குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13/கிராமப்புற வளர்ச்சிக்கான தொழில் நுட்பம்

விக்கிமூலம் இலிருந்து

18. [1]கிராமப்புற வளர்ச்சிக்கான
தொழில் நுட்பம்

கிராமப்புற வளர்ச்சி பற்றிய சிந்தனை இன்று வேகமாக வளர்ந்து வரும் சிந்தனை; வரவேற்கத் தக்க சிந்தனை! ஆயினும், கிராமப்புற மக்கள் தங்களுடைய சுற்றுப் புறச் சூழ்நிலையை அறிந்து கொள்ளவும், அச்சூழ்நிலையைத் தங்கள் வாழ்க்கையோடு இணைத்துப் பயன்பெறவும் கற்றுக் கொள்ளவேண்டும்.

மாந்தர் தம் வாழ்க்கையின் அடித்தளம் நிலமே. நிலத்தின் வளம் காப்பாற்றப்படுதல் வேண்டும். நிலத்திற்கு அடுத்து மாந்தர்தம் வாழ்க்கை சார்ந்திருப்பது தாவரங்களையும் மரங்களையுமேயாம். மரங்களின்றி மண்ணுலக வாழ்வு அமையாது. இதுவே உண்மை. இந்த நிலத்தையும் தாவரங்களையும் மரங்களையும் தண்ணீரையும் பயன்படுத்தி விவசாயப் புரட்சி செய்யலாம். விவசாயத்தில் விளையும் பொருள்களைக் கொண்டு நுகர் பொருள்கள் பல செய்யலாம். கிராமப்புற வளர்ச்சி, விவசாய அடிப்படையிலான தொழில்களாலேயே ஏற்படமுடியும். அங்ஙனம் ஏற்பட்டால்தான் அந்தப் பொருளாதார வளர்ச்சி நிலையானதாகும். கிராமப்புற வளர்ச்சி என்பது மூன்று நிலைகளுடையது. இதில் இரண்டு அடிப்படை. ஒன்று விவசாயம், இரண்டு கால்நடை வளர்ப்பு, மூன்றாவது இவ்விரண்டின் அடிப்படையில் உருவாகும் தொழில்.

வடகொரியா, மிகச் சில ஆண்டுகளில் வளர்ந்து விட்டது! ஏன்? வடகொரியாவில் உழைக்காத மனிதன் இல்லை! விளையாத நிலமும் இல்லை! நமது நாட்டில் தரிசு நிலம் ஏராளம்! மரங்களை வளர்ப்பதில் அக்கறை காட்டுவதில்லை. பணத்தாசையும் சுவை நுகர் ஆசையும் பேயாட்டம் போடுகின்றன. இயற்கையை வளர்த்து வளப்படுத்தி வாழத் தெரியாமல் மலைவளங்களையும் மரங்களையும் அழிக்கின்றனர். "காடு கெட ஆடு" - என்பர். வெள்ளாடு, அண்ணாந்து வளரும் மரங்களையே கடிக்கும். கண்டபடி ஆடுமாடுகளை மேய விடுவது பசுமையைக் கெடுக்கும் ஆடும் மாடும் வீட்டுப் பிராணிகள்! வீட்டிலேயே சுட்டித் தீவனம் போட்டுத்தான் அவற்றை வளர்க்க வேண்டும்! நிலத்தின் வளமும் மரங்களும் காப்பாற்றப் பட்டாலே கிராமங்கள் வளரும்; அவ்வழி தொழில் பெருகும்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டத்தில் மட்டும் புன்செய் நிலம் தரிசு ஒரு இலட்சத்து 32 ஆயிரம் ஹெக்டேர் இருக்கிறது. வறட்சியால் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. நிலத்தடிநீர் உண்டு. மழையும் கூடத் தேவையான அளவுக்குப் பெய்கிறது. ஆனால், வறண்ட நிலங்கள் குடித்து விடுகின்றன. நீர்ப்புரளி நிலங்களில் தாவரங்கள், மரங்கள் பயிரிட்டால் கண்மாய்களுக்குத் தண்ணீர் வரத்துக் குறையும் என்ற தவறான நம்பிக்கை இருக்கிறது. தாவரங்களும் மரங்களும் மழைத்தண்ணீரில் பத்து விழுக்காடு கூடக் குடிக்கா. மீதித் தண்ணீரை வேர்கள் வழி, நிலத்தடி நீராக மாற்றி, ஏரிகளுக்கும் கண்மாய்களுக்கும் கிணறுகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். காற்றில் ஈரப்பசையைக் காப்பதன் மூலம் வறட்சியைத் துரத்தும்; வான்மழையை வரவழைக்கும். ஆதலால், எங்கும் பசுமை என்பது கிராமப்புற வளர்ச்சியின் முதல் நோக்கம்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டத்தில் ஏராளமான நிலம் புன்செய்த் தரிசாகக் கிடக்கிறது. இவைகளில் ஒரு பகுதி மண் அரிப்புக்கு இரையாகிக் கெட்டுப் போய்விட்டது. இந்த நிலங்களில் ஆமணக்கு சாகுபடி செய்யலாம். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் திண்டிவனம் எண்ணெய் வித்து ஆய்வு மையமும் மூன்றுமாத ஆமணக்கு விதையைக் கண்டுபிடித்துத் தந்துள்ளன. இந்த விதையை ஜூன் அல்லது ஜூலையில் விதைத்துவிட்டால், பெய்யும் மழையிலேயே வளர்ந்து மகசூல் தரும். ஆமணக்கு தனிப்பயிர் சாகுபடி செய்ய ஏக்கர் ஒன்றுக்குச் செலவு ரூ 1500/- ஆகும். வருமானம் ரூ.4000/- கிடைக்கும். செலவு மிகக் குறைவு. நோய், பூச்சித் தாக்குதல்களும் அவ்வளவாகப் பாதிப்பதில்லை. திண்டிவனம் TM.V ரகம் 1, 2, 3 ஆமணக்கில் எண்ணெய்ச் சத்து 50 முதல் 54 விழுக்காடு இருக்கிறது.

