குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/உட்பகை உயர்வு தராது

விக்கிமூலம் இலிருந்து

17. உட்பகை உயர்வு தராது

இனிய செல்வ,

இன்னமும் இலங்கையில் அமைதி கால் கொள்ளவில்லை. இது வருந்தத்தக்கது. என்ன செய்வது? இலங்கைச் சிக்கலில் அடிப்படையும் தெளிவும் இல்லாமல் குழம்பு கிறார்கள். இலங்கையில் வாழும் தமிழர்கள் என்றால் மூன்று வகையான தமிழர்கள் வாழ்கின்றார்கள். அவர்களுள் ஒருவகையினர் இந்தியத் தமிழர்கள். (இந்தியாவிலிருந்து சென்ற தொழிலாளர்கள்; அங்கேயே பல ஆண்டுகள் தங்கியவர்கள்) அடுத்த வகையினர் தொழில் வாணிகம் கருதி இந்தியாவிற்கும் இலங்கைக்கும் போய் வந்து கொண்டிருப்பவர்கள். மூன்றாவது வகையினர் இலங்கையிலேயே - யாழ்ப் பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் வழிவழியாக வாழ்ந்து வரும் பூர்வீகக் குடிகளாகிய தமிழர்கள். இவர்களே ஈழத்துத் தமிழர்கள் என்று அழைக்கப் பெறுகின்றனர். இனிய செல்வ! இந்த மூன்றுவகைத் தமிழர்களையுமே பாதுகாக்க வேண்டியது நமது கடமை! இதில் இந்தியத் தமிழர்களுக்கும் - இலங்கைத் தமிழர்களுக்கும் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை. இந்தியத் தமிழர்கள் வாழ்வினும் சாவினும் தங்களைத் தாங்களே சார்ந்து வாழ்ந்து வருகிறார்கள். இன்று இலங்கை அரசுடன் நட்புறவுடன் வாழ்ந்து வருகின்றனர்.

அடுத்து, இலங்கைத் தமிழர்களில் முஸ்லீம்கள், ஈழத் தமிழர்கள் போராட்டங்களில் சேரவும் இல்லை; அவர்களோடு உடன் வாழவும் விரும்பவில்லை. வடக்கு கிழக்கு மாகாண இணைப்பில் ஒரே சிக்கல், ஆங்கு வாழும் இஸ்லாமியரும் சிங்களவர்களும் இணைப்புக்கு உடன் பாடததுதான்! மட்டக் களைப்புத் தமிழர்களிலும் பெரும்பான்மையோர் ஆளும் அரசாங்கத்தினருடன் கூட்டு. அவர்களுள் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒர் அமைச்சர் என்றெல்லாம் இருக்கின்றனர். அடுத்து யாழ்ப் பாணம் பகுதியில் வாழும் தமிழர்கள். இவர்கள்தாம் இன்றைய போராட்டத்திற்குரிய மக்கள். இந்த யாழ்ப் பாணத்துத் தமிழர்களில் தனி ஈழம் கேட்டுப் போராடும் அணி ஒன்றல்ல; பலப்பல! இத்தனை அணிகளும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை வரவேற்று விட்டன. ஆனால் நடை முறைக்குக் கொண்டு வருவதில் சிக்கல்கள் ஏற்பட்டுப் போராடுகின்றனர்.

இனிய செல்வ,

'எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு'

‘தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்’.

என்ற திருக்குறளைப் போராளிகள் சிந்திக்கவேண்டும். இந்திய அரசு போராளிகளுக்குத் தொடக்கக் காலம் முதலே அனுசரணையாக இருந்து வந்திருக்கிறது. நெறியில்லா நெறிகளில்கூட உதவியாக இருந்திருக்கிறது. இந்தியா ஒரு மனிதர் அல்ல; ஒரு நாடு. ஆசியநாடுகளில் வல்லாண்மையுடையதாக விளங்கித் தலைமையேற்கும் நாடு. இந்தியா ஒப்பந்தம் பற்றி முன்பே போராளிகளிடம் விளக்கி, அவர்களின் சம்மதத்துடனேயே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஒப்பந்தத்தை நிறைவேற்றுகிற வழியிலும் கொஞ்ச தூரம் - அமைச்சரவை அமைக்கும் வரையில் போராளிகள் வந்தனர். அதற்குப்பின் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா சில தவறுகளைச் செய்துவிட்டார் என்று காரணம் காட்டி, இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு மாறாக இந்திய அமைதிப்படையுடனேயே போராடத் தொடங்கியதற்கு மாறாக இலங்கை அதிபர் செய்த தவறுகளை இந்திய அரசுக்கு எடுத்துக்காட்டி, தீர்வு காண முயன்றிருக்க வேண்டும். இனிய செல்வ! திருக்குறள்,

"பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு"

என்று கூறுகிறது. இன்றைய ஈழத்துத் தமிழர்கள் இந்தக் குறளுக்குப் பொருத்தமான-ஒரு சமுதாயமாகவா வாழ்கிறார்கள்? அம்மம்ம! ஒரே தமிழினத்தில் இத்தனைக் குழுக்களா? உட்பகை கொண்டு ஒருவரை ஒருவர் கொலை செய்துகொள்ளும் அளவுக்குப் பகைமைச் சேற்றில் சிக்கிச் சீரழியும் ஓர் இனம் எப்படி விடுதலை பெற முடியும்? இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகும்கூட மாநில அமைச்சரவை அமைக்கும் பொறுப்பு வந்தபோது கூட அனைத்துத் தமிழர்களும் ஒன்று படவில்லை; இனிய செல்வ! ஈழத்துத் தமிழர்கள் நமது அனுதாபத்திற்கு உரியவர்கள்-ஆனால் வழிதான் தெரியவில்லை. இனிய செல்வ!

"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்”

என்பது திருக்குறள். இந்தத் திருக்குறள் அடிப்படையில் பிரச்சனையை அணுக வேண்டும். இந்திய இலங்கை ஒப்பந்தத்தினைச் செயற்படுத்த அதாவது மாநிலங்களை அமைக்க இலங்கை அரசியல் சட்டத்தில் திருத்தமும் - சேர்க்கையும் செய்யப் பெற்றுள்ளது. இந்த அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் இலங்கைச் சிக்கல் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. நமது பாரதப் பிரதமர் சென்னையில் பேசிய பேச்சு ஊக்கம் தந்தது. ஆனால் இலங்கைப் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ள அரசியல் சட்டங்கள் பாரதப் பிரதமர் பேசியதற்கு ஒப்பவும் இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு இசையவும் அமையவில்லை என்ற ஏக்கமும் நமக்கு இருக்கிறது. இந்திய இலங்கைச் சிக்கலில் மிகவும் முக்கியமானது காணிப் பிரச்சனை, அதாவது தமிழர்கள் வழிவழியாக வாழும் நிலப் பகுதியில் சிங்களவர்களைக் குடியேற்றி, அதன்பின் தமிழர் பிரதிநிதித்துவத்தைப் பறித்துவிடுதல் என்பது. இஃதொரு நியாயமான அச்சமே. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அந்தந்த மாநிலத்தில் உள்ள காணிகள் மீது உரிமை இருக்கிறது. இதுபோல இலங்கையில் தமிழ் மாகாண அரசுகளில் காணி உரிமையை இலங்கையில் நிறைவேற்றப்பெற்றுள்ள அரசியல் சட்டப் பிரிவுகள் வழங்காதது ஒரு பெரிய குறை. ஆயினும் தொடர்ந்து இந்திய அரசு இலங்கை அரசை வற்புறுத்தி இந்த உரிமைகளைப் பெற்றுத் தரும் என்று நம்புகின்றோம். இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் பெற்றுள்ளதைப் போன்ற உரிமைகளே, இலங்கையில் அமையும் தமிழ் மாகாணங்களுக்கு வேண்டும். இதுவே நமது பாரதப் பிரதமர் நமக்குக் கொடுத்த உறுதி. இந்த வகையில் இந்திய அரசை நாம் அனைவரும் வலியுறுத்த வேண்டும்.

இன்ப அன்பு
அடிகளார்