப்பழுக்கற்ற சோஷலிஸ சமுதாய அமைப்புக்கேற்றவாறு தங்களுடைய அகவாழ்க்கையையும் புற வாழ்க்கையையும் செழுமைப்படுத்தத் தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், வாக்கை கேட்பவர் எவரானாலும் வாக்கை உபயோகப்படுத்துவது நாம் விரும்பும் ஒரு சமுதாய ஆக்கத்திற்காகவேதான். எனவே, சிறந்த ஜனநாயகத்தின் முழுமை, வாக்காளர்களின் செழுமையைப் பொறுத்ததேயாம். இல்லையானால். பெர்னாட்ஷா சொன்னதற்கு இலக்கியமாகி விடும்.

“வாக்காளர்கள் முட்டாள்களாக இருந்தால், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பெற்றுச் சட்டசபைக்குச் செல்லுகிறவர்கள் அயோக்கியர்களாகத்தான் இருப்பார்கள்” என்பது பெர்னாட்ஷாவின் வாக்கு. இங்ஙனம் இருக்க யார் தாம் விரும்புவார்கள்?

  1. மண்ணும் விண்ணும்