குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/திருக்குறளும் ஒருமைப்பாடும்

விக்கிமூலம் இலிருந்து
2. திருக்குறளும் ஒருமைப்பாடும்

சுதந்திர பாரதத்திற்கு ஒருமைப்பாடு இன்றியமையாதது என்பது எல்லோரும் ஏற்றுக் கொண்ட முடிபு. புரட்சிக் கவிஞன் பாரதி, பாரத நாட்டின் சுதந்திரத்தை ஆங்கிலேயர்கள் பறித்து எடுத்துக் கொண்டதாகக் கூறவில்லை. அதற்கு மாறாக, சுதந்திரம் தவறிக் கெட்டுப் போய்விட்டது என்று குறிப்பிடுகிறான். "விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றதாமோர் பாரததேசம்’ என்றே பாடுகின்றான், சுதந்திரம் தவறிக் கெட்டுப் போனதற்குரிய அடிப்படைக் காரணம் பாரத நாட்டு மக்களிடையே நிலவிய வேற்றுமைகளேயாம். பாரத நாட்டு மக்களிடையே ஒத்த உரிமையுணர்வு இல்லாது போய் பல நூற்றாண்டுகள் ஆயின. சாதி, இனம், மொழி, சமயம் ஆகிய வேறுபாடுகளால் ஒரு தாய்வயிற்றுப் பிள்ளைகளாகப் பிறந்திருந்தும் பற்றும் பாசமுமின்றிக் காழ்ப்பொடு கூடிய கலகம் விளைவித்துக் கொண்டனர். இதன் பயனாக நம்முடைய பேரரசுகள் வீழ்ந்தன.

இந்த வேற்றுமையுணர்ச்சிகளை இலக்கியத் துறையிலும் சரி, சமயத் துறையிலும் சரி எதிர்த்துப் புரட்சி செய்த சான்றோர்கள், இமயம் முதல் குமரி வரையில் பரந்து கிடக்கும் பாரத பூமியில், பலர் தோன்றினார்கள். ஆயினும் நிறைந்த பயன் கிடைக்கவில்லை. பயன் விளையாமைக்குக் காரணம் சிந்தை வேறு, சொல் வேறு, செயல் வேறு பட்ட வாழ்க்கையேயாம்.

ஒருமைப்பாடு என்பது ஒரு மிகச் சிறந்த பண்பாடு. ஒருமைப்பாடு ஒரு கலை; ஒரு நோன்பு, அகத்தில் ஒத்து, ஒத்த உரிமையினராகி எல்லோரும் இன்புற்று வாழ, வகை செய்வது ஒருமைப்பாடு. ஒருமைப்பாட்டுணர்வு மெல்ல மெல்ல வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு விழுமிய பண்பாகும். உலகியற்கையில்-இறைநலப் படைப்பில் ஒருமைப்பாடே அதிகம். அங்கு மோதலில்லை. அந்தரத்தில் தொங்கும் அண்டசராசரங்களும் கூட ஒன்றோடொன்று மோதாமல் இயங்குகிற அமைப்பில் வியத்தகு ஒருமைப் பாட்டினைப் பார்க்கிறோம். வெளித்தோற்றத்தில் முரண்பாடுகள் காணப்பட்டாலும் ஒருமைப்பாடே மிகுதியும் மேம்பட்டு விளங்குகிறது. வேற்றுமைகளுக்குள்ளும் ஒற்றுமை-ஒருமை காண்பது பாரதப் பண்பு. இந்தப் பண்பின் வழியாகப் பாரிலுள்ளோரைப் பகையின்றி வாழச் செய்யலாம்.

ஒற்றுமையும், ஒருமைப்பாட்டுணர்வும் ஒன்றல்ல ஒற்றுமையென்பது தற்காலிகமான கூட்டுச் சேர்க்கை. அது தற்காலிகமானதாகவும் இருக்கலாம். நிர்பந்தத்தின் காரணமாகவும் இருக்கலாம். ஒற்றுமையைவிட ஒருமைப்பாடு மிக மிக உயர்ந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகுக்கு ஒரு நூல் செய்த திருவள்ளுவர் ஒருமைப் பாட்டையே உயர்த்திப் பார்க்கிறார். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பது அவர் வாக்கு மேலும் அவர்,

"ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து"

என்றார்.

