குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/மறைமலைநகரும் காமராசர் இரயில் நிலையமும்

விக்கிமூலம் இலிருந்து
43. மறைமலைநகரும் காமராசர் இரயில் நிலையமும்

இனிய செல்வ,

"எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு"

வாழ்க்கைப் போக்கில் சிக்கல்கள் தோன்றுவது இயற்கை; தவிர்க்க இயலாததும் கூட! ஆனால் சிக்கல்களுக்கு எளிதாகவும் பயன்தரத் தக்கவாறும் தீர்வு காண்பதே நல்லது. சிக்கலுக்குத் தீர்வுகாண்பதே வாழ்வாங்கு வாழும் கலை. மேலும் புதிய சிக்கல்கள் தோன்ற இடமளிக்காமலும் தீர்வு காண வேண்டும். அதிலும் சிக்கலைக் கடுமையாக்கினால் அந்தச் சிக்கலுக்கு நிகரானதொரு சிக்கலை உருவாக்கிவிடும். "மான”த்துடன் சிக்கலைக் கூட்டுச்சேர அனுமதித்துவிடக்கூடாது. ஒரு சிக்கலுக்கு மானத்துடன் கூட்டுக் கிடைத்து- விட்டால் மானம்-பிணக்கு, பகை, சண்டை ஆகிய பரிவாரங்களுடன் வந்து குடிபுகும், ஆதலால் வாழ்க்கைப் போக்கில் சிக்கல்கள் தோன்றி வளர்வதை அறிந்து கொள்ள வேண்டும்.

இனிய செல்வ,

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

"மறைமலை நகருக்குத் திரண்டு வாருங்கள்” என்று தான் நண்பர்கள், மாநாட்டுக்கு நம் எல்லாரையும் அழைத்தார்கள். இந்த உண்மையை காங்கிரஸ் மாநாட்டின் செய்தித்தாள் விளம்பரங்கள் ஐயத்திற்கிடமின்றி எடுத்துக் காட்டுகின்றன. மறைமலை நகரில் காங்கிரஸ் மாநாடு நடந்த இடத்திற்கு "காமராஜ் நகர்" என்று பெயர் சூட்டினார்கள். இது வரவேற்கத் தக்கதேயாம். காங்கிரஸ் பேரியக்க மாநாடு அகில இந்திய மாநாடு. ஆதலால், மாநாட்டுக்கென்று தனி இரயில் நிலையம், தொலைபேசி ஆகியவை அமைக்கப் பெறுகின்றன. இவையெல்லாம், மாநாடு நடக்கின்ற வரை இயங்கும் தற்காலிகத் தன்மையுடையனவேயாம். மாநாடு முடிந்தவுடன் அகற்றப்படும். இதுவே நடைமுறை. ஒரோவழி சில மாநாடுகளில் புதிய நகர்கள் தோன்றுவதும் உண்டு. சென்னையில் புதிய நகர் ஒன்றும் தோன்ற வில்லை.

மறைமலை நகரில் தான் மாநாடு நடக்கிறது. மாநாட்டின் போது ஒரு நகரமும் தோன்றவில்லை. இந்த நிலையில் மறைமலை நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்காக அமைத்த இரயில் நிலையத்திற்கு "மறைமலை நகர் இரயில் நிலையம்” என்று பெயர் வைக்காமல் “காமராசர் இரயில் நிலையம்” என்று பெயர் வைத்தது ஏன்? மறைமலை நகருக்கு காமராசர் பெயரில் இரயில் நிலையம் பொருந்துமா? பொருந்தாதா? என்பதல்ல கேள்வி! காங்கிரஸ் நண்பர்களுக்குத் தமிழ்ப் பற்று உண்டா? இல்லையா? என்பதல்ல கேள்வி! மறைமலை நகரில் நடக்கும் காங்கிரஸ் மாநாட்டுக்காக ஓர் இரயில் நிலையம் அமைக்கப்படுகிறது. அதற்கு ‘மறைமலைநகர் நிலையம்’ என்ற பெயர் வைப்பது இயல்பான சிந்தனை. ஏன் வைக்கவில்லை? இனிய செல்வ, இரயில் நிலையத்தை நிலைப்படுத்தித் தரும்படி தீர்மானம் போடுகிறார்கள். மாநாடு முடியும் நிகழ்ச்சியில் கடைசியில் அமைவது தீர்மானங்கள் நிறைவேற்றுதல். அந்தத் தீர்மானத்தில் மாநாட்டுக்காக அமைத்த - காமராசர் பெயரால் அமைத்த இரயில் நிலையத்தை மறைமலையடிகள் இரயில் நிலையமாக அமைத்துத் தரும்படி கேட்பது தானே முறை? எப்படி இந்த நிலை மாறியது? காங்கிரஸ் நண்பர்களுக்குப் பெருந்தலைவர் காமராசர் அவர்களிடமிருந்த பற்று காரணமாக இருக்கலாம் என்று கூறக்கூடும்.

இனிய அன்பு, ஆம்! உண்மைதான்! தமிழராய்ப் பிறந்தார் யாருக்கு - பெருந்தலைவர் காமராசர் புகழ் பாடுவதில் விருப்பம் இருக்காது? பெருந்தலைவர் காமராசரை நினைவுச் சின்னங்கள் மூலம் நினைவு கூர்வதா? பெருந்தலைவர் காமராசரின் கொள்கை, கோட்பாடுகளுக்கு வெற்றி பெற்றுத் தருவதன் மூலம் நினைப்பதா? என்று நினைத்துப் பாருங்கள்; மக்கள் தலைவராக விளங்கிய காமராசர் மக்களுக்கு நன்மை கிடைக்கும் பொழுதெல்லாம் மகிழ்வார். காமராசரின் நினைவு பஞ்சாயத்து சபைகளின் ஊராட்சி மன்றங்களின் வெற்றியில் தான் அமைந்திருந்தது. இனிய செல்வ, தலைவர்கள் பெயரால் நினைத்த போக்கிலெல்லாம் நினைவு கூரச் சிலைகள் அமைத்தல், பெயர்கள் சூட்டுவது ஆகியன நல்ல மரபல்ல. இனிய செல்வ, நமது காங்கிரஸ் நண்பர்கள் எண்ணிப் பார்த்து மறைமலையடிகள் பெயரை ஏற்பது பெருமை தரும். மக்களின் தலைவர் காமராசருக்குப் பெருமை சேர்க்கும் மாநாட்டில் தீர்மானம் போட்டதுடன் சரி! பிரதமர் அறிவித்ததோடு சரி! அந்தப் பெயரை அரசின் ஆணைவழி முறைப்படுத்திக் கொள்ளவும் இல்லை. ஏன் இந்த மெத்தனம்? மறைமலை நகரில் உள்ள இரயில் நிலையத்தின் பெயரைக் காமராசர் பெயரால் வைக்க, மாநில அரசை இசைவு கேட்டால் மாநில அரசு மறைமலை நகர் இரயில் நிலையம் என்றுதான் பெயர் சூட்டும்! இதில் என்ன கேள்வி இருக்கிறது? இனிய செல்வ, தொடர்ந்து எழுதுகின்றோம்.
இன்ப அன்பு
அடிகளார்