ஆமணக்கு எண்ணெய் இன்று பல தொழில் நுட்பங்களுக்குரியதாக விளங்குகிறது. நமது நாட்டில் வழிவழியாக ஆமணக்கு எண்ணெய் வீட்டு உபயோகத்தில் சிறந்த மருத்துவப் பொருளாகப் பயன்பட்டு வந்தது. இன்று ஆமணக்கு எண்ணெய் பயன்படும் விதத்தை ஹைதராபாத்தில் உள்ள இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் (I.I.CT) ஆராய்ந்து பல முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஆமணக்கு எண்ணெய்யிலிருந்து 32 உப பொருள்கள் தயார் செய்யலாம். இந்த உப பொருள்களுக்கு உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல சந்தை வாய்ப்பு இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஏராளமான பனைமரங்கள் உள்ளன. ஆனால், அவற்றை முறையாகப் பயன்படுத்திப் பொருள் செய்யும் முனைப்பு இல்லை. நெல்லை மாவட்டத்திலும், இராமநாதபுரம் மாவட்டத்திலும் சாயல்குடி, கடலாடிப் பகுதிகளிலும் பனைமரங்களை முறையாகப் பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாடு முழுதும் உள்ள பனைமரங்கள் முறையாகப் பயன்படுத்தப் பெற்றால் நிறைய செல்வம் பெருகும். பனை நுங்கைப் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். பனைபடு பொருள்களில் நல்ல தரமான சாக்லெட் செய்ய இயலும். இந்தத் தொழில்நுட்பம் இன்னும் பயன்படுத்தப்படவே இல்லை. தமிழ்நாட்டில் ஏராளமாக மலைபோல் குவிந்து கிடக்கும் தென்னை நார்கள் கழிவுப் பொருள்களிலிருந்து உரம் தயார் செய்யலாம். வீட்டுச் சுவர்களுக்கு அலங்கார அடைப்புப் பொருள்கள் தயார் செய்யலாம்.

தமிழ்நாட்டில் முந்திரி அடிப்படையிலான தொழில்களுக்கு நல்லவாய்ப்பு இருக்கிறது. முந்திரிப் பழங்களிலிருந்து சாறு - ஜாம் முதலியன தயார் செய்யலாம். இது நல்ல உணவு. முந்திரிக் கொட்டைத் தோலிலிருந்து எண்ணெய் எடுத்தல் நல்ல இலாபகரமான தொழில், முந்திரி எண்ணெய்யிலிருந்து மரங்கள், இரும்புகளைப் பாதுகாக்கும் நல்ல வண்ணப் பூச்சு எண்ணெய் தயார் செய்யலாம். இந்த வண்ணப்பூச்சு எண்ணெய் இரும்புகள் துருப்பிடித்து அழியாமலும் மரங்கள் கெட்டுப்போகாமலும் பாதுகாக்கும். நல்ல சந்தை வாய்ப்புக்கள் உள்ளன.

இந்தியர்களின் பழக்கம் உணவு உண்பதைவிட இடைத் தீனி அதிகம் தின்பதுதான்! இது இன்றையச் சந்தையில் எளிதில், அடக்கவிலையில் கிடைப்பதில்லை. குறிப்பாகப் பள்ளிக் குழந்தைகளுக்கு எளிதில், குறைந்த விலையில் நிறைந்த ஊட்டச் சத்துணவுத் தன்மையுடைய மிக்சர் தயார் செய்து விற்பது ஒரு நல்ல தொழில். அது மட்டுமன்று. நாட்டுத் தொண்டும் ஆகும்.

