குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13/சர்வோதயம்
ஐரோப்பிய நாடுகளின் சித்தாந்தங்களையும், மனித இன வரலாற்றையும் விட பாரதத்தின் சித்தாந்தங்களும் மனித இன வரலாறும் மிகப்பழமையுடையன. சிக்கல்களுக்கு மேலெழுந்த வாரியாகத் தீர்வு காண்கின்ற சில நாடுகள் உண்டு. நமது நாட்டு மேதைகள் சிக்கல்களை நன்கு ஆழ்ந்து சிந்தித்து அவை தீர்வதற்குரிய வகையில் இறுதி முடிவு கண்டிருக்கிறார்கள். அத்தகு மேதைகளில் சிறந்து விளங்குபவர் அண்ணல் காந்தியடிகள்.
காந்தியடிகளின் புரட்சி இளவெயில் போல; பொதிகை மலைத் தென்றல் போல. என்றாலும் அது வலிமையும் உறுதியுமுடையதாக விளங்கியது.
காந்தியடிகள் தலை சிறந்த ஞானி. அறியாமை கலப்பில்லாத தூய அறிவிற்குத்தான் ஞானம் என்று பெயர். அது பேரொளியணையது.
காந்தியடிகள் பழைய பண்புகளுக்கும் நிகழவிருக்கும் புதுமைப் பண்பிற்கும் ஓர் இணைப்பு பாலத்தை ஏற்படுத்தினார். கங்கையும் யமுனையும் கலப்பதுபோல் பழமைக்கும்-புதுமைக்கும் இடையே வேறுபாடு தெரியாத விழுமிய ஒற்றுமையை உருவாக்கினார்; புதியதொரு சமுதாயத்தை உண்டாக்கினார்.
நம்மிடையே எப்படியோ ஒரு தனிமை உணர்ச்சி வளர்ந்து இருந்தது. அதன் காரணமாகப் பழக்கவழக்கங்களில் நாம் கூனிக்குறுகி வாழ்ந்தோம். அந்தக் கூனல் அந்நியர்கள் ஏறி உட்கார்ந்து சவாரி செய்வதற்கு வசதியாக இருந்தது. காந்தியடிகள் நமது கூனை நிமிர்த்தார். கத்தியை எடுத்துக் கொடுக்காமல்-இரத்தம் சிந்தும்படி செய்யாமல் நமது கூனை நிமிர்த்தினார். அதுவரை சுகமாக உட்கார்ந்து சவாரி செய்தவர்கள் சவாரி செய்ய முடியவில்லை-இறங்கி விட்டார்கள். இந்த அதிசயத்தைக் காந்தியடிகள் செய்து முடித்தார்.
எதையும் எப்படியும் செய்யலாம் என்று காந்தியடிகள் கருதியதில்லை. வாழ்க்கையின் இலட்சியம் உயர்ந்ததாக இருக்கவேண்டும். அந்த இலட்சியத்தை அடையும் வழிமுறையும் உயர்ந்ததாக இருக்கவேண்டும் என்பது காந்தியடிகளின் விழுமிய கொள்கை.
புதிய சமுதாய அமைப்புப் பற்றி அவர் கனவு கண்டார் என்று கூறுவதைவிட, எதிர்கால புதிய பாரதத்தை அவர் தரிசனம் செய்தார் என்று கூறுவதே சாலப் பொருத்தமானது. ஏனெனில் கனவுகள் நிறைவேறாமல் போவதும் உண்டல்லவா?
இந்த நாடு சுதந்திரம் பெற்றபோது எப்படி இருந்தது என்பது நாம் அறிந்த உண்மையே. வரைந்த வாழ்நாள் முழுதும் வாழமுடியாமல் இளமையிலேயே மரணமடைந்தோர் எண்ணிக்கை அதிகம். சமுதாயத்தில் ஏழைகளே அதிகமாக இருந்தார்கள். மனிதனை மனிதன் தொட்டால் தீட்டு என்கிற மனோபாவம் இருந்தது. இவ்வளவுக்கும் விடிவு காண விரும்பினார் காந்தியடிகள். மனித குலத்தை ஒருகுலமாக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். காந்தீய தத்துவம் சமரச தத்துவம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிவழி வந்த தத்துவம் திருவள்ளுவரும், அப்பரடிகளும், இராமலிங்கரும் போற்றிப் பாராட்டி வந்த தத்துவங்களை நடை முறைக்குக் கொண்டுவர முயற்சித்தார். உணவிலும், உடையிலும், போக்குவரத்திலும் மாற்றம் வந்திருக்கிறது-மனிதனுடைய மனத்திலே மட்டும் மாற்றம் வரவில்லை. அணைத்து வாழு என்று ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருக்கிறார்களே, அந்தப் பண்பு இன்று வரை வளர்ந்திருக்கிறதா? மாறாக எப்படி அடித்தால் அவனுக்கு நன்றாக வலிக்கும்? எப்படி அடித்தால் அவனை வீழ்த்தலாம் என்று ஆராய்கின்ற பண்பு வளர்ந்திருக்கிறது.
