குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13/குமரப்பாவின் கருத்து

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

19. [1]டாக்டர் ஜே. சி. குமரப்பாவின்
கருத்துக்களை இன்றைய சூழலில்
நடைமுறைப்படுத்தும் வழிகள்

ந்திய நாடு கிராமங்கள் நிறைந்த நாடு. கிராமங்கள் இயற்கை அமைப்பால் நெற்களஞ்சியம்; செல்வக் களஞ்சியம். நகரங்கள் விற்பனைக்குரிய சந்தைகளே! இதுவே பழங்கால இந்தியா. இன்றைய இந்தியாவில் கிராமங்கள் சுதந்திரமிழந்து ஒளியிழந்து நகர்ப்புறத்தைச் சார்ந்து விளங்குகின்றன. இத்தகு அவல நிலையிலிருந்து கிராமங்களை மீட்கத் தோன்றிய அறிஞர், கிராமியப் பொருளாதார மேதை. டாக்டர் ஜே.சி. குமரப்பா அவர்கள், உலக நாடுகளின் பொருளாதாரச் சித்தாந்தங்களைத் துறைப்போகக் கற்றுத் தெளிந்தவர். ஜே.சி. குமரப்பா அவர்களின் கிராமப் பொருளாதாரக் கொள்கை வெற்றி பெற்றால் நது நாடு, தன்னிறைவுள்ள நாடாக மாறி சிறந்து விளங்கும்.

மேதை குமரப்பாவின் கிராமப் பொருளாதாரக் கொள்கையில் விவசாயம் முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது. ஏன்? மனித குலத்தின் முதல் தேவை உணவு. அடுத்த தேவை உடை, உணவு, உடை அடிப்படையிலான உற்பத்தி-இவை சார்ந்த தொழில்கள் கிராமங்களில் முறையாக வளர்ந்தாலே கிராமங்கள் வளரும். வேலைகள் கிடைக்கும், தன்னிறைவுள்ள கிராமங்களாகும் என்பது மேதை குமரப்பா அவர்களின் கருத்து. இது நூற்றுக்கு நூறு உண்மை.

கிராமப் பொருளாதார மேதை குமாரப்பா அவர்கள் கிராம வளர்ச்சிக்கு, கூட்டுறவைப் பெரிதும் நம்பினார். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பலநோக்குக் கூட்டுறவு சங்கம் இருக்கவேண்டும் என்பது அவர் கொள்கை. “பண அடிப்படையிலான பொருளாதாரத்தைவிடப் பொருள் அடிப்படையிலான பொருளாதார இயக்கங்களே-வங்கிகளே -கூட்டுறவு அமைப்புகளே கிராமத்துக்குத் தொண்டு செய்ய இயலும்” என்பது மேதை குமரப்பா அவர்களின் கருத்து. இன்று நமது வேளாண்மைத் தொடக்கக் கூட்டுறவு வங்கிகள் இந்த அடிப்படையை ஏற்றுக்கொண்டு இயங்குதல் வேண்டும். அதாவது, தொழுஉரம் தயாரிப்பதிலிருந்து வேளாண்மையின் அனைத்துத் துறைகளிலும் துணையாக, இந்த, தொடக்கக் கூட்டுறவு வங்கிகள் அமையவேண்டும்.

இன்று நீர்ப்பாசன நிர்வாகம் அரசின் பொறுப்பிலும் இல்லை; கிராமத்தின் பொறுப்பிலும் இல்லை; வல்லாளர்கள் கையில் இருக்கிறது. கிராமப்புற நீர்ப்பாசன மேலாண்மையை, பராமரிப்பை தொடக்கக் கூட்டுறவு வங்கிகள் மேற்கொள்ள வேண்டும்.

