குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/அரசின் கடமை

விக்கிமூலம் இலிருந்து

44. அரசின் கடமை

இனிய செல்வ,

புதிய அரசின் நிதிநிலைத் திட்டம் வந்து விட்டது. எதிர் பார்த்தபடி இல்லை. கிராமப்புற ஏழ்மை நீங்க, வேலையில்லாத் திண்டாட்டம் நீங்க உருப்படியாக ஒன்றும் இல்லை! மாநில அரசின் நிதிநிலைத் திட்டமும் வந்து விட்டது. இதில் ‘கருணை’ அதிகம் இருக்கிறது! நெடிய பார்வையும் இருந்திருந்தால் முழு வரவேற்பு அளிக்கலாம். இன்று மோசமாக இருந்துவரும் எதிர்காலத் தலைமுறையைப் பாதிக்கக் கூடிய ஆரம்பக் கல்வியைப் பற்றிய பேச்சில்லை! மூச்சில்லை! மேலும் பல ஓராசிரியர் பள்ளிகளைத் திறப்பதாக அறிவிப்பு! அவசியமென்ன? தெரியவில்லை. இனிய செல்வ, நமது நாட்டில் செல்வம் இல்லாமல் இல்லை. ஆனாலும் ஏழ்மை வளர்கிறது! ஏன்? நாட்டின் செல்வத்தில் 80 விழுக்காடு செல்வத்தை 20 விழுக்காடு கோடீசுவரர்கள் அள்ளி கொள்கின்றனர். இனிய செல்வ, மக்கள் தொகையில் (80) எண்பது விழுக்காட்டினர். 20 விழுக்காட்டளவேயுள்ள நாட்டுச் செல்வத்தைப் பங்கிட்டுக்கொண்டு வறியவர்களாக வாழ்கின்றனர். இனிய செல்வ இதனை Economics Times, 'Too little for too many" என்று கூறி நையாண்டிப் படமும் போட்டுள்ளது. கிராமப்புற ஏழைகளுக்காக நிறைய பேசுகிறார்கள்! ஆனால் ஒன்றும் நடப்பதில்லை. கிடைப்பதெல்லாம் இருக்கும் சொரணையையும் மறக்கடிக்கச் செய்ய சில சில இலவசங்கள்; அவ்வளவுதான்; ஆட்சிமுறை முதலாளிகள் அகம் மகிழவே நடக்கிறது. எங்குப் பார்த்தாலும் இழுத் தடிப்புகள்! இனிய செல்வ, இதுதான் இன்றைய நடைமுறை அரசு. அடிமை காலத்திய ஆட்சி அமைவுப் பொறிகளில் சுதந்திரத்தின் தாக்கம் இல்லை. மாற்றமும் இல்லை! பழைய முறைகளிலேயே (பாணி) வேலை செய்கிறார்கள்! புரட்சிகரமான முற்போக்குச் சிந்தனைகளையும் செயல்களையும் தடுப்பாரின்றியே சிதற அடித்து வருகின்றனர். தடுத்துக் கேட்பார் யாரும் இல்லை! அப்படியே கேட்டு விட்டால் ஆபத்து காத்திருக்கிறது. இனிய செல்வ, திருவள்ளுவர் அரசியலுக்கு-அரசுக்குச் சொன்ன நெறிமுறை இன்றும் பொருந்தும். நாளைக்கும் பொருந்தும்.

இனிய செல்வ, நாளும் அரசுகள் செல்வம் வளர்தலுக்குரிய புதிய புதிய யுத்திகளை, வழிமுறைகளைக் கண்டாக வேண்டும். இதற்குப் பயன்படுவனவே தேசிய அறிவியல் மையங்கள்! தேசிய அறிவியல் ஆய்வு மையங்களை இன்று அரசு கலந்து ஆலோசிக்கின்றன என்பதற்குரிய அடையாளம் எதையும் காணோம். அல்லது அறிவியல் ஆய்வு மையங்களுக்கு நாட்டின் வளர்ச்சிக்குரிய தொழில் நுட்பங்களைத் தருக அல்லது கண்டு தருக என்ற கேட்புகள் கிடைத்ததாகவும் தெரியவில்லை. இனிய செல்வ, நமது நாட்டின் நிலவளத்தில் 17 விழுக்காடுதான் பயன் படுத்துகின்றோம். மீதி, பயன்பாட்டுக்கு ‘இன்னமும் வரவில்லை’ தண்ணீரில் கணிசமான பகுதி வீணாகிப் போகிறது. ஏன்? நம்முடைய நாட்டின் ஆற்றலில் பெரும்பகுதி மனித ஆற்றல்தான்! இந்த மனித ஆற்றல் இன்னமும் முழுமையாகப் பயன்படுத்தப் படவில்லையே! இனிய செல்வ, அரசுகள் நாட்டின் வளத்தைப் பெருக்க, புதிய புதிய யுத்திகளைக் கையாண்டு பயன்பாட்டுக்கு வராத வளங்களை அனுபவத்திற்குக் கொண்டுவர வேண்டும். உற்பத்தித் திறனைக் கூட்டவேண்டும். ஏற்றுமதியை அதிகரிக்கவேண்டும். இதுவே அரசு, நாட்டின் வளத்தைப் பெருக்கும் வழிகள்! இதனை விட்டு விட்டு அஞ்சற் கட்டணங்களைக் கூட்டுவது, போன்றவைகளால் மேலும் விலைகள் கூடும். மேலும் ஏழைகளே ஏழைகளாவர். அது போலவே லாட்டரி சீட்டுகள் விற்பது. மதுக்கடைகளைத் திறப்பது போன்றவைகள் நாட்டின் வளம் பெருக்கும் வழிமுறைகளல்ல. பனம் ஏழைகளிடத்திலிருந்து அரசின் கருவூலத்திற்கு மாறும். இரண்டு இடங்களிலும் அந்தப்பணம் பயனீட்டு முறை என்ற செல்வ இயக்கத்திலிருந்து பிறழ்கிறது. இனிய செல்வ,

"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு”

(385)
என்பது திருக்குறள்! இயற்றலும் என்ற சொல்லுக்கும் பொருள் செல்வம் ஈட்டுதலுக்குரிய புதிய புதிய வாயில்களைக் காணுதல் என்பதாகும். இனிய செல்வ, அடுத்து வரும் மடல்கள்! தொடர்ந்து எழுத எண்ணம்.
இன்ப அன்பு
அடிகளார்