குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/அணிந்துரை

விக்கிமூலம் இலிருந்து
அணிந்துரை
தமிழண்ணல்
துணைத் தலைவர், தமிழிலக்கியச் சங்கப் பலகைக் குறள்பீடம் ஒருங்கிணைப்பாளர். தமிழ்ச் சான்றோர் பேரவை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்ற பெயரைத் தமிழ்கூறும் நல்லுலகம் நன்கு அறியும் அவர் மக்கள் மன்பதைக்குப் பாடுபட்டு, நெறிகாட்டிய பெருமைக்குரியவர் என்பதால் அவரைச் சமுதாய மாமுனிவர் என்றனர். தமிழ்மொழி வளம்பெற நாடனைத்தும் சென்று, தம் சிந்தனைச் செல்வத்தைப் பகிர்ந்து கொண்டதால் தமிழ் மாமுனிவர் எனவும் போற்றினர்.

பிற மடங்களும் தமிழும் சிவனியமும் வளரப் பாடுபட்டன. எனினும் ‘ஆசார அனுட்டான’த் தடைகளால், மக்கள் அணுக முடியாத, உயர்ந்த பீடங்களில் இருந்தனர். அவற்றைவிடக் குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனம் பெரியதன்று. ஆயினும் அப்பரடிகளைப்போல, திருஞானசம்பந்தரைப்போல, மக்கள் மன்றத்திற்கு வந்து அவர்களிடையே தாமும் ஒரு ‘மா மனிதராக’ விளங்கியதால், தாம் தலைமை தாங்கிய திருமடத்தின் புகழை உலகறிய உயர்த்தியவர்தான், தவத்திரு அடிகளார் ஆவார்கள்.

அவர்தம் சிந்தனைகளை, எழுதிவைத்த எண்ணங்களை மணிவாசகர் பதிப்பகம் பல பெருந் தொகுதிகளாக வெளியிடுகிறது. களஞ்சியங்கள் அனைய பெருநூல்களையே வெளியிட்டு வரும் பதிப்புச் செம்மல், தமிழவேள் ச. மெய்யப்பன் அவர்கள் அடிகளாரின் நூல்களைப் பல மடலங்களாக வெளியிடுவது அம் மாமுனிவர் தம் எண்ணங்கள் காற்றில் கரைந்துவிடாமல் காப்பாற்றும் முயற்சியாகும்.

இம் மடலம் ‘திருக்குறள்’ பற்றிய சிந்தனைத் தொகுப்பாகும் வள்ளுவம் பற்றி அவர் வெவ்வேறு காலங்களில் எழுதியன அனைத்தும் இந்நூலுள் ஒருவழித் தொகுத்துத் தரப் பெற்றுள்ளன. இவை ஒவ்வோரதிகாரத்தையும் அவ்வதிகாரத்துள் வரும் ஒன்றிரண்டு குறள்களால் தொடங்கிப் பின்பு பல்வேறு சிந்தனைத் தொடர்களாகக் கிளைவிட்டுப் படர்கின்றன.

இதில் திருவள்ளுவர் காலப் பின்னணியும் அச்சூழலின் எதிரொலியாக அவர் திருக்குறள் யாக்க நேர்ந்த நிலைமையும் விளக்கப் பெற்றுள்ளன.

திருக்குறளை அவர் வாழ்ந்த காலச் சூழ்நிலையுடன் - அதாவது இக்கால அரசியல், மன்பதையியல், பொருளியல் ஆகியவற்றுடன் இணைத்துப் பார்க்கும் முறையே, பெருமளவில் காணப்படுகிறது.

வள்ளுவத்திற்கு அவர் தரும் ‘புதிய பார்வைகள்’ பல பளிச்சிடுகின்றன. அவர் ஒரு ‘பகுத்தறிவுச் சமயவாதி’யாக வெளிப்படுகிறார். இவரை விவேகானந்தருடன் ஒப்பிடலாம். என்றாலும் மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறியும் இத்தகையதொரு ஆன்மிகவாதியை நாம் காண்பதரிது.

தமிழன் தலைநிமிர வேண்டுமெனில், தந்தை பெரியாரின் பணியும் தேவை என உணர்ந்தவர் இவர். சிறந்த மார்க்சிய, லெனினியச் சிந்தனையுடைய முற்போக்காளர் இவரெனில் மிகையாகாது. மக்களுடன் மிக நெருங்கிப் பழகியதால், இவரது பார்வைகள் தெளிந்த, ஒளிவீச்சுக்களாகக் கானப்படுகின்றன.

வள்ளுவத்தை நெஞ்சார விளங்கிக் கொள்ள இந்நூல் பெருந்துணையாகுமென, ஒங்கும் குரலெடுத்து, உரக்கக் கூற விழைகின்றேன். அதற்காக இது ‘தெய்வத்தின் குரல்’ என்று கூறமாட்டேன். திருவள்ளுவர் தாம் ஒரு மனிதராக நின்றே, இந்த மன்பதை சார்ந்த மனிதர்களுக்கு ‘மனிதத்தை’, மனிதனின் மொழியில் எடுத்துரைத்தார். அதை அடிகளார் என்ற ‘மனிதர்’ நம் காலத்தில் பிறந்து, நமக்கு விளக்கியுள்ளார்.

