குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13/நாட்டுப்பற்று

விக்கிமூலம் இலிருந்து

4. [1]நாட்டுப்பற்று

மானிட வாழ்க்கை நிலத்தை மையமாகக்கொண்டு நிகழ்கிறது. ஆதலால் நாடின்றி வாழ்க்கை இல்லை. ஆதலால் பழங்காலத்திலிருந்தே நாட்டுப்பற்று எல்லாத் துறையினரிடத்தும் தோன்றி வளர்ந்து வந்திருக்கிறது, பெரிய புராணத்தில் வரும் திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் தொண்டை நாட்டைச் சேர்ந்தவர். சேக்கிழாரும் தொண்டை நாட்டைச் சேர்ந்தவர். ஆதலால் திருக்குறிப்புத் தொண்டர் வரலாற்றில் தொண்டைநாட்டின் சிறப்பைப் பற்றிப் பல பாடல்கள் இயற்றியுள்ளார். தமிழ்க் காப்பிய மரபில் "நாட்டுப்படலம்" செய்த பிறகுதான் காப்பியம் தொடங்கும். ஆதலால் பழைய இலக்கியங்கள் அனைத்திலும் நாடு சிறப்பித்துப் பேசப்படுகிறது.

நாடு, வாழ்க்கைக்குத் துணையாய், களமாய் அமைந்து வரலாற்றை நடத்தி வைக்கிறது. நாடு வாழும் மக்களால் பெருமையடைகிறது. பொருள் தன்மை அடைகிறது. “நாடு நாடாக இருந்தால் என்ன? காடாக இருந்தால் என்ன? மேடாக இருந்தால் என்ன? பள்ளமாக இருந்தால் என்ன? நல்ல ஆடவர்கள் வாழ்ந்தால் போதும்! அவர்கள் நாட்டைக் குறை சொல்லமாட்டார்கள்; நாட்டுக்கு வளம் சேர்ப்பார்கள் வரலாற்றில் இடம் பெறுவார்கள்.


                    "நாடா கொன்றோ
                                    காடா கொன்றோ
                    அவலா கொன்றோ
                                    மிசையா கொன்றோ
                    எவ்வழி நல்லவர் ஆடவர்
                                    அவ்வழி நல்லை வாழிய நிலனே!
(புறம்-187)

என்பது புறநானூறு.

நாட்டுப் பற்று ஒவ்வொருவருக்கும் தேவை. நாட்டுப் பற்று என்பதன் பொருள் "வாழ்க பாரதம்" "வாழ்க செந்தமிழ் நாடு” என்று வாயினால் முழக்கம் செய்வதன்று. மழை பெய்யாது, இடி இடித்துப் பயன் என்ன? தன் வாழ்க்கையில் தொடர்புடையதாய் அமைவது வாழ்வளிக்கும் நாடு, எதையும்விட நாடு உயர்ந்தது; எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்ற அசைக்க முடியாத நம்பிக்கைவேண்டும். நாள்தோறும் இனிய நல்லுழைப்பால் நாட்டை வளர்ப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். நாடு உணவளித்து வாழ்வளிக்கிறது. ஒருவன் தான் உண்ணும் உணவுக்கும் அதற்கு மேலும் நாட்டை வளப்படுத்தவேண்டும். நாட்டின் அனைத்துத் துறை வளங்களையும் பாதுகாக்கவேண்டும்.

நாடு என்றால் வரலாறு உண்டு. ஒரு நாட்டின் மக்கள் அந்த நாட்டின் வரலாற்றுக்குப் பாத்திரங்களாகவும் விளங்குகிறார்கள்; வரலாற்றைப் பாதுகாப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த இருவகைப் பணிகளையும் செய்வது குடிமக்களின் நீங்காக் கடமையாகும். நாட்டின் வளங்களைப் பாதுகாப்பது சமுதாய வாழ்க்கைக்கு உறுதியளிக்கக் கூடியது. நாட்டின் பல்வகை வளங்களும் தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டே இருக்கும்படி பார்த்துக்கொள்ளும் நாட்டில் வறுமை வராது; பஞ்சம் வராது; தூய்மையான நாட்டுப் பற்றுடைய சமுதாயம் நாட்டுப்பற்றை எந்தப் பற்றையும்விட உயர்ந்ததாகக் கருதவேண்டும். நாட்டுப்பற்று மற்ற எல்லாப் பற்றுகளுக்கும் பொருள் தந்து வளர்க்கும்; வாழ்விற்கும் சிறந்த நாட்டுப்பற்று இறையன்புக்கு ஈடாகாதது மட்டுமல்ல; அதனிலும் உயர்ந்தது. ஏன்? நாட்டில் பாதுகாப்புக்கு வளர்ச்சிக்குச் செய்வனவெல்லாம் வாழும் மக்களுக்கே திரும்பி வருகின்றன. நாட்டு மக்களே பயன் பெறுகின்றனர். அதனால் இந்த நூற்றாண்டில் நமது நாட்டில் செழித்து வளர வேண்டியது நாட்டுப் பற்றேயாம்.

நாடு-பொதுச் சொல்; பொருள் பொதித்தசொல்; நாடு என்பதற்குத் திருக்குறள் இலக்கணம் வகுத்துக் காட்டுகிறது. நாட்டுப்பணி என்றால் பொதுப்பணிதான்! கடவுள் தொண்டுதான்! நாட்டின் வளத்தை-வனப்பை-இயற்கைச் செல்வங்களை வற்றாது வளம் பெருக்கி வாழ்வளித்து வாழ்வதே நாட்டுப்பற்று.

நமது நாடு அந்நியருக்கு அடிமைப்பட்டது ஏன்? நாட்டுப் பற்றில்லாமல் நாட்டை முறையாகப் பேணாததாலேயே நாடு அடிமைப்பட்டது. அடிமைத் துன்பம் தாங்காமல் அல்லற்பட்ட இந்திய மக்களில் சிந்திக்கும் இயல்புடையவர்கள் நாட்டுப்பற்றுக் கொண்டார்கள்! வீட்டை மறந்தார்கள்; தன்னலத்தைத் துறந்தார்கள்; நாட்டின் விடுதலைக்குப் போராடினார்கள்! சிறைப்பட்டார்கள்; சித்திரவதைக்கு ஆளானார்கள்! நாடு விடுதலை பெற்றது! நாம் பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்க மீண்டும் நாட்டுப்பற்றியக்கம் வளர்தல் வேண்டும் ! நாட்டுப் பற்றினைத் தளரவிடக்கூடாது. நாட்டுப்பற்றினை வேள்வியாகக் கருதி இயற்றுவோமாக!

“மக்கள் சிந்தனை” 15-12-80
  1. கடவுளைப் போற்று! மனிதனை நினை