இந்த யுகம், போட்டிகள் நிறைந்த யுகம். போட்டிகள் வளர்ச்சிக்குத் துணை செய்யும் என்கிற சித்தாந்தமே தோன்றிவிட்டது. இந்தப் போட்டி மனப்பான்மையை மேதை குமரப்பா அவர்கள் வரவேற்கவில்லை. மாறாகக் கூட்டுறவு முறையில் அது நடக்க வேண்டும் என்பது மேதை குமரப்பா அவர்களின் உயர் கருத்து; கொள்கை. கிராமத்தின் அனைத்துத் தொழிற்பாடுகளும் கூட்டுறவின் மூலமே நடைபெற வேண்டும் என்பது மேதை குமரப்பா அவர்களின் உறுதியான கொள்கை. “ஒரு வெள்ளிச் சரட்டில் பவழங்களைக் கோர்த்தது போல்” கிராமத்தின் அத்துணை மக்களையும், பணிகளையும் கூட்டுறவு இணைந்து சிறந்து விளங்கவேண்டும். ஒரு கூட்டுறவு நிறுவனத்தின் செயற்பாடு பற்றி அந்தக் கூட்டுறவு நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையை வைத்து அறிதல் கூடாது. மற்று எப்படி? கிராமத்தின் அன்றாடத் தேவைகளான உணவுப் பொருட்களையும் மற்றும் துணி முதலிய தேவைகளையும் உற்பத்தி செய்து வழங்கும் தகுதி பெறுவது கொண்டுதான், கூட்டுறவு நிறுவனத்தின் பணியை மதிப்பீடு செய்யவேண்டும் என்பது மேதை குமரப்பாவின் கொள்கை. ஒரு கிராமத்துக்கு ஒரு பலநோக்குக் கூட்டுறவு சங்கம் என்பது மேதை குமரப்பாவின் கொள்கை. இந்த ஒரு பலநோக்குக் கூட்டுறவு சங்கமே கிராமத்தின் உற்பத்தி மற்றும் சந்தை முதலிய பொருளியல் நிர்வாகத்தை நடத்தவேண்டும். இந்த முறையில் கூட்டுப் பொறுப்பு அதிகமாகி, நல்லவண்ணம் இருக்கும். ஆனால் இன்றோ கூட்டுறவை... துறைவாரியாகப் பிரித்து எண்ணற்ற நிறுவனங்களாக ஆக்கியதால் நிர்வாகச் செலவும், சுமையும் கூடுதலாகி இருக்கிறது. இது, வரவேற்கத்தக்கதல்ல. கிராமப் பலநோக்குக் கூட்டுறவு சங்கமே அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளலாம் என்பது சிறந்த கொள்கை

கிராம அளவில் பலநோக்குக் கூட்டுறவு சங்கம் அமைக்கப் பெற்று, பல நோக்குக் கூட்டுறவு சங்கம் நன்முறையில் நடந்தால், உலக நாடுகளுக்கிடையேகூட பொறாமையுடன் கூடிய போட்டிகள் தவிர்க்கப்படும் என்பதும், இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் பொருளாதார விடுதலையும், அமைதியும் கிடைக்கும் என்பதும் மேதை குமரப்பா அவர்களின் திடமான நம்பிக்கை. நமது நாட்டு வங்கிகள், மேற்கத்திய நாட்டு வங்கிகளைப் போல, தொழிலாகச் செய்யக் கூடாது. மேற்கத்திய நாடுகளில் வங்கி நடைமுறை, ஊசியின் மூலம் உடம்பிலிருந்து இரத்தத்தை எடுக்கும் முறை போன்றது. பொருளாதாரச் சுரண்டல் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். உற்பத்தியாளர்களைச் சுரண்டுவதை நிகர்த்தது. இத்தகைய சுரண்டல் முறையால் உணவுப் பொருள்கள் மற்றும் நுகர்வுப் பொருள் உற்பத்தியாளர்கள் பல ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உற்பத்தி செய்யப்பெறும் உணவுப் பொருள்கள் காலகதியில் கெட்டுப்போகும் அல்லது அழிந்துபோகும் இயல்பின. ஆதலால், உற்பத்தி செய்த பொருள்களை அறுவடை செய்த கையோடு கையாக விற்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தமான பரிதாப நிலைமைக்கு விவசாயிகள் ஆளாகின்றனர். பலநோக்குக் கூட்டுறவு சங்கம் உற்பத்திப் பொருள்களில் கிராமத்தேவை போக மீதியைச் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்றுத்தர வேண்டும்.

கிராமப் பொருளாதாரத்திற்கும், மேம்பாட்டுக்கும் திட்டமிடும்பொழுது முதலில் சுகாதாரத்திற்குத் திட்ட மிடுவது நல்லது. உண்ணாமல் ஒருபொழுது இருக்கமுடியும். ஆனால் மலம், சிறுநீர் கழிக்காமல் இருத்தல் இயலாது. அது போலவே கால்நடைக் கழிவு, வீடுகளில் சேரும் குப்பைகள். இவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்தி தொழு உரமாக ஆக்குதல் அவசியம். இதனால் கிராமமும், சுற்றுப்புறச் சூழலும் தூய்மையாக அமைகிறது. நோய் தடுக்கப்படுகிறது. அழகு அமைகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, முதல் தரமான உரம் தயாரிக்கப்படுகிறது. இன்று பெருவாரியாகப் பழக்கத்தில் உள்ள இரசாயன உரங்கள், உரங்களே அல்ல. அவை கிரியா ஊக்கிகளேயாம். உரங்களுக்கு பதில் மட்கிய தொழு உரங்களைப் பயன்படுத்தினால் நிலத்தின் தரமும் காப்பாற்றப்படும்; உற்பத்தியும் பெருகி வளரும். இரசாயன உரம் வாங்கும் செலவும் குறையும், கிராமமும் அழகாக இருக்கும்; நோயற்ற வாழ்வும் அமையும்.