மானிட இனத்தின் சிறப்புமிக்க இயல்பு ஒழுக்க முடைமை. திருவள்ளுவர் ஒழுக்க நெறியில் பலவற்றைப் பகுத்துக் கூறினாராயினும் ‘உலகத்தொடொட்ட ஒழுகல்’ மிகச் சிறந்த ஒழுக்கமென வரையறுத்து வற்புறத்திக் கூறுகின்றார்.

இன்றைய சூழ்நிலையில் நமது பாரத நாட்டுக்கு ஒருமைப்பாடு மிகவும் தேவைப்படுகிறது. நாள்தோறும் செய்தித் தாள்களைப் புரட்டினால், ஒரு கந்தல் துணியைப் பார்ப்பது போன்ற ஒர் உணர்ச்சி நமக்கு ஏற்படுகின்றது. அதாவது இன, வகுப்புக் கலவரச் செய்திகளையும் அரசியல் காரணமாக ஏற்படும் குழுக்களில் ஏற்படும் பகைமையுணர்ச்சியால் விளைந்த மோதல்களையும் செய்தித்தாள்களில் நிறையப் படிக்கிறோம். இந்தச் செய்திகளைப் படிக்கின்ற ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் வெட்கித் தலைகுனிய வேண்டியவனாக இருக்கிறான். தென்னகத்தில் தாய்மொழிப்பற்று இயற்கையாகவே உண்டு. ஆனால், நாட்டின் ஒருமைப்பாட்டை தாய்மொழியுணர்ச்சிக்கு பின் தள்ள முடியாது. அதுபோலவே நாலைந்து மொழிகளுக்கு மேலாகப் பேசப்பெறும் நாட்டில் ஒரு மொழியின் மூலம் ஒருமைப்பாட்டை உண்டாக்க முடியாது. அது போலவே ஆட்சிமுறைச் சட்டங்களாலும் ஒருமைப்பாட்டை உருவாக்கி விடமுடியாது.

ஒருமைப்பாடு என்பது உணர்வின் பாற்பட்டது. அது ஒரு கலை; அது ஒரு தவம். ஒருமைப்பாட்டுணர்வினைப் பயிலுதல் எளிதன்று. ஒரும்ைப்பாட்டை சிந்தனை, கல்வி, வாழும் இயல்பு ஆகிய வழி வகைகளாலேயே காண முடியும். அதனாலன்றோ, "ஒரு நாட்டுமக்களை ஒத்த உரிமையுணர்வுடன் இணைக்க ஒரு சிறந்த தேசிய இலக்கியம் இருக்க வேண்டும்" என்று கார்லைல் கூறினான்.

பாரத நாடு விடுதலை பெற்று பல ஆண்டுகளாயிற்று. பாரத நாட்டின் தனி-பொது அரசியல் வாழ்க்கை விரிந்த மக்களாட்சி அடிப்படையில் அமைந்துள்ளது. எந்த ஒரு வருடைய அல்லது எந்தவொரு இனத்தினுடைய அடிப்படை உரிமைகளுக்கும் பாதுகாப்பு உண்டு, ஆயினும் பாரத நாட்டின் பொது நலனுக்கு இடையூறு செய்கின்ற தனி நலன்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கன அல்ல. ஒருவருடைய நலன் பலருடைய நலங்களுக்கு கேடுவிளைவிப்பதாயின் அது ஒரு நலனே அல்ல; தீமையேயாம். நன்மை நன்மையைத் தோற்றவிக்குமே தவிர தீமையைத் தோற்றுவிக்க முடியாது. ஆதலால் உயர்ந்த கல்வி-மறந்தும் மாறுபாடுகளைக் காட்டாத கல்வி-மூலமே ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும். ஆதலால் தான் தேசீய இலக்கியம் வேண்டுமென்று கார்லைல் கூறுகிறான்.

