குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/என்புருக்கி நோய்
இனிய செல்வ,
ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் உடன்பாட்டு முறையிலும் எதிர்மறை முறையிலும் வகுத்துக் கூறியுள்ளார்! நம்முடைய நாடு எப்படி இருக்கிறது? திருக்குறள் விளக்கும் நாடாக உள்ளதா? திருக்குறள்;
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு
என்று நாடு எப்படி இருக்கக்கூடாது என்று விளக்குகிறது!
நாட்டில் பல குழுக்கள் இருக்கக்கூடாது. நமது நாட்டின் நிலை என்ன? நமது நாட்டில் பல குழுக்கள் உள்ளன. சாதிகள், சாதிக்குள் சாதிகள், பலப்பல மதங்கள், எண்ணற்ற அரசியல் கட்சிகள், மாதர் பேரவைகள், நடிகர் மன்றங்கள்! இவைபோக காரணங் கூற இயலாத அழுக்காற்றின் வழியில் அமைந்த பல குழுக்கள்! குழுக்களுக்குள் மோதல்கள், அழுக்காறு! அவா! வெகுளி! இங்ஙனம் குழுக்கள் பலவானதற்குக் காரணமென்ன? இனிய செல்வ! சரியான கேள்வி? முதற்காரணம் நல்ல உயர்ந்த குறிக்கோள் இன்மையே! இனிய செல்வ! குழு மனப்பான்மை என்பது தற்சார்பான ஒரு சிறிய வட்டம். அவ்வளவுதான்! சுயநலக்காரர்கள், தற்பெருமை பாராட்டுபவர்கள், அகங்காரம் உடையவர்கள் நீண்ட காலத்திற்குப் பலர் ஒன்று கூடி வாழ்தலும் அரிது! ஏன்? அவரவர்களுடைய நலன் பாதிக்கப்படும்பொழுது பொதுமை கருதி விட்டுக் கொடுக்க மாட்டார்கள்! பிரிந்து போய்த் தான் அடைய விரும்பியதை அடைய முயற்சி செய்வர்.
மாறுபட்ட நோக்கங்களும், முரண்பட்ட நலன்களும் உடையவர்கள் நீண்ட நாட்களுக்கு ஒன்றுபட்டு ஒத்து வாழ இயலாது. இனிய செல்வ! ஒரோ வழி வளர்ந்தாலும் அது வெறும் தோற்றம்! மாயை! அவ்வளவுதான்.
இனிய செல்வ! பல குழுவாகப் பிரிந்து வாழ்பவர்கள் முரணிய சிந்தனை உடையவர்கள். நல்லவர்களைக் காத்துக் கொள்ள மாட்டார்கள்! மாறாக, மாறாத உட்பகை கொண்டு பழகுவர்! இனிய செல்வ! பகைமையே தீது! அதிலும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர் உறவு என்றும்-பகை, எப்போதும் பகை, அகத்தே எரியும் பகை. ஆதலின் இந்த உட்பகையைப் பாழ் செய்யும் உட்பகை என்றார். இனிய செல்வ! வெளிப்படையான பகையில் நமக்கு அறிவு வளர வாய்ப்புண்டு. அதே பகை உட்பகையாக இருந்து கேடுகளைச் செய்யும். அதனால் பாழ் செய்யும் உட்பகை என்றார்.
இனிய செல்வ! எங்கும் குழுஉ மனப்பான்மை. குழுஉ வழிபட்ட மாறுபாடுகள், தம்முள் முரண்பட்ட நலன்கள் இவற்றின் எதிர் விளைவாகப் போட்டிகள், இவையனைத்தின் காரணமாகவும், ஆங்காங்கு மோதல்கள்! சண்டைகள்! இதனால் நாட்டின் அவசிய வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட முடிவதில்லை. நாள்தோறும் சட்டம், ஒழுங்குப் பிரச்சனைகள்! இதுதான் இன்றைய நமது நாடு. பஞ்சாபில் படுகொலைகள் வழக்கமாகி விட்டன. காஷ்மீரில் என்ன நடக்கிறது? புரியாத புதிர், ஏன் இந்த அவலம்? நாட்டின் நலன் காத்தல் என்ற பொது நோக்கு மக்களிடத்தில் வளரவில்லை! வளர்வதற்குரிய முயற்சிகளையும் அரசு செய்யவில்லை! சமுதாய இயக்கங்களும் செய்யவில்லை. ஆதலால் வரவர மக்களின் தரத்தில் அரிமானம் ஏற்பட்டு வருகிறது. கயமைத்தனங்கள் வளர்ந்த வண்ணமுள்ளன. இனிய செல்வ! இதில் என்ன வேதனை என்றால் சமூக அங்கீகாரத்துடன் சமூக மேம்பாடு, ஜனநாயகம் என்ற பெயரில் நடப்பது தான்.
இனிய செல்வ, நம் நாடு வளர்ந்த நாடுகள் வரிசையில் நிற்க விரும்பினால் நாம் நாட்டின் வளர்ச்சியையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். இந்தக் குறிக்கோளை அடுத்து இரண்டாவது இடந்தான் மற்றவைகளுக்கு என்று சொல்ல வேண்டும். இனிய செல்வ, எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதனை இரண்டாந்தரத்திற்குத் தள்ளக்கூடாது. அதுபோலவே எந்தச் சூழ்நிலையிலும் ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடமிருந்து அந்நியனாகக் கூடாது. மனித உலகத்தை அரித்துத் தின்னும் என்புருக்கி நோய் ஆக இருக்கும் இந்நோயை அறவே எதிர்த்துப் போராடவேண்டும்.
இனிய செல்வ, இன்றிருக்கும் நிலை தொடர்ந்தால் 2001-ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? எண்ணிப்பார்! எழுதுக!இன்ப அன்பு
அடிகளார்