குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13/ஒருங்கிணைந்த கிராமப்புற வளர்ச்சி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
17. [1]ஒருங்கிணைந்த கிராமப்புற வளர்ச்சி

துரை காமராசர் பல்கலைக் கழகம் “எதிர்வரும் இருபத்தோராம் நூற்றாண்டு” என்ற கருத்தரங்கு நடத்துவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ள பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களுக்கும் துறை இயக்குநர் ஜி.கே. பிள்ளை அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நமது நன்றி! பாராட்டு! வாழ்த்துக்கள்! கருத்தரங்கில் இளைய தலைமுறையினைச் சார்ந்த பலர் பங்கு பெற்றிருப்பது மகிழ்வைத் தருகிறது. அதுவும் சமநிலையில் மகளிர் பங்கேற்றிருப்பது அதைவிடச் சிறப்பாகும்.

இந்தியா கிராமங்கள் நிறைந்த நாடு. தமிழகமும் கிராமங்கள் நிறைந்த மாநிலமாகும். இந்தியாவில் செல்வ வளத்தின் ஆதாரங்கள் கிராமப்புறங்களிலேயே அமைந்துள்ளன. இந்திய கிராமப்புறங்கள், நிறைந்த செல்வவளமும் மிக அதிகமான மனித சக்தியும் உள்ள பகுதிகளாகும். ஆனால் இந்திய நகர வாழ்க்கைக்கும் கிராம வாழ்க்கைக்கும் உள்ள இடைவெளி மிக அதிகமாகும். இந்திய கிராமங்கள் வறுமையில் உழலுகின்றன. இந்திய கிராமமக்கள் ஏழைகளாக இருக்கின்றனர். ஆறு ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றிய பிறகும் கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்-வளர்ச்சி மனநிறைவுதரத் தக்கதாக இல்லை. இந்திய கிராமங்கள் அழிந்தால் இந்தியா அழியும்; இந்திய கிராமங்கள் வளர்ந்தால் இந்தியா வளரும், ஆதலால் இந்திய கிராமங்களின் வளர்ச்சியைத் திட்டமிட்டுச் செயற் படுத்தினால் சிறந்த இருபத்தோராம் நூற்றாண்டைக் காணமுடியும்.

கல்வி

இந்தியாவில் நகர்ப்புறத்தில் வாழ்கின்றவர்கள் பெறும் கல்விக்கும் கிராமப்புறங்களில் வாழ்கின்றவர்கள் பெறும் கல்விக்கும் நிறைந்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. நகர்ப் புறத்தார் பெறும் தரமான கல்வியைக் கிராமப்புறத்தார் பெறுவதில்லை. கிராமப்புறத்தில் உள்ள பள்ளிகள், குழந்தைகளை அடைத்து வைக்கும் இடங்களாக உள்ளன. உயிர்ப்புள்ள குழந்தைகள் உள்ள இடங்களாக இல்லை. பள்ளிகளுக்குள்ள வசதிகள் போதா. ஆசிரியர்-மாணவர் விழுக்காடு கட்டுக்கடங்காமல் உள்ளது. எட்டு வயதுவரை ஒரு குழந்தைக்குச் சீரான கல்வி அளிக்கப் பெற்றால் அக்குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பது உளவியல் விதியாகும். கிராமங்களின் 1 முதல் 3 வரை படிக்கும் குழந்தைகள் உள்ள பள்ளிகளில், ஆசிரியர்-மாணவர் விழுக்காடு 1:60, 1:70 இந்தக் கணக்கில் உள்ளது. இதைப் பள்ளிக்கூடம் என்பதா? குழந்தைகளை அடைக்கும் பட்டி என்பதா? கிராமப்புறப் பள்ளிகளில் ஆசிரியர்மாணவர் விழுக்காடு 1:25 என்ற முறையில் அமைத்தல் வேண்டும். கிராமப்புறப் பள்ளிகளில் தரமான அர்ப்பணிப்பு நோக்குடன் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பெறவேண்டும். இப்பள்ளிகளில் நூலகம், இயந்திரத் தொழிற் கருவிகள், குழந்தைகளின் அறிவியல் தொழில் நுட்பத் திறனை வளர்க்கும் கருவிகள் இடம்பெறவேண்டும். கிராமப்புறப் பள்ளிகளின் வேலை நேரம், பாடவேளை அட்டவணைகள் கிராமத்தின் சூழ்நிலைக்கும் கிராமத்துக் குடும்பங்களின் சூழ்நிலைக்கும் ஏற்றவுாறு அமைதல் வேண்டும். கிராமப்பள்ளி 1 மணி நேரம் குறைவாக நடைபெற்றாலும் பரவாயில்லை. ஆனால் தரமாக நடத்தப்பெற வேண்டும்.