நறுமணம் நுகர்தல் இதயத்திற்கு வலிமை சேர்க்கும்; மன அமைதியைத் தரும். இன்று, நறுமணப் பொருள் நுகர்வு பெற, சராசரி மனிதர்களால் இயல்வதில்லை. ஏன்? எளிமையாகக் கிடைப்பதில்லை. நாம் அண்மைக் காலமாகப் பணமதிப்பீட்டுச் சமுதாய அமைப்பில் இருப்பதன் காரணமாக இயற்கையோடிசைந்து வாழ்தலை மறந்து விட்டோம். மேடைகள் தோறும் மலர்மாலைகளுக்குப் பதில் துண்டுகள் போர்த்தும் பழக்கம் வந்ததால் மலர்ச் செடிகளை வளர்க்கும் பழக்கம் அருகிப் போயிற்று. மலர்களிலிருந்து ‘எஸென்ஸ்’ எடுத்து நறுமணப்பொருள்கள் தயார் செய்வது நல்ல இலாபகரமான தொழில்.

களர் நிலங்களில், குறிப்பாக உப்பு நிலங்களில் உப்புத் தண்ணீரையே குடித்து வளரும் தாவரங்களை வளர்க்கும் தொழில் நுட்பத்தையும், உப்பு அடிப்படையிலான தொழில் நுட்பத்தையும் பவ நகரில் உள்ள மத்திய உப்பு, கடல் தாவரங்கள் ஆய்வு நிறுவனம் (CSMCRI) வழங்குகின்றது. ஜோஜோபா என்றொரு தாவரம். இத்தாவரம் எண்ணெய் வித்து வகையைச் சார்ந்தது. ஜோஜாபாக்கிலிருந்து எடுக்கப் பெறும் எண்ணெய் தோல் அடிப்படையிலான தொழில்களுக்குப் பயன்படுகிறது. ஜோஜோபாக் செடி 150 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும். நீண்ட கடற்கரையுடைய நமது நாட்டில் கடற்பாசி வளர்த்து அகர்அகர் செய்யலாம். இந்தோனேசியா முதலிய நாடுகளில் கடற்பாசியை உணவுப் பொருளாகப் பதப்படுத்திப் பயன்படுத்துகிறார்கள். நமது நாட்டில் கடற்பாசி வளர்க்க நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

நமது நாட்டின் கிராமப்புறங்கள் செல்வக் களஞ்சியங்களாகும். கிராமப்புறங்களின் செல்வ ஆதாரங்களை முறையாகப் பயன்படுத்தினால் குறைந்த மூலதனத்தில் நிறைந்த பயனடையலாம். கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி நகரும் வாய்ப்பைக் குறைக்கலாம். கிராமப்புறச் செல்வ ஆதாரங்களை முறையாகப் பயன்படுத்தினாலே போதும். கிராமங்களும் வளரும்; நல்ல தொழில் நுட்பமும் வளரும்.

வளர்ந்து வரும் கிராமங்களில் இயந்திரவியல் தொழில்களுக்கும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. உழு கருவிகள், நீர் இறைவை எந்திரங்கள் பழுது பார்க்க வேண்டும். மேலும் மேலும் விவசாயத்திற்குப் பயன்படும் கருவிகளையும் செய்து முடிக்கவேண்டும். மேலும், இன்று மின்சாரம் இல்லாத கிராமங்களே இல்லை என்று கூறலாம். மின்சாரம் சார்பான சாதனங்களைப் பழுதுபார்த்தல் முதலிய பணிகளைச் செய்யலாம். மின்னியல் சார்ந்த பல தொழில்களைத் தோற்றுவித்து வளர்க்கலாம்.

கிராமப்புற வளர்ச்சி பற்றி நிறையப் பேசியாயிற்று! இனி, செய்யவேண்டும். நமது கிராமங்களில், என்று உழவும் தொழிலும் சிறந்து விளங்குமோ அன்றுதான் கிராமங்கள் மேம்பாடு அடையும். கிராமப்புறங்களில் எளிய மூலதனத்தில் தொடங்கக்கூடிய பழங்கள் பக்குவப்படுத்துதல், உணவுப் பொருள்கள் பக்குவப் படுத்துதல் முதலிய தொழில்களைத் தொடங்க வேண்டும். சுகாதார, மருத்துவப் பொருள்கள் உற்பத்தித் தொழிலையும் தொடங்கலாம். இங்ஙனம் கிராமப்புற வளர்ச்சிக்கு நமது நாட்டில் ஏராளமான தொழில் நுட்பங்கள் இருக்கின்றன. தேவை, ஆர்வந்தான்! கிராமப் புறங்கள் பண்டகசாலைகளாகவும், நகரங்கள் சந்தைகளாகவும் வளர்ந்தால்தான் கிராமங்களை வளர்க்க இயலும்.

கிராமப்புறங்களில் உழைக்காத மனிதன் இல்லை, விளையாத நிலம் இல்லை, மாடுகள் இல்லாத வீடுகள் இல்லை என்ற நிலைமை உருவாக வேண்டும்.

  1. மதுரை வானொலி 21–6–93