குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/ஜனநாயகமும் கருத்துப் பரிமாற்றமும்

விக்கிமூலம் இலிருந்து
37. ஜனநாயகமும் கருத்துப் பரிமாற்றமும்

இனிய செல்வ,

நமது நாடு மக்களாட்சி முறையில் இயங்குகிறது. அதாவது ஜனநாயக முறையில் இயங்குகிறது. மானுடம் கண்ட சிறந்த அரசியல்-சமூக வாழ்வியலிலேயே மிகவும் சிறந்தது ஜனநாயக அரசியல் முறையேயாம். ஜனநாயக ஆட்சி முறையில்-மக்களாட்சி முறையில் எந்த ஓர் இடத்திலும் அதிகாரம், மையம் கொள்ளாது. ஒரோ வழி மையங் கொண்டாலும் பலரைத் தழுவிய நிலையிலேயே மையங் கொள்ளும். இனிய செல்வ, உன்னுடைய கேள்வி சரியானதே! நமது நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சி, ஆனால், நாம் ஜனநாயகத்திற்கு, ஜனநாயக வாழ்க்கை முறைக்கு இன்னமும் பக்குவமாகவில்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை. ஜனநாயக வாழ்க்கை முறைக்குப் பகைமை, காழ்ப்பு ஆகா. அதுபோலவே வெறுப்பும் காட்டாது பகைமையும், கசப்பும் காழ்ப்பும் கடந்ததே ஜனநாயக வாழ்க்கை. ஏன்? ஜனநாயக வாழ்க்கை முறையில் விவாதங்கள் இருக்கும். தூற்றுதல் இருக்காது. ஜனநாயக வாழ்க்கை முறையில் விவாதித்து விவாதித்துக் கருத்தொருமை காண்பதே நோக்கம்.

இனிய செல்வ, உலகத்தை நட்பாக்குவதே அறிவு என்று திருக்குறள் கூறுகிறது; ஆம்! தம்மைச் சார்ந்தாரையும் சார்ந்துவரத் தயங்குவாரையும் முரண் நிற்பாளரையும் நமக்கு நட்பாக்கிக் கொள்வதே ஜனநாயக வாழ்க்கையின் நியதி. சிறந்த அறிவின் பயனும் அதுவே.

இன்று ஜனநாயகம் என்ற பெயரில் சண்டைகளே நடக்கின்றன. தமக்கு வாக்களிக்கவில்லை. தேர்தலுக்கு உதவி செய்யவில்லை என்று ஆட்சி எந்திரத்தையே அவர்களுக்கு விரோதமாகப் பயன்படுத்துகின்றனர். இந்த முறைகள் மலிந்ததால் தற்காப்புக் கருதியே பலர் அரசியலைச் சார்கின்றனர்; அரசியல்வாதிகளுக்கு நிறைய பணம் கிடைக்கிறது. இதுவே, இன்றைய நம்நாட்டு நிலை.

இனிய செல்வ! பரஸ்பரம் நட்பு இல்லாதவர்கள்; நாட்டின் நலனில் அக்கறையில்லாதவர்கள் ஜனநாயக அரசியலில் ஈடுபடுகின்றனர். அதனால் சட்ட சபையிலிருந்து பாராளுமன்றம் வரை சண்டை! நட்பாடல் தேற்றாதவர்கள் ஜனநாயக அரசியலுக்கு வருவதே தவறு! அவமானம்! பகைமையை, குழுச் சண்டைகளை வளர்ப்பவர்கள் சர்வாதிகாரிகளே! ஜனநாயக வாதிகள் அல்லர்! அரசு அமைத்து ஆள ஒரு கட்சிக்கு உரிமையே தவிர, அரசே ஒரு கட்சிக்குச் சொந்தமல்ல? ஆளப்படுபவர்கள் அனைவர் நலமும் காக்கப்பட வேண்டும் என்பதை நினைவிற் கொள்க! கட்சி-பிரதி கட்சி கருத்து வழியேயாம்! பகை வழியன்று. ஆனால், இன்றைய நடப்பு அரசியல் உலகில் காழ்ப்புணர்ச்சி வளர்ந்திருக்கிறது! கலகம் செய்கின்றனர்! வசைமொழிகளைப் பரிமாறிக் கொள்கின்றனர்! இது ஜனநாயகம் அல்ல!

