குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/எது தவம்?

விக்கிமூலம் இலிருந்து
3. எது தவம்?

திருக்குறள் ஒர் ஒழுக்க நூல்-ஆயினும் விஞ்ஞானப் பார்வையில் தலைசிறந்து விளங்கும் நூல். திருக்குறள் காட்டும் ஒழுக்கநெறி அறநெறி. மனித இயல்புகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு நடைமுறைப் படுத்தக் கூடியவையாகவே கூறப் பெற்றிருப்பது எண்ணி உணரத் தக்கது. வாழ்வியலுக்கு அப்பாற்பட்ட-நடைமுறைச் சாத்தியமற்ற ஒழுக்க நெறிகளைத் திருக்குறள் கூறவில்லை-வாழ்வாங்கு வாழ்தல் என்பதையே திருக்குறள் சிறந்த அறமாகப் பாராட்டுகிறது. அங்ஙனம் வாழ்பவர்கள் தெய்வமெனப் போற்றப்படுவார்கள் என்று திருக்குறள் கூறுகிறது.

வாழ்க்கை என்பது கடமை என்ற செயற்பாட்டுக் காகவே. சிறந்த சமய நூல்களும் உயிர்கள் வாழ்க்கைக் களத்தில் கடமைகளைச் செய்வதன் மூலம் அறிவும் அனுபவமும் பெற்று இறுதியில் துன்பச் சூழலினின்றும் விடுதலை பெறுகின்றன, என்றே கூறுகின்றன. கடமைகளைச் செய்வதற்கு உயிர்கள் தமக்கு இயைபான களங்கள் அமைத்துக் கொள்கின்றன. அதற்குக் களங்களே இல்லறம், துறவறம் என்றமைகின்றன. இவையிரண்டுமே கடமைகளின் பாற்பட்டனவே. இல்வாழ்வான் கடமைகள் சற்று தன்னலச் சார்பும், குடும்பச் சார்பும் தழுவினவாக இருக்கும். இந்த வாழ்க்கைக்குச் சில விதி விலக்குகள் உண்டு. துறவற வாழ்க்கைக்குத் தன்னலச் சார்பே இல்லாத பிறர் நலம் கருதிச் செய்கின்ற கடமைகளேயுண்டு. இங்கு விதி விலக்குகள்-மிகமிகக் குறைவு. ஏன்? இல்லையென்றே கூறலாம். ஆயினும், இவ்விருவகை வாழ்க்கையின் இலட்சியமும் கடமைகளைச் செய்தலேயாகும்.துறவறம் அல்லது தவ வாழ்க்கை என்றால் கடமைகளினின்று விடுதலை பெறுதலல்ல. கதே என்று தத்துவஞானி கூறியதுபோல, ஞானிகளின் கடமை உலகத்தைத் துறந்து ஓடிவிடுவ தன்று-உலகத்தோடு ஊடுருவி உண்ணின்று அதன் இயல்பறிந்து அதனுள் விழாமல்-வீழ்பவர்களையும் காக்கப் பணிகள் செய்தலேயாகும்.

திருவள்ளுவர் துறவற இயலில் ‘தவம்’ என்றஅதிகாரத்தில்

"தவம்செய்வார் தங்கருமம் செய்வார் மற்றெல்லாம்
அவம்செய்வார் ஆசையுட் பட்டு"