தொடக்கப் பள்ளியில் பயிலும் கிராமப்புறக் குழந்தைகள் மதிய உணவுக்கு வீட்டுக்குச் செல்ல இயலாது. ஆதலால், அனைத்து மாணவர்களுக்கும் வேற்றுமையின்றி, தரமான மதிய உணவு தரப்படவேண்டும். ஏழை என்ற பெயரில் ஒரு சிலருக்கு மதிய உணவு வழங்குவது ஏழ்மை உணர்ச்சியையும் தாழ்வுணர்ச்சியையும் அதிகப்படுத்தும். பள்ளியில் உள்ள அனைவருக்கும் கட்டாயம் மதிய உணவு வழங்கப்பெறவேண்டும். பொதுவாக, நாம் அரிசியை விரும்பிச் சாப்பிடுகிறோம் என்றாலும் அதுவே போதுமான வளர்ச்சியைத் தராது. ஆதலால் வெண்ணெய், ரொட்டி, பால், முட்டை ஆகியன வழங்குதல் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்குத் துணை செய்யும்.

கிராமப்புறங்களில் அறிவியல் ஆய்வுமையங்கள் தொடங்கி, உலகத்தின் புதிய வளர்ச்சி வேகத்தைக் கிராமப் புறத்தின் சூழ்நிலையைப் பாதிக்காத வண்ணம் கிராமத்தார் அறியத் துணை செய்தல் வேண்டும். இந்த முயற்சி கிராமத்து மக்களின் வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை உண்டு பண்ணும்; அறிவை விரிவடையச் செய்யும், பாவேந்தர் பாரதிதாசன், "அறிவை அகண்டமாக்கு" என்றார். இதற்குரிய வாய்ப்புகள் கிராமத்தில் எளிதாக அமைய வேண்டும். படித்தவர்கள், படித்த அறிவியல் மேதைகள் கிராமப்புறங்களுக்குச் சென்று அறிவியல் தொழில் நுட்பங்களை எடுத்துக் கூற வேண்டும். இருபத்தோராம் நூற்றாண்டுக் கிராமத்து மனிதன் பண்பாட்டில்-கலாச்சாரத்தில் பழைய மனிதனாகவும் வளர்ந்துவரும் அறிவியல் மாற்றத்தைத் தழுவிக் கொண்டமையால் புதிய மனிதனாகவும் விளங்க வேண்டும். இதனைக் குன்றக்குடி சுதேசி விஞ்ஞான இயக்கம், காரைக்குடி, மைய மின் வேதியியல் ஆய்வக விஞ்ஞானிகள் துணையுடன் செய்து வருகிறது. இந்த முயற்சி பரவலாக்கப்படவேண்டும்.

வேளாண்மை

கிராமப்புறத்தின் செல்வ ஆதாரம் வேளாண்மையை நம்பியிருக்கிறது. நாடு விடுதலை பெற்ற பிறகு வேளாண்மை வளர்ந்திருக்கிறது. உணவுப் பற்றாக்குறையிலிருந்து இந்தியாவை மீட்ட பெருமை கிராமப்புறத்து விவசாயிகளுக்கு உண்டு. இன்று நமது நாடு தன்னிறைவு பெற்ற நாடாக விளங்குகிறது. ஒரு நாட்டை உணவுத் துறையில் தன்னிறைவாக்கிய கிராமப்புறத்து விவசாயிகளின் வாழ்க்கை தன்னிறைவுடையதாக இல்லை. ஏன்? நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் பூரண வெற்றி பெறவில்லை. நிலப் பிரபுத்துவத்தின் இரும்புப் பிடி ஒருபுறமும் பிறிதொருபுறம் துண்டுபட்ட நிலங்களும் உள்ளன. விவசாயிகளிடம் வாழ்க்கைக்குக் கட்டுபடியாகாத நில அளவே கைவசம் உள்ளது. இத்தகையோரின் வேளாண்மை தன்னிறைவுடையதாக ஆகாது. நிலவுரிமைக்குப் பங்கமில்லாத வகையில் கூட்டுறவுச் சாகுபடி முறையைக் கிராமங்களில் அறிமுகப்படுத்த வேண்டும். இதனால் வேளாண்மையின் தரமும், உயரும்; உற்பத்தியும் பெருகும். அது மட்டுமன்று. பல கிராமங்களில் தேவைக்கு அதிகமானவர்கள் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களின் சக்தியும் வேளாண்மைத் தொழில் நேரம் போக, மீதமுள்ள காலச் சக்தியும் வீணாகின்றன; வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் மக்களில் குறைந்தது 40 விழுக்காட்டு மக்களை இருபதாம் நூற்றாண்டுக்குள் வேறு தொழிலுக்கு மாற்ற வேண்டும். கூட்டுறவுப் பண்ணை முறையில் வேளாண்மையைச் செய்யவேண்டும்.

