குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/குறள் பணிகள்

விக்கிமூலம் இலிருந்து
அடிகளாரின் குறள் பணிகள்
பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன்

தமிழ்மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழ்கூறு நல்லுலகில் சமய மறுமலர்ச்சிக்கு வழிகண்டவர். அடிகளார் பூர்வாசிரமத்தில் செட்டிநாட்டில் எங்கள் ஊராகிய இராமச்சந்திரபுரத்தில் உயர்நிலைக் கல்வி பயின்றார்கள். எங்கள் தந்தையார் குங்கிலியம் பழ. சண்முகனார் அவர்களும், அடிகளாரின் அண்ணன் அவர்களும் விநோபா பாவே வாசகசாலையைத் தொடங்கினர். அடிநாள் தொட்டு அடிகளாரை நான் நன்கறிவேன். அடிகளார் திருவண்ணாமலை ஆதீனத்தில் பொறுப்பேற்ற பின்னர் சிறந்த சொற்பொழிவாளராக விளங்கினார்கள். முதன்முதலில் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும் அடிகளார் அவர்களும் நாங்கள் நடத்திய தமிழர் திருநாள் திருக்குறள் விழாவில் ஒரே மேடையில் பேசினர். அப்பொழுது ஆத்திகமும் நாத்திகமும் ஒரே மேடையில் சந்திக்கின்றன என்ற செய்தியை வியப்புடன் நாளிதழ்கள் வெளியிட்டன. 

50, 60களில் அடிகளார் தமிழ்மேடைக்குத் தம் பேச்சால் புதிய வலிமை சேர்த்தார்கள். தமிழகம் முழுவதும் அடிக்கடி பயணம் செய்யும் நான் அடிகளாரின் நூற்றுக்கு மேற்பட்ட பொழிவுகளைச் செவிமடுக்கும் நல்வாய்ப்பைப் பெற்றேன். அடிகளார் நூல் பலவற்றைப் படிக்கும் பேறு பெற்றேன். அப்பொழுதெல்லாம் சிந்தனைகள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்துப் பார்க்க வேண்டும் என்ற வேனவா என்னுள்ளத்தில் முகிழ்த்தது. அது இன்று கைகூடுகிறது.

புகழ்மிக்க அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அடிகளார் அவர்களுக்கு டாக்டர் பட்டம் (D.Litt.) வழங்கிய போது அவர்களிடம் வாழ்த்துப்பெற்று, அடிகளார் நூல் வரிசைத் திட்டத்தை விரிவாக விளக்கினேன். “நான் நினைக்க வில்லை. நல்ல திட்டமாக இருக்கிறது” செய்யலாம் என்று சொல்லி இசைவளித்தார்கள். அடிகளார் எழுதிய 50-க்கு மேற்பட்ட நூல்களையும் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.

தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்களை நேரில் சந்தித்து ஆசிபெற்று நூல்வரிசைத் திட்ட அறிக்கையைப் பணித்தேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்தி இசைவு தந்தார்கள். பதிப்புக் குழுவை உருவாக்கினார்கள். கட்டுரைகளை வகைப்படுத்தும் பணி தொடங்கிற்று.

ஒவ்வொரு தொகுதியும் 400 பக்கங்கள் கொண்ட 10 தொகுதிகளாக வெளியிடும் திட்டத்தில் ஏற்கனவே இரண்டு தொகுதிகள் வெளிவந்துள்ளன. இன்று மூன்றாவது தொகுதி வெளிவருகிறது.

  1. திருக்குறள்
  2. இலக்கியம்
  3. சமயம்
  4. சமுதாயம்
  5. பொது

என 5 நிலைகளில் இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மறைமலை அடிகளுக்குப்பின் 1960-90களில் சைவ உலகில் அடிகளார் பெரும்புரட்சி செய்தவர். சைவ சமய மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தவர். சமயக்காழ்ப்பின்றி சைவசமயத்தின் கோட்பாடுகளை, தத்துவக் கூறுகளை பொதுமக்களும் உள்ளம் கொள்ளும்படி விளக்கியவர் தமிழ் மாமுனிவர். சைவசமயத்தை நடைமுறைச் சமயமாக்கவும், சீர்திருத்தக் கருத்துக்கள் செயற்படவும் அல்லும் பகலும் அயராது உழைத்து, புதியதொரு விடியலைக் கண்டார்கள். பெரியாரும் போற்றும் வண்ணம் பெருமிதமாக வாழ்ந்தார்கள். தமிழ்நாட்டில் பெரிய சைவத்திரு மடங்கள் 18 இருந்த போதிலும் குன்றக்குடி ஆதீனமே மக்களால் பெரிதும் அறியப்பட்டிருந்தது. தமிழ் மறுமலர்ச்சியின் ஒரு கூறாகிய சமய எழுச்சி, திருமுறை எழுச்சி, திருக்குறள் இயக்கம் முதலியவற்றின் வாயிலாக, எழுச்சி மிக்க புதிய தமிழகத்தை உருவாக்கினார்கள். அடிகளார் அவர்களை

புரட்சித்துறவி

சிந்தனையாளர்

நூலாசிரியர்

சொற்பொழிவாளர்

நிறுவனர்

என ஐந்து நிலைகளில் வைத்து அடிகளாரின் பங்களிப்பை நாம் விளக்கலாம்; மதிப்பீடு செய்யலாம்.