ஆந்திர மாநிலத்தில் வெள்ளப் பாதிப்பு! நாடாளும் பிரதமரும், ஆந்திர மாநில முதல்வரும் அது பற்றிக் கலந்து பேசவில்லை. ஒன்றாகச் சேர்ந்து நிவாரணப் பணிகளைச் செய்ய முன்வரவில்லை! இனிய செல்வ, ஏன் என்றா கேட்கிறாய்? ஜனநாயகப் பண்பில் காலூன்றாததே காரணம். இனிய செல்வ, ஆந்திர மக்களின் நலனிலும், கட்சி-பிரதி கட்சி உணர்ச்சியே விஞ்சி நிற்கிறது என்பதே உண்மை! நாடாளும் பிரதமர், மாநிலங்களுக்கு வந்தால், மாநில முதல்வர்களிடம் தனியே சிலமணி நேரம் சமூகம், பொருளாதாரம் பற்றிக் கலந்து பேசுவதில்லை; கலந்து பேச விரும்புவதில்லை. இவையெல்லாம் ஜனநாயகத்தில் நாம் வளராமையின் அடையாளங்கள்! மக்களாட்சிமுறை அறிவு நலத்தில் நாம் வளரவில்லை என்பதன் வெளிப்பாடு! பொது வாழ்வில் குழுக்கள், உட்குழுக்கள் இவைகளின் தோற்றமும் வளர்ச்சியும் நாட்டைச் சீரழிக்கும். ஜனநாயக ஆட்சி முறையில் கருத்துப் பரிமாற்றங்களே சாதனம்! அதிகாரம் அல்ல! இனிய செல்வ, எல்லாரையும் தழுவி நிற்கும் நட்புணர்வு இல்லாதார் பகைவரையும் நட்பாக்கிக் கொள்ளும் தகைமை இல்லாதார், ஜனநாயக முறையரசியலில் பங்கேற்பது நெறியும் அன்று; முறையும் அன்று.

ஜனநாயகத்தில் பெரும்பான்மை என்பதும் தவிர்க்க இயலாத அளவுகோலேயாம். பெரும்பான்மை என்பது, எதிர் விளைவுகளை உருவாக்காமல் கவனமாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்! பெரும்பான்மையர் சிந்தனைகளை, கருத்துகளை மறுப்பதும் எதிர்ப்பதும் பெரும்பான்மையினரின் செயலாகிவிடக் கூடாது. ஒரு முடிவு நிலையில் செயற்பட்டாக வேண்டுமே என்ற நிலையில் தான் "பெரும்பான்மை” என்ற தத்துவம் பயன்படும். சிறந்த ஜனநாயகப் பண்புள்ள அரசியலே நாட்டுக்குத் தேவை.

"உலகம் தழீஇயது ஒட்பம்!”-என்று கூறுகிறது திருக்குறள். சண்டை போட்டுக் கொள்ள-ஒரு தீமை செய்ய அறிவா வேண்டும்? நட்பைக் காணவும் வளர்க்கவும்தான் அறிவு தேவை. அதுவும் சார்பில்லாத பொது நிலையில் உலகத்தவரிடம் நட்புக் கொள்ளுதல் வேண்டும். உலகத்தவரை நட்பாகக் கொள்ளுவதே அறிவு! மனம் சுருங்குதலும் விரிதலும் நல்வாழ்வின் அடையாளங்களல்ல! இனிய செல்வ, ஜனநாயகத்தின் சமூகவியலின் அரிச்சுவடியையே நாம் படிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

"உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு"

(425)
இன்ப அன்பு
அடிகளார்