கிராமங்களில் அடுத்த இடத்தைப் பெறுவது விவசாயம். கிராமத்தின் தேவைகளை நிறைவு செய்யும் தொழிலில் முதன்மையான இடத்தை வகிப்பதும் விவசாயமே. கிராமத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளத்தக்கவாறு விவசாயத்திற்குரிய விளைபுலன்களை பகிர்தல் செய்யவேண்டும். மேதை குமரப்பா ஒரு கிராமம் சராசரி தன்னிறைவுடையதாக அமையவேண்டுமானால் அடியில் கண்டவைகள் அந்தக் கிராமத்தில் உற்பத்தியாக வேண்டும் என்கிறார்:

நவதான்யம், நெல், பருப்பு, சர்க்கரைக்கான கரும்பு, தேன், பனை கொட்டைவகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கள், கிழங்கு வகைகள், பழவகைகள் ஆகியன உணவுக்கும், பருத்தி உடைக்கும் உற்பத்தியாக வேண்டும்.

கிராம மக்கள்தொகை அடிப்படையில் இவைகளின் தேவையைக் கணக்கிட்டு கிராமத்தில் எந்தெந்த நிலத்தில் எவை எவை விளையும் என்று கண்டு தெளிந்துகொண்டு பன்முகப் பயிர்ச் சாகுபடியை கிராமத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். இதனால் கிராமம் தன்னிறைவு உடையதாக விளங்கும். கிராமங்களில் பண்டமாற்று முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். பணத்திற்குப் பண்டம் விற்பனை முறை தவிர்க்கப்படுதல் வேண்டும். இவையனைத்தையும் திட்டமிட்டு உற்பத்தி செய்து கிராம மக்களுக்குச் சமவிகிதச் சத்துள்ள உணவுக்கு உத்தரவாதம் செய்யவேண்டும். இன்றைய இந்தியக் கிராமங்களின் உற்பத்தியில், இந்த உற்பத்தி முறை இல்லை. ஆட்டு மந்தைபோல், மற்றவர்கள் பயிர் செய்வதையே பயிர் செய்கின்றனர். அதுமட்டுமல்ல, இந்திய நாட்டுக் கிராமங்களில் பல இலட்சக் கணக்கான ஏக்கர் நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன. நமது கிராமப் பொருளாதாரம் மேம்பாடடையவும், தன்னிறைவு காணவும் மேதை குமரப்பா அவர்களின் கொள்கையை நடைமுறைப் படுத்துவதே நாட்டுக்கு நல்லது.

கிராம வளர்ச்சியில் அடுத்த இடம் பெறுவது கால்நடை வளர்ப்பு. விவசாயத்தின் இணைத்தொழில் இது. கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனமும் விவசாயிகள் உற்பத்தி செய்து தரவேண்டும். கால்நடைகள் விவசாயிகளுக்குப் பால் வழங்குவதோடு எரு மூலம் உரம் தந்து நிலத்திற்கு, மேம்பாட்டினையும் வழங்குகின்றன. கால்நடை வளர்ப்பு ஒரு தொழில் என்ற கருத்து உருவாக வேண்டும்.

அடுத்து, கிராமத்தில் தச்சு, கொல்லு, மர அறுவை, தேனி வளர்ப்பு, மண்பாண்டம் செய்தல், பாத்திரங்கள் செய்தல், தோல் பதனிடுதல், தோல் அடிப்படையிலான பொருள்கள் செய்தல், உணவுப் பொருள்கள் பதப்படுத்தும் தொழில், எண்ணெய் ஆட்டுதல், சோப்பு தயாரித்தல், பழங்கள் பக்குவம் செய்யும் தொழில், நெசவு முதலிய தொழில்கள் தொடங்குவதற்குரிய மூலப்பொருள்களும் உள்ளன. இத் தொழில்களைச் செய்வதற்குரிய தொழிலாளி களும் உள்ளனர். இத்தகைய தொழில்களைத் திட்டமிட்டுத் தொடங்கினால் கிராமங்களிலேயே வேலை வாய்ப்புக்கள் உருவாகும். கிராம மக்கள்-இளைஞர்கள் கிராமங்களைவிட்டு நகரங்களுக்குப் புலம் பெயரவேண்டிய அவசியம் ஏற்படாது. கிராமங்கள் தன்னிறைவு பெறும்.

மேதை குமரப்பா அவர்கள் கிராமங்கள் ஒருங்கிணைந்த நிலையில் வளரவேண்டும் என்று விரும்பினார். மேதை குமரப்பா அவர்களின் கொள்கை வழி கிராமங்கள் வளரவில்லை. குன்றக்குடி வளர்ச்சிகூட மேதை குமரப்பா அவர்களின் சித்தாந்தப்படி அமையாதது. ஒரு பெரிய குறையே. இந்தக் குறையை நிவர்த்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பெறும்.

இந்தியாவின் செல்வக் களஞ்சியம் கிராமங்களே! கிராமங்கள் வளர்வதற்குரிய திட்டங்களை மேதை குமரப்பா அவர்களின் கருத்துவழி, திட்டம் தீட்டி நடைமுறைப்படுத்துவது சாத்தியமே! நமக்கு வேண்டியது மனம் ஒன்றே!

  1. சிந்தனைச் சோலை