புரட்சித்துறவி : தத்துவ தரிசனங்கள் அனைத்தையும் கற்றதோடு மார்க்சியமும் கற்றவர். சமூக இயலில் ஆழங்கால் பட்டவராதலால் தமிழ்ச் சமூக மாற்றத்திற்கு சைவ சமயம் வழியாக எவ்வாறு மேம்பாடு காணலாம் என உழைத்தார். தமிழ் வழிபாடு, ஆட்சி மொழி, பயிற்றுமொழி, இந்திஎதிர்ப்பு முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் தலைமையேற்று தமிழகத்திற்கு வழிகாட்டினார். அவருடைய எழுத்திலும், பேச்சிலும், புதுமைகள் பூத்துக் குலுங்கின. திருமடத் தலைவர்கள் பல்லக்கில் பவனிவந்தபோது பட்டி தொட்டிகளுக்கெல்லாம் அடிகளார் சைக்கிளில் சென்று சமயம் பரப்பினார். புரட்சித்துறவி அடிகளாரின் புரட்சிச் சிந்தனைகளை இந்த 10 தொகுதிகளிலும் நாம் காணலாம். நடைமுறைக்கு ஒத்து வராத சமயக் கருத்துக்களைத் துணிவோடு எடுத்துக்காட்டிய சமயப் புரட்சியாளர்.

சிந்தனையாளர் : தமிழ்ச் சிந்தனைக்குப் புதுவளம் சேர்த்தவர். திரு.வி.க. நெறியில் சமுதாய நோக்கில் சமயச் சிந்தனைகளை வழங்கியவர். பன்னுற் பயிற்சியும், பேரறிஞரின் நட்பும், தொடர்ந்த மேடைப்பொழிவுகளும், பட்டறிவும் அவருக்குப் பல்வேறு புதிய சிந்தனைகள் தோன்ற வாய்ப்பளித்தன. துறவியாய், தமிழறிந்த சான்றோராய் மட்டுமல்லாமல் மானுடம் மேன்மையுற வேண்டும் என்ற வேணவாவினால் எவர்க்கும் அஞ்சாமல், எதனையும் எதிர்பாராமல் புதிய சிந்தனை விதைகளைத் தூவினார்கள். அவை இன்று பூத்துக் குலுங்குகின்றன. அவரின் சிந்தனைகள் தனி நூலாகத் தொகுக்கப் பெற்றுள்ளன.

நூலாசிரியர் : பல்வேறு காலங்களில் பல்வேறு இதழ்களில் அடிகளார் எழுதிய கட்டுரைகள் நூல்வடிவம் பெற்றுள்ளன. சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் அவர் ஆற்றிய அறக் கட்டளைச் சொற்பொழிவுகள் அறிஞர் பெருமக்களால் பெரிதும் மதித்துப் போற்றப்படுகின்றன. சிறியனவும், பெரியனவுமாய் 54 நூல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அவற்றில் அடிகளாரின் சிந்தனைத் தெளிவும் விளக்கும் திறமும், விரித்துரைக்கும் வகையும் நூலாசிரியர் இயல்புகளாய் அமைந்துள்ளன. ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு நூலிலும் சமூகப் பார்வையுடன் கூடிய புதிய சிந்தனை, புதிய செய்தி ஒன்று இருக்கும்.

சொற்பொழிவாளர் : 1960-90களில் தலைசிறந்த சொற்பொழிவாளர் ஐவரைச் சுட்டினாலும், மூவரைச் சுட்டினாலும் அடிகளார் பெயர் முதல் வரிசையில் நிற்கும். புதுமைச் சிந்தனையாலும், புரட்சிக் கருத்துக்களாலும் தமிழக இளைஞர்கள் மத்தியில் பாராட்டப் பெற்றவர்.

நிறுவனர் : அருள்நெறித் திருக்கூட்டம் : அடிகளார் தொடங்கிய இந்த இயக்கம் தமிழ்ச்சைவ உலகில் புத்தார்வத்தையும், புத்துணர்ச்சியையும், புத்தெழுச்சியையும் உண்டாக்கியது. சிற்றூர்களில், பேரூர்களில் கிளைகள் முகிழ்த்தன. திருமுறைகள் வழிபாட்டில் சிறப்பிடம் பெற்றன. ஊர்தோறும், திருக்கோயில் தோறும் உழவாரப்பணி ஊக்குவிக்கப் பெற்றது. நாள்வழிபாடு ஒழுங்கு செய்யப் பெற்றது. வார வழிபாட்டுக்கூட்டம் வளர்ந்தோங்கியது.

தெய்விகப் பேரவை : தமிழ்க அரசின் இந்து அறநிலையத்துறையின் வழி தொடங்கப் பெற்ற இந்த அமைப்பு, பேரியக்கமாகப் பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்தது. சமய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இறை உணர்வு நாளும் பெருக நல்லதொரு இயக்கமாக வளர்ந்தது.

திருக்குறள் பேரவை : தமிழ்மாமுனிவர் தோற்றுவித்த அமைப்புக்களில் இன்றும் இளமை குன்றாது மாநாடுகள் நடத்திவரும் பேரியக்கம் இது. தமிழறிந்தோர் எல்லோரும் திருக்குறள் அறிந்திடுதல் வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் திருக்குறள் கருத்தரங்கு நடைபெறுதல் வேண்டும். ஆண்டுதோறும் மாநில மாநாடுகள் நடத்துதல், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் திருக்குறள் மாநாடு நடத்துதல் முதலியன இதன் செயல்திட்டங்கள்.

திருக்குறளைத் தேசிய நூல் எனப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று அடிகளார் எழுப்பிய குரல் இன்று நாடு முழுவதும் ஒலிக்கிறது.