கால்நடை

வேளாண்மைத் தொழிலுக்கு இணையாக - துணையாக அமைவது கால்நடை வளர்ப்புத்துறையாகும். இந்தத் தொழில் பயனீட்டும் தொழிலாக இன்னும் கிராமங்களில் வளரவில்லை. கிராமப்புறங்களில் பால் மாடுகளின் எண்ணிக்கை கூடுகிறதே தவிர பாலின் உற்பத்தி அளவு கூடவில்லை. குறைந்த அளவாக 10 முதல் 15 லிட்டர் பால் கறக்கின்ற மாடு இருந்தால்தான் பால்மாடு வளர்த்தல் பயனுள்ளதாகும். கிராமப்புறங்களில் நிலத்தின் அளவுக்கேற்ப கால்நடைகள் வளர்க்கப்படவேண்டும். ஒரு ஏக்கருக்கு சராசரி 10 மாடுகளும் 50 ஆடுகளும் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் நிலம் உரப்படுத்தப்படும். விவசாயிக்கும் போதிய வேலை கிடைக்கும். போதிய வருவாய் கிடைக்கும். அத்துடன் சாண எரிவாயு அடுப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் மரங்களை வெட்டாமல் தடுக்கலாம். 'வீட்டுக்கு ஒரு மரம்' என்று சொல்வது இந்தக் காலத்தில் போதாது. ஒருவருக்கு ஒரு மரம் வீதம் வளர்த்தல் வேண்டும். இந்தத் துறையில் குன்றக்குடி திட்டமிட்டுப் பணி செய்கிறது. எங்கள் குன்றக்குடிப் பள்ளி வளாகத்தில் ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் ஒரு மரத்தை நட்டுப் பாதுகாக்கிறார்கள். 21-ம் நூற்றாண்டை நோக்கி கிராமங்கள் செல்ல வேண்டுமானால் தரமான கால்நடைகளை வளர்ப்பதோடு மரங்கள் நடுவதையும் வளர்ப்பதையும் கடமையாகக் கொள்ள வேண்டும்.

தொழில் வளர்ச்சி

கிராமப்புறத்தில் பகுதிநேர வேலை உடையவர்களுக்கும், வளரும் தலைமுறையினருக்கும் தொழில் நிறுவனங்களை அமைத்து வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். கிராமப்புறத்தில் உண்டாகிற தொழில் கூடுமானவரையில் கிராமத்தில் கிடைக்கும் பொருள்களை அடிப்படையாகக் கொண்டு அமைவது நல்லது. புதிய அறிவியல் தொழில் நுட்பம் கிராமத்திற்கு வந்தாகவேண்டும். பஞ்சாபில் லூதியானாவில் வீடுதோறும் இதை உணர்ந்திருக்கின்றனர். அதை முன் மாதிரியாகக் கொண்டு 21ஆம் நூற்றாண்டில் கிராமப்புறத்தைப் பாதிக்காத தொழில் வளர்ச்சியைச் செய்து, காலத்தின் பயன் போற்றுதல், திறமையைப் பயன்படுத்துதல், செல்வத்தைப் பெருக்குதல் ஆகியவற்றை ஒருங்கிணைந்த நிலையில் செய்யவேண்டும்.

கிராமப்புறத்தில் மேற்போக்கான சில நாகரிகங்கள் இருந்தாலும் அதனுடைய அடிப்பரப்பில் இடைக்காலத்தில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகள், செல்வ ஏற்றத் தாழ்வுகள், சாதி அமைப்புகள், பொருந்தாப் பழக்கங்கள் இல்லை என்று சொல்லிவிட முடியாது. இவற்றை மாற்றியமைக்க கிராமத்தின் அனைத்துச் சமூகப் பொருளாதார நிகழ்வுகளும் கூட்டுறவு மூலம் நடைபெற வேண்டும். கூட்டுறவு ஒரு சிறந்த வாழ்க்கைமுறை. சிறந்த கூட்டுறவில் பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ணம், ஜனநாயகப் பாங்கு, கூடித் தொழில் செய்யும் தன்மை, பயனைப் பகிர்ந்து கொள்ளும் பாங்கு ஆகியன வளரும். இது இந்தியாவுக்குச் சிறந்த வாழ்க்கை முறையாகும். ஆதலால் இந்திய கிராமங்களை 21ஆம் நூற்றாண்டில் கூட்டுறவு நோக்கி அழைத்துச் செல்லவேண்டும்.

ஆனால் இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் நலம் சிறந்ததாக இல்லை. கூட்டுறவு இயக்கத்திலும் வல்லாண்மை அவ்வப்போது தலையெடுக்கிறது. அரசியல் ஆதிக்கக் குறுக்கீடுகள் உள்ளன. இவையெல்லாம் இல்லாமல் தன்னாட்சி அமைப்புடைய-தன்னைத் தானே சீரமைத்துக் கொள்கிற கூட்டுறவை அமைத்து ஒரு கிராமக் கூட்டுறவுக் குடியரசைக் காணவேண்டும். இது அண்ணல் காந்தியடிகள் கண்ட கனவாகும்.

மருத்துவம்

கிராமத்தில் அடிப்படைத் தேவைகளை நாம் 21ஆம் நூற்றாண்டுக்குள் செய்து முடித்தாக வேண்டும். கிராமங்கள்தோறும் இயற்கை மருத்துவ முறையினைக் கொண்ட மருத்துவ நிலையங்கள் கண்டாகவேண்டும். கடைகளில் விற்கும் கண்ட கண்ட போதை மருந்துகளை உட்கொண்டு மக்கள் உடலைக் கெடுத்துக் கொள்கின்றனர். கிராமங்களில் இயற்கை மருத்துவமனைகள் அமையவேண்டும். இது இந்திய நாட்டினுடைய பாரம்பரிய முறையாகும். இயற்கை மருத்துவம் நோயைக் கண்டறிந்து நீக்குவதோடு நோய்க்கான காரணத்தைக் கண்டு நீக்கும் ஆயுர்வேத-சித்த மருத்துவ மனைகள் உருவாக வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும் இத்தகைய மருத்துவமனை ஒன்று இருக்கவேண்டும். நல்ல குடிநீர் கிடைக்கச் செய்யவேண்டும்.

ஆன்றோர் காலத்தைப்போல கிராமம் ஒரு குடும்பமாக விளங்கவேண்டும். “எல்லாரும் ஒருவருக்காகவும் ஒருவர் எல்லாருக்காகவும்” என்கிற சித்தாந்தம் கிராமத்தில் நிலவ வேண்டும். கிராமத்தில் கோயில்களை மையமாகக் கொண்ட ஒரு சமுதாய அமைப்பு, வளர்ச்சிக்குரிய வழிகளைக் காணும் சமுதாய அமைப்பு, தங்களைத் தாங்களே விமர்சனம் செய்துகொள்ளும் சமுதாய அமைப்பு, சுய ஆட்சித் தன்மையுடைய கிராம சமுதாய அமைப்பு உருவாக வேண்டும். கிராமங்களின் செல்வத்தை வெளியே கொண்டு செல்லும் வலிமை யாருக்கும் இருக்கக்கூடாது. கிராமத்துச் செல்வம் கிராமத்திற்கே கிடைக்கவேண்டும். இந்திய கிராமம் செழித்து வளர்ந்த நிலையில் தன்னுடைய கணிசமான பங்கை நாட்டுக்களிக்கும்; அளிக்கவேண்டும். கிராமத்துச் செல்வம் கிராமத்திற்கே கிடைக்கவேண்டும் என்பது கிராமத்தை நாட்டிலிருந்து தனியே பிரிப்பதன்று. நாம் குறிப்பிடுவது சுரண்டும் நிலை இருக்கக்கூடாது என்பதேயாகும். 21ஆம் நூற்றாண்டில் இந்திய கிராமங்கள் தன்னிறைவுடையதாக - கூட்டுக் குடும்பமாக, பழமையும் புதுமையும் இணைந்து நிலவும் பகுதியாக விளங்கவேண்டும்.

-மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 25-3-87-ல் நடத்திய
கருத்தரங்கில், தவத்திரு அடிகளார் அளித்த குறிப்புகள்.
  1. கடவுளைப் போற்று! மனிதனை நினை!