இன்று நம்மை நாமே ஆத்ம சோதனை நடத்திக் கொள்ளும் நிலைக்கு நாம் வந்திருக்கிறோம். இந்த நாட்டின் சமுதாய வரலாற்றில் காந்தியடிகளின் சித்தாந்தம் முழுக்க முழுக்கப் பொருந்தும். அதுதான் சர்வோதயம். எப்படி உதயம் இயல்பாகவே ஏற்படுகிறதோ அதுபோல சமுதாயத்தில் எல்லோரும் வாழுகின்ற ஒரு நல்ல அமைப்பு முறை இயல்பாகவே-தானாகவே உருவாகவேண்டும். அப்படித் தன்னியல்பாக வளர்வதுதான் சர்வோதயம்.
‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’ என்ற தாயுமானாரின் சித்தாந்தம். சர்வோதயத்தின் முழுச் சித்தாந்தம் என்று கூறலாம்.
‘தனியொருவனுக்கு உணவிலையெனில் சகத்தினை யழித்திடுவோம்’ என்று பாரதியார் பாடினார். அந்தத் தனியொருவன் யாராக இருக்கமுடியும்? உரிமைகளைக் கேட்க வாயற்று, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வழியும் வலிமையும் அற்று மூலையிலே ஒதுக்கப்பட்டுக் கிடக்கின்ற ஒருவனைப் பற்றித்தான் பாரதியார் பேசுகிறார். அத்தகைய ஒருவனை நோக்கிச் சோறும் துணியும் போகும்படி செய்வதுதான் சர்வோதயம்.
95 பேரின் வாழ்க்கை உரிமைகளையும் அவர்களிடத்து உரமும் உறுதியும் இல்லையென்ற காரணத்தால் எஞ்சியுள்ள 5 பேர் பறித்துச் சுகவாழ்வு வாழுகிறார்களே! இந்நிலை இருக்கலாமா?
மனித சமுதாயத்தில் எந்த ஒரு கோடியில் வறுமை இருந்தாலும் அது நம்மை அரித்துத் தின்றுவிடும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். நாம் எதற்கும் கும்பிடு போட மிக நன்றாகக் கற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால் எதைக் கும்பிடுகிறோமோ அதனுடைய தத்துவத்தை மட்டும் வாழ்க்கையில் காப்பாற்ற மாட்டோம். புறக் காட்சிகளையும் புறத் தத்துவங்களையும் பார்த்து அவற்றை நம்முடைய வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டும்.
காந்தியடிகளின் நினைவாக நாம் சத்தியம் செய்து, உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும். அவர் வலியுறுத்திவந்த தத்துவங்களை-சித்தாந்தங்களை நாம் கொஞ்சம் கொஞ்சமாகவாவது வாழ்க்கையில் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி பெறவேண்டும்.
சமயவாதி என்றால் நல்ல மணமுள்ள மலர்போல இருக்கவேண்டும். மலரின் மணத்தினாலாய இன்ப அனுபவம் மனிதர்களுக்கே யாம் - மலர்களுக்கல்ல. மலர் இருக்கும் செடி அனுபவிப்பது பலருக்கு அருவருப்பூட்டும் உரத்தைத்தான். ரோஜா மலர் வண்ணத்தால் மணத்தால் பலருக்கு விருந்தளிக்கிறது; அதுபோலவே மனிதனும் காட்சியாலும் செயலாலும் மற்றவர்களுக்கு இன்பம் அளிக்க வேண்டும். அது மனிதனின் கடமை. இதனை நமக்கு உணர்த்துவதுதான் சர்வோதயம்.
நாம் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு தொய்வு ஏற்படவில்லை. இப்போது தொய்வு ஏற்படுமோ என்ற ஓர் அச்சம் பிறந்திருக்கிறது. அந்த அச்சத்தைப் போக்கும் முயற்சியில் சர்வோதாய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
நாம் பூரண சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டுமென்றால், சர்வோதய தத்துவங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவது தவிர வேறு வழியில்லை. சமுதாய ரீதியாக-சமய ரீதியாக-அரசியல் ரீதியாக அமைந்த அற்புதமான ஓர் விளக்கு சர்வோதயம். விளக்கைச் செய்து கொள்ள முடியாதவர்களாக நாம் இருக்கலாம். விளக்கைச் செய்து கொடுத்த பிறகு அந்த விளக்கை ஏற்றி, இருளைப் போக்கி விளக்கொளியில் வாழ முடியாதவர்களாக இருக்கலாமா?
காந்தியடிகளுக்குப் பிறகு, வினோபாஜி சர்வோதய இயக்கத்தின் தலைவராக விளங்குகிறார். இந்த 20-ஆம் நூற்றாண்டிலேயே-வினோபாஜி நம்மிடையே வாழுகின்ற காலத்திலேயே காந்தியடிகள் காண விரும்பிய சர்வோதய சமுதாயத்தை-புதிய சமுதாயத்தைக் காணவேண்டும் என்ற முயற்சியில் நாம் ஈடுபடவேண்டும். நாமனைவரும் ஓரணியில் சேர்ந்து, அண்ணல் காந்தியடிகளுக்குக் காணிக்கையாக அவரது சித்தாத்தங்களை ஆண்டுக்கு ஒன்று வீதமாகவாவது எடுத்துக்கொண்டு நடைமுறைக்குக் கொணர முயற்சிக்க வேண்டும்.
- ↑ பொங்கல் பரிசு