உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/காலம் அறிந்து செய்க!

விக்கிமூலம் இலிருந்து

38. காலம் அறிந்து செய்க!

இனிய செல்வ,

காலம் ஓர் அற்புதமான கருவி, ஆற்றல்! வாழ்வியலுக்குக் காலமே முதற்பொருள், காலத்தால் ஆகியதே வாழ்க்கை! காலம் கருதி உரிய காலத்தில் உரியன செய்யாது போனால் எதுவும் நடக்காது. வாழ்க்கையே பயனற்றுப் போகும். இனிய செல்வ, காலந்தாழ்த்தும் இயல்புடைய வர்கள் குறைந்த வேலைக்குக் கூடுதலான காலத்தைப் பயன்படுத்துவர். இதனால் பயனும் சுருங்கியதாக அமையும்; துன்பமும் விளையும் என்பதை நினைவிற்கொள்ளுதல் வேண்டும். காலதாமதங்கள் பாதை தவறச் செய்துவிடும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இனிய செல்வ, "தாமதங்களால் அபாயகரமான முடிவுகள் ஏற்படும்” என்பது ஷேக்ஸ்பியரின் அமுதவாக்கு. தமிழ் நாட்டில் மதுரை மாவட்டத்தில் நடந்த கலவரங்களுக்குக் காரணம் சாதிகள் அல்ல! அந்தக் கலவரங்கள் சாதிக்கலவரங்களும் அல்ல! கலவரத்தின் தொடக்கம் சாதிகள் அல்ல! எதிர் விளைவுகள் சாதிகளுக்கிடையில் மோதல்களாகி விட்டன.

ஒரு கொலை நடந்து விடுகிறது! இன்னமும் காரணம் காணமுடியவில்லை. கொல்லப்பட்டபெண் அரிசனப் பெண்; மூதாட்டி! இந்தக் கொலையைப் பற்றி ஊர் கவலைப் படவில்லை! ஏன்? நமது ஜனநாயகப் பண்பு வளர்ந்த நிலை அப்படி! ஊராட்சித் தேர்தலில் ஊர் இரண்டுபட்டு! மறுபடி அது ஒன்றாகவே இல்லை! என்ன ஜனநாயகம் இது? ஊராட்சித் தலைவர் தமக்கு வாக்களிக்காத அரிசனங்கள் மீது பராமுகமாகி விட்டார்! அதனால் ஊர் இரண்டுபட்ட நிலை! பாரதி விரும்பிய ஊராண்மை இல்லை! ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் சேர்ந்து உலகியல் நடத்தும் ஊராண்மை இல்லை! இதனால் அரிசனங்கள் காவல் நிலையத்திற்குச் செல்கின்றனர்! காவல் நிலையத்தினர் எல்லைக் கோட்டுச் சிக்கலில் சிக்கிக் கொண்டு காலந்தாழ்த்தினர். எந்த ஒரு காவல் நிலையமும் வந்த வழக்கைப் பதிவு செய்து கொண்டு உரிய காவல் நிலையத்திற்கு மாற்றலாம். இதுவே நடைமுறை. இதனைக் காவல்நிலைய அலுவலர்கள் உணர்ந்து காலத்தில் கடமையைச் செய்யாது காலந்தாழ்த்தியதால் ஆதி. திராவிடர்கள் சாதித் தலைவரை நாடுகிறார்கள்! அவர் வந்தார்! அமைதிக்குப் பதில் கலவரத்தைத் தூண்டிவிடத் தக்கவகையில் பேசிவிட்டார்! பிடித்துக் கொண்டது கலவரத் தீ!

எந்தச் சமுதாயத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க இயலும்; முடியும்! அருமையுடையது என்று ஒன்று இல்லை; காலமறிந்து கடமைகளைச் செய்யின்! என்பது வள்ளுவம்.

"அருவினை யென்ப உளவோ கருவியால்
கால மறிந்து செயின்"

(483)

காலமறிந்து செய்யவேண்டும். உரிய கருவிகளைப் பயன்படுத்திச் செய்யவேண்டும். மதுரை மாவட்டக் கலவரத்திற்கு மிகுதியும் காரணம் ஒன்று காலந்தாழ்த்தியது; இரண்டு கருவிகள் முரண்பட்ட நிலையில் இயங்கியது. அதாவது கருவிகள் கலவரத்தை அடக்கி அமைதிப்படுத்தும் மனித சமூகம் எடுத்துக்கொள்ளாமல், கலவரத்தை வளர்ப்பவர்கள் கையில் சிக்கிக்கொண்டன! இதனால் வள்ளுவம் ஒரு நடை முறை வாழ்வியல் என்பது புலனாகிறது. இனிமேலாவது திருக்குறளை அரசு அலுவலர்கள் கற்றறிவார்களா?

இன்ப அன்பு

அடிகளார்