என்று குறிப்பிடுகின்றார். இந்தத் திருக்குறளுக்கு உரை கண்டவர்கள், வாழ்க்கையைத் துறந்து தவம் செய்கின்றவர்கள் தம்முடைய காரியத்தைச் செய்கிறார்கள் என்பது போலப் பொருள் காண்கிறார்கள். அங்ஙணம் செய்யாதவர்கள் ஆசையுட்பட்டு பாவம் செய்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். இந்தத் திருக்குறளுக்கு இன்னும் சற்று விரிந்த நிலையில் பொருள் காண்பது நல்லது ‘தம்கருமம் செய்வார் தவம் செய்வார்’ என்று கொண்டு கூட்டிப் பொருள் காண்பது சிறப்பாக இருக்கும், மனித வாழ்வியலில் அவர்களுக்கென்று கடமைகள் அமைந்துள்ளன. அவர்களும் அவரவர் கடமைகளை உணர்ந்து செய்யாமையினால் தம்மையும் கெடுத்துக் கொள்ளுகிறார்கள். அவர்களோடு தொடர்புடையதாக இருக்கிற சமூகத்திற்கும், கேடு செய்கிறார்கள். இதன் விளைவாகச் சமூகச் சிக்கல்கள் பெருகி, அழுக்காறு அவா வெகுளி போன்ற இழி குணங்கள் பெருகி வளர்ந்து மனித சமுதாயத்தை அலைக்கழிக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாகக் கடமைகளைச் செய்வதன் மூலமே உயிர்களைப் பரிணாம வளர்ச்சியில் ஈடுபடுத்தி தகுதிப் படுத்தி ஆட்கொண்டருளும் இறைவனுடைய திருவுள்ளத்திற்கும் மாறாக வாழ்ந்து பாவத்தை விளைவித்துக் கொள்ளுகிறார்கள். ஆதலால், தமக்குரிய கடமைகளைச் செய்தலையே திருவள்ளுவர் ‘தவம்’ என்று கருதுகின்றார். இல்லறத்தாராக இருப்பாராயின் மனித சமுதாயத்தையே தழுவி, அவர்கள். நன்நெறி நின்று ஒழுகி நல்லின்பத்தோடு வாழச் சிந்தனையாலும், செயலாலும் கடமைகளைச் செய்தல் வேண்டும். இஃதன்றி உலகியலை ஒழித்த தவம் என்று பெயர் கொள்ளுதல் சிறப்புடையதன்று.

‘கடமைகளை முறையாகச் செய்தல் சிறந்த கடவுள் வழிபாட்டுக்கு ஈடு அல்லது இணையானது’ என்னும் பொருள்படச் சான்றோர் பலரும் பேசியிருக்கிறார்கள்.

"கடமையே மிகச்சிறந்த நோக்கம். ஏனெனில் அது கடவுட் கருத்தைத் தழுவியதாக இருக்கிறது" என்று லக்கார்டயரும்;

"கடமையை விருப்பத்தோடு செய்பவர்களுக்குக் கடவுள் எப்பொழுதும் உதவியாக இருக்கிறார்” என்று கெய்லரும்;

"கடமைகளைச் செய்யாமல் தட்டிக் கழித்தல் அறிவையும், மனத்தையும் பலவீனப் படுத்தித் தூய்மை தவவாழ்க்கையைப் புதைத்து விடுகிறது” என்று ட்ரயான் எட்வார்ட்ஸ் என்பாரும்;

"உயிர்கள் தம்முடையக் கடமைகளை உடனடியாகச் செய்வதாக முடிவெடுத்துக் கொள்வது கடவுள் இதயத்தின் சந்நிதி" என்று பேகனும் பேசியிருக்கிறார்கள்;

பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டச் சான்றோர்களின் வரலாற்றை நமக்கு அருளிய சேக்கிழார் பெருமானும், தவம் என்ற வாழ்க்கையை உலகியல் வாழ்க்கையோடு இணைத்துக் கூறுவதை நூல் முழுதும் பார்க்கக் காணலாம். சங்கிலியாருக்குச் சுந்தரரைச் சிவபெருமான் அறிமுகப் படுத்தும்போது, ‘மேருவரையின் மேம்பட்ட தவத்தினான்’ என்று கூறுவதாகச் சேக்கிழார் பெருமான் சித்திரித்திருப்பது அறிந்தின்புறத்தக்கது. அதனால், திருக்குறள் காட்டும் தவம் தத்தம் கடமைகளைச் செய்தல்; கடமைகளைச் செய்யா தொழித்துப் பிறவற்றைச் செய்தல் அவமாகும்.