அடிகளாரின் கருத்து நயத்திற்கும் சிந்தனைச் சிறப்புக்கும் பெருமிதப் பெருமைக்கும் எடுத்துக்காட்டுக்கள் ஒரு சிலவற்றை இங்குச் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைப் போற்றிப் பாராட்டும் அதே குரலில், அம் மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் இவர் ‘எதிர்வைக்கும் கருத்துரைகள் ஆலோசனைகள்’ இதிலுள. பின்பாட்டுப் பாடுவது பெருமிதமன்று. அடிகளார் அரசியலில் ‘பெரியாரைத் துணைக்கோடல்’ அதிகாரத்திற்குப் பல ‘பரிமாணங்களில்’ ஒர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.

அவர் வழிவரும் இன்றைய குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளாரும் அதே நெறி முறைகளைப் பின்பற்றி வருவது தமிழர்கள் செய்த தவப்பேறேயாகும். தமிழர்கள், அவர்கள் ‘நாத்திகர்களே’ யாயினும், தங்கள் திருமடங்களைப் போற்ற வேண்டும்; வாழ்த்த வேண்டும்; பாராட்ட வேண்டும்.

பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன் அவர்கள், தமிழுணர்வு, தமிழினவுணர்வு, தமிழ்ப் பண்பாட்டுணர்வு உடையவர்களை இனங்கண்டு போற்றி, கைம்மாறு கருதாமலும் செலவு பாராமலும் ‘தமிழர்கள் பனங்கொடுத்து நூல் வாங்கும் பழக்கமற்றவர்களாயிற்றே’ என்று தயங்காமலும் அத்தகையவர்களது நூல்களை வெளியிடுகிறார். பதிப்புலகில் ‘மெய்யப்பன் தமிழாய்வகம்’ அமைத்து ஒரு புரட்சியே செய்து வருகிறார்.

‘மானுடத்தின் குறிக்கோள் அறம். அறம் செய்தலன்று; வாழ்தல்’ என்கிறார் அடிகளார் (பக். 23). நாமோ அறம் பேசவும் விளக்கவும் என்றுதான் இன்று நடந்து கொள்கிறோம். துறவியாகிய இவர், ‘இந்த மண்ணுலகிலேயே அமர வாழ்வு வாழலாம்’ என்ற வள்ளுவர் கருத்தை மனம் ஒப்பி ஏற்குமிடங்கள் பலவாகும். ‘தலைமகனுடைய ஒழுக்கத்திற்கும் செயல்திறனுக்கும் பெண்ணே பொறுப்பேற்க வேண்டும் என்பது வள்ளுவத்தின் திரண்ட கருத்தாகும்’ என்பது வள்ளுவர்தம் உள்ளத்தை உணர்ந்து எழுதியதாகும் (29). அறிவறிந்த பெற்றோர்க்கே அறிவறிந்த பிள்ளைகள் பிறப்பார்கள் என்பது இவர் காணும் புதியவுரை (30, 31) மிக நுட்பமானது. ஒழுக்கமுடைமைக்கு இவர் மிக விரிந்த பொருள் காண்கிறார் (61). ‘ஒவ்வொரு நொடியிலும் சாகின்றோம் என்று உணர்ந்தால் வாழ்நாள் வீணாகாது’ என்பது இவர் தரும் விளக்கம் (106). ‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பும் செய்யும் தொழிலால் வேறுபடாது; உயர்வு தாழ்வெனல் ஆகாது’ என்ற இவரது விளக்கமே, குறளுக்குப் பொருத்தமுடையதாகும். (115)

தாய்மொழி வழிக்கல்வி பற்றி இவர் எழுதியுள்ளவை இன்று, மிகுதியும் எல்லோர்க்கும் அறிவிக்க வேண்டிய செய்தியாகும் (262 - 276). இந்திய தேசிய மொழிகள், தமிழ் உட்பட இந்திய ஆட்சிமொழியின் தகுதி பெற்றால், இந்தியை நாட்டின், பொதுமொழியாக, உறவு மொழியாக ஏற்றுக் கொள்ளலாம்’ என விவாதிக்குமிடம் மிகமிகச் சிறந்த கருத்தாகும். ‘சாதி அடிப்படையில் சலுகைகள்’ என்பது பற்றிய இவரது சிந்தனைகளை அரசியல் கட்சிகள் சிந்திக்க வேண்டும். தவம் பற்றிய விளக்கம் (236), தமிழில் வழிபாடு பற்றி இவர் ஆணித்தரமாக எடுத்துரைப்பவை, திருமணத்தில் புத்தகங்களைச் சீர்கொடுக்கலாகாது என்னும் இவர்தம் கருத்து என இந்நூலுள், தேடத்தேடக் கிடைக்கும் அரிய கருத்துக்கள் மிகப் பலவாகும்.

திருக்குறளை வாழ்வியல் நோக்கில் பார்க்க, இந்நூல் மிகச் சிறந்த துணையாகும் என்பதில் ஐயமில்லை.

தமிழண்ணல்