பாரத நாட்டு இலக்கியங்களில் பெரும்பான்மையானவை மொழி, இன, சமயச் சார்புடையனவேயாம். இவைகளின் சார்பில்லாத இலக்கியங்களில் இருப்பது அருமை. இஃது உலகியற்கை. இன்று உலகின் நெருக்கம் வளர்ந்திருப்பது போலப் பண்டு இன்மையின் காரணத்தினாலும், போர்க் கருவிகளின் ஆற்றல் பெருகி வளர்ந்திருப்பதன் காரணத்தினாலும், இன்று ஒருமைப்பாடு இன்றியமையாத் தேவையாகிறது. பாரத நாட்டு இலக்கியங்களில் திருக்குறள் ஈடு இணையற்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இனம், மொழி, சமயச் சார்பின்றி மனித உலகத்தின் நல்வாழ்க்கையை மையமாக வைத்துச் செய்யப்பெற்ற சிறந்த நூல் திருக்குறள். திருக்குறள் எடுத்துக் கூறும் ஒழுக்க நெறிகளும் கற்பனையில் தோன்றியவை அல்ல; அதீதமானவைகளுமல்ல. சாதாரணமாக ஒரு சராசரி மனிதன் நடைமுறைப்படுத்தக் கூடிய வாழ்க்கை முறைகளையே ஒழுக்கமென்று கூறியுள்ளார் திருக்குறளாசிரியர். சமுதாயத்தின் பல்வேறு தரப்பினருக்கும் ஏற்ற ஒழுக்கங்களை அவர் இந்நூலில் எடுத்துக் கூறியுள்ளார்.

மனித சமூகத்தினைச் சார்ந்த ஒழுக்க நெறிகளைப் பேணி வளர்த்துப் பாதுகாக்க வேண்டும். இதுவே திருவள்ளுவரின் இலட்சியம். இந்த ஒரே நோக்கத்தோடு செய்யப்பெற்ற நூல் திருக்குறள். திருக்குறள் ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்று வரையறுத்துக் கூறுவதால், பிறப்பின் வழிப்பட்ட வேற்றுமைகளைக் களைகிறது. ‘ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்’ என்று கூறினமையால், சமூக ஒழுக்க நெறியை எடுத்துக்காட்டுகிறது. ஒழுக்கங்களில் உயர்ந்த ஒழுக்கமாகிய ஒப்புரவினால் பொருளியல் ஏற்றத் தாழ்வுகளை மாற்ற முடியும். பொருளியல் ஏற்றத்தாழ்வு குறைந்து சமநிலைச் சமுதாயம் அமைந்தால் சமுதாயமும் ஒன்றுபடும். ஒழுக்க நிலையும் உயரும்; இன்பமும் பெருகும்.

திருவள்ளுவர் கல்வியை ஒருமைப்பாட்டுக் கல்வியாகவே கருதுகிறார். ஒருமையுணர்வினைத் தராத கல்வியை-அறிவை திருவள்ளுவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்"

என்றும்,

"எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு”

என்றும், கூறியிருப்பது அறியத் தக்கது. எல்லா நாடுகளையும், எல்லா ஊர்களையும் தமதென ஏற்றுத் தழுவி வாழுதலுக்கே கல்வி தேவையென்று கருதுகின்றார் திருவள்ளுவர். இதனை,

"யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு”

என்ற குறளால் அறியலாகும்.

ஆதலால், பாரத நாட்டு ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அதற்கு உடனடியான தேவை பாரத நாட்டு இலக்கியம். அதாவது-தேசிய இலக்கியம். நிலம், குலம், சமயம், இனம், மொழி ஆகிய எந்தச் சார்பினையும் சாராது மானிடச் சமுதாயத்தின் மேம்பாட்டினைக் கருதியே செய்யப்பெற்ற நூலை உடனடியாகப் பாரத நாட்டு இலக்கியமாக அறிவிக்கவேண்டும்.

இமயம் முதல் குமரி வரை வாழும் அனைத்து மக்களின் சிந்தனைக்கும் வாழ்க்கைக்கும் அடிப்படைச் சுருதியாகத் திருக்குறள் அமைய வேண்டும். அதுபோழ்து பாரத ஒருமைப்பாடு உருவாகும். பாரத சமுதாயமும் வளரும.