உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13/மக்களாட்சி

விக்கிமூலம் இலிருந்து

5. [1]மக்களாட்சி

விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டுக் கிடந்தது நமது பாரத தேசம். இந்த நாட்டு மக்கள் ஊமையராய். செவிடர்களாய்... உணர்வின்றி நெடு மரம் போல் வாழ்ந்தார்கள். ஆதிக்கக்காரர்கள் ஏறிச் சவாரி செய்வதற்கு இலாயக்காகக் கூனிக் குறுகி வாழ்ந்தார்கள். வாழ்க்கையில் வளம் இல்லை. ஆனால், வறண்ட வேதாந்தங்கள் உண்டு. மண்ணகத்து வாழ்வு பற்றிய அறிவு சூன்யம்; ஆனால் விண்ணகத்தைப்பற்றி ஆயிரமாயிரம் கற்பனைகள், எண்ணற்ற சமயங்கள். ஆனால் கிராமத்தில் அருளாட்சி இல்லை. அகத்திலும் புறத்திலும் இருளாட்சி செய்த காலம். இருள்கடிந்து எழுகின்ற ஞாயிறென பாரத சமுதாயத்தில் அண்ணல் காந்தியடிகள் தோன்றினார். அடிமைகளாக வாழ்ந்த நமக்குச் சுதந்திரம் வாங்கித் தந்தார். இல்லை-சுதந்திரமாக வாழவும் கற்றுக் கொடுத்தார். இந்நாடு சுதந்திரம் பெற்றது. நாமிருக்கும் நாடு நமதாயிற்று. நமக்காக நாமே ஆட்சி செய்யும் குடியாட்சியும் மலர்ந்தது. ஆயிரமாயிரம் ஆண்டுகள், வாழ்ந்து புகழ்பெற்ற சுதந்திர பாரத நாட்டின் குடிமக்களாக நாம் வாழ்வது முன்னைத் தவத்தின் விளைவேயாகும.

நாடு சுதந்திரம் பெற்றுவிட்டது. ஆனால், அந்நிய விளைவுகளை-அவற்றின் அடிச் சுவடுகளை அழித்து-மாற்றியமைத்துப் புதிய சமுதாயத்தை அமைக்கும் பெருங்கடமை நம் முன்னே நிற்கிறது. பிறர் வாழ்வதற்கென்றே நாம் பிரித்து வைக்கப்பெற்றோம். (ஒளி விளக்கில் வீழும் விட்டில் பூச்சிகளைப்போல) நம்மையே அழித்தொழிக்கக்கூடிய சாதி, இன, மத வேற்றுமைகளை ஏதோ புனிதமானவையெனக் கருதிப் போற்றி வளர்த்து வந்திருக்கிறோம். சுதந்திர பாரத சமுதாயம் ஒரு குடும்பம். அக்குடும்பத்தில் பல மொழி பேசுவோர் உண்டு - பல்வேறு நாகரிகமுடையோர் உண்டு. எனினும் வேற்றுமைகளைக் கடந்து - மறந்து விழுமிய ஒருமைப்பாடு கண்டு வாழும் ஒரு குடும்பமே நாம். இதற்கு மாறான உணர்வுகள் நாட்டிற்கும் நல்லதல்ல-நமக்கும் நல்லதல்ல.

உலகப் பெரும்போரின் போது சர்ச்சில், “வெற்றி! வெற்றி!” என்ற குரல் வழியே அந்நாட்டு மக்களை எழுச்சியும் புத்துணர்வும் பெறச் செய்து வெற்றி பெற்றார். இன்று நம்முடைய நாட்டிற்குத் தேவைப்படுகின்ற இன்றியமையா உணர்வும், ‘ஒன்றே குலம்’ - ‘வளர்க ஒருமைப்பாடு’ என்பனவுமேயாகும். வீட்டிலும், வீதியிலும் நாம் அன்றாட வாழ்க்கையில் கொண்டொழுகும் ‘ஒருமைப் பாட்டுணர்வே’ தேசீய ஒருமைப்பாட்டை வளர்க்க உதவும். ஊராட்சி மன்றங் களில் பொறுப்பேற்றிருக்கும் நண்பர்கள் தங்களுடைய கிராமச் சமுதாயத்தை அன்பியல் தழுவிய-உறவோடு கலந்த ஒரு குடும்பமாக ஆக்குவதில் முயற்சித்து வெற்றி பெறுதல் வேண்டும்.

தேசீய ஒருமைப்பாட்டின் அடித்தளம் கிராமச் சமுதாய அமைப்பிலேயே இருக்கிறது.

இந்தியா என்றால் கிராமம்; இந்திய நாட்டின் இதயம் கிராமங்கள். இந்திய நாட்டின் எண்பது விழுக்காடு மக்கள் கிராமங்களிலேயே வாழ்கின்றார்கள். அவர்களிற் பெரும் பாலோர் வேளாண்குடி மக்கள். அவர்களால் உண்பிக்கப் பெறுவோர் பலர். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் முன்னிருந்த நிலைதான். இதை எண்ணிப் பார்க்கவும் நெஞ்சம் குமுறுகிறது. உழைப்பவர் வாழ்க்கையில் சோர்வு; உழைக்காத வர்கள் நகரங்களில் “வெளிச்சம் போட்டு” வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சாதி ரீதியான ஆதிக்கம்-சமுதாயத்தை அட்டைபோல் உறிஞ்சி அலைகழிக்கச் செய்யும் நிலப் பிரபுத்துவ முறை ஆகியவைகளால் வலிவும் வனப்பும் வளமும் இழந்து போன கிராம வாழ்க்கைக்குப் புத்துயிரூட்டியது. நாம் பெற்ற சுதந்திரம். வேளாண்குடி மக்கள் உழைப்பில் நியாயமான பங்குபெற அது வழி செய்தது. ஏன்? அண்ணல் காந்தியடிகள் சொன்னது போல, உழவர்களுக்கு உழும் நிலத்தில் உரிமை கிடைக்கும் வண்ணம் நிலச் சீர்த் திருத்தத்தைக் கொணர்ந்தது. இத்தகு புதிய சாதனைகள் விவசாயிகளிடத்தில் எழுச்சியைத் தந்திருக்கின்றன-தன்னம்பிக்கையைத் தந்திருக்கின்றன- உற்பத்தியைப் பெருக்கியிருக்கின்றன.

நமக்கு தெய்வசாநித்யம் தெரியுமோ தெரியாதோ ஆனால், எண்ணற்ற தெய்வங்களைப் பற்றி நமக்குத் தெரியும். ஆனால், எப்படி வாழ்வது என்று மட்டும் கற்கமாட்டோம். நமது பாட்டன் பூட்டன்கள் ஏடெடுத்தடுக்கிப் பூசித்தனர். ஏடு கிடைக்காதவன் ஆயுத பூஜையின் பெயரால் மண் வெட்டியும் கலப்பையும் வைத்துக் கும்பிட்டான். எத்தனை பூசை போட்டும் அந்தக் கலைமகள் தேவியின் கருணா கடாட்சம் இந்த நாட்டில் இல்லை. அறிவிலே தெளிவதில்லை. ஆற்றலிலே உறுதியில்லை. வெந்ததைத் தின்றார்கள்; விதிவந்தபோது செத்தார்கள். “மரணமிலாப் பெருவாழ்வு” என்று சித்தர் சொன்னது ஏட்டில் இருந்தது. படித்த பண்டிதர்கள் பதவுரையும் பொழிப்புரையும் சொன்னார்கள். எனினும் பாரில் அந்த வாழ்க்கை- “மரணமிலாப் பெரு வாழ்வு” இல்லை. சுதந்திரம் வந்தது. தேடித் திரிந்தாலும் கிடைக்காத கல்வி சமுதாயத்தையே தேடிவந்தது. கவிஞன் பாரதி,

“வீடுதோறும் கலையின் விளக்கம்
வீதிதோறும் இரண்டொரு பள்ளி”

என்று முழங்கினான். இன்று "தமிழகமெங்கும் கல்வி" என்பதே பேச்சு. "ஒரு பள்ளியைத் திறப்பவன் ஒன்பது சிறைச் சாலையை மூடுகிறான்" என்பது பழமொழி. மேலும், "கல்வி ஆயிரங்காலத்துப் பயிர்” என்பதும் பழமொழி. இன்றையத் தமிழகத்தின் கல்வித்துறை மறுமலர்சி எதிர்காலத் தமிழகத்தின் ஏற்றத்திற்கு ஏற்ற அறிகுறியாகும். ஊராட்சி மன்றங்கள் கல்வி நிலையப் பொறுப்பை மேற்கொண்டிருக்கின்றன. வளரும் பயிருக்கு வான்மழைபோல, வளரும் குழந்தைக்குக் கல்வி. மன்றத்தின் தலைவர்கள் உறுப்பினர்கள் கல்வித் துறையில் இன்னும் அதிக ஈடுபாடு கொள்ளவேண்டும். மேதைத் தன்மைக்குச் சாதியும், அதிர்ஷ்டமும் வேண்டும் என்பது பத்தாம் பசலிக் கொள்கை; இன்று நாம் முயன்றால் நம் கிராமத்தில் எண்ணற்ற மேதைகளை உருவாக்க முடியும். ஆதலால் ஊராட்சி மன்றங்கள் எல்லாருக்கும் கல்வி-எப்படி யாவது கல்வி-வையத்துள் வாழ்வாங்கு வாழக் கற்றுக் கொடுக்கும் கல்வியளிக்கும் பொறுப்பை மேற்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் மட்டும் கற்றால் போதாது. இன்று வாழும் “வளர்ந்தவர்”களுக்கும்கூடக் கருத்துப்புரட்சி தேவைப்படுகிறது. அடிமைக்கால உணர்வுகள், ஆதிக்க எண்ணங்கள், தன்னல நாட்டம் இவற்றிலிருந்து நம்மிற்பலர் இன்னும் விடுதலை பெறவில்லை. வளர்ந்துவரும் சமுதாயத்திற்கு ஏற்றவாறு இணைந்துவாழ நாம் அனைவருமே நம்மைத் தகுதிப்படுத்திக்கொள்ள, வேண்டியிருக்கிறது. ஆதலால் கிராமத்தில் வாழும் நெறி காட்ட "வள்ளுவம்", எத்துறை யிலும் எப்பொழுதும் எதிலும் "அஹிம்சை" என்னும் காந்திய தத்துவம் ஆகியவற்றைப்பற்றிக் கேட்க-சிந்திக்க வாய்ப்புக்களை உண்டாக்க வேண்டும்.

சுதந்தரத்திற்கு முன்னர் இந்த நாட்டில் வாழ்ந்த மக்களின் சராசரி வயது சற்றேறக்குறைய 26 தான். வேத மந்திரங்கள் முழங்க, ஜாதகம் கணித்துப் புரோகிதர்களால் "நூறாண்டு வாழ்க" என்று வாழ்த்தப் பெற்றவனும்கூட 26 வயதில்தான் செத்தான். ஆனால், அவன் கவலைப்படவில்லை. வழக்கம்போல் விதி முடிந்தது என்று நினைத்து அமர்ந்திருப்பான். அவனுக்குத் தெரியுமா, நாம் சுகாதாரக் குறைவாக வாழ்கிறோம் என்று? கங்கையும் காவிரியும் அவனுடைய தத்துவத்தின்படி தீர்த்தங்கள்தாம். ஆனால், ஆற்றின் கரையோரங்களையே அவன் மலங்கழிக்கும் இடமாகக் கொண்டு மாசுபடுத்துவதைப் பற்றி அவன் எண்ணிப் பார்த்ததில்லை. ஊராட்சி மன்றங்கள் கிராமத்தின் சுகாதாரத்தைப் பேணுவதில் கண்ணுங்கருத்துமாக இருத்தல் வேண்டும். நோயற்ற வாழ்க்கையும், நிறைந்த வாழ்நாளும் போற்றுதற்குரியன. அதனால் வீட்டையும், வீதியையும் தூய்மையாக வைத்துக்கொள்ள கிராம மக்களைப் பழக்குதல் வேண்டும். அதனாலன்றோ பாரதி.


"சந்தித் தெருப்பெருக்கும்
சாத்திரம் கற்போம்"

என்றான், மேலும் வாழ்க்கைக்குத் தேவையான- சத்துள்ள இயற்கை உணவுகளை நமது கிராம மக்கள் எண்ணிப் பார்த்து உண்பதில்லை. வெறும் அரிசிச்சோறு, மனித வாழ்க்கைக்கே மாபெரும் பகையான புளி, மிளகாய் இவற்றில் மூழ்குகிறார்கள். ஆங்கிலேயன் அதிலும் கெட்டிக்காரன் ஆனான். உடலுக்கு இதந்தரும் நம்முடைய மிளகை வாங்கிக்கொண்டு, எரியூட்டும் மிளகாய் தந்தான். நாமோ மிளகாய்ச் சட்னி அபாரம் என்போம்! பொருந்தா உணவுப் பழக்கத்தைத் தவிர்க்க மக்கட்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். கைக்குத்த லரிசி, நல்ல காய்கறிகள், பால், தயிர், இவைகளை உண்டு உடல் நலத்தோடு உங்கள் கிராமத்து மக்கள் வாழும்படி செய்ய வேண்டும்.

கிராம மக்கள் நிலையான பொருள் வளமும் சீரான வாழ்வும் பெற ஊராட்சி மன்றங்கள் ஊக்கமூட்டி வழி நடத்த வேண்டும்.

கிராமச் சமுதாயத்தில் பெரும்பான்மையோராக இருக்கும் விவசாயிகள் துணைத்தொழில் இன்றிப் போதிய வருவாய் பெற முடியாது. ஆதலால் ஜப்பான் தேசத்தைப் போல, கிராமத்தின் ஒவ்வொரு வீடும் தொழிலகங்களாக வளர்ந்து காட்சியளிக்க வேண்டும். மேலும், வேளாண்மைத் துறையிலும் புதிய வழிதுறைகளைக் கையாண்டு திருந்திய முறையில் சாகுபடி செய்து, உயர்ந்த அளவு விளைச்சலைக் காணத் தூண்ட வேண்டும். கிராமத்தின் தேவைகள் அனைத்தையும் அந்தக் கிராமமே உற்பத்தி செய்யும் அளவிற்குக் கிராமம் வளர்ச்சியுடைய வேண்டும். தன்னிறைவு இல்லாத கிராமத்தின் செல்வம் நகர்வாழ் மக்களால் சூறையாடப்படும். ஆதலால், ஊராட்சி மன்றங்கள் தமது கிராமத்திற் கேற்றவாறு திட்டங்களைக் கண்டு செயல்படுத்தி அதைத் தன்னிறைவு உள்ள கிராமமாக்குதல் வேண்டும்.

கிராமத்தில் தேங்கிக் கிடக்கும் மனித சக்தியை வெளிப்படுத்திச் செயல்படுத்தும் ஆற்றல் கூட்டுறவு இயக்கத்திற்கு உண்டு. சுதந்திர பாரத சமுதாயக் குடும்பத்தின் இலட்சியம் சோஷலிச சமுதாய அமைப்பு. அந்த இலட்சியத்தை அடைய நம்முடைய இரண்டு நேர்ப்பாட்டைகள் கிராம ராஜ்யமாகிய பஞ்சாயத்தும் கூட்டுறவுமாகும். பிரிந்து கிடக்கும் மனித சக்திகளைக் கூட்டுறவு இயக்கத்தின் மூலம் ஒன்றுபடுத்த முடியும். கூட்டுறவால் நாட்டுயர்வு ஏற்படும். ஆதலால் கிராமத்தின் எல்லா முயற்சிகளையும் வேளாண்மை முதல் வாணிபம் வரை கூட்டுறவு முறையிலே செய்ய முயற்சிப்பது நல்லது. கூட்டுறவின் மூலமே சுரண்டுபவன், சுரண்டப்படுபவன் என்ற இரண்டு சாதிகளை ஒழிக்க முடியும். அதுமட்டுமல்ல-எதிலும் எப்படியாவது இலாபம் எடுத்ததாக வேண்டும் என்ற வடிகட்டிய பிற்போக்குணர்விலிருந்து சமுதாயத்தைப் பேணிக் காப்பாற்றவும் முடியும். கூட்டுறவின் மூலம் “நமக்காக எல்லோரும்; எல்லோருக்குமாக நாம்” என்ற உயர்ந்த வாழ்க்கை முறை உருவாகும்-உறவுகலந்த பந்தபாசம் பல்வேறு குடும்பங்களுக்குள் ஊடுருவி வளரும்.

மக்களாட்சி முறை இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கொள்கை உலகம் முழுவதிலும் மனிதன் இந்தச் சுதந்திரத்திற்காகப் போராடிப் போராடி இந்த உரிமையைப் பெற்றிருக்கிறான். அப்படிப் பெற்றது ஆளுவதற்கோ, ஆதிக்கத்திற்கோ அல்ல. சுதந்திர நாட்டில் ஆளும் இனம், ஆளப்படும் இனம் என்ற வேறுபாட்டிற்கு இடமே இல்லை. ஆட்சி முறை என்பது நல்வாழ்விற்கு உரிய நடைமுறை அமைப்பேயன்றி ஆதிக்கத்திற்காக அன்று. சுதந்திர நாட்டில் நாட்டின் குடியரசுத் தலைவரிலிருந்து கிராமத்தின் ஆட்சித் தலைவர் வரை அனைவரும் சமுதாயத் தொண்டர்கள்- காவலர்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆதலால் ஊராட்சி மன்றங்களில் பொறுப்பேற்றிருக்கின்ற நாம் நல்லெண்ணத் திற்கும், நம்பிக்கைக்கும் உரிய குடியாட்சி முறையை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.

  1. பொங